top of page

கதீட்ரல் - ரேமண்ட் கார்வர்

'Cathedral' Short story by Raymond Carver

(தமிழில்: ஜி.குப்புசாமி)


என் மனைவியின் பழைய நண்பனான இந்தக் குருடன் எங்கள் வீட்டில் தங்குவதற்காக வந்து கொண்டிருக்கிறான். அவன் மனைவி இறந்துவிட்டாளாம். அதனால் கனெக்டிகட்டில் இறந்து போன மனைவியின் உறவினர்களைச் சென்று சந்தித்துக் கொண்டிருந்தான். அவன் மாமனார் வீட்டிலிருந்து என் மனைவியிடம் பேசினான். ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவன் ஒரு ஐந்துமணிநேர ரயில் பயணத்தில் வரப்போகிறான். என் மனைவி ஸ்டேஷனுக்குச் சென்று அழைத்து வருவாள். பத்து வருடங்களுக்கு முன்பு சியாட்டிலில் ஒரு கோடைப்பருவத்தில் அவனிடம் பணியாற்றியபிறகு அவனை அவள் பார்த்திருக்கவில்லை. ஆனால் அவளும் அந்தக் குருடனும் தொடர்பில் இருந்திருக்கின்றனர். டேப்புகளில் தகவல்களைப் பதிவுசெய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருந்தனர். அவன் வருகையைப் பற்றி நான் ஆர்வமாக இல்லை, அவன் யாரென்றே எனக்குப் பரிச்சயமில்லாதது மட்டுமல்ல, அவன் குருடன் என்பது என்னைத் தொந்தரவு படுத்திக் கொண்டிருந்தது. குருட்டுத்தனம் பற்றிய என் கருத்துகளெல்லாம் திரைப்படங்களிலிருந்து வந்தவை. திரைப்படங்களில் குருடர்கள் மெதுவாக நடப்பார்கள். எப்போதுமே சிரிக்கமாட்டார்கள்.


சிலநேரங்களில் கண்காணிப்பு நாய்களால் வழிநடத்திச் செல்லப்படுவார்கள். குருடன் ஒருவன் என் வீட்டில் தங்குவது நான் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்காத ஒரு விஷயம்.


சியாட்டிலில் அந்தக் கோடைப்பருவத்தின் போது அவளுக்கு ஒரு வேலை தேவையாக இருந்திருக்கிறது. அவளிடம் பணமே இல்லை. அந்தக் கோடையின் இறுதியில் அவள் மணக்கவிருந்தவன் இராணுவ அதிகாரிகள் பயிற்சி நிலையத்தில் இருந்தான். அவனிடமும் பணம் இல்லை. ஆனால் அவன்மேல் அவளுக்குக் காதல், அவள் மேல் அவனுக்குக் காதல், இத்தியாதி... செய்தித்தாள்களில் ஒரு விளம்பரத்தைப் பார்த்திருக்கிறாள்; உதவியாளர் தேவை. பார்வையற்ற ஒருவருக்கு வாசித்துக் காண்பிக்க. அப்புறம் ஒரு தொலைபேசி எண். அவள் போன் செய்து விட்டு அங்கே சென்றாள், உடனே வேலையில் சேர்க்கப்பட்டாள். இந்தக் குருடனிடம் கோடைக் காலம் முழுக்க அவள் பணிபுரிந்தாள். கேஸ் ஸ்டடிக்கள், அறிக்கைகள் போன்ற சமாச்சாரங்களை அவள் வாசித்துக் காட்டுவாளாம். மாவட்ட சமுதாய சேவைத் துறையில் இருந்த அவனது சிறிய அலுவலகத்தை அவனோடு சேர்ந்து சீரமைப்பதில் உதவினாள். என் மனைவியும் அந்தக் குருடனும் நல்ல நண்பர்களாகி விட்டனர். இந்த விஷயங்களெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்? அவள் என்னிடம் சொன்னதுதான். அவள் வேறொன்றையும் என்னிடம் சொன்னாள். அலுவலகத்தில் அவளது கடைசி நாளன்று அந்தக் குருடன் அவள் முகத்தைத் தொடலாமா என்று கேட்டிருக்கிறான். இவள் அதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறாள். அவன் விரல்களால் அவள் முகத்தின் எல்லா பாகங்களையும், அவள் நாசி -அவள் கழுத்தைக்கூட!- தொட்டுப் பார்த்ததாக அவள் என்னிடம் கூறினாள். அவள் அதை எப்போதுமே மறக்கவில்லை. அதைப் பற்றி ஒரு கவிதை கூட எழுதுவதற்கு முயற்சித்தாள், கவிதை எழுத எப்போதுமே அவள் முயன்று கொண்டிருப்பாள். ஒவ்வொரு வருடமும் ஒன்றிரண்டு கவிதைகளை, அவளுக்கு உண்மையிலேயே முக்கியமானதாக எது நடந்ததற்குப் பிறகும், வழக்கமாக எழுதினாள்.


நாங்கள் முதன் முதலாக வெளியே ஒன்றாகப் போக ஆரம்பித்தபோது அந்தக் கவிதையை அவள் காட்டினாள். அந்தக் கவிதையில் அவன் விரல்களையும், அவை அவள் முகத்தின் மேல் எப்படியெல்லாம் ஊர்ந்தன என்பதையும் அவள் நினைவு கூர்ந்திருந்தாள். அந்தச் சமயத்தில் அவள் என்ன உணர்ந்தாள் என்பதையும், குருடன் அவள் நாசியையும் உதடுகளையும் தொட்டபோது அவள் மனதில் என்னவெல்லாம் சென்றது என்பதையும் அந்தக் கவிதையில் சொல்லியிருந்தாள். அந்தக் கவிதையை ஒன்றும் நான் பெரிதாகக் கருதவில்லை என்பது ஞாபகமிருக்கிறது. ஆனாலும் அதனை அவளிடம் நான் சொல்லவில்லை. ஒரு வேளை கவிதையை நான் புரிந்து கொள்ளாதவனாக இருக்கலாம். எதையாவது படிக்க வேண்டியிருந்ததால் நான் முதலில் தேடி எடுப்பது கவிதையாக இருக்காது என்பதை மட்டும் ஒப்புக்கொள்கிறேன்.


எப்படியோ, முதன் முதலாக அவளது காதலையும் ஆதரவையும் அந்த வருங்கால இராணுவ அதிகாரியான அவளுடைய இளம்பிராயத்துக் காதலன்தான் அனுபவித்துக்கொண்டிருந்திருக்கிறான். சரி வேண்டாம், நான் சொல்ல வந்தது, அவள் முகத்தின் மேல் அந்தக் குருடனின் விரல்களை வருடுவதற்கு அனுமதித்ததையும், அந்தக் கோடையின் இறுதியில் அவனிடமிருந்து அவள் விடைபெற்றுக்கொண்டதையும், பிறகு அவள் தன்னுடைய இளம்பிராயத்து இத்தியாதியை மணந்துகொண்டதையும்(அவன் இப்போது ஒரு கமிஷன்டு ஆபீஸர்), சியாட்டிலை விட்டு வந்துவிட்டதையும். ஆனால் அவர்கள், அவளும் அந்தக் குருடனும், ஒருவருக்கொருவர் தொடர்பில்தான் இருந்தனர். ஒரு வருடமோ என்னமோ கழித்து முதன் முதலாக அவள் தொடர்பு கொண்டாள். அலபாமாவிலிருந்த ஒரு வான் படை முகாமிலிருந்து ஒருநாள் இரவு அவனுக்கு போன் செய்தாள். பேச விரும்பினாள். அவர்கள் பேசினர். அவளுடைய வாழ்க்கையைப் பற்றிப் பேசி பதிவு செய்து ஒரு டேப்பை அவனுக்கு அனுப்பச் சொன்னான். அவள் அப்படியே செய்தாள். டேப் அனுப்பினாள். அந்த ஒலிநாடாவில் அந்தக் குருடனிடம் தன் கணவனைப் பற்றியும், ராணுவத்தில் அவர்களது வாழ்க்கையைப் பற்றியும் சொன்னாள். கணவனை அவள் நேசிப்பதாகவும், ஆனால் அவர்கள் வசிக்கும் இடத்தையும், அவன் ராணுவத் தொழிற்சாலையின் ஒரு பகுதியாக இருப்பதையும் அவள் விரும்பவில்லை என்று அந்தப் பார்வையற்றவனிடம் சொன்னாள். அவள் ஒரு கவிதை எழுதியிருப்பதாகவும், அதில் அவன் இருப்பதாகவும் சொன்னாள். ஒரு ஏர்ஃபோர்ஸ் அதிகாரியின் மனைவியாக இருப்பதைப் பற்றி ஒரு கவிதை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொன்னாள். அந்தக் கவிதை அப்போது முடிக்கப்படவில்லை. இன்னமும் எழுதிக் கொண்டிருந்தாள். குருடன் பதிலை ஓர் ஒலிநாடாவில் பதிந்தான். அவளுக்கு ஒலி நாடாவை அனுப்பினான். அவள் பதிலுக்கு மற்றோர் ஒலிநாடாவைப் பதிந்தாள். இது வருடக்கணக்காகத் தொடர்ந்தது. என் மனைவியின் அதிகாரி ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமிற்குப் பணி மாற்றப்பட்டுக் கொண்டேயிருந்தான். மூடி ஏ.எஃப்.பி., மெக்வைர், மெக்கானெல், இறுதியாக ஸாக்ராமென்டோவின் அருகிலுள்ள ட்ராவிஸ்ஸிலிருந்து அவள் டேப்புகளை அனுப்பிக் கொண்டிருந்தாள். ட்ராவிஸ்ஸில் ஒரு நாள் இரவு தனியாக இருந்தபோது அந்தப் படுவேக ஓட்ட வாழ்க்கையில் நெருங்கி வந்தவர்கள் ஒவ்வொருவரையும் தான் துண்டித்துக்கொண்டே செல்வதாக உணர்ந்தாள். அவளால் இனி ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது போலத் தோன்றியது. எழுந்து, மருந்துகள் வைத்திருந்த அலமாரிக்குச் சென்று அங்கிருந்த எல்லா மாத்திரைகளையும், கேப்ஸ்யூல்களையும் வாயில் போட்டு ஒரு பாட்டில் ஜின்னோடு விழுங்கினாள். பின்னர் வென்னீரில் குளித்துவிட்டு மயக்கத்தில் விழுந்தாள்.


