top of page

தேவையெனில் என்னை நீ அழைக்கலாம் - ரேமண்ட் கார்வெர்

(தமிழில் : ஜி.குப்புசாமி)


அந்த இளவேனிற் பருவத்தில் நாங்களிருவருமே வெவ்வேறு நபர்களுடன் ஈடுபாடு கொண்டிருந்தோம். ஆனால், ஜூன் வந்து பள்ளியும் மூடிய பிறகு, எங்கள் வீட்டை கோடைக் காலத்திற்காக வாடகைக்கு அமர்த்திவிட்டு கலிஃபோர்னியாவின் வடக்குக் கரையோர பாலோ ஆல்டோவிலிருந்து கிளம்ப நாங்கள் முடிவெடுத்தோம். எங்கள் மகன், ரிச்சர்ட், வாஷிங்டனில் உள்ள பாஸ்கோவில் நான்ஸியின் பாட்டி வீட்டிற்குச் சென்றான். இலையுதிர் காலத்தில் அவன் கல்லூரியில் சேருவதற்காக பணம் சேமிக்க, அங்கே கோடை முழுதும் தங்கி வேலை பார்க்கப் போகிறான். அவன் பாட்டிக்கு வீட்டிலுள்ள நிலைமை தெரிந்திருந்ததால், அவன் வந்து சேருவதற்கு முன்பாகவே அவருடைய குடியானவ நண்பர் ஒருவரிடம் பேசி, வைக்கோற் போர்களைக் கட்டுவதும், வேலிகளை அமைப்பதுமான வேலை ஒன்றைத் தேடி வைத்திருந்தார். கடினமான வேலை, ஆனால் ரிச்சர்ட் ஆர்வமாக இருந்தான். பள்ளி இறுதி தினத்திற்கு அடுத்த நாள் காலை அவன் பேருந்தில் புறப்பட்டுச் சென்றான். நான்தான் அவனை நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருந்தேன். வெளியே காரை நிறுத்திவிட்டு அவனோடு உள்ளே சென்று, அவனது பஸ் அழைக்கப்படும்வரை அமர்ந்திருந்தேன். அவன் அம்மா அவனைப் பிடித்துக்கொண்டு, அழுது, முத்தமிட்டு, அவன் பாட்டியிடம் கொண்டு சேர்க்க வேண்டிய ஒரு நீண்ட கடிதத்தையும் கொடுத்திருந் தாள். இப்போது வீட்டில் எங்களுடைய கிளம்பலுக்கான கடைசி நிமிட பேக்கிங்குகளை முடித்துவிட்டு, எங்கள் வீட்டிற்கு குடியேறப் போகும் ஜோடிக்காக காத்திருக்கிறாள். ரிச்சர்டுக்கு டிக்கெட்டை வாங்கிக்கொடுத்துவிட்டு, நிலையத்தின் இருக்கை ஒன்றில் அவனருகில் அமர்ந்தேன். வரும் வழியில் நாங்கள் சில விஷயங்களைப் பற்றிப் பேசி வந்திருந்தோம்.


"நீங்களும் அம்மாவும் விவாகரத்து செய்துகொள்ளப் போகிறீர்களா?” என்று அவன் கேட்டிருந்தான். அது சனிக்கிழமை காலை. அதிகம் கார்கள் இல்லை.


"எங்களால் சரிப்படுத்த முடியுமென்றால் அவசியமிருக்காது," என்றேன். "எங்களுக்கு விருப்பமில்லை. அதனால்தான் இங்கிருந்து கிளம்பி, கோடை முழுக்க யாரையும் பார்க்காமலிருப்பதற்காகச் செல்கிறோம். அதனால்தான் நம் வீட்டை கோடை வாடகைக்கு விட்டுவிட்டு, ஆர்கடாவிற்குச் சென்று வாடகைக்கு இருக்கப் போகிறோம். நீயும் வெளியே போகிறாய், இல்லையா? அதுவும் ஒரு காரணம்தான்.


வீட்டிற்கு நீ திரும்பி வரும்போது பை நிறைய பணத்தோடு வருவாய். விவாகரத்து பெற்றுக்கொள்ள எங்களுக்கும் விருப்பமில்லை. இந்தக் கோடையில் இருவரும் தனிமையில் தங்கி சில விஷயங்களை சரி செய்துகொள்ள வேண்டும்.”


“நீங்கள் இன்னமும் அம்மாவை நேசிக்கிறீர்களா? அவள் உங்களை நேசிப்பதாக என்னிடம் கூறினாள்.”


“நிச்சயமாக நானும் நேசிக்கிறேன்” என்றேன். "இதற்குள் உனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே. எல்லோருக்கும் நிகழ்கிற மாதிரி எங்களுக்கும் சில சிக்கல்கள், கனமான பொறுப்புகள் வந்துவிட்டன. இப்போது அவற்றைத் தனியாகத் தங்கிச் சரி செய்வதற்காக எங்களுக்கு அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் எங்களைப்பற்றி நீ கவலைப்படாதே. அங்கே போ, நன்றாகப் பொழுதைக் கழி, கடினமான உழை, பணத்தைச்சேமி. இதை ஒரு விடுமுறையைப்போலக் கருது. முடிந்தவரை மீன் பிடிக்கலாம். அங்கே மீன் பிடிக்க நல்ல சமயம் இது.”


“நீர் சறுக்கு கூட,” என்றான். “நீர் சறுக்கு கற்றுக்கொள்ளலாமென்றிருக்கிறேன்.”


“நான் நீர் சறுக்கு விளையாடியதேயில்லை. எனக்காகவும் சேர்த்து நீ விளையாடு. என்ன செய்கிறாயா?"


பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தோம். கையில் இயர்புக் ஒன்றை வைத்துக்கொண்டு அதனூடாக வெறித்துக் கொண்டிருந்தான். நான் ஒரு செய்தித்தாளை மடியில் விரித்து வைத்திருந்தேன். அவனுடைய பஸ்ஸிற்கான அழைப்புக் கேட்டது. எழுந்து நின்று அவனை அணைத்துக்கொண்டேன்.

“கவலைப்படாதே, கவலைப்படாதே, எங்கே உன் டிக்கெட்?”


அவன் தனது கோட் பாக்கெட்டைத் தட்டிக் காட்டிவிட்டு தன் சூட்கேஸை எடுத்துக்கொண்டான். வாசல் முனையில் சேர்ந்திருந்த வரிசை வரை அவனுடன் சென்று மீண்டும் அணைத்துக்கொண்டேன். கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு குட்பை சொன்னான்.


