top of page

இறகுகள் - ரேமண்ட் கார்வர்

(தமிழில்: ஜி.குப்புசாமி)



என்னோடு பணிபுரியும் இந்த நண்பன், பட், என்னையும் ஃபிரானையும் இரவு உணவுக்கு வரச்சொல்லி அழைத்தான். அவன் மனைவியை எனக்குத் தெரியாது, அவனுக்கு ஃபிரானைத் தெரியாது. அதற்கும் இதற்கும் சரியாகவிட்டது. ஆனால் பட்டும் நானும் நண்பர்கள். பட்டின் வீட்டில் ஒரு சின்னக் குழந்தை இருப்பது தெரியும். பட் எங்களை இரவு உணவுக்கு அழைத்தபோது அந்தக்குழந்தைக்கு நிச்சயமாக எட்டுமாதம் போல ஆகியிருக்கும். அந்த எட்டு மாதங்கள் எங்கே போயிருக்கும்? அதன்பிறகு வந்த காலம் எங்கேதான் போயின? ஒரு பெட்டி நிறைய சுருட்டுகளோடு பட் அலுவலகத்துக்கு வந்த தினம் ஞாபகம் இருக்கிறது. மதிய உணவறையில் அவற்றைக் கொடுத்தான். அவை ‘டிரக்ஸ்டோர்‘ சுருட்டுகள். டட்ச் மாஸ்டர்ஸ். எல்லா சுருட்டுகளின் மீதும் ‘பையன் பிறந்திருக்கிறான்!‘ என்று சிவப்பு நிறத்தில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. நான் சுருட்டு புகைப்பதில்லை, ஆனாலும் ஒன்றை எடுத்துக் கொண்டேன். “இரண்டாக எடுத்துக்கொள்,“ என்றான் பட். பெட்டியை குலுக்கினான். “எனக்கும் சுருட்டு பிடிக்காது. இது அவளுடைய யோசனை.“ அவள் என்று அவன் சொன்னது அவனுடைய மனைவியைப் பற்றி. ஓலா.


பட்டின் மனைவியை அதற்குமுன் நான் சந்தித்ததில்லை. ஆனால் ஒருமுறை தொலைபேசியில் அவளுடைய குரலைக் கேட்டிருக்கிறேன். ஒரு சனிக்கிழமை பிற்பகலில் எனக்கு செய்வதற்கு எந்த வேலையும் இருக்கவில்லை. அதனால் அவனுக்கு ஏதாவது தேவையா என்று கேட்பதற்காக பட்டை அழைத்தேன். இந்தப் பெண்தான் தொலைபேசியை எடுத்து, ’‘ஹலோ,“ என்றாள். அவளை எதிர்பார்க்காத திகைப்பில் அவளுடைய பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை. பட்டின் மனைவி என்று மட்டும்தான் மனதில் இருந்தது. பட் அவளுடைய பெயரை எத்தனையோ முறை என்னிடம் குறிப்பிட்டிருக்கிறாள். ஆனால் அது இந்தக் காதில் நுழைந்து அந்தக் காதில் போய்விட்டது. “ஹலோ,“ என்றாள் மறுபடியும். பின்னணியில் தொலைக்காட்சியின் சத்தம் கேட்டது. ’‘யார் பேசுவது?,“ என்றாள். ஒரு குழந்தை அழத் தொடங்குவது கேட்டது. அந்தப் பெண், ‘’பட்,‘’ என்று கூப்பிட்டாள். பட், “என்ன?,“ என்பது கேட்டது. அவள் பெயர் இன்னமும் நினைவுக்கு வரவில்லை. எனவே போனை வைத்துவிட்டேன். அடுத்த முறை பட்டை பணியிடத்தில் பார்த்தபோது அவனை தொலைபேசியில் அழைத்ததை எதற்காகவோ நான் சொல்லவேயில்லை. ஆனால் அவனுடைய மனைவியின் பெயரை அவன் வாயிலிருந்து வரவைழைத்து விட்டேன். “ஓலா,“ என்றான். ஓலா. எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஓலா.