செத்துப் போவதற்குப் பதிலாக துவண்டு வாந்தியெடுத்தாள். அவளது அதிகாரி - அவனுக்கு எதற்காக ஒரு பெயர் இருக்க வேண்டும்? இளம்பருவத்துக் காதலன், அதற்கு மேல் அவனுக்கென்ன வேண்டும் - எங்கிருந்தோ வந்து, அவளைப் பார்த்து அதிர்ந்து ஆம்புலன்ஸை அழைத்தான். கொஞ்சநாள் கழித்து இவையெல்லாவற்றையும் டேப்பில் பதிந்து அந்தக் குருடனுக்கு அனுப்பினாள். வருடங்கள் ஆக ஆக, எல்லா சமாச்சாரங்களையும் டேப்புகளில் பேசி அடுத்தடுத்து அனுப்பினாள். ஒவ்வொரு வருடமும் ஒரு கவிதையை எழுதுவதற்கு அடுத்ததாக பிரதானமான பொழுது போக்காக இதுதான் அவளுக்கு இருந்ததென்று நினைக்கிறேன். ஒரு டேப்பில் அவளுடைய அதிகாரியிடமிருந்து கொஞ்சநாட்களுக்குப் பிரிந்து வாழ்வதென்று முடிவெடுத்திருப்பதாக அந்தக் குருடனிடம் சொன்னாள். வேறொரு டேப்பில் அவளுடைய விவகாரத்தைப் பற்றி அவனிடம் சொன்னாள். நானும் அவளும் பழகத் தொடங்கியபிறகு குருடனிடம் அதைப் பற்றியும் சொன்னாள். எல்லாவற்றையும் அவனிடம் சொல்லியிருக்கிறாள், அல்லது அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. ஒருமுறை அந்தக் குருடனிடமிருந்து வந்த சமீபத்தைய டேப்பைக் கேட்க எனக்கு விருப்பமா என்று கேட்டாள். அது ஒரு வருடத்திற்கு முன்பு. அந்த டேப்பில் நான் இருப்பதாகச் சொன்னாள். எனவே நானும் சரி கேட்கிறேன் என்றேன். மதுபானங்களை எடுத்துக் கொண்டு வசிப்பறையில் அமர்ந்தோம். கேட்பதற்கு எங்களைத் தயார்படுத்திக்கொண்டோம். முதலில் டேப்பை பிளேயரில் சொருகி சில டயல்களை அட்ஜஸ்ட் செய்தாள். பின் ஒரு பட்டனை அழுத்தினாள். டேப் கீச்சிட்டது. இந்த உரத்த குரலில் யாரோ ஒருவன் பேசத் தொடங்கினான். அவள் வால்பூமைக் குறைத்தாள். உபத்திரவமில்லாத ஒரு சில நிமிட வளவளப்பிற்குப் பிறகு என் பெயர், இந்த அந்நியன், எனக்குப் பழக்கமேயில்லாத இந்தக் குருடனின் வாயிலிருந்து வருவதைக் கேட்டேன்! அதன் பின் இது: "அவரைப் பற்றி நீ சொன்ன எல்லாவற்றிலிருந்தும் நான் முடிவிற்கு வரமுடிவது என்னவென்றால்..." இந்த நேரத்தில் ஏதோ ஒரு தடங்கல் ஏற்பட்டது. கதவை யாரோ தட்டினார்களோ அல்லது வேறு எந்த இடைஞ்சலோ. திரும்பவும் டேப்பைப் போட்டுக் கேட்கவில்லை. ஒரு வேளை அவ்வளவுதானோ என்னவோ. நான் கேட்க வேண்டியது அனைத்தையும் கேட்டுவிட்டிருக்கலாம்.


இதே குருடன்தான் இப்போது என் வீட்டில் தங்குவதற்காக வந்து கொண்டிருக்கிறான்.


"அவனை பவுலிங்கிற்குக் கூட்டிப் போகட்டுமா?" என்று என் மனைவியிடம் கேட்டேன். அப்போது நறுக்குப்பலகையில் உருளைக் கிழங்குகளைத் தோலுரித்துக் கொண்டிருந்தாள். அவள் உபயோகப்படுத்திக்கொண்டிருந்த கத்தியைக் கீழே வைத்துவிட்டுத் திரும்பினாள்.


"என்னை நீங்கள் நேசிப்பதாக இருந்தால், எனக்காக இதைச் செய்யுங்கள். என்னை நேசிக்காவிட்டால் பரவாயில்லை, விட்டுவிடுங்கள். ஆனால் உங்களுக்கு ஒரு நண்பன் இருந்து, அது எந்த நண்பனாக இருந்தாலும் சரி, அந்த நண்பன் வந்தால் நான் அவருக்கு சௌகரியம் செய்து கொடுப்பேன்” அவள் கைகளைப் பாத்திரத் துவாலையால் துடைத்துக் கொண்டாள்.


"எனக்கு குருட்டு நண்பர்கள் யாருமில்லை" என்றேன்.


"நிறுத்துங்கள், உங்களுக்கு எந்த நண்பனுமே கிடையாது" என்றாள். ”காட்டாமிட், அவருடைய மனைவி இப்போதுதான் செத்துப்போயிருக்கிறாள்! உங்களுக்குப் புரிகிறதா? பொண்டாட்டியை இழந்திருக்கிறான் அவன்!”


நான் பதிலளிக்கவில்லை. குருடனின் மனைவியைப் பற்றி கொஞ்சம் சொன்னாள். அவள் பெயர் பியூலாவாம். பியூலா! அது ஒரு கருப்பினப் பெண்ணின் பெயர்,


“அவன் மனைவி ஒரு நீக்ரோவா?" என்று கேட்டேன்.


”உங்களுக்கென்ன பைத்தியமா?" என்றாள். "மூளை பிசகிவிட்டதா அல்லது வேறெதாவதா?" அவள் ஒரு உருளைக்கிழங்கைக் கையில் எடுத்தாள். அது தரையில் வீசி எறியப்பட்டதைப் பார்த்தேன். அது, அடுப்புக்கடியில் உருண்டு சென்றது. "உங்களுக்கு என்ன ஆகிவிட்டது? குடித்திருக்கிறீர்களா?"


"சும்மா கேட்டேன்” என்றேன்.


உடனே என் மனைவி எனக்கு அக்கறையில்லாத பல விபரங்களை என்னிடம் நிரப்பினாள். ஒரு பானத்தைக் கலந்து கொண்டு சமையலறை மேஜையில் கேட்பதற்கு அமர்ந்தேன். கதையின் துண்டுகள் அவ்வற்றிற்கான இடத்தில் பொருந்தின.