“குட்பை, அப்பா,“ அவன் கண்ணீரை நான் பார்த்துவிடக் கூடாதென்பதற்காக உடனே திரும்பிக்கொண்டான்.


வீட்டிற்குத் திரும்பியபோது பெட்டிகளும் சூட்கேஸ்களும் கூடத்தில் காத்திருந்தன. எங்கள் வீட்டை கோடைகாலத்திற்கு வாடகை எடுத்திருந்த அந்த இளம் ஜோடியோடு சமையலறையில் நான்ஸி காபி அருந்திக்கொண்டிருந்தாள். ஜெர்ரி, லிஸ் என்ற அந்த கணிதப் பட்டப்படிப்பு மாணவ ஜோடியை இதற்குச் சில நாட்கள் முன்பு சந்தித்தது. இப்போது மீண்டும் கைகுலுக்கிவிட்டு, நான்ஸி ஊற்றிக் கொடுத்த காபி கோப்பையை வாங்கிக்கொண்டு அவர்களோடு மேசையில் அமர, நான்ஸி அவர்களுக்குத் தேவையான பொருட்கள் எங்கெங்கே, மாதத்தின் எந்தெந்த நேரத்தில் கிடைக்கும், மாதத்தின் முதலிலும், கடைசியிலும் செய்ய வேண்டியவைகள், மெயில் அனுப்ப வேண்டிய இடம் என்று பட்டியல் தயாரித்து வழங்கினாள். நான்ஸியின் முகம் இறுக்கமாக இருந்தது. காலை நேரம் கடந்துவிட்டதால் வெயில் சன்னல் திரையினூடாக மேசை மேல் விழுந்திருந்தது.


இறுதியில் எல்லாம் சரியாக்கப்பட்டதாகத் தெரிந்ததும் அம்மூவரையும் சமையலறையில் விட்டுவிட்டு, பொருட்களை காரில் ஏற்றத் தொடங்கினேன். நாங்கள் செல்கின்ற வீடு, முழுவதும் ஃபர்னிஷ் செய்யப்பட்ட வீடு, சமையல் பாத்திரங்கள், தட்டுகள் முதற்கொண்டு எல்லா சாமான்களும், சாதனங்களும் அமைந்த வீடு. தேவைப்பொருட்களை மட்டும் எடுத்துச் சென்றால் போதுமானது. பாலோ ஆல்டோவிற்கு 350 மைல்கள் வடக்கே, கலிபோர்னியாவின் வடக்குக் கரையோரத்தில் அமைந்திருந்த யுரேகாவிற்கு மூன்று வாரங்களுக்கு முன் சென்று அந்த வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தேன். நான் ஈடுபாடு கொண்டிருந்த பெண்ணான சூசனோடு சென்றேன். நகரின் விளிம்பில் இருந்த ஒரு மோட்டலில் மூன்று இரவுகள் நாங்கள் தங்கியிருந்தோம். செய்தித்தாள்களை அலசி, வீட்டுத்தரகர்களைச் சந்தித்து, இறுதியில் இவ்வீட்டைக் கண்டுபிடித்தேன். மூன்றுமாத வாடகைக்கான செக்கை நான் எழுதுவதை அந்த மோட்டல் அறையின் கட்டிலில் படுத்துக் கவனித்துக்கொண்டிருந்த சூசன், இறுதியில் நெற்றியின் மீது கையை வைத்துக்கொண்டு என்னை நேராகப் பார்த்தாள்.


“உங்கள் மனைவி நான்ஸியின்மேல் பொறாமையாக இருக்கிறது. 'இன்னொருத்தி'யைப் பற்றி அனைவரும் பேசுவதையும், அதிகாரபூர்வ மனைவி அனுபவிக்கிற சலுகைகளையும், உண்மையான அதிகாரத்தையும் எப்போதும் கேள்விப்படுகிறோம். ஆனால் இதற்கு முன்பு இந்த விஷயங்களைப்பற்றி உண்மையில் புரிந்துகொண்டதோ அக்கறைப்பட்டதோ கிடையாது. இப்போது நானே அதைப் பார்க்கிறேன். அவளைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. இந்த வீட்டில், இந்தக் கோடைக்காலத்தில் உங்களோடு அவள் வாழப்போகிறாள். அது மட்டும் நானாக இருந்தால், நாம் இருவரும் அப்படி ஒன்றாக வாழ முடிந்தால்... அது நடக்கவே நடக்காதா?“

நான் அவள் கூந்தலைக் கோதினேன்.


நான்ஸி உயரமான, நீண்ட கால்களும், பழுப்புக் கூந்தலும் கண்களும், உற்சாகமான பெருந்தன்மையும் கொண்ட பெண். ஆனால் சமீப காலங்களில் எங்களிடையே உற்சாகமும் பெருந்தன்மையும் அருகிவிட்டன. அவள் ஈடுபாடு கொண்டிருந்தவன் என்னுடன் பணியாற்றுபவர்களில் ஒருவன்தான். விவாகரத்தானவன். மிடுக்கான, கோட், சூட், டை அணிந்த, தலை நரைக்கத் தொடங்கி விட்ட ஒருவன். நிறையக் குடிப்பான். வகுப்பறையில் அவன் கைகள் சில வேளைகளில் நடுங்குவதாக என் மாணவர்களில் சிலர் கூறி யிருக்கின்றனர். என்னுடைய தொடர்பை நான்ஸி அறிந்த கொஞ்சநாட்களிலேயே, விடுமுறை காலத்தில் நடந்த ஒரு பார்ட்டியின் சந்தித்த அவர்களுக்கிடையே நட்பு ஏற்பட்டது. அதெல்லாம் இப்போது சலிப்பாக, அசிங்கமாகப்படுகிறது - சலிப்பாக, அசிங்கமாக! ஆனால் வேனிற்பருவத்தின் அந்தக்காலகட்டத்தில் எவ்வளவு சித்திரவதையைக் கொடுத்த விஷயம் அது! எங்கள் சக்தியனைத்தையும் உறிஞ்சி, நிலைகுலைய வைத்து... அப்புறம் ஏப்ரல் மாத இறுதியில்தான் எங்கள் வீட்டை வாடகைக்கு அமர்த்திவிட்டு, நாங்கள் இருவர் மட்டும் எங்காவது சென்று விஷயங்களை ஒருங்கிணைக்க முயற்சிப்பது - ஒருங்கிணைக்க முடிகிறாற்போலிருந்தால் - என்று முடிவெடுத்தோம். அவ்வாறு தங்கியிருக்கும்போது எங்களுடைய ‘மற்றவரோடு' தொடர்பு கொள்வதில்லை, அழைப்பதில்லை, எழுதுவதில்லையென்று இருவரும் உடன்பட்டோம். எனவே ரிச்சர்டுக்கு உரிய ஏற்பாடு செய்து, எங்கள் வீட்டிற்கு குடியமர்த்த பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து, வரைபடத்தை வைத்துக்கொண்டு சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து வடக்கே பயணித்து, யுரேகாவை அடைந்து, ஃபர்னிஷ்டு வீடு ஒன்றை மரியாதைப்பட்ட ஒரு நடுத்தர வயது தம்பதியினருக்கு கோடை வாடகைக்கு விட முடிவெடுத்திருந்த ஒரு தரகரைச் சந்தித்து இந்த வீட்டைப் பெற்றுவிட்டேன். அந்தத் தரகரிடம், - கடவுள் என்னை மன்னிக்கட்டும் - எங்களது இரண்டாவது தேனிலவிற்காக என்ற சொற்றொடரைக்கூட உபயோகித்தேன். அப்போது சூசன் அங்கேதான் இருந்தாள். நான் சொன்னதைக் கேட்டதும் அங்கிருந்து விலகி, ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு, காருக்குச்சென்று சுற்றுலா விளம்பரங்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினாள்.