“பெரிசாக ஒன்றுமில்லை,“ என்றான் பட். நாங்கள் உணவறையில் காபி அருந்திக் கொண்டிருந்தோம். “நாம் நான்கு பேர் மட்டும்தான் நீ, உன் மனைவி,நான், ஓலா. ஆடம்பரமாக எதுவும் கிடையாது. ஏழு மணி சுமாருக்கு வா. ஆறு மணிக்கு அவள் குழந்தைக்குப் பாலூட்டுவாள். அதற்கப்புறம் அவன் தூங்கிவிடுவான், நாம் சாப்பிட போய்விடலாம். எங்கள் வீட்டைக் கண்டுபிடித்து ஒன்றும் சிரமமாக இருக்காது. இதோ வரைபடம் இருக்கிறது.“ அவன் என்னிடம் கொடுத்த காகிதத்தில் பெரிய, சிறிய சாலைகள், சந்துகள், இன்னபிற வழி அடையாளங்களைக் குறிக்கும் பலவித கோடுகளும் நான்கு திசைகளைக் குறிக்கும் அம்புக்குறிகளும் வரையப்பட்டிருந்தன. அவனது வீடு இருக்கும் இடத்தைக் குறிக்க ஒரு பெரிய X. ”நாங்கள் நிச்சயம் வருகிறோம்,“ என்றேன். ஆனால் வீட்டுக்கு வந்து சொன்னபோது ஃபிரான் அதில் பெரிய ஆர்வம் எதையும் காட்டவில்லை.


அன்று மாலை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது அவளிடம் பட் வீட்டுக்குப் போகும்போது என்ன எடுத்துக் கொண்டு செல்வது என்று கேட்டேன்.


“எதைப் போல?“ என்றாள் ஃபிரான். “அவர் எதையாவது எடுத்துவரச் சொன்னாரா? எனக்கு எப்படித் தெரியும்? எனக்கு எதுவும் தோன்றவில்லை.“ அவள் தோளைக் குலுக்கிக்கொண்டு என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். பட்டைப் பற்றி முன்பு நான் சொன்னதையெல்லாம் அவள் கேட்டிருக்கிறாள். அவனை அவள் பார்த்ததில்லை. அதில் அவளுக்கு ஆர்வமும் இல்லை. “ஒரு பாட்டில் ஒயின் எடுத்துப் போகலாம். எனக்கொன்றுமில்லை,“ என்றாள். ”ஏன் ஒயின் கொண்டுபோய் தருவதில் பிரச்சனை ஒன்றுமில்லையே?“ என்று அவள் தலையை ஆட்டிக்கொண்டாள். அவளுடைய நீண்ட கூந்தல் தோள்களின் மீது முன்னும் பின்னுமாக புரண்டது. ’எதற்கு மற்றவர்கள் நமக்கு வேண்டும்?’ என்று அவள் கேட்பதைப் போலிருந்தது. நமக்கு நாமே போதும். “கிட்டே வா,“ என்றேன். அவளை அணைத்துக் கொள்வதற்காக என்னருகே கொஞ்சம் நகர்ந்து வந்தாள். ஃபிரான் ஒரு நீர் நிரப்பிய உயரமான கோப்பையைப் போலிருந்தாள். முதுகு முழுக்க வழிந்திருக்கும் பொன்னிறக் கூந்தல் அவளுக்கு. அவள் முடியைக் கொஞ்சம் பிரித்தெடுத்து முகர்ந்தேன். என் கையில் அவள் முடியை சுற்றிக்கொண்டேன். அவளை அணைத்துக்கொள்ள அனுமதித்தாள். அவள் கூந்தலுக்குள் முகத்தைச் செருகிக்கொண்டு மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டேன்.