என் மனைவி அந்தக் குருடனிடம் வேலை பார்ப்பதை நிறுத்திய பிறகு அவனிடம் வேலைக்கு வந்தவள் பியூலா. வெகு சீக்கிரத்திலேயே பியூலாவும் குருடனும் ஒரு சர்ச்சில் மணம் செய்து கொண்டனர். அது ஒரு சிறிய திருமணம். முதலில் அத்தகையதொரு திருமணத்திற்கு யார் வருவார்கள்? அவர்கள் இருவர், அப்புறம் பாதிரி, பாதிரியின் மனைவி, ஆனாலும் அது ஒரு சர்ச் திருமணம்தான். அதற்குத்தான் பியூலா ஆசைப்பட்டாள் என்று சொல்லியிருக்கிறான். ஆனால் அப்போதே அவள் சுரப்பிகளில் புற்று நோயை வைத்துக் கொண்டிருந்தாள் போல. அதற்குப் பின் எட்டு வருடங்கள் இணைபிரியாது இருந்தபிறகு - இணைபிரியாது, என் மனைவியின் பிரயோகம் - பியூலாவின் உடல்நலம் வேகமாகச் சீரழிந்தது. ஒரு சியாட்டில் மருத்துவமனையின் அறையில் குருடன் கட்டிலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து அவள் கையைப் பற்றியபடியிருக்க, அவள் இறந்து போனாள். அவர்கள் மணமுடித்து, வாழ்ந்து, ஒன்றாகப் பணியாற்றி, ஒன்றாகத் தூங்கி - செக்ஸ் இருந்திருக்கிறது, நிச்சயம் - அதன் பிறகு அவளை அக்குருடன் புதைக்க வேண்டி வருகிறது. இவையனைத்துமே அந்த அசட்டுப்பெண் எப்படித் தோற்றமளிப்பாளென்று அவன் ஒருபோதும் பார்த்திருக்காமலே நடந்திருக்கிறது. இது என் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இதைக் கேட்டபின், அந்தக் குருடன் மேல் எனக்குக் கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. அதன்பிறகுதான் அந்தப் பெண் எவ்வளவு இரங்கத்தக்கதொரு வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்திருக்கிறாள் என்பது உறைத்தது. தன் மனதிற்குகந்தவனின் கண்களில்தான் தெரிவதைப் போல தன்னை எப்போதுமே பார்த்துக்கொள்ள முடியாத ஒரு பெண்ணைக் கற்பனை செய்து பாருங்கள்! தன் மனதிற்குகந்தவனிடமிருந்து அவள் அழகை ரசித்துச் சொல்கிற சின்னச் சின்ன பாராட்டுகளை ஒரு நாள் கூடக் கேட்காமல் ஒவ்வொரு நாளையும் கழித்திருந்த ஒரு பெண். அவள் முகத்தின் சலனங்களை, துயரத்தையோ குதூகலத்தையோ எப்போதுமே பார்க்க முடியாத ஒரு கணவனைக் கொண்ட ஒரு பெண். மேக்கப் அணிந்து கொள்ளலாம், அல்லது தவிர்த்துவிடலாம் - அவனுக்கு என்ன வித்தியாசம் தெரியப்போகிறது? அவள் விரும்பினால் ஒரு கண்ணைச் சுற்றி பச்சைக் கலர் மையை ஈஷிக்கொண்டு, மூக்கில் நேராக ஒரு ஊசியும் மஞ்சள் சட்டையும், ஊதா நிறத்தில் ஷூக்களும் அணிந்து கொண்டு வரலாம். அதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. அதற்கப்புறம் மரணத்தில் நழுவிவிடலாம். அந்தக் குருடனின் கை அவள் கையைப் பற்றியபடியிருக்க, அவனுடைய குருட்டுக் கண்கள் கண்ணீரைச் சொரிந்தபடியிருக்க, - இப்போது நான் கற்பனை செய்து பார்க்கிறேன் - அவளது கடைசி நினைவு என்னவாக இருந்திருக்கும்? அவள் எப்படி இருப்பாள் என்று அவன் கடைசி வரை அறிந்திருக்கவில்லை. ஆனால் அவள் அவசரமாக கல்லறைக்கு ஒரு எக்ஸ்பிரஸ்ஸில் ஏறிவிட்டிருக்கிறாள். ராபர்ட்டுக்கு ஒரு சின்ன இன்ஷுரன்ஸ் பாலிசியையும் ஒரு இருபது பெசோ மெக்ஸிக நாணயத்தின் ஒரு பாதித் துண்டையும் அவள் விட்டுச் சென்றிருந்தாள். நாணயத்தின் மற்ற பாதி அவளோடு சவப்பெட்டிக்குள் சென்றிருக்கிறது. பரிதாபம்.


எனவே நேரம் புரண்டு சென்றதும் என் மனைவி அவனைக் கூட்டி வர நிலையத்திற்குச் சென்றாள். காத்திருப்பதைத் தவிர வேறெதனையும் செய்யமுடியாமல், அதற்காக அவனை மனதுக்குல் திட்டிக்கொண்டு, மது அருந்தியபடி டி.வி பார்த்துக்கொண்டிருந்தபோது கார் உள்ளே நுழைகிற சத்தத்தைக் கேட்டேன். சோபாவிலிருந்து கோப்பையோடு எழுந்து சன்னலுக்குச் சென்று பார்த்தேன். என் மனைவி சத்தமாகச் சிரித்துக்கொண்டே காரை நிறுத்துவதைப் பார்த்தேன். காரிலிருந்து வெளிவந்து கதவைச் சாத்துவதைப் பார்த்தேன். அவள் இன்னமும் ஒரு புன்னகையை அணிந்துகொண்டிருந்தாள். ஆச்சரியம். காரைச் சுற்றிக் கொண்டு மறுபக்கம் செல்ல, அந்தக் குருடன் ஏற்கனவே வெளியே வரத் தொடங்கிவிட்டிருந்தான். இந்தக் குருடன், கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், அடர்த்தியான தாடி வைத்திருந்தான்! குருடனுக்கு தாடி! இது ரொம்பவும் அதிகம்தானென்பேன். குருடன் பின்னிருக்கைக்குச் சென்று ஒரு சூட்கேஸை வெளியில் இழுத்தான். என் மனைவி அவன் கையைப் பற்றி கார் கதவை மூடிவிட்டு. வழியெல்லாம் பேசிக்கொண்டே ஊர்திப் பாதையில் அவனைச் செலுத்தி, முன் முகப்பிற்குக் கைத்தாங்கலாகப் படியேற்றிக்கொண்டு வந்தாள். டி.வியை அணைத்தேன். பானத்தைக் காலி செய்துவிட்டு கோப்பையைக் கழுவி கைகளைத் துடைத்துக் கொண்டேன். வாசலுக்குச் சென்றேன்.


என் மனைவி, “ராபர்ட்டை நீங்கள் சந்திக்க வேண்டும். ராபர்ட், இவர் என் கணவர். இவரைப் பற்றி உங்களிடம் சொல்லி யிருக்கிறேன்" என்றாள். அவள் குதூகலத்திலிருந்தாள். இந்தக் குருடனின் கோட் சட்டைக் கையைப் பிடித்து முன்னகர்த்தினாள்.


குருடன் சூட்கேஸைக் கீழே வைத்தான். அவன் கை உயர்ந்தது. அதைப் பற்றினேன். அவன் என் கையை அழுத்திப் பிசைந்தான் கையை விடாமல் கொஞ்ச நேரம் வைத்திருந்து பின் விடுவித்தான்.


"நாம் ஏற்கனவே சந்தித்திருப்பதைப் போல உணர்கிறேன்” அவன் முழங்கினான்.


"எனக்கும்" என்றேன். வேறு என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. பின், "வெல்கம், உங்களைப் பற்றி நிறையவே கேட்டிருக்கிறேன்” என்றேன்.


அவனைக் கையைப் பிடித்து என் மனைவி வழிநடத்திக் கொண்டுவர, ஒரு சிறிய குழுவாக தாழ்வாரத்திலிருந்து வசிப்பறைக்குச் சென்றோம். இன்னொரு கையில் குருடன் சூட்கேஸைத் தூக்கிக்கொண்டு வந்தான். "கொஞ்சம் இடப்புறமாக வா ராபர்ட், அப்படித்தான். இப்போது கவனி. இங்கே ஒரு நாற்காலி இருக்கிறது. அதேதான். இங்கேயே உட்கார்ந்து கொள். இது சோபா. இந்த சோபாவை இரண்டு வாரங்களுக்கு முந்திதான் வாங்கினோம்.”


பழைய சோபாவைப் பற்றி ஏதாவது சொல்லலாமென்று யத்தனித்தேன். அந்தப் பழைய சோபா எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. ஆனால் எதுவும் சொல்லவில்லை. பின் வேறொன்றைப் பற்றிச் சின்ன சம்பாஷணையாக, ஹட்ஸன் செல்லும் வழியில் உள்ள எழிலார்ந்த பயணத்தைப் பற்றிப் பேச விரும்பினேன். எப்படி நீங்கள் நியூயார்க் செல்லும்போது ரயிலின் வலது பக்கத்தில் உட்கார வேண்டும், நியூயார்க்கிலிருந்து திரும்பி வரும்போது இடப்புறத்தில் உட்கார வேண்டும் என்பதைப்போல.


"சரி, ரயில் பயணம் நன்றாக இருந்ததா?” என்றேன். "ரயிலின் எந்தப் புறத்தில் உட்கார்ந்து வந்தீர்கள்?”


"என்ன ஒரு கேள்வி, எந்தப் புறத்தில்!” என்றாள் என் மனைவி, “எந்தப் புறத்திலாக இருந்தால் என்ன?”


"சும்மா கேட்டேன்” என்றேன்.


"வலப்புறம்" குருடன் சொன்னான், “ஏறக்குறைய நாற்பது வருடங்களாக ரயிலில் போயிருக்கவேயில்லை. குழந்தையாக இருந்ததற்கப்புறம், என் வீட்டாரோடு போனதுதான். அது பல காலமாகிவிட்டது. அந்த உணர்வையே மறந்துவிட்டிருந்தேன். இப்போது என் தாடியில் மூப்பு புகுந்துவிட்டது” என்றான். "அப்படித்தான் என்னிடம் சொல்கிறார்கள். என்னைப் பார்த்தால் ஞானவானாகத் தெரிகிறதா அன்பே?" குருடன் என் மனைவியிடம் கேட்டான்.


"ஞானவானாகத்தான் தெரிகிறாய், ராபர்ட்” என்றாள். “ராபர்ட்" என்றழைத்தாள். "ராபர்ட், உன்னைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது"


ஒரு வழியாக, குருடனிடமிருந்து பார்வையை நகர்த்தி என்னைப் பார்த்தாள். எனது முகபாவம் அவளுக்குப் பிடித்தமானதாக இல்லை போல எனக்குத் தோன்றியது. நான் தோள்களைக் குலுக்கிக்கொண்டேன்.