சூட்கேஸ்களையும், பைகளையும், அட்டைப்பெட்டிகளையும் ட்ரங்கிலும் பின்னிருக்கையிலும் அடுக்கிவிட்டு, அவர்களிடம் நான்ஸி இறுதியாக விடைபெற்று வருவதற்காக காத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவ்விருவரிடமும் அவள் கைகுலுக்கிவிட்டு காரை நோக்கித் திரும்பி வந்தாள். அவர்களுக்கு நான் கையசைக்க, அவர்களும் பதிலுக்குக் கையசைத்தனர். நான்ஸி உள்ளே வந்து கதவைச் சாத்தி விட்டு, “கிளம்பலாம்,” என்றாள். காரை கியருக்கு மாற்றி, ஃபிரீவே விற்குச் செலுத்தினேன். ஃபிரீவேவிற்கு சற்று முன்பாக விளக்குகளில் எங்களுக்கெதிரே ஒரு கார் ஃபிரீவேவிலிருந்து விலகி, மஃப்ளர் பிய்த்துக்கொண்டு, தீப்பொறிகள் வாலாகப் பறக்க பள்ளத்தை நோக்கிச் சரிந்தது. “அதைப் பாருங்கள்,” நான்ஸி பயத்தில் கிறீச்சிட்டாள். "அது தீப்பிடிக்கப் போகிறது!” எங்கள் வண்டியை அணைத்துவிட்டுக் கவனித்தோம். அந்தக் கார் சமாளித்து, சாலையிலிருந்து வழுக்கி, புரண்டு, அடங்கியது.


செபாஸ்டோ போலிற்கருகே நெடுஞ்சாலையிலிருந்து தள்ளியமைந்திருந்த ஒரு சிறிய உணவகத்தில் நிறுத்தினோம். Eat and Gas என்ற அதன் விளம்பரத்தைக்கண்டு சிரித்தோம். உணவகத்தின் பின்புற சன்னலுக்கருகேயிருந்த ஒரு மேசையில் அமர்ந்து, காபியும் ஸான்ட்விச்சுகளும் ஆர்டர் கொடுத்தோம். மேசைப்பலகையின் ரேகைகளின் மேல் நான்ஸி தனது ஆட்காட்டி விரலைப் பதித்து ஓட்டினாள்.


சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டு வெளியே நோக்கினேன். புதரில் படுவேகமானதொரு அசைவு மின்வெட்டுப்போல் தெரிந்தது. அது ஒரு ஹம்மிங் பேர்ட். அந்த பறவை எங்கள் சன்னல் அருகே வரை வந்து புதருக்குத் திரும்பி, சிறகுகள் விர்ரெனத் துடிக்க ஒரேயொரு பூவிற்குள் தன் அலகைச் செருகிக்கொண்டு அந்தரத்தில் மிதந்தது.


"நான்ஸி, அங்கே பார்! ஹம்மிங் பேர்டு"


அதே கணத்தில் அச்சிறிய பறவை விருட்டென்று பறந்து மறைந்தது. நான்ஸி சற்று முற்றும் தேடினாள். "எங்கே எனக்குத் தெரியவில்லை,"


போன நிமிஷம் வரை இங்கேதான் இருந்தது," என்றேன். "இதோ யார், இன்னொன்று, இது வேறொன்று என நினைக்கிறேன். இது வேறொரு ஹம்மிங் பேர்டு"


உணவு பரிமாறுபவள் எடுத்து வரும் வரையிலும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவள் மேசைக்கு வந்த கணமே அது கட்டிடத்திற்குப் பின்னால் வெட்டிக்கொண்டு மறைந்தது.


“இது நல்ல சகுனம் என்று நினைக்கிறேன்," என்றேன்.


"ஹம்மிங் பேர்டுகள்! ஹம்மிங் பேர்டுகள் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதாக நம்பப்படுபவை."

"நானும் எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கேயென்று நினைவில்லாவிட்டாலும், கேள்விப்பட்டிருக்கிறேன்,” என்றாள். “சரி, அதிர்ஷ்டம்தான் நமக்குத் தேவைப்படும். என்ன சொல்கிறீர்கள்?”


"அவை மிக நல்ல சகுனம்," என்றேன். "இங்கே வண்டியை நிறுத்தியதற்காக சந்தோஷப்படுகிறேன்."

அவள் தலையசைத்தாள். ஒரு நிமிடம் தயங்கிக் காத்திருந்துவிட்டு தனது ஸான்ட்விச்சை ஒரு விள்ளல் கடித்தாள்.