சில நேரங்களில் பார்வையை மறைக்கும்படி தலைமுடி சரியும்போது எரிச்சலோடு தோளுக்குப் பின்னால் தள்ளிவிட்டுக்கொண்டு, “இந்த முடி இருக்கிறதே சரியான தொல்லை,“ என்பாள். ஃபிரான் வெண்ணெய், பாலாடைக் கட்டி தயாரிக்கும் ஒரு ‘கிரீமெரி‘ யில் வேலைபார்க்கிறாள். பணிக்குச் செலலும்போது கூந்தலை உச்சியில் முடிந்துகொண்டுச் செல்லவேண்டும். ஒவ்வொரு நாளும் இரவில் அவளுக்கு தலைகுளிக்க வேண்டியிருந்தது. அதன்பிறகு நாங்கள் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்திருக்கும்போது முடியை உலர்த்தி, பிரஷ் செய்து கொள்வாள். தலைமுடியை சின்னதாக வெட்டிக்கொள்ளப்போவதாக அடிக்கடி மிரட்டுகிறாள். ஆனால் அப்படி செய்வாள் என்று எனக்குத் தோன்றவில்லை. அவளுடைய கூந்தலை எனக்கு மிகவும் பிடிக்குமென்று அவளுக்குத் தெரியும். அவள் மீது நான் காதல் வயப்பட்டதே அவளுடைய கூந்தலுக்காகத்தான் என்று சொல்வேன். அதை அவள் வெட்டிவிட்டால் என் காதலும் போய்விடும் என்பேன். சில நேரங்களில் அவளை “ஸ்வீடிஷ்காரி“ என்பேன். அவளைப் பார்த்தால் ஸ்வீடன் தேசத்தவள் போலவே இருக்கும். மாலை நேரங்களில் ஒன்றாக உட்கார்ந்து அவள் தலைமுடியை பிரஷ் செய்து கொண்டிருக்கும்போது, நாங்கள் இருவரும் எங்களிடம் இல்லாத விஷயங்கள் சிலவற்றைச் சொல்லி அவற்றுக்காக உரக்க வேண்டிக்கொண்டிருப்போம். நாங்கள் வேண்டுமென்று ஆசைப்பட்ட விஷயங்களில் ஒன்று, புதிதாக கார் வாங்கவேண்டுமென்பது. கனடாவுக்கு சுற்றுலா சென்று இரண்டு வாரங்கள் தங்கவேண்டுமென்பது இன்னொன்று. நாங்கள் வேண்டிக்கொள்ளாத ஒரு விஷயம், குழந்தைகள். எங்களுக்கு குழந்தைகள் இல்லாததற்கு காரணம், எங்களுக்குக் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதே. கொஞ்சகாலம் கழித்தாவது பார்த்துக்கொள்ளலாம் என்று பேசிக்கொள்வோம். ஆனால் அந்தச் சமயத்தில் ஒத்திப்போட்டுக்கொட்டிருந்தோம். அப்படியே காலத்தைத் தள்ளிவிடுவோம் என்றுதான் நினைத்தோம். சில இரவுகளில் திரைப்படங்களுக்குச் சென்றோம். மற்ற இரவுகளில் வெறுமனே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தோம். சில இரவுகளில் ரொட்டி அல்லது கேக் செய்வாள். எதுவாக இருந்தாலும் ஒரே நேரத்தில் உட்கார்ந்து காலி செய்துவிடுவோம்.


“ஒருவேளை அவர்கள் ஒயின் குடிக்காதவர்களாக இருக்கலாம்,“ என்றேன்.


“அப்படியே இருந்தாலும் ஒயின் எடுத்துச் செல்லுங்கள். அவர்கள் குடிக்காவிட்டால் நாம் குடிப்போம்,“. என்றாள்.


“வெள்ளையா, சிவப்பா?“ என்றேன்.


நான் சொன்னதை கவனிக்காமல், “இனிப்பாக எதையாவது எடுத்துச்செல்வோம்,“ என்றாள். “எதை எடுத்துக்கொண்டு போனாலும் எனக்கு அக்கறையில்லை. உங்களுடைய நண்பர் வீடு. பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டாம். எனக்கு வருவதற்கு விருப்பமே இல்லை. இல்லாவிட்டால். நான் ராஸ்பெரி காஃபி ரிங் செய்கிறேன் அல்லது கப் கேக்குகள்.“


“சாப்பாட்டுக்குப் பிறகு தருவதற்காக ‘டெஸ்ஸெர்ட்‘ வைத்திருப்பார்கள். அதைத் தயாராக வைத்திருக்காமல் யாரையும் விருந்துக்கு அழைக்கமாட்டார்கள்,“ என்றேன்.