பார்வையில்லாத யாரையும் நான் சந்தித்ததோ, தனிப்பட்ட முறையில் அறிந்ததோ இல்லை. இந்தக் குருடன் பின் நாற்பதுகளில், கனத்த சரீரத்துடன் வழுக்கையும் தொய்ந்த தோள்களுமாக ஏதோ கனமான பாரத்தைச் சுமந்திருப்பதைப் போல இருந்தான். பழுப்பு நிற அரைக்கைச் சட்டையும், பழுப்பு ஷூக்களும், வெளிர் பழுப்பில் சட்டையும், ஒரு விளையாட்டு வீரர்கள் கோட்டும் பந்தாவாக அணிந்திருந்தான். அவனுக்கு இந்த முழுசான தாடியும் இருந்தது. ஆனால் இவன் கழியை உபயோகிப்பவனாக இல்லை, கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருக்கவில்லை. குருடர்களுக்குக் கறுப்புக் கண்ணாடி ஒரு கட்டாயம் என்றே எப்போதும் நினைத்து வந்திருக்கிறேன். உண்மையில் சொல்லப்போனால் அவன் அணிந்துகொண்டிருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்த்தேன். முதல் பார்வைக்கு அவன் கண்கள் மற்ற எவருடைய கண்களைப் போலவேதான் இருந்தன. ஆனால் உன்னிப்பாகப் பார்த்தால் அவற்றில் ஏதோ வித்தியாசம் இருந்தது. விழிப்படலத்தில் அதிகப்படியான வெண்மை இருந்தது ஒரு விஷயம். கண் பாவைகள் அவனுடைய கட்டுப்பாடின்றி, அவனால் நிறுத்த முடியாதபடிக்கு விழிக்கோப்பையில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. எனக்குப் புல்லரித்தது. அவன் முகத்தை நான் உற்று நோக்கியபோது, இடது பாவை அவன் மூக்கை நோக்கி நகர்ந்து வர, மற்றது ஒரே இடத்தில் நிலைத்து நிற்பதற்கு பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அது வெறும் பிரயத்தனம் மட்டும்தான். அந்தக் கண் அவனுக்குத் தெரிந்தோ, அவனுடைய விருப்பமின்றியோதான் அலைந்து கொண்டிருந்தது. "உங்களுக்கொரு பானம் கொண்டுவந்திருக்கிறேன். உங்களுக்குப் பிடித்தது என்ன? எங்களிடம் எல்லாமே கொஞ்சம் கொஞ்சம் இருக்கின்றன. இது எங்களுடைய பொழுது போக்குகளில் ஒன்று."


"நண்பா, நானே ஒரு ஸ்காட்ச் மனிதன்தான்" அவனுடைய உரத்த குரலில் படுவேகமாகப் பேசினான்.


“சரி” என்றேன். நண்பா! ”அப்படியா, ரொம்ப நல்லது.”


அவன் விரல்களை சோபாவிற்குப் பக்கத்திலிருந்த சூட்கேஸிற்குக் கொண்டுவந்து தடவித் திறந்தான். அவனது பொருள்களை எடுக்கிறான். அதற்காக அவனை நான் குறை சொல்லவில்லை.


"மேலே உன் அறைக்கு இதைக் கொண்டு செல்கிறேன்,” என்றாள் என் மனைவி.


"வேண்டாம், இருக்கட்டும்” குருடன் உரத்த குரலில் சொன்னான். “நான் போகும்போது அதுவும் போகட்டும்."


"ஸ்காட்ச்சோடு கொஞ்சம் தண்ணீர்?” என்றேன்.


"மிகக் கொஞ்சமாக” என்றான்.


“நினைத்தேன்” என்றேன்.


"ஒரேயொரு துளி மட்டும். அந்த ஐரிஷ் நடிகன், பாரி ஃபிட்ஸ் ஜெரால்ட் தெரியுமா? நான் அவனைப்போல. ஃபிட்ஸ்ஜெரால்ட் சொன்னான். நான் தண்ணீர் குடிக்கும்போது தண்ணீர் மட்டும் குடிப்பேன். விஸ்கி குடிக்கும்போது விஸ்கி மட்டும் குடிப்பேன்”


என் மனைவி சிரித்தாள். குருடன் தன் கையை தாடிக்கு அடியில் வைத்தான். தாடியை மெதுவாக உயர்த்தி பின் கீழே விட்டான்.


பானங்களை நான் பகிர்ந்தேன். மூன்று பெரிய கோப்பைகளில் ஸ்காட்ச்சோடு ஒவ்வொன்றிலும் மிகக் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்தேன். சௌகரியமாக எங்களை அமைத்துக்கொண்டு ராபர்ட்டின் பயணங்களைப் பற்றிப் பேசினோம். முதலில் வெஸ்ட் கோஸ்ட்டிலிருந்து கனெக்டிகட் வரையான நீண்ட விமானப் பயணத்தைப் பேசி முடித்தோம். பின் கனெக்டிகட்டிலிருந்து இங்கே வரை ரயிலில் வந்தது. பயணத்தின் இந்தப் பகுதியைப் பற்றிப் பேசுவதற்கு இன்னுமொரு சுற்றுக்கு மது ஊற்றிக்கொண்டோம்.


குருடர்கள் புகை பிடிப்பதில்லை என்று எங்கேயோ நான் படித்தது ஞாபகத்தில் வந்தது. அதற்கு அனுமானம் என்னவென்றால், அவர்கள் இழுத்து வெளிவிடுகிற புகையை அவர்களால் பார்க்க முடிவதில்லை என்பதாலாம். பார்வையற்றவர்களைப் பற்றி எனக்குத் தெர்ந்திருப்பது அவ்வளவுதான் என்று நினைத்தேன். ஆனால் இந்தப் பார்வையற்றவன் சிகரெட்டின் கடைசிப் பஞ்சடைப்பு வரை புகைத்துவிட்டு வேறொன்றைப் பற்றவைத்துக் கொள்கிறான். இந்தக் குருடன் சாம்பல் குடுவையை நிரப்ப, என் மனைவி அதைக் கொட்டிவிட்டு வருகிறாள்.


இரவு உணவுக்கு நாங்கள் மேஜையில் அமரும்போது இன்னொருமுறை குடித்தோம். ராபர்ட்டின் தட்டில் க்யூப் ஸ்டீக், உருளைக்கிழங்குச் சீவல்கள், பச்சை பீன்ஸ் என்று குவித்தாள். அவனுக்காக இரண்டு ஸ்லைஸ் ரொட்டிகளுக்கு வெண்ணெய் தடவினேன்,


"இதோ உங்களுக்கு ரொட்டியும் வெண்ணெயும் வைத்திருக்கிறேன்” என்றேன். என் பானத்தில் கொஞ்சம் விழுங்கினேன். "இப்போது ஜெபம் செய்யலாம்” என்றேன். குருடன் தலையைத் தாழ்த்திக் கொண்டான். என் மனைவி நம்ப முடியாமல் வாயைப் பிளந்தபடி என்னைப் பார்த்தாள். “போன் ஒலிக்கக்கூடாது, உணவு ஆறிப்போகக் கூடாது என்று ஜெபிப்போம்” என்றேன்.


நாங்கள் உணவில் புகுந்தோம். மேஜைமீது சாப்பிட இருந்த எல்லாவற்றையும் சாப்பிட்டுத் தீர்த்தோம். மறுநாளே இல்லையென்பதைப் போலச் சாப்பிட்டோம். நாங்கள் பேசவில்லை. சாப்பிட்டோம். கழுத்து வரைக்கும். அந்த மேஜையை மேய்ந்து முடித்தோம். தீவிரமான உணவருந்தல். குருடன் எடுத்த எடுப்பிலேயே அவன் தட்டு இருக்குமிடத்தை அறிந்திருந்தான். மாமிசத்துண்டின் மேல் அவன் கத்தியையும் முட்கரண்டியையும் பயன்படுத்தும் விதத்தைப் பார்த்து நாங்கள் வியந்தோம். மாமிசத்தை இரண்டாக வெட்டி, முட்கரண்டியில் குத்தி வாய்க்குள் விட்டு, உருளைக்கிழங்குச் சீவல்களை அடுத்ததாகக் காலியாக்கிவிட்டு, பீன்ஸிற்கு வந்து வெண்ணெய் தடவிய ரொட்டியைப் பெரிய துண்டுகளாகப் பிய்த்து ஒரே விள்ளலில் விழுங்கி முடித்தான். இதற்கடுத்து பெரிய குவளையில் வைத்திருந்த பாலை ஒரே மூச்சில் குடித்து கீழே வைத்தான். இவை அத்தனையின் போதும் விரல்களை ஒருமுறைகூடப் பயன்படுத்த வேண்டியிருக்கவில்லை அவனுக்கு.