இருட்டுவதற்கு சற்று முன்பாக யுரேகாவை அடைந்தோம். சூசனும் நானும் சிலவாரங்களுக்குமுன் மூன்று இரவுகள் கழித்த அந்த மோட்டலைக் கடந்து, நெடுஞ்சாலையிலிருந்து திரும்பி, நகரத்தை எதிர்நோக்கி அமைந்திருந்த மேட்டுப்பகுதியின் மீது காரை ஏற்றினேன். சட்டைப் பையில் வீட்டுச் சாவிகள் இருந்தன. மேட்டை ஏறிக்கடந்து ஏறக்குறைய ஒரு மைல்தூரம் தாண்டியதும் ஒரு சர்வீஸ் ஸ்டேஷனும், மளிகைக் கடையும் அமைந்திருந்த நாற்சந்தை அடைந்தோம். எதிரே பள்ளத்தாக்கில் மரங்கள் மண்டிய மேலும் சில மலை அடுக்குகள். சுற்றிலும் பரந்திருக்கும் மேய்ச்சல் நிலம். சர்வீஸ் ஸ்டேஷனின் பின்னால் சில மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. நான்ஸி, “அழகான கிராமம்” என்றாள். “வீடு எங்கேயிருக்கிறது? உடனே பார்த்தாக வேண்டுமே"


“ஏறக்குறைய அங்கே," என்று சுட்டிக்காட்டினேன். “இந்தச்சாலையின் கடைசியில். அதோ அந்த மேட்டைத் தாண்டி." ஒரு நிமிடம் கழித்து, இரண்டு ஓரங்களிலும் சட்டம் அடித்த நீண்ட நடைவழி ஒன்றிற்குள் வண்டியைத் திருப்பினேன். "இதேதான், எப்படியிருக்கிறது?” இதே நடைவழியில் வண்டியை நிறுத்திவிட்டு சூசனிடமும் இதே கேள்வியைத்தான் கேட்டேன்.

"அழகாக இருக்கிறது," என்றாள் நான்ஸி.


"நிஜமாகவே அழகாக இருக்கிறது. போகலாம்.”


முன்வாசலில் ஒரு நிமிடம் நின்று சுற்றிலும் பார்த்தோம். முற்றத்தில் நுழைந்து படிகளில் ஏறி முன் கதவைத் திறந்து விளக்குகளைப் போட்டோம். வீட்டைச் சுற்றிப் பார்த்தோம். அங்கே இரண்டு சிறிய படுக்கையறைகளும், ஒரு குளியலறையும், பழைய மரச்சாமான்களும், கணப்பும் கொண்டிருந்த ஒரு கூடமும், பள்ளத்தாக்கை எதிர்நோக்கியிருந்த ஒரு பெரிய சமையலறையும் இருந்தன.


"உனக்குப் பிடித்திருக்கிறதா?" என்றேன்.


"அற்புதம்," என்றாள் நான்ஸி. புன்னகைத்தாள்.


"இதைப்போன்றதொரு வீட்டை நீங்கள் கண்டுபிடித்ததற்காக மகிழ்கிறேன். இங்கு நாம் வந்திருப்பதற்காகவும் மகிழ்கிறேன்.” ரெப்ரிஜிரேட்டரைத் திறந்து அதன் அலமாரிகளில் விரலை ஓட்டினாள். “கடவுளுக்கு நன்றி, இது சுத்தமாகவே இருக்கிறது. நான் எதையும் சுத்தம் செய்ய வேண்டியதில்லை."


"படுக்கையில் இருக்கும் விரிப்புகள் கூடச் சுத்தமாக உள்ளன,” என்றேன். "நான் பரிசோதித்து விட்டேன். நிச்சயப்படுத்திக்கொண்டேன். இப்படித்தான் அவர்கள் வாடகைக்கு விடுகிறார்கள். ஒழுங்கான தலையணைகள். தலையணை உறைகள் கூட.”


"நாம் கொஞ்சம் விறகு வாங்க வேண்டும்," என்றாள். நாங்கள் கூடத்தில் நின்றிருந்தோம். "இதைப்போன்ற இரவுகளில் கணப்பு இருக்கவேண்டுமென நாம் விரும்பக்கூடும்."


"நாளைக்கு விறகு கிடைக்குமா என்று பார்க்கிறேன். அப்படியே நாம் ஷாப்பிங்கிற்கும் சென்று நகரத்தைப் பார்க்கலாம்."


அவள் என்னை நிதானமாகப் பார்த்தாள். "இங்கே வந்திருப்பது மனதிற்கு சந்தோஷமாக, அமைதியாக இருக்கிறது," என்றாள்.


“எனக்கும்,” என்றேன். என் கைகளை விரிக்க, அவள் என்னை அடைந்தாள். தழுவிக்கொண்டேன். அவள் உடல் கொஞ்சம் சுருங்கி உள்ளே நடுங்குவதை என் கைகளில் உணர்ந்தேன். அவள் முகத்தைத் திருப்பி உயர்த்தி இரு கன்னங்களிலும் முத்தமிட்டேன். "நான்ஸி!”


"நாம் இங்கே வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது”, என்றாள் மறுபடியும்.


அடுத்த சில தினங்களை நாங்கள் செட்டிலாக உபயோகப்படுத்திக் கொண்டோம். யுரோகாவிற்குச் சென்று, நகரத்தைச் சுற்றி வந்து, அங்காடி சன்னல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு, வீட்டிற்குப் பின்னாலிருக்கும் மேய்ச்சல் நிலத்தில் இறங்கி வனப்பகுதிவரை நடந்து சென்றோம். மளிகைச் சாமான்கள் வாங்கினோம். செய்தித்தாளில் விறகு விளம்பரத்தைக் கண்டு அழைத்தோம். ஓரிரு நாட்கள் கழித்து நீளமாக முடி வளர்த்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் ஒரு சிறிய லாரியில் பூர்ச்ச மர விறகுகளைக் கொண்டு வந்து கார் நிறுத்தத்தில் அடுக்கி வைத்தனர். அன்றிரவு உணவருந்திவிட்டு கணப்பிற்கு முன் அமர்ந்து காபி அருந்திக்கொண்டே நாய் ஒன்று வாங்கலாமா என்று விவாதித்தோம்.


"எனக்கு குட்டிநாய் வேண்டாம்," என்றாள் நான்ஸி, “நாம்தான் சுத்தம் செய்துகொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றையும் அது கடித்துப்போடும். நமக்குத் தேவையில்லை. ஆனால் ஒரு பெரிய நாய் இருக்கலாம். ஆமாம். நம்மிடம் வெகுநாட்களாக ஒரு நாய் இல்லாமலிருக்கிறது. என்னால் இங்கே ஒரு நாயைக் கையாள முடியுமென்று நினைக்கிறேன்."


"நாம் இங்கிருந்து சென்றபிறகு? கோடைக்காலம் முடிந்த பிற்பாடு?” அந்தக் கேள்வியை மறுபடியும் சீரமைத்தேன், "நமது ஊரில் ஒரு நாய் வளர்க்கலாமா?"