“அரிசி ‘புட்டிங்‘ வைத்திருக்கலாம். அல்லது Jell-O! நமக்கு அது பிடிக்கவே பிடிக்காது,“ என்றாள். “அந்தப் பெண்ணைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அவள் எதையெல்லாம் வைத்திருப்பாள் என்று நமக்கு எப்படித் தெரியும்? அவள் நமக்கு Jell-O பரிமாறிவிட்டால்–“ ஃபிரான் தலையை ஆட்டிக்கொண்டாள். நான் தோளைக் குலுக்கிக் கொண்டேன். அவள் சொன்னது சரிதான். “அவர் உங்களுக்குக் கொடுத்த அந்த சுருட்டுகள்... அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அப்புறம் நீங்களும் அவரும் இரவு உணவுக்கு ஏதாவது பார்லருக்குப் போய் சுருட்டு பிடியுங்கள், போர்ட் ஒயின் குடியுங்கள், அல்லது சினிமாக்களில் வருபவர்களைப் போல் எதையாவது குடியுங்கள்,“


“சரி, நாம் வெறுமனே போகலாம்,“ என்றேன்.


“நான் செய்த ரொட்டியை எடுத்துக்கொண்டு போகலாம்,“ எள்றாள் ஃபிரான்.


****


நகரத்திலிருந்து கிட்டத்தட்ட இருபது மைல் தூரத்தில் பட்டும் ஓலாவும் வசித்து வந்தனர். இந்த நகரத்தில் மூன்று வருடங்களாக வசித்து வந்தாலும், இதைச்சுற்றியுள்ள இடங்களுக்கு இதுவரை சென்றதேயில்லை. வளைந்து நெளிந்து செல்லும் அந்தச் சிறிய சாலைகளில் வண்டியோட்டிச் செல்வது நன்றாக இருந்தது. அது முன்மாலை நேரம். இனிமையாக, கதகதப்பாக இருந்தது. புல்வெளிகள், ரயில்பாதையையொட்டிய வேலிகள், பழங்கால களஞ்சியங்களை நோக்கி மெதுவாக நடந்து போகும் பசுமாடுகள் என்று பார்த்துக் கொண்டே சென்றோம். செக்கச்செவேலென்ற இறக்கைகளோடு கருங்குருவிகள் வேலிகளின் மீது அமர்ந்திருந்தன. வைக்கோற் பரண்களின் மீது புறாக்கள் வட்டமடித்துக்கொண்டிருக்க, சாலையிலிருந்து உள்ளே தள்ளி அமைந்திருந்த சிறிய வீடுகளின் தோட்டங்களில் காட்டுப்பூக்கள் மலர்ந்திருந்தன. “இங்கே நமக்கொரு இடம் இருந்தால் நன்றாக இருக்கும்,“ என்றேன். அது ஒரு குருட்டு எண்ணம்தான். எப்படியும் நிறைவேறமுடியாத இன்னொரு கனவுதான் அது. ஃபிரான் பதில் சொல்லவில்லை. அவள் பட் தந்திருந்த வரைபடத்தை மும்மரமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அடையாளம் காட்டியிருந்த நாற்சந்தியை அடைந்தோம். அந்த வரைபடத்தில் குறிப்பிட்டிருந்தததைப் போலவே வலப்புறம் திரும்பி, சரியாக 3.3 மைல் தூரம் சென்றோம். சாலையின் இடப்புறத்தில் சோள வயலும், ஒரு தபால் பெட்டியும், சரளைக் கற்களாக நீண்டதொரு நடைவழியும் இருந்தன. நடைவழியின் முடிவில் சில மரங்களுக்குப் பின்னால் முன்தாழ்வாரத்துடன் ஒரு வீடு நின்றது. வீட்டுக்கு புகைபோக்கி இருந்தது. அது கோடைக்காலம் என்பதால் புகை எதுவும் அதிலிருந்து எழவில்லை. ஆனால் அந்த இடம் மொத்தமும் ஓர் அழகான படம் போல இருப்பதாக ஃபிரானிடம் சொன்னேன்.


“கிராமத்தான்கள்தான் இங்கு வாழ முடியும்,“ என்றாள்.