ஒரு ஸ்ட்ராபெர்ரி மோதகத்தின் ஒரு பாதி உட்பட அனைத்தையும் முடித்தோம். சில கணங்களுக்கு ஸ்தம்பித்தது போல உட்கார்ந்திருந்தோம். எங்கள் முகங்களில் வியர்வை முத்திட்டன. கடைசியில் சாப்பிட்ட தட்டுகளை அப்படியே வைத்துவிட்டு மேஜையிலிருந்து எழுந்தோம். திரும்பிப் பார்க்கவேயில்லை. வசிப்பறைக்குச் சென்று எங்கள் இருக்கைகளுக்குள் புதைந்தோம். ராபர்ட்டும் என் மனைவியும் சோபாவில் உட்கார்ந்தனர். நான் அந்தப் பெரிய நாற்காலியில் அமர்ந்தேன். இரண்டு அல்லது மூன்று சுற்றுகளுக்கு மதுபானங்களை எங்களுக்கு எடுத்துவைத்துக்கொண்டு அவர்களிருவரும் கடந்த பத்து வருடங்களில் அவர்களுக்கு நடந்த முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசினர். பெரும்பாலான நேரத்திற்கு நான் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தேன். அவ்வப்போது சேர்ந்து கொண்டேன். நான் அறையை விட்டுப் போய்விட்டேன் என்று அவன் நினைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. என்னைத் தனியாக விட்டுவிட்டதைப் போல நான் உணர்வதாக அவள் நினைத்துக் கொள்ளவும் நான் விரும்பவில்லை. அவர்கள் கடந்த பத்து வருடங்களில் அவர்களுக்கு - அவர்களுக்கு! - நடந்த விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள். என் மனைவியின் இனிய இதழ்களிலிருந்து என் பெயர் வருமாவென்று பலனின்றிக் காத்திருந்தேன். "அப்புறம்தான் என் அன்பிற்கினிய கணவர் என் வாழ்க்கைக்குள் வந்தார்” - என்பது போல ஏதாவது. ஆனால் அதைப் போல எதையுமே நான் கேட்கவில்லை. எல்லாம் ராபர்ட்டைப் பற்றித்தான். ராபர்ட் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் செய்திருப்பான் போலத் தெரிந்தது. குருட்டு சகலகலா வல்லவன். ஆனால் மிகச்சமீபத்தில் அவனும் அவள் மனைவியும் ஓர் ஆம்வே விநியோகத்தை எடுத்ததாகவும், அதன் மூலம் இந்தளவுக்கு அவர்கள் பொருளீட்டிருப்பதாகவும் அறிந்துகொண்டேன், குருடன் ஒரு ஹாம் ரேடியோ ஆப்பரேட்டர் கூடவாம். அவனுடைய உரத்த குரலில் குவாம்மில், பிலிப்பைன்ஸில், அலாஸ்காவில், டஹிதியில் கூட இருக்கும் அவனுடைய சக ஆப்பரேட்டர்களோடு சம்பாஷிப்பதைப் பற்றிச் சொன்னான். அந்த இடங்களுக்கெல்லாம் அவன் செல்ல விரும்பினால் அவனுக்கு ஏகப்பட்ட சினேகிதர்கள் இருப்பார்களென்றான். அவ்வப்போது அவன் குருட்டு முகத்தை என்னை நோக்கித் திருப்பி, தாடிக்கடியில் அவன் கையைச் செலுத்திக்கொண்டு ஏதாவது கேட்பான். இப்போதிருக்கும் வேலையில் எவ்வளவு காலமாக இருக்கிறேன் ? (மூன்று வருடங்கள்). வேலை எனக்குப் பிடித்திருக்கிறதா? (இல்லை). இதிலேயே தொடர்ந்து இருக்கபோகிறேனா? (வேறுவழி?.) கேள்விகளை அவன் காலிசெய்துவிட்டானென்று எனக்குத் தோன்றியபோது, எழுந்து டிவியைப் போட்டேன்.


என் மனைவி எரிச்சலோடு என்னைப் பார்த்தாள். அவள் கொதிநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். பின் குருடனைப் பார்த்து, "ராபர்ட் உன்னிடம் டிவி இருக்கிறதா?” என்றாள்.


"அன்பே, என்னிடம் இரண்டு டி.விக்கள் உண்டு. ஒன்று கலர், மற்றது ஒரு பழைய அடாசு பிளாக் அண்டு ஒயிட்.. வேடிக்கை என்னவென்றால் நான் எப்போதுமே கலர் டி.வியைத்தான் போடுகிறேன். இது வேடிக்கையானதுதான், என்ன சொல்கிறீர்கள்?”


அதற்கு என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. சொல்வதற்கு என்னிடம் சுத்தமாக எதுவுமேயில்லை. கருத்தே கிடையாது. எனவே செய்தி நிகழ்ச்சியைக் கவனித்துக்கொண்டு, அறிவிப்பாளர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க முயற்சி செய்தேன்.


"இது ஒரு கலர் டி.வி” என்றான் குருடன், "எப்படியென்று என்னைக் கேட்காதீர்கள். ஆனால், என்னால் சொல்ல முடியும்."


"கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் மாற்றினோம்" என்றேன்.


குருடன் அவனது பானத்தை இன்னொருமுறை எடுத்துச் சுவைத்தான். தாடியை உயர்த்தி முகர்ந்து பார்த்து, கீழே விட்டான். சோபாவில் முன்னால் வந்து சாய்ந்தான். ஆஷ்ட்ரேயை காபி மேஜையில் அமைத்துவிட்டு, லைட்டரை அவன் சிகரெட்டில் வைத்தான். சோபாவில் பின்னுக்குச் சாய்ந்து கால்களைப் பின்னிக் கொண்டான்.


என் மனைவி வாயைப் பொத்திக்கொண்டு கொட்டாவி விட்டாள். சோம்பல் முறித்தாள். “நான் மாடிக்குப் போய் உடை மாற்றிக் கொள்ளலாமென்றிருக்கிறேன். ராபர்ட், சௌகரியமாக இருக்கிறதா?"


"சௌகரியமாக இருக்கிறது"


"இந்த வீட்டில் நீ சௌகரியமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.”


"நான் சௌகரியமாகத்தான் இருக்கிறேன்” என்றான் குருடன்.


அவள் அறையை விட்டுச் சென்றதும் அவனும் நானும் வானிலை அறிக்கை கேட்டோம். பின்பு விளையாட்டுச் செய்திகள். அவள் போய் வெகு நேரமாகி விட்டதால் திரும்ப வருவாளா என்பது எனக்குத் தெரியவில்லை. அவள் படுக்கைக்குச் சென்று விட்டிருக்க வேண்டுமென நினைத்தேன். கீழே இறங்கிவரக்கூடாதா என்றிருந்தது எனக்கு. குருடன் ஒருவனோடு தனியாக இருக்க எனக்கு விருப்பமில்லை. இன்னொரு முறை மது அருந்தலாமா என்று கேட்டேன், அவன், நிச்சயமாக என்றான். என்னோடு சேர்ந்து அபின் புகைக்க விருப்பமா என்று கேட்டேன். இப்போதுதான் ஒரு நம்பர் சுருட்டி வைத்திருக்கிறேன் என்றேன். அப்படி எதுவும் செய்திருக்கவில்லை. ஆனால் இப்போது இரண்டாகச் செய்யலாமென்று தோன்றியது.


"உங்களுடன் சேர்ந்து கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கிறேன்” என்றான்.


"அப்படிச் சொல்லுங்கள். இதுதான் தைரியம்."


எங்களுக்கான பானங்களை எடுத்துக்கொண்டு அவனோடு சோபாவில் அமர்ந்தேன். தடிமனாக இரண்டு நம்பர்கள் சுருட்டினேன். ஒன்றைப் பற்றவைத்து அவன் விரல்களுக்குக் கொண்டு வந்தேன். அவன் அதைப் பிடித்து வாயில் பொருத்தி இழுத்தான்,


"எவ்வளவு நேரம் முடியுமோ அந்தளவுக்கு தம் பிடித்து வைத்திருங்கள்” என்றேன் அவனுக்கு எதுவுமே தெரியவில்லையென்பது தெரிந்தது.


என் மனைவி அவளது இளஞ்சிவப்புச் செருப்புகளோடு கீழிறங்கி வந்தாள்.


"என்ன நாற்றம் இங்கே?” என்றாள்.


"கனாபிஸ் கொஞ்சம் புகைக்கலாமென்று நினைத்தோம்” என்றேன்.


என் மனைவி என்னைக் கொடூரமான பார்வை பார்த்தாள். குருடனை நோக்கி, "ராபர்ட், நீ இதெல்லாம் புகைப்பாய் என்று எனக்குத் தெரியாது.”


”இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன் அன்பே, எல்லாவற்றிற்கும் முதல்முறை என்று ஒன்றிருக்கிறது. ஆனால் இதுவரை எனக்கொன்றும் உணரமுடியவில்லை."


"இந்தச் சரக்கு ரொம்ப மென்மையானது. இலேசானது. இதன் போதை மிகவும் மட்டமாகவே இருக்கும். புரட்டிப் போட்டுவிடாது."


"பரவாயில்லை, என்னை எதுவும் செய்யாது நண்பா” என்றான். சிரித்தான்.


என் மனைவி குருடனுக்கும் எனக்குமிடையில் சோபாவில் உட்கார்ந்தாள். அவளுக்கு நம்பரைக் கைமாற்றினேன். அவள் அதை வாங்கி இழுத்துவிட்டு என்னிடம் திருப்பித் தந்தாள்.


“இது எந்தச் சுற்றில் செல்கிறது," என்றாள். “நான் இதைப் புகைக்கவே கூடாது. இப்போதே என் கண்களைத் திறந்து வைத்திருக்க முடியவில்லை. இந்த இரவு உணவு என்னை அழுத்திவிட்டது. இந்தளவுக்கு நான் சாப்பிட்டிருக்க கூடாது."


“அந்த ஸ்ட்ராபெர்ரி மோதகம் தான்” என்றான் குருடன். "அதுதான் இந்த வேலையைச் செய்திருக்கிறது” என்று அவனுடைய பலமான சிரிப்பைச் சிரித்தான். தலையைக் குலுக்கிக்கொண்டான்.


"இன்னும்கூட ஸ்ட்ராபெர்ரி மோதகம் இருக்கிறது” என்றேன்.


"இன்னும் கொஞ்சம் வேண்டுமா ராபர்ட்?” என் மனைவி கேட்டாள்.