"பார்க்கலாம். அதற்குள் ஒரு நாயைத் தேடுவோம். சரியான ரகமாக இருக்க வேண்டும். நானாகப் பார்த்து முடிவெடுக்கும்வரை எனக்குத் தேவையான ரகம் எதுவென்று எனக்கே தெரியாது. வரி விளம்பரங்களைப் பார்க்கலாம், தேவைப்பட்டால் பட்டிக்குக்கூட போய் பார்க்கலாம்.” ஆனால் பல நாட்களாக நாங்கள் பேசிக் கொண்டேயிருந்தாலும், கடந்து போகும் வீடுகளில் காணப்படும் நாய்களைச் சுட்டிக்காட்டி அலசி வந்தாலும், எங்களுக்கு வேண்டியதைப் போல ஒரு நாய் கிடைக்கவில்லை. நாங்கள் நாய் வாங்கவில்லை.


நான்ஸி அவள் அம்மாவை அழைத்து எங்களது விலாசத்தையும், தொலைபேசி எண்ணையும் கொடுத்தாள். ரிச்சர்ட் வேலைக்குச் செல்வதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவள் அம்மா கூறினார். அவரும்கூட நன்றாக இருக்கிறார்.


"நாங்களும் நன்றாக இருக்கிறோம். இது நல்ல மருந்து," என்று நான்ஸி கூறியது என் காதில் விழுந்தது.

ஜூலை மாத மத்தியில் ஒருநாள் சமுத்திரத்தையொட்டிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தோம். ஒரு மேட்டில் ஏறியதும் கீழே கடலிலிருந்து மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்டிருந்த சில கடற்கழிகள் தெரிந்தன. அந்த நீர்த்தேக்கங்களில் கரையிலிருந்தவாறு சிலர் மீன் பிடித்துக்கொண்டிருப்பதும், நீரில் மிதக்கும் படகுகள் இரண்டும் தெரிந்தன.


நான் காரை பக்கவாட்டில் ஒடித்து நிறுத்தினேன். "அவர்கள் என்ன மீன் பிடிக்கிறார்களென்று பார்க்கலாம்," என்றேன். "நாம்கூட சில மீன்பிடிச் சாதனங்கள் வாங்கிக்கொண்டு செல்லலாம்."

"நாம் மீன் பிடிக்கச் சென்று வருடக் கணக்காகிறது," நான்ஸி பெருமூச்சிட்டாள். "ரிச்சர்ட் குழந்தையாக இருந்தபோது மவுண்ட் ஷாஸ்டாவிற்கு அருகில் முகாமிட்டோம். உங்களுக்கு நினைவிருக்கிறதா?"


*நினைவிருக்கிறது," என்றேன். "மீன் பிடிக்கச் செல்ல எவ்வளவு ஏங்கிக்கொண்டிருக்கிறேன் என்பதும் இப்போதுதான் நினைவில் வருகிறது. நாம் கீழே சென்று என்ன பிடிக்கிறார்களென்று பார்க்கலாம் வா."


நான் வினவியபோது அவன், “ட்ரௌவ்ட்,” என்றான். “கட் -த்ரோட்கள், ரெயின்போ ட்ரௌட்கள். சில ஸ்டீல்ஹெட்களும், கொஞ்சம் சால்மன்களும்கூட. குளிர்காலத்தில் திட்டு திறக்கும்போது இவை இங்கே வருகின்றன. வேனிற்காலத்தில் அவை மூடிக்கொள்ளும்போது இவை சிக்கிக்கொள்கின்றன. இவற்றிற்கு வருடத்தில் சிறந்த பருவம் இதுதான். இன்று எதுவும் நான் பிடிக்கவில்லை, ஆனால் சென்ற ஞாயிறன்று நான்கு பிடித்தேன். பதினைந்து அங்குலம் நீளமிருந்தன. உலகத்திலேயே சுவையான மீன். பிடிப்பதற்குள் எப்படி போராடின தெரியுமா! படகுகளில் இருப்பவர்கள் இன்று சிலவற்றை பிடித்திருக்கலாம். ஆனால் இதுவரை எனக்கு எதுவும் கிட்டவில்லை.”


"தூண்டிலுக்கு என்ன உபயோகிக்கிறீர்கள்?" நான்ஸி கேட்டாள்.


"எதுவேண்டுமானாலும். புழுக்கள், சால்மன் முட்டைகள், உடைக்காத முழுச்சோள மணி. எதையாவது மாட்டி வீசிவிட்டு காத்திருக்க வேண்டும். கொஞ்சம் தளர்வாக விட்டுவிட்டு நூலைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்."


நாங்கள் கொஞ்ச நேரத்திற்கு அங்கேயிருந்து மீன் பிடிப்பதையும், சிறிய படகுகள் அந்த லாகூன்களின் நீளத்திற்கு முன்னும் பின்னும் சென்றுகொண்டிருப்பதையும் கவனித்தோம்.


"நன்றி," என்றேன் அவனிடம். "குட் லக் டு யூ,"


"குட் லக் டு யூ," என்றான் அவன்.


"இருவருக்கும் குட்லக்."


நகரத்திற்கு திரும்பும் வழியில் ஒரு விளையாட்டு சாதனங்கள் விற்கும் கடையில் நிறுத்தி லைசன்ஸ்கள், மலிவான தூண்டில் கம்புகள், நூல், நைலான் கயிறு, கொக்கிகள், தூண்டில் புழு, ஒரு மீன் பிடிக்கூடை போன்றவற்றை வாங்கிக்கொண்டோம். அடுத்த நாள் காலை மீன் பிடிக்கச் சொல்லலாமென்று திட்டமிட்டோம்.


ஆனால் அன்றிரவு உணவு முடிந்து, பாத்திரங்களைக் கழுவிவிட்டு, கணப்பில் நான் நெருப்பேற்றிக் கொண்டிருந்தபோது நான்ஸி தலையைப் பலமாக ஆட்டியபடி இது சரியாகப் போவதில்லை என்றாள்.

"ஏன் அப்படிக் கூறுகிறாய்?" என்றேன். "என்ன சொல்கிறாய்?”


”அதாவது இது சரிப்படப்போவதில்லை என்கிறேன். இதைப் பார்த்துக்கொள்ளத்தான் வேண்டும்." அவள் மீண்டும் தலையைக் குலுக்கிக்கொண்டாள். "காலை மீன் பிடிக்கச் செல்வதற்கு எனக்கு விருப்பமில்லை, நாய் எதுவும் எனக்கு வேண்டாம். வேண்டாம், நாயே தேவையில்லை. நான் இப்போது எழுந்து என் அம்மாவையும், ரிச்சர்டையும் பார்க்கப் போகிறேன். தனியாக, தனியாக இருக்க விரும்புகிறேன். ரிச்சர்டை விட்டு என்னால் இருக்க முடியவில்லை. இவ்வளவு வளர்ந்த பிறகு போய்விட்டான். என்னால் அவனில்லாமல் இருக்க முடியவில்லை."