வீட்டுப்பாதைக்குள் திரும்பினேன். இருபுறங்களிலும் சோளப்பயிர் சோளக் கதிர்கள் காரைவிட உயரமாக நின்றிருந்தன. டயர்களுக்கடியில் சரளைக்கற்கள் கரகரப்பாக அரைபடுவது கேட்டது. வீட்டை நெருங்கியதும், தோட்டத்தில் வளர்ந்திருந்த பெயர் தெரியாத கொடிகளில் பேஸ்பால் அளவுக்குப் பெரிதாக பச்சை நிறத்தில் காய்கள் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து, “என்ன அது?,“ என்றேன்.


“எனக்கு எப்படித் தெரியும்?“ என்றாள். “சுரைக்காயோ என்னவோ. எனக்கு இதெல்லாம் ஒன்றுமே தெரியாது,“


“ஹே, ஃபிரான், டேக் இட் ஈஸி,“


அவள் எதுவும் சொல்லவில்லை. கீழுதட்டை கடித்து உள்ளிழுத்துக்கொண்டாள். வீட்டை நெருங்கும்போது காரின் ரேடியோவை அணைத்தாள்.


குழந்தைகளுக்கான ஊஞ்சல் ஒன்று முற்றத்தில் இருந்தது. முன்தாழ்வாரத்தில் பொம்மைகள் இறைந்திருந்தன. வீட்டுக்கு முன்னால் காரை நிறுத்தினேன். அப்போதுதான் அந்தக் கர்ணகடூரமான ஊளைச்சத்தத்தை கேட்டோம். வீட்டுக்குள்ளே குழந்தை ஒன்று இருந்ததுதான். ஆனால் இந்தக் காட்டு கத்தல் நிச்சயமாக குழந்தையினுடையது அல்ல.


“அது என்ன சத்தம்?“ என்றாள் ஃபிரான்.


மரத்திலிருந்து கிட்டத்தட்ட கழுகு அளவுக்கு பெரிதாக இருந்த ஏதோவொன்று படபடவென சிறகுகளை அடித்துக்கொண்டு காருக்கு முன்னால் கனமாக தரையிறங்கியது. அது தன்னைத் தானே உதறிக்கொண்டது. அதன் நீண்ட கழுத்தை காரை நோக்கித் திருப்பி, தலையை உயர்த்தி எங்களை உன்னிப்பாகப் பார்த்து மதிப்பிட்டது.


“அடச்சே!“ என்றேன். ஸ்டியரிங்கில் இரண்டு கைகளையும் இறுக்கிக்கொண்டு அதனை வெறித்தேன்.


“உங்களால் நம்ப முடிகிறதா?“ என்றாள் ஃபிரான். “இதற்குமுன் உயிரோடு ஒன்றை நேரில் பார்த்ததேயில்லை,“


எங்கள் இருவருக்கும் அது ஒரு மயில் என்று நன்றாகவே தெரிந்தாலும், ஆனால் அதை வாய்விட்டுச் சொல்லவில்லை. வெறுமனே அந்தப் பறவையை கவனித்தோம். அது தலையை உயர்த்தி சகிக்கமுடியாத குரலில் அகவியது. சிறகுகளை சிலிர்த்துக்கொண்டு தரையில் இறங்கிய போது இருந்ததைவிட இப்போது இரண்டு மடங்கு பெரியதாக தெரிந்தது.


மறுபடியும் “அடச்சே“ என்றேன். முன்னிருக்கையில் இருந்த இடத்திலேயே அசையாமல் உட்கார்ந்திருந்தோம்.


அந்தப் பறவை சற்று முன்னால் நகர்ந்தது. தலையை ஒரு பக்கமாக திருப்பி எதற்காகவோ தன்னைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டது. அதன் உக்கிரமான கண்களை எங்களிடமிருந்தது விலக்கவில்லை. அதன் தோகையை ஒரு முறை உதறிவிட்டு, உயர்த்தி விரித்துக்கொண்டது. கைவிசிறியைப்போல மடலை விரித்தும் மடக்கியும் காட்டியது. வானவில்லில் இருக்கும் அத்தனை நிறங்களும் அதன் தோகையில் பளபளத்தன.