"கொஞ்ச நேரம் கழித்து” என்றான்.


டி.வி.யின் பக்கம் கவனத்தைச் செலுத்தினோம். என் மனைவி மீண்டும் கொட்டாவி விட்டாள். "உன் படுக்கை தயாராகிவிட்டது, எப்போது படுக்கப் போகிறாய் ராபர்ட் இன்று முழுக்க உனக்கு அலைச்சல். படுக்கப் போகும்போது சொல்” என்றாள். அவன் கையைப் பிடித்து உலுக்கினாள். "ராபர்ட்?"


அவன் சுதாரித்து, "உண்மையாகவே எனக்கு சுகமாக இருக்கிறது. இது எல்லாவற்றையும் அடித்துவிடுகிறது இல்லையா?” என்றான்.


"இதோ உங்களுக்கு வருகிறது” என்று அவன் விரல்களுக்கிடையில் நம்பரைச் சொருகினேன். அவன் புகையை இழுத்து, மார்பை நிரப்பி அப்படியே தம் பிடித்திருந்து பின் வெளி விட்டான். ஒன்பது வயதிலிருந்தே பழகியிருப்பவன் போல இருந்தது.


"நன்றி நண்பா, இவ்வளவு போதுமென்று நினைக்கிறேன். இது வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது போலிருக்கிறது" என்றான். புகையும் சுருட்டை என் மனைவியை நோக்கி நீட்டினான்.


"எனக்கும் அப்படியேதான்” என்றாள் அவள். “டிட் எனக்குக் கூட.” அவள் சுருட்டை வாங்கி என்னிடம் கைமாற்றினாள்.


"நான் இங்கேயே உங்களுக்கு நடுவில் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். உங்களுக்கொன்றும் தொந்தரவு கிடையாதே? உங்களிருவரில் யாருக்காவது? தொந்தரவாக இருந்தால் சொல்லுங்கள், இல்லாவிட்டால் நான் இங்கேயே கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். நீங்கள் படுக்கப் போகும்வரை" என்றாள். “உன் படுக்கை தயாராகிவிட்டது. ராபர்ட் மாடிப்படி முடிவில் எங்கள் அறைக்குப் பக்கத்து அறை. நான் தூங்கிவிட்டால் என்னை எழுப்புங்கள்" அவள் சொல்லிவிட்டு கண்களை மூடி தூக்கத்தில் ஆழ்ந்தாள்.


செய்திகள் முடிந்தது. எழுந்து சானலை மாற்றினேன். சோபாவுக்குத் திரும்பி வந்தேன். மனைவி தூங்கிப் போகாமல் இருந்திருக்கலாமென்று தோன்றியது. சோபாவின் முதுகில் அவள் தலை சாய்ந்திருந்தது. வாய் திறந்திருந்தது. அவள் ஒருக்களித்திருந்ததில் அவள் உடை காலிலிருந்து விலகி வாளிப்பான தொடையை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. நான் எழுந்து உடையை சரிசெய்ய யத்தனித்த போது அந்த குருடன் ஒரு கணம் பார்வையில் பட்டான். அடச்சே! உடையைப் பழையபடியே திறந்துவிட்டேன்.


“ஸ்ட்ராபெர்ரி மோதகம் எப்போது வேண்டுமென்று சொல்லுங்கள்”


“சரி."


"களைத்திருக்கிறீர்களா? உங்கள் படுக்கைக்கு அழைத்துச் செல்லட்டுமா? படுக்கச் செல்கிறீர்களா?"


"இன்னும் இல்லை நண்பா” என்றான். "உங்களுடன் விழித்திருக்கிறேன். உங்களுக்குச் சரியென்றால் நீங்கள் படுக்கப் போகும்வரை நானும் விழித்திருக்கிறேன். நாமிருவரும் பேசிக் கொள்ள சந்தர்ப்பமே கிடைக்கவில்லை, இல்லையா? எல்லா நேரத்தையும் நானும் அவளுமே எடுத்துக்கொண்டு விட்டதாக நினைக்கிறேன்.” அவன் தாடியை உயர்த்தி கீழே விட்டான். சிகரெட்டுகளையும் அவனது லைட்டரையும் எடுத்துக் கொண்டான்.


“பரவாயில்லை” என்றேன். பிறகு சொன்னேன், "உங்களுடன் நேரத்தைக் கழிப்பதில் மகிழ்கிறேன்.”


மகிழ்ச்சியாக இருப்பதாகத்தான் தோன்றியது. ஒவ்வோர் இரவும் அபின் புகைத்துவிட்டு தூக்கம் வரும்வரை விழித்திருப்பேன். என் மனைவியும் நானும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வது அபூர்வம். நான் தூங்கும்போது இந்தக் கனவுகள் வரும். என் இதயம் தாறுமாறாகப் பேதலித்திருக்க, அவற்றிலிருந்து எழுந்திருப்பேன்.


தேவாலயங்களைப் பற்றியும் வரலாற்றின் இடைநிலைக் காலத்தைப்பற்றியும் ஏதோ தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது. வழக்கமான தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் போலத் தெரியவில்லை. வேறு எதையாவது பார்க்கலாமென்று விரும்பினேன். மற்றச் சேனல்களுக்கு மாற்றினேன். எதிலும் ஒன்றுமில்லை. எனவே முதல் சேனலுக்கே திரும்பிவந்து அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.


“அதற்கென்ன பரவாயில்லை நண்பா” என்றான் குருடன். "நீங்கள் எதைப் பார்ப்பதென்றாலும் எனக்கு ஓக்கே. நான் எப்போதுமே எதையாவது கற்றுக் கொண்டிருக்கிறேன். கற்றுக்கொள்ளுதல் எப்போதுமே முடிவதில்லை. இன்றிரவு எதையாவது கற்றுக்கொண்டால் ஒரு கஷ்டமுமில்லை. எனக்குக் காதுகள் இருக்கின்றன” என்றான்.


கொஞ்ச நேரத்திற்கு நாங்கள் எதுவும் பேசவில்லை. என்னை நோக்கித் தலையைத் திருப்பினான். வலது செவியை டிவியிருக்கும் திசையை நோக்கி சாய்த்தான். பார்க்க பாவமாக இருந்தது. அவ்வப்போது அவன் இமைகள் செருகின, பின் வெடுக்கெனத் திறந்தன. அவ்வப்போது அவன் தாடிக்குள் விரல்களைச் செலுத்தி கோதிக்கொண்டான், டி.வி.யில் அவன் கேட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி எதையோ சிந்திப்பவன் போல.


திரையில் தலைமூடாக்கணிந்தவர்கள் சிலரை, எலும்புக் கூடுகள் போல உடையணிந்தவர்களும் பிசாசுகள்போல உடையணிந்தவர்களும் துன்புறுத்துவதைப் போலக் காட்டிக் கொண்டிருந்தனர். பிசாசுகளைப்போல வேடமணிந்தவர்கள் பிசாசு முகமூடிகள், கொம்புகள், நீண்ட வால்கள் அணிந்திருந்தனர். இந்த அணிவரிசை ஓர் ஊர்வலத்தின் பகுதியாக இருந்தது. இதனை வர்ணித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயன் வருடத்திற்கொருமுறை ஸ்பெயினில் இது நடைபெற்று வருவதாகக் கூறினான். நடப்பவற்றைக் குருடனுக்கு விளக்க முற்பட்டேன்.


"எலும்புக் கூடுகள்” என்றான். “எலும்புக் கூடுகள் பற்றி எனக்குத் தெரியும்" என்று சொல்லிவிட்டுத் தலையை ஆட்டிக்கொண்டான்.


தொலைக்காட்சி இந்த கதீட்ரல் ஒன்றைக் காட்டியது. பிறகு இன்னொன்றைத் தூரத்திலிருந்து மெதுவாக நெருங்கியது. நீண்டெழுந்த உதைகால்களையும் மேகங்களை எட்டும் தூபிகளையும் கொண்ட பாரீஸின் பிரசித்தி பெற்ற கதீட்ரலுக்கு இறுதியில் காட்சி மாறியது. கேமரா பின்வாங்கி கதீட்ரலின் முழு உருவமும் தொடுவானுக்கு மேலாக உயர்வதைக் காட்டியது.


வர்ணனை செய்து கொண்டிருந்த ஆங்கிலேயன் பல நேரங்களில் எதுவும் பேசாமல் வெறுமனே காமிரா மட்டும் கதீட்ரல்களைச் சுற்றி வருவதை அனுமதித்தான். இல்லாவிட்டால் அதன் பின் கேமரா வயல்களில் வேலை செய்கிற எருதுகளின் பின்னால் நடக்கிற ஆட்களின் கிராமப்பகுதிகளில் சுற்றும். முடிந்தவரை மௌனமாகக் காத்திருந்தேன். அதன்பின் எதையோ நான் சொல்லவேண்டுமென்று உணர்ந்தேன். "இப்போது இந்த கதீட்ரலின் வெளிப்புறத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். நீர்த்தாரைத் தூம்பிகள். கோர உருவங்கள் போலச் செதுக்கப் பட்டிருக்கும் சிறிய சிற்பங்கள். இவையெல்லாம் இப்போது இத்தாலியில் இருப்பதாக ஞாபகம். ஆம், இத்தாலியில்தான் இருக்கின்றன. இந்த ஒரு சர்ச்சின் சுவர்களில் ஓவியங்கள் இருக்கின்றன."