'அப்புறம் தெல்? தெல் ஷ்ரீடரைக் கூடவா? உன் பாய் பிரண்டை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதுதானே ?" என்றேன்.


"இன்றிரவு எல்லாரையும் இழந்திருக்கிறேன்," என்றாள். “உங்களைக் கூட இழந்திருக்கிறேன். உங்களை நான் இழந்து வெகுகாலமாகி விட்டது. உங்களை மிக அதிகமாக இழந்து நீங்கள் எப்படியோ காணாமலேயே போயிருக்கிறீர்கள். என்னால் இதை விவரிக்க முடியாது. உங்களைத் தொலைத்துவிட்டேன். நீங்கள் இனியும் என்னுடையவரல்ல."


"நான்ஸி" என்றேன்.


"நோ, நோ," என்றாள். தலையைக் குலுக்கிக்கொண்டாள். கணப்பிற்கெதிரே அமர்ந்து தலையைத் தொடர்ந்து குலுக்கிக்கொண்டாள். "நாளைக்கே என் அம்மாவையும் ரிச்சர்டையும் போய் பார்க்க வேண்டும். நான் போனபிறகு நீங்கள் உங்களுடைய கேர்ள் பிரண்டை கூப்பிட்டுக்கொள்ளலாம்."

"நான் அதைச் செய்ய மாட்டேன்," என்றேன். "இந்த உத்தேசம் எதுவும் எனக்கில்லை,"


"நீங்கள் அவளைக் கூப்பிடுவீர்கள்," என்றாள்.


"நீ தெல்லைக் கூப்பிடுவாய்," என்றேன். அதைச் சொன்னதற்காக அசிங்கமாக உணர்ந்தேன்.


"நீங்கள் விரும்பும் எதையும் நீங்கள் செய்துகொள்ளலாம்," கண்ணீரைச் சட்டையின் கைப்பகுதியில் துடைத்துக்கொண்டாள். "இப்போது சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள். எனக்கு ஹிஸ்டீரியா போலக் கத்த விருப்பமில்லை, ஆனால் நான் நாளை வாஷிங்டன் செல்கிறேன். இப்போது படுக்கைக்குச் செல்கிறேன். களைப்பாக இருக்கிறது. ஐ யம் ஸாரி. நம் இருவருக்குமே ரொம்பவும் ஸாரி, டான். நம்மால் சரிப்படுத்திக்கொள்ளவே முடியாது. இன்று அந்த மீனவன்! அவன் நமக்கு குட்லக்தானே சொன்னான்!" அவள் தலையைக் குலுக்கிக்கொண்டாள். "நமக்காக இப்போது நானே குட்லக் சொல்லிக்கொள்கிறேன். நமக்கு அது தேவையாக இருக்கிறது."


அவள் குளியலறைக்குச் சென்றாள். தொட்டியில் தண்ணீர் விழுவது கேட்டது. நான் வெளியே வந்து முன்வாசல் படிகளில் அமர்ந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். வெளியே இருட்டாக, நிசப்தமாக இருந்தது. நகரம் இருந்த திசையில் வானத்தில் விளக்கு வெளிச்சம் மென்மையாக விரவியிருந்தது. பள்ளத்தாக்கில் கடற்பனி மூட்டம் மிதந்தது. சூசனைப்பற்றி நினைக்கத் தொடங்கினேன். சிறிது நேரம் கழித்து நான்ஸி குளியலறையிலிருந்து வெளியே வந்தாள். குளியலறைக் கதவுகள் தாழிடப்படுவது கேட்டது. நான் உள்ளே சென்று இன்னொரு விறகை எடுத்துக் கணப்பிற்குள் செருகினேன். தீச்சுவாலைகள் அதைப் பற்றிக்கொள்ளும்வரை பார்த்துக்கொண்டு நின்றேன். படுக்கையறைக்குச் சென்று சன்னல் திரைகளை இழுத்துவிட்டு, விரிப்பிலிருந்த பூ வேலைகளை வெறித்தேன். எழுந்து குளியலறைக்குச் சென்றேன். குளித்துவிட்டு பைஜாமாவிற்கு மாறிக்கொண்டு மீண்டும் கணப்பருகே அமர்ந்துகொண்டேன். பனிமூட்டம் இப்போது சன்னலுக்கு வெளியே வந்துவிட்டிருந்தது. நெருப்பிற்கெதிரே அமர்ந்து புகை பிடித்தேன். சன்னலுக்கு வெளியே மீண்டும் பார்வை திரும்பியபோது பனி மூட்டத்திற்குள் ஏதோ நகர்வது தெரிந்தது. உற்று நோக்க, முற்றத்தில் ஒரு மிகப்பெரிய வெள்ளை நிறக் குதிரை! மேய்ந்து கொண்டிருந்தது.


சன்னலுக்குச் சென்றேன். குதிரை நிமிர்ந்து என்னை ஒரு நிமிடம் பார்த்துவிட்டு தலையைக் குனிந்து மீண்டும் புற்களைப் பிடுங்கத் தொடங்கியது. கார் நின்றிருந்த இடத்தில் இன்னொரு குதிரையும் மேய்ந்துகொண்டிருந்தது.


முன் வாசலின் விளக்கைப் போட்டுவிட்டு சன்னலில் நின்று அவற்றைக் கவனித்தேன். நீண்ட பிடரியைக் கொண்ட பெரிய வெண்குதிரைகள். வேலியைத் தாண்டிக்கொண்டோ, அல்லது பூட்டாத பக்கத்துப் பண்ணை ஏதாவதிலிருந்தோ தப்பித்து வந்திருக்கலாம். எப்படியோ எங்களுடைய முற்றத்திற்கு வந்துவிட்டிருக்கின்றன. சுதந்திரத்தை சந்தோஷமாக அனுபவித்தபடி திரிந்து கொண்டிருந்தன. ஆனால் அவையும் பதற்றத்துடன்தான் இருந்தன. சன்னலில் நான் நிற்கும் இடத்திலிருந்தே அவற்றின் கண்களின் வெள்ளையைப் பார்க்க முடிந்தது. புற்களைக் கொத்தாகப் பிடுங்குகையில் அவற்றின் நீண்ட செவி மடல்கள் எழும்பித் தாழ்ந்தன. மூன்றாவதாக ஒரு குதிரையும் ஆடியசைந்தபடி வந்தது. பின்னாலேயே நான்காவது. வெண்புரவிகளின் மந்தை. எங்கள் தோட்டத்தில்!