ஃபிரான் ஸ்தம்பித்து அடங்கிய குரலில்,’‘மை காட்“ என்றாள். தன் கையை எடுத்து என் கால் முட்டியின் மீது வைத்து கொண்டாள்.


’‘அடச்சே,“ என்றேன். வேறு எதுவும் சொல்வதற்கு கிடைக்கவில்லை.


அந்தப் பறவை அதன் விநோதமான ஊளைச் சத்தத்தை மீண்டும் ஒரு முறை எழுப்பியது. “மே – ஆங், மே – ஆங்’“ என்று தொடர்ந்தது. இந்தச் சத்தத்தை மட்டும் முதல் முறையாக பின்னிரவு நேரத்தில் கேட்க நேர்ந்திருந்தால், யாரோ மரணஓலம் எழுப்பியபடி செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றோ, ஏதோ பயங்கர விஷயம் நடந்து கொண்டிருக்கிறது என்றோ நினைத்திருப்பேன்.


**********************************************************


வீட்டின் முன் கதவு திறந்து பட் வெளியே தாழ்வாரத்துக்கு வந்தான். சட்டையின் பட்டன்களைப் போட்டுக்கொண்டிருந்தான். அவன் தலைமுடி ஈரமாக இருந்தது. குளித்துவிட்டு நேராக வந்திருக்கிறான் போல.


“ஷட் அப், ஜோயி,“ என்று மயிலைப் பார்த்துக் கத்தினான். அதை நோக்கி பலமாகக் கைத்தட்டி சத்தமெழுப்ப, அது சற்று பின்னகர்ந்து சென்றது. “போதும் நிறுத்து. சரி, வாயை மூடு! வாயை மூடு பிசாசே!“ என்றபடியே பட் படியிறங்கி வந்தான். சட்டையை பேன்டுக்குள் செருகிக்கொண்டே காரின் அருகில் வந்தான். வேலைக்கு வரும்போது அணிந்திருப்பதைப் போலவே – நீல ஜீன்ஸ், டெனிம் சட்டை – இப்போதும் அணிந்திருந்தான். நான் தளர்வான காற்ச் சட்டையும், அரைக்கை சட்டையும் அணிந்திருந்தேன். அடக்கடவுளே, என்று நினைத்துக்கொண்டேன் பட் அணிந்திருக்கும் உடையைப் பார்த்ததும் நான் அணிந்திருக்கும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை.


“எப்படியோ வந்து சேர்ந்துவிட்டீர்கள், சந்தோஷம்,“ என்றான் பட். “உள்ளே வாருங்கள்.“


ஃபிரானும் நானும் காரைவிட்டு இறங்கினோம். “ஹே பட்.“ என்றேன். மயில் ஒரு ஓரமாக நின்று, அதன் கடுகடுப்பான பார்வையுடன் தலையை அப்படியும் இப்படியுமாக திருப்பி நிலைமையை கண்காணித்துக் கொண்டிருந்தது. அதற்கும் எங்களுக்கும் போதிய இடைவெளி இருக்குமாறு கவனமாக பார்த்துக் கொண்டோம்.


“இடத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்ததா?“ என்று என்னிடம் பட் கேட்டான். அவன் இதுவரை ஃபிரானின் பக்கமே பார்வையைத் திருப்பாமல் இருப்பதை உணர்ந்தேன். அறிமுகம் செய்யப்படுவதற்காக காத்திருக்கிறான்.


“வரைபடம் தெளிவாக இருந்தது,“ என்றேன். “ஹே பட்,இது ஃபிரான். ஃபிரான் இவன் பட். உன்னைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறாள், பட்.“


அவன் உரக்கச் சிரித்தான். அவர்கள் கைகுலுக்கிக் கொண்டனர். ஃபிரான் பட்டைவிட உயரமாக இருந்தாள். பட் அவளை தலையை உயர்த்திப் பார்க்க வேண்டியிருந்தது.


“உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்,“ என்றாள் ஃபிரான். அவன் கைப்பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டாள். “பட் அப்படி, பட் இப்படி என்று. உங்கள் ஒருவரைப் பற்றி மட்டும்தான் இவர் பேசுவார். அதனால் உங்களை ஏற்கனவே தெரிந்திருப்பதைப் போல எனக்கு இருக்கிறது.“ அவள் பார்வை மயிலின் மீதே இருந்தது. அது நகர்ந்து தாழ்வாரத்துககு அருகில் சென்று விட்டிருந்தது.


“இவனல்லவோ என் நண்பன்,“ என்றான் பட். “என்னைப் பற்றிப் பேசித்தானே ஆகவேண்டும் இவன்,“ என்று சிரிப்புடன் என் கை மீது லேசாகக் குத்தினான்.


ஃபிரான் அவள் கொண்டு வந்திருந்த ரொட்டியை என்ன செய்வதென்று தெரியாமல் கையிலேயே வைத்திருந்தாள். பட்டிடம் கொடுத்தாள். “உங்களுக்காக ஒன்று கொண்டு வந்திருக்கிறோம்.“


பட் ரொட்டியை வாங்கிக்கொண்டான். அவன் வாழ்க்கையில் முதல்முறையாகப் பார்க்கும் ரொட்டியைப்போல அதை திருப்பித் திருப்பிப் பார்த்தான். “மிகவும் நன்றி,“ என்று ரொட்டியை நாசிக்கருகே வைத்து முகர்ந்தான்.


“ஃபிரான் அவளே தயாரித்த ரொட்டி,“ என்றேன்.


பட் தலையசைத்து, “வாருங்கள், உள்ளே சென்று மனைவி, அம்மாவை சந்திப்போம்.“ என்றான்.


அவன் ஓலாவைப் பற்றித்தான் சொல்கிறான். அங்கே இருக்கும் ஒரே தாய்,ஓலாதான். அவன் சிறுவனாக இருந்தபோதே அவனுடைய அம்மா இறந்துவிட்டதாகவும்,அவனுடைய அப்பா ஓடிப்போய்விட்டதாகவும் சொல்லியிருக்கிறான்.


அந்த மயில் எங்களுக்கு முன்னால் அவசரமாக ஓடி தாழ்வாரத்தின் மேல் தாவியது. பட் வீட்டுக்கதவை திறக்க ஃபிரானின் காலை உரசிக்கொண்டு வீட்டுக்குள் நுழைய முயன்றது.


ஃபிரான்,“ஓ“ என்று கத்தினாள்.


“ஜோயி,காட்டாமிட்,“ என்று பட் அந்தப் பறவையின் தலையில் அடித்தான். மயில் சற்றுப் பின்வாங்கிக்கொண்டு உடம்பை உதறிக்கொண்டது, அது குலுக்கிக்கொள்கையில் அதன் செழிப்பான தோகையின் இறகுகள் சலசலத்தன. அதை உதைப்பது போல பட் காலை உயர்த்த, மயில் இன்னும் சற்று பின்வாங்கியது.


பட் கதவை எங்களுக்காக ஜாக்கிரதையாகத் திறந்தான். “இவள் இந்தத் தொல்லையை வீட்டுக்குள் சேர்த்து விடுகிறாள். அது உள்ளே வந்ததுமே மேசையில் ஏறி இருப்பதையெல்லாம் சாப்பிடப் பார்க்கிறது, கட்டிலில் ஏறிக்கொண்டு தூங்குகிறது,“


ஃபிரான் உள்ளே நுழைவதற்கு முன் நின்று, வீட்டின் முன் விளைந்திருந்த சோளப்பயிர்களைத் திரும்பிப் பார்த்து, “அழகான இடத்தில் வசிக்கிறீர்கள்,“ என்றாள். பட் இன்னமும் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தான். “இல்லையா ஜேக்?“


“நிச்சயமாக,“ என்றேன். அவள் அப்படிச் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.


பட் இன்னமும் கதவைப் பிடித்துக்கொண்டுதான் நின்றிருந்தான். மயிலை நோக்கி விரட்டுவதைப் போல பாவனை செய்துவிட்டு, ”இதைப் போன்ற ஒரு இடத்தில் அப்படியே மயங்கி சும்மா இருந்துவிட முடியாது. உங்களுக்கு வேலை வைத்துக்கொண்டே இருக்கும். கொஞ்சநேரம் கூட சோம்பி இருக்க முடியாது,“ என்றான். “சரி உள்ளே செல்லுங்கள் நண்பர்களே.“


“ஏய் பட், அங்கே இருப்பது என்ன செடி?“


“அதெல்லாம் தக்காளி,“ என்றான் பட்.