"அவை ஃபிரெஸ்கோ சுவரோவியங்களா, நண்பா?" என்றபடி அவனது பானத்தை உறிஞ்சினான்.


நான் என் கோப்பையைக் கை நீட்டி எடுத்தேன். ஆனால் அது காலியாக இருந்தது. என்னால் நினைவுகூர முடியுமளவுக்கு ஞாபகப்படுத்திப் பார்த்தேன். "இவையெல்லாம் ஃபிரெஸ்கோக்களா என்று கேட்கிறீர்கள்?" என்றேன். "இது ஒரு நல்ல கேள்வி.எனக்குத் தெரியவில்லை."


லிஸ்பனுக்கு வெளியேயிருக்கிற ஒரு கதீட்ரலுக்கு கேமரா நகர்ந்தது. பிரெஞ்சு, இத்தாலிய கதீட்ரல்களோடு ஒப்பிடும்போது போர்ச்சுக்கீசிய கதீட்ரலில் அதிகம் வித்தியாசம் இருக்கவில்லை. ஆனால் அவையும் இருக்கின்றன. பெரும்பாலும் உட்புற அலங்காரங்கள். பிறகு எனக்கு ஏதோ தோன்றியவனாக அவனைக் கேட்டேன்: "எனக்கு ஏதோ தோன்றியது. உங்களுக்கு கதீட்ரல் என்றால் என்னவென்று ஏதாவது ஐடியா இருக்கிறதா? அதாவது அவை எப்படித் தோற்றமளிக்கும் என்பதைப் போல? உங்களுக்கு நான் கேட்பது புரிகிறதா? யாராவது உங்களிடம் கதீட்ரல் என்று சொன்னால் அவர்கள் சொல்வது எதைப்பற்றியென்று உங்களுக்கு ஏதாவது புரியுமா? அதற்கும், உதாரணத்திற்கு ஒரு பாப்டிஸ்ட் தேவாலயத்திற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரியுமா?"


அவன் வாயிலிருந்த புகையைப் படிப்படியாகத் தப்ப விட்டான். “நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஐம்பது, நூறு வருடங்கள் உழைத்துக் கட்டியவை என்று எனக்குத் தெரியும்” என்றான். "இப்போதுதான் அந்த வர்ணனையாளன் சொன்னான். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல தலைமுறையினர் ஒரு கதீட்ரலைக் கட்டுவார்களென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் அதைக் கூட வர்ணனையில் சொன்னான். வாழ்க்கை மொத்தத்தையும் இதற்காகவே உழைத்த அந்த மனிதர்கள் கதீட்ரல் கட்டி முடிக்கப்படும்போது அதைப் பார்க்க உயிரோடு இருக்க மாட்டார்களாம். இந்த விதத்தில் எங்களைப் போன்றவர்களிலிருந்து அவர்கள் அதிகம் வித்தியாசப்பட்டிருக்கவில்லை, இல்லையா நண்பா?” அவன் சிரித்தான். அவன் கண்ணிமைகள் மீண்டும் தாழ்ந்தன. அவன் தலை மெலிதாக ஆடியது தூங்குவது போலத் தெரிந்தான். ஒரு வேளை தன்னை போர்ச்சுகல்லில் கற்பனை செய்து கொண்டிருக்கலாம். டி.வி இப்போது வேறொரு கதீட்ரலைக் காட்டிக் கொண்டிருந்தது. இது ஜெர்மனியில் இருந்தது. ஆங்கிலேயனின் குரல் தொடர்ந்து முனகியது. “கதீட்ரல்கள்” என்றான் குருடன். நிமிர்ந்து உட்கார்ந்து தலையை பின்னும் முன்னுமாக ஆட்டினான்.


"உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்குத் தெரிந்ததெல்லாம் இவ்வளவுதான். இப்போது நான் சொன்னது, அவன் சொன்னைதை வைத்து. ஆனால் உங்களால் எனக்கு விவரிக்க முடியுமா? நீங்கள் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். அது எனக்குப் பிடித்தமானதாக இருக்கும். சொல்லப் போனால் எனக்குத் தெளிவான ஒரு சித்திரமே இல்லை.”


டி.வியில் காட்டிக் கொண்டிருந்த கதீட்ரலை உற்றுக் கவனித்தேன். விவரிக்க வேண்டுமென்றால் எப்படி ஆரம்பிப்பது? என் வாழ்க்கையே இதில்தான் சார்ந்திருப்பது போல உணர்ந்தேன், இதை நான் செய்தே தீரவேண்டும், இல்லாவிட்டால், என்று புத்தி பேதலித்த முரடன் ஒருவன் மிரட்டுவதைப் போல.


காட்சி கிராமப்புறங்களுக்கு மாறும்வரை கதீட்ரலை மேலும் உன்னிப்பாகப் பார்த்தேன். எந்தப் பலனும் கிடைக்க வில்லை. குருடன் பக்கம் திரும்பி, "முதலாவதாகச் சொல்ல வேண்டியது, அவை மிகவும் உயரமானவை” என்றேன். ஏதாவது தடம் கிடைக்குமாவென அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தேன். “ரொம்ப உயரத்திற்கு இருக்கும். மேலே மேலே வானத்தை நோக்கி. அவை மிகப்பெரிதாக இருக்கும் சிலவற்றிற்குத் தாங்குவதற்காகத் தாங்கிகள் இருக்கும். தூக்கி நிறுத்துவதற்காக எனலாம். இந்தத் தாங்கிகளுக்கு உதைகால்கள் என்று பெயர். எந்தக் காரணத்தாலோ அவை வாராவதிகளை எனக்கு ஞாபகப்படுத்தும். வாராவதி என்றால் உங்களுக்குத் தெரியாது இல்லையா? சிலநேரங்களில் கதீட்ரலுக்கு முன்னே பிசாசுகள், அவை போன்ற கோரவுருக்களைச் செதுக்கி வைத்திருப்பார்கள், நடைப்பாலம் போல. சிலநேரங்களில் பிரபுக்களையும் சீமாட்டிகளையும். இவையெல்லாம் எதற்காக என்று என்னைக் கேட்காதீர்கள்.”


அவன் தலையாட்டிக் கொண்டிருந்தான். அவன் உடம்பின் மேற்பகுதி மொத்தமும் முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருப்பதைப் போலிருந்தது.


"நான் அவ்வளவு நன்றாகச் சொல்லவில்லை, இல்லையா?” என்றேன்.


அவன் தலையாட்டுவதை நிறுத்திவிட்டு சோபாவின் விளிம்பிற்கு வந்து முன்னால் குனிந்தான், நான் சொன்னதைக் கேட்கும்போது அவன் தாடிக்குள் விரல்களை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனுக்கு என்னால் புரியவைக்க முடியவில்லையென்று எனக்குத் தெரிந்தது. ஆனால் இதே ரீதியில் நான் தொடர்வதற்கு அவன் காத்திருந்தான். என்னை உற்சாகப்படுத்துவதைப் போலத் தலையாட்டினான், வேறு என்ன சொல்வதென்று யோசிக்க முயன்றேன். “அவை உண்மையிலேயே மிகப்பெரியவை" என்றேன். "பிரமாண்டமானவை. கற்களால் கட்டப்பட்டிருக்கும். சில நேரங்களில் பளிங்கினாலும்கூட. அந்தப் பழங்கால நாட்களில் அவர்கள் கதீட்ரலைக் கட்டும்போது கடவுளுக்கு அருகில் செல்ல விரும்பினார்கள். அந்தப் பழங்கால நாட்களில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் கடவுள் ஒரு முக்கியமான பகுதியாக இருந்தார். இதை அவர்கள் கட்டிய கதீட்ரல் கட்டிடங்களிலிருந்தே உங்களால் சொல்ல முடியும். மன்னிக்கவும் என்னால் அதிகபட்சம் இயன்றது இவ்வளவுதான் போலத் தெரிகிறது. இதில் எனக்கு அவ்வளவு தேர்ச்சி இல்லை;"


"பரவாயில்லை நண்பா" என்றான் குருடன். “ஹே, இதைக் கவனியுங்கள். நான் இதைக் கேட்பதற்கு உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்று நம்புகிறேன். உங்களை ஒன்று கேட்கலாமா? ஒரே ஒரு எளிமையான கேள்வி கேட்கிறேன், ஆமாம் அல்லது இல்லை. எனக்கு வெறும் ஆர்வம், தப்பாக எதுவுமில்லை. நீங்கள் என்னுடைய விருந்தளிப்பவர். உங்களுக்கு மத நம்பிக்கை உண்டா? நான் கேட்டதில் உங்களுக்கொன்றும் ஆட்சேபணையில்லையே?”


நான் தலையாட்டினேன், அவனால் அதைப் பார்க்க முடியாதென்றாலும். கண்ணடிப்பதும் தலையாட்டுவதும் ஒரு குருடனுக்கு ஒன்றேதான்.


"அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது என்று நினைக்கிறேன். எதிலுமே சில நேரங்களில் இது கஷ்டம்தான். நான் என்ன சொல்கிறேனென்று புரிகிறதா?"


"நன்றாகப் புரிகிறது" என்றான்.


"நல்லது” என்றேன்.


ஆங்கிலேயன் இன்னமும் தொலைக்காட்சியில் ஆக்கிரமித்திருந்தான். என் மனைவி தூக்கத்தில் முனகினாள். நீளமாக மூச்சிழுத்து தூக்கத்தைத் தொடர்ந்தாள்.


“நீங்கள் என்னை மன்னித்தாக வேண்டும்” என்றேன்.