படுக்கையறைக்குச் சென்று நான்ஸியே எழுப்பினேன். அவளது கண்கள் சிவந்து, சுற்றிலும் வீங்கியிருந்தன. அவளுடைய கூந்தலை கர்லர்களில் பொருத்தியிருந்தாள். தரையில் கட்டில் காலுக்கருகே ஒரு சூட்கேஸ் திறந்து கிடந்தது,


"நான்ஸி! ஹனி, எழுந்திரு, முன்வாசலில் என்ன இருக்கிறதென்று பாரேன்! நீ வந்து பார்த்தேயாக வேண்டும்! உன்னால் நம்பவே முடியாது! சீக்கிரம்!"


"என்னது?” அவள் குரல் உடைந்திருந்தது. "என்னைக் கஷ்டப்படுத்தாதீர்கள். ப்ளீஸ்."


"ஹனி, நீ இதைப்பார்த்தே தீர வேண்டும். நான் உன்னைக் கஷ்டப்படுத்த மாட்டேன். உன்னை பயமுறுத்தி விட்டதற்காக ஸாரி. ஆனால் நீ அங்கே வந்து அதைப் பார்க்க வேண்டும்."


நான் அந்த அறைக்குத் திரும்பிவந்து சன்னலுக்கு முன்பு நின்றேன்.


சில நிமிடங்களில் நான்ஸி தனது உடையை முடிச்சிட்டுக்கொண்டே வந்தாள். சன்னலுக்கு வெளியே பார்த்து வீறிட்டாள்: "மை காட்! குதிரைகள்! எவ்வளவு அழகான வெள்ளைக் குதிரைகள்! டான், எங்கேயிருந்து இவை வந்தன? ஓ, எவ்வளவு அழகு!”


"எங்கிருந்தாவது அவிழ்ந்துகொண்டு வந்திருக்கும்," என்றேன். “பக்கத்தில் இருக்கிற பண்ணை வீடுகள் எவற்றிலிருந்தாவது. ஷெரீப்பிற்கு போன் செய்து இவற்றின் உரிமையாளர்களை கண்டு பிடிக்கச் சொல்கிறேன். அதற்குமுன் நீ இவற்றைப் பார்க்க வேண்டுமென்பதற்காகத்தான் எழுப்பினேன்.”


"இவை கடிக்குமா?” என்றாள். “எனக்கு இந்த ஒன்றோடு விளையாட வேண்டுமே. அதோ நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறதே, அது. அதன் தோளைத் தட்டிக் கொடுக்க வேண்டும். கடிக்குமோ என்று பயமாக இருக்கிறது. நான் வெளியே போகிறேன்."


"இவை கடிக்காதென்றே நினைக்கிறேன். இவற்றைப் பார்த்தால் கடிக்கிற குதிரைகளைப் போலத் தெரியவில்லை. மேலே கோட் அணிந்து கொள். வெளியே குளிர் கடுமையாக இருக்கிறது."


என் பைஜாமாக்களுக்கு மேல் கோட் அணிந்து கொண்டு நான்ஸிக்காக காத்திருந்தேன். முன் கதவைத் திறந்து வெளியே குதிரைகளிடம் சென்றோம். அவை எங்களை நிமிர்ந்து பார்த்தன. எங்களிடம் ஆர்வமிழந்து அவற்றில் இரண்டு மீண்டும் மேயத் தொடங்கின. மற்றொன்று கனைத்துவிட்டு சில அடிகள் பின்னகர்ந்தது. பின்னர் அதுவும் எங்களைப் புறக்கணித்துவிட்டு தலையைக் குனிந்தது.


மற்ற குதிரைக்கருகே சென்று அதன் நெற்றியைத் தடவி முதுகைத் தட்டிக் கொடுத்தேன். அது தொடர்ந்து அசைபோட்டுக்கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த குதிரையின் மீது நான்ஸி மெதுவாகக் கையை வைத்து அதன் பிடரியைக் கோதினாள். "ஏ, புரவியே ! நீ எங்கிருந்து வருகிறாய்?" என்றாள் ரகசியக் குரலில். "நீ எங்கே வசிக்கிறாய்? ஏன் இன்றிரவு வெளியே வந்துவிட்டாய், புரவியே?”

அதன் பிடரியைக் கோதிக்கொண்டே பேசினாள். குதிரை அவளைத் திரும்பிப் பார்த்து அதன் தளர்ந்த உதடுகள் வழியாக 'ர்ர்ர்'-ரென்று ஊதிவிட்டு மீண்டும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டது.


அவள் அதன் முதுகைத் தட்டினாள்.


"நான் ஷெரீப்பைக் கூப்பிடுகிறேன்." என்றேன்.


"அதற்குள் வேண்டாம்," என்றாள். "இன்னும் கொஞ்ச நேரத்திற்கு கூப்பிடாதீர்கள். பிறகு எப்போதும் இதைப் போல நம்மால் பார்க்க முடியப்போவதில்லை. நம் வீட்டுத் தோட்டத்திற்கு இனி எப்போது குதிரைகள் வரப் போகின்றன? கொஞ்சநேரம் காத்திருக்கலாம். டான்."


கொஞ்சநேரத்திற்கு நான்ஸி ஒவ்வொரு குதிரைக்கருகிலும் சென்று, அவற்றின் முதுகுகளைத்தட்டி, பிடரிகளைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தாள். திடீரென ஒரு குதிரை தன்னிச்சையாக தோட்டத்திலிருந்து விலகி, காரைச்சுற்றிக்கொண்டு நடைவழியாக சாலைக்குச் சென்றது. ஷெரீப்பைக் கூப்பிடவேண்டிய நேரம் வந்துவிட்டது.


சிறிது நேரம் கழித்து ஷெரீப்பின் இரண்டு கார்கள், பனிமூட்டத்திற்குள் சிவப்பு விளக்குகள் பளிச்சிட வந்து சேர்ந்தன. அடுத்த சில நிமிடங்களில் ஆட்டுத் தோல் கோட்டணிந்த ஒருவன் குதிரைகளை ஏற்றிச் செல்ல ஒரு பிக் – அப் லாரியை ஓட்டிக்கொண்டுவந்தான். அவன் இறங்கியவுடனேயே குதிரைகள் முரண்டிக்கொண்டு ஒதுங்கி ஓடின. அவன் உரக்கத் திட்டிக்கொண்டே கையிலிருந்த கயிறைச் சுழற்றிச் சுழற்றி ஒரு குதிரையின் கழுத்தை நோக்கி வீசினான்.