“சரியான விவசாயிதான் நீங்கள்,“ என்று ஃபிரான் தலையை ஆட்டிக்கொண்டாள்.


பட் வாய்விட்டு சிரித்தான். உள்ளே சென்றோம். குள்ளமாக, குண்டாக இருந்த அந்தப்பெண் எங்களுக்காக வீட்டுக் கூடத்தில் காத்திருந்தாள். தலைமுடியை உச்சியில் கொண்டையாக முடிந்திருந்தாள். ஏப்ரனின் கையை மேலே சுருட்டி விட்டிருந்ததாள். கன்னங்கள் செக்கச்செவேலென்று சிவந்திருந்தன. அவளை முதலில் பார்ப்பதற்கு மூச்சுத்திணறலில் அவஸ்த்தைப் படுபவளைப் போலத் தெரிந்தது. என்னை ஒருமுறை தலைமுதல் கால்வரை பார்த்துவிட்டு ஃபிரானை நோக்கி பார்வையைத் திரும்பினாள். பார்வையில் விரோதம் இல்லை. வெறும் பார்வை. ஃபிரானை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவள் முகம் மேலும் சிவந்தது.


“ஓலா, இது ஃபிரான். இது என் நண்பன் ஜேக். உனக்கு ஜேக் பற்றி எல்லாம் தெரியும்,சொல்லியிருக்கிறேன். நண்பர்களே, இது ஓலா.“ அவன் ஓலாவிடம் ரொட்டியைக் கொடுத்தான்.


“என்ன இது?“ என்றாள். “ஓ, வீட்டிலேயே தயாரித்த ரொட்டி. மிகவும் நன்றி. எங்கு வேண்டுமானாலும் உட்காருங்கள். சௌகரியமாக இருங்கள். பட், அவர்கள் அருந்துவதற்கு என்ன வேண்டுமென்று கேளுங்களேன். எனக்கு அடுப்பில் கொஞ்சம் வேலை இருக்கிறது.“ ஓலா ரொட்டியோடு சமையலைறைக்குச் சென்றாள்.


“உட்காருங்கள்,“ என்றான் பட். ஃபிரானும் நானும் சோபாவில் அமர்ந்தோம். என் சிகரெட்டுகளை எடுத்தேன். “ஆஷ்ட்ரே இங்கே இருக்கிறது,“ என்றான் பட். தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் வைத்திருந்த ஏதோவொரு கனமான பொருளை எடுத்து வந்தான். “இதோ,“ என்று என்னெதிரே காபி மேசையின் மீது அதை வைத்தான். அது கண்ணாடியில் அன்னப்பறவை போல செய்யப்பட்ட சாம்பல் குடுவை. சிகரெட்டைப் பற்றவைத்து தீக்குச்சியை அந்த அன்னத்தின் திறந்திருந்த முதுகுக்குள் போட்டேன். அன்னத்திடமிருந்து மெல்லிய புகைச்சுருள் எழும்பிவருவதை பார்த்துக் கொண்டிருந்தேன்.


ஓடிக்கொண்டிருந்த வண்ணத் தொலைக்காட்சியை ஒரு நிமிடம் பார்த்தோம். திரையில் ரேஸ்கார்கள் பந்தயத் தடத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன. வர்ணனையாளர் மந்தமான குரலில் பேசிக்கொண்டிருந்தார். விரைவில் வரப்போகும் பரபரப்புக்காக இப்போது தன்னை அடக்கிக் கொண்டிருப்பதைப் போலிருந்தது. “அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வருவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்,“ என்றார் வர்ணனையாளர்.


“நீ இதைப் பார்க்கப் போகிறாயா?“ என்றான் பட். அவன் இன்னமும் நின்றுகொண்டே இருந்தான்.


’’எனக்கு இதில் ஆர்வமில்லை,” என்றேன். எனக்கு உண்மையில் ஆர்