"ஒரு கதீட்ரல் எப்படித் தோற்றமளிக்குமென்று உங்களுக்கு என்னால் விளக்க முடியவில்லை. எனக்குச் சாமர்த்தியம் இல்லை. நான் விளக்கியதைவிட அதிகமாக என்னால் சொல்லியிருக்க முடியாது."


குருடன் அசையாமல், தலையைக் குனிந்தபடி நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.


"உண்மையைச் சொல்வதானால் கதீட்ரல்கள் என்பவை எனக்கு விசேஷமாக எதையும் உணர்த்தாதவை. ஒன்றுமில்லை. கதீட்ரல்கள் பின்னிரவில் டி.வியில் எதையாவது பார்ப்பதற்காக இருப்பவை. அவை அவ்வளவுதான்."


அப்போதுதான் குருடன் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். எதையோ வெளியில் எடுத்தான். பின்பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை .


“எனக்குப் புரிகிறது நண்பா. பரவாயில்லை. இதுபோலத்தான் ஆகிவிடுகிறது. அதற்காக கவலைப்படாதீர்கள்” என்றான். "ஹே, நான் சொல்வதைக் கேளுங்கள். எனக்கொரு உதவி செய்கிறீர்களா? எனக்கு ஒன்று தோன்றுகிறது. நல்ல கனமான பேப்பர் ஒன்று எடுத்து வருகிறீர்களா? ஒரு பேனாகூட. நாம் ஒன்று செய்வோம். நாம் ஒன்றாகச் சேர்ந்து ஒன்றை வரையலாம். ஒரு பேனாவும் ஒரு கனமான பேப்பரும் கொண்டு வாருங்கள். போய் எடுத்து வாருங்கள், நண்பா.”


எனவே மாடிக்குச் சென்றேன். என் கால்களில் பலமே இல்லாதது போல உணர்ந்தேன். வெகுதூரம் ஓடிவந்ததைப் போல உணர்ந்தேன். என் மனைவியின் அறைக்குள் சுற்றும் முற்றும் பார்த்தேன். அவளது மேஜையிலிருந்த சின்னக் கூடையில் சில பால்பாயின்ட்டுகள் இருந்தன. அப்புறம் அவன் சொன்னதைப் போல அட்டை ஏதாவது இருக்குமா என்று யோசிக்க முயன்றேன்.


கீழிறங்கி வந்து, சமையலறையில் வெங்காயத் தோல்கள் அடியில் இருந்த ஒரு ஷாப்பிங் காகிதப் பையைக் கண்டு பிடித்தேன். அதைக் காலியாக்கி, கவிழ்த்துக் குலுக்கித் தூசுதட்டினேன். வசிப்பறைக்கு வந்து அவன் காலுக்கருகில் தரையில் உட்கார்ந்தேன். அங்கிருந்தவற்றை நகர்த்திவிட்டு, பையின் சுருக்கங்களை நீவி, காபி டேபிளின் மீது பரப்பினேன். குருடன் சோபாவிலிருந்து இறங்கி என்னருகில் தரைவிரிப்பில் அமர்ந்துகொண்டான்.


காகிதத்தின் மேல் விரல்களை ஓட்டினான். காகிதத்தின் பக்கங்களில் மேலும் கீழுமாகத் தடவிப் பார்த்தான். ஓரங்கள், விளிம்புகளைக்கூட. மூலைகளில் விரல்களால் மடிப்புகளை நீவினான்.


“ஆல்ரைட்” என்றான், “ஆல்ரைட்” நாம் வரைய ஆரம்பிக்கலாம்.


பேனா வைத்திருந்த என் கையைத் தேடிக் கண்டுபிடித்தான். என் கையின் மேல் அவன் கையை வைத்து மூடினான். “ம். ஆரம்பியுங்கள் நண்பா, வரையுங்கள்” என்றான். "வரையுங்கள். உங்களுக்குத் தெரியும். நானும் உங்களோடு தொடர்வேன். அது சரியாக இருக்கும். நான் சொன்னதைப் போலவே ஆரம்பியுங்கள். உங்களுக்குத் தெரியும். வரையுங்கள்”


எனவே ஆரம்பித்தேன். முதலில் வீட்டைப்போலத் தோற்றமளிக்கும் ஒரு பெட்டி வரைந்தேன். அது நான் வசித்திருந்த வீடாக இருந்திருக்கலாம். பின் அதன் மேல் ஒரு கூரையை வைத்தேன். கூரையின் இரண்டு பக்கங்களிலும் கூம்புகளாகத் தூபிகளை வரைந்தேன். அபத்தம்.


“ஆஹா, அற்புதம்" என்றான். "நீங்கள் அழகாக வரைகிறீர்கள். இதுபோல ஒன்று உங்கள் வாழ்நாளில் நடக்குமென்று நினைத்திருக்கவே மாட்டீர்கள் இல்லையா நண்பா? இது ஒரு வினோதமான வாழ்க்கை, நம் எல்லாருக்குமே தெரியும். வரையுங்கள், தொடர்ந்து வரையுங்கள்.”


சன்னல்களையும் வளைவுகளையும் வைத்தேன். பறக்கும் உதைகால்களை வரைந்தேன். மாபெரும் கதவுகளைத் தொங்க விட்டேன். என்னால் நிறுத்த முடியவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிந்தது. பேனாவை மூடிக் கீழே வைத்துவிட்டு என் விரல்களைத் திறந்தேன். காகிதத்தின் மேல் கைகளைச் செலுத்தி, குருடன் உணர்ந்து பார்த்தான். விரல் நுனிகளைக் காகிதத்தின் மேல், நான் வரைந்திருந்ததின் மேல் எங்கும் வருடிப் பார்த்துவிட்டு தலையை ஆட்டினான்.


"நன்றாக இருக்கிறது" என்றான் குருடன்.


நான் பேனாவை மறுபடியும் எடுத்தேன். அவன் என் கையைத் தேடி வந்து பற்றிக்கொண்டான். நான் அவன் கையோடு சேர்த்துச் சுமந்து வரைந்தேன். நான் ஒரு சித்திரக்காரனல்லன். ஆனாலும் தொடர்ந்து வரைந்தேன்.


என் மனைவி கண்களைத் திறந்து எங்களை மலங்க மலங்க வெறித்தாள். அவள் உடை திறந்து தொங்க, சோபாவிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? சொல்லுங்கள், எனக்குத் தெரியவேண்டும்."


நான் பதிலளிக்கவில்லை.


குருடன் சொன்னான். "நாங்கள் கதீட்ரல் ஒன்றை வரைகிறோம். நானும் இவரும் சேர்ந்து வரைகிறோம். அழுத்தி வரையுங்கள்” என்றான் என்னிடம். "அதேதான் அப்படித்தான்” என்றான். “நிச்சயம். உங்களுக்கு வந்துவிட்டது என்னால் சொல்ல முடியும், உங்களால் முடியாது என்று நினைத்தீர்கள். ஆனால் உங்களால் முடியும், முடியாதா என்ன? நீங்கள் காற்றை வைத்துக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது நான் என்ன சொல்கிறேனென்பது உங்களுக்குத் தெரிகிறதா? இன்னும் ஒரு நிமிடத்தில் நமக்கு ஏதோவொன்று கிடைக்கப்போகிறது எப்படி? இங்கே மனிதர்கள் சிலரை வரையுங்கள். மனிதர்கள் இல்லாமல் ஒரு கதீட்ரலா?”


"என்ன நடக்கிறது இங்கே? ராபர்ட், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்ன நடக்கிறது இங்கே?” என்றாள் என் மனைவி.


"இட்ஸ் ஆல் ரைட்” என்றான் அவன் அவளிடம். என்னிடம் திரும்பி, "இப்போது உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள்” என்றான்.


அப்படியே செய்தேன். அவன் சொன்னதைப் போலவே கண்களை மூடிக்கொண்டேன்.


"கண்கள் மூடியிருக்கிறதா?" என்றான், “ஏமாற்றாதீர்கள்”


"மூடியிருக்கின்றன" என்றேன்.


"அதேபோல இருங்கள்" என்றான். 'இப்போது நிறுத்தாதீர்கள் வரையுங்கள்."


எனவே தொடர்ந்து வரைந்தோம். காகிதத்தின்மேல் என் கை நகர, அவன் விரல்கள் என் விரல்களின் மேல் ஏறிக் கொண்டன. என் வாழ்க்கையில் இதுவரை அனுபவத்திராதது. “இதுதானென்று நினைக்கிறேன். நீங்கள் சரியாக அடைந்து விட்டீர்களென்று நினைக்கிறேன்." என்றான். “எடுத்துப் பாருங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


ஆனால் நான் என் கண்களை மூடிக்கொண்டிருந்தேன். அப்படியே இன்னும் சிறிதுநேரத்திற்குத் தொடர்ந்திருப்பேனென்று நினைத்தேன். நான் செய்ய வேண்டிய ஒன்று அதுதானென்று நினைத்தேன்.


“சரியா?” என்றான். “நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?”


என் கண்கள் இன்னமும் மூடியிருந்தன. நான் என் வீட்டில்தான் இருந்தேன். அது எனக்குத் தெரியும். ஆனால் எதற்குள்ளேயும் நான் இருப்பதாக என்னால் உணர முடியவில்லை.


“இது உண்மையிலேயே ஏதோவொன்றுதான்” என்றேன்.

Comments


© 2025 by G. Kuppuswamy

bottom of page