அது சுலபமாகத் தப்பித்துக்கொண்டு விலகியது.


"அதை அடிக்காதே!” என்றாள் நான்ஸி.


நாங்கள் உள்ளே சென்று சன்னலுக்குப் பின்னால் நின்றுகொண்டு அவர்கள் குதிரைகளை சுற்றி வளைத்து வண்டியில் ஏற்ற முற்படுவதை வேடிக்கை பார்த்தோம்.


"நான் இப்போது காபி போடப்போகிறேன். உனக்கும் காபி வேண்டுமா,நான்ஸி?"


"எனக்கு என்ன வேண்டுமென்று கூறட்டுமா?” என்றாள் நான்ஸி, "எனக்கு பறக்கிறார் போலிருக்கிறது, டான். எனக்குள் நிரம்பியிருப்பதைப் போலிருக்கிறது. எனக்கு எப்படியிருக்கிறதென்றால், அதை எனக்குச் சொல்ல முடியவில்லை. நீங்கள் காபி போடுங்கள். நான் வானொலியில் ஏதாவது சங்கீதம் ஒலிபரப்பாகிறதாவென்று பார்க்கிறேன். பிறகு மறுபடியும் கணப்பு மூட்டுங்கள். சந்தோஷப் பரபரப்பில் எனக்குத் தூக்கம் போய்விட்டது."


எனவே கணப்பிற்கு எதிரே அமர்ந்து காபி குடித்தோம், யுரேகா வானொலி நிலையத்தின் நள்ளிரவு நிகழ்ச்சியில் சங்கீதம் கேட்டோம், குதிரைகளைப் பற்றிப் பேசினோம், ரிச்சர்டைப் பற்றிப் பேசினோம், பின் நான்ஸியின் அம்மாவைப்பற்றி. நாங்கள் நடனம் ஆடினோம். தற்போதைய நிலவரத்தைப் பற்றிப் பேசவேயில்லை. சன்னலுக்கு வெளியே மூடுபனி தொங்கிக்கொண்டிருந்தது. பரஸ்பரம் பிரியத்துடன் இரவு முழுக்கப் பேசிக்கொண்டிருந்தோம். விடியத் தொடங்கியபோது வானொலியை நிறுத்தினோம். படுக்கைக்குச் சென்று உறவு கொண்டோம்.


அடுத்த நாள் பிற்பகல், அவளுடைய ஏற்பாடுகள் முடிந்து, சூட்கேஸ்கள் கட்டப்பட்டபின் அவளை அந்தச் சிறிய விமான நிலையத்திற்கு ஓட்டிச் சென்றேன். அங்கிருந்து போர்ட்லண்டிற்கு அவள் விமானம் பிடித்துச் சென்றுவிட்டால் பாஸ்கோவிற்குச் செல்லும் இரவு விமானத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்.


"உன் அம்மாவிடம் நான் விசாரித்ததாகக் கூறு. என் சார்பில் ரிச்சர்டை அணைத்து முத்தமிடு. நான் அவன் நினைவாகவே இருக்கிறேன் என்று சொல்,"

"அவனும் உங்களை நேசிக்கிறான்," என்றாள். "உங்களுக்கும் அது தெரியும். எப்படியிருப்பினும் இந்த இலையுதிர் காலத்தில் அவனைப் பார்க்கப் போகிறீர்கள்.”

நான் தலையசைத்து ஆமோதித்தேன்.


"குட் பை.” என்னருகில் நகர்ந்து வந்தாள். ஒருவரையொருவர் தழுவிக்கொண்டோம். "நேற்றிரவுக்காக சந்தோஷப்படுகிறேன். அந்தக் குதிரைகள், நமது உரையாடல், எல்லாமே நமக்கு உதவியிருக்கிறது. நாம் அதை மறக்கமாட்டோம்,” என்றாள். அவள் அழத் தொடங்கினாள்.

"எனக்கு எழுது. செய்வாயா?” என்றேன். “இப்படி நமக்கு நடக்குமென்று நான் நம்பியதில்லை. எத்தனை வருடங்கள்! ஒரு நிமிடம்கூட அப்படி நினைத்ததில்லை. நமக்கு நிகழாது."


"நான் எழுதுகிறேன்," என்றாள். "பெரிசு பெரிசாக கடிதம் எழுதுகிறேன். உயர்நிலைப்பள்ளி தினங்களில் நான் உங்களுக்கு அனுப்பினேனே, அந்தளவிற்கு பெரிய கடிதங்கள்!"

"நான் அவற்றிற்காகக் காத்திருப்பேன்," என்றேன்.


அவள் என்னை மீண்டும் உற்றுப்பார்த்து என் முகத்தைத் தீண்டினாள். திரும்பி நடையைக் கடந்து விமானத்தை நோக்கி நடந்தாள்.


சென்று வா அன்பே, கடவுள் உன்னோடு இருக்கட்டும்.


அவள் விமானத்தில் ஏறினாள். ஜெட் இன்ஜின் ஓசைகள் ஆரம்பிக்கும்வரை அங்கேயே நின்றிருந்தேன். ஒரு நிமிடத்தில் விமானம் ஓடுதளத்தில் நகர ஆரம்பித்தது. வேகம் பிடித்து, ஹம் போல்ட் வளைகுடாவிற்கு மேல் எழும்பி, சீக்கிரத்திலேயே தொடுவானத்தில் ஒரு துரும்பாகிப் புதைந்தது.


நான் வீட்டிற்குத் தனியாகத் திரும்பி வந்தேன். நடைவழியின் ஆரம்பத்தில் காரை நிறுத்தினேன். நேற்றிரவின் குளம்புத் தடங்கள் தரையில் பதிந்திருப்பதைப் பார்த்தேன். புல்தரையிலும் சேற்றிலும் ஆழமாகப் பதிந்திருந்தன. எல்லா இடங்களிலும் சாணம் இறைந்திருந்தது. வீட்டிற்குள் நுழைந்து, கோட்டை கழற்றுவதற்கு முன்பாகவே தொலைபேசிக்குச் சென்று சூசனின் எண்ணை டயல் செய்தேன்.


GRANTA 68, 1999.

'Call if you need me.' Raymond Carver.

Comments


© 2025 by G. Kuppuswamy

bottom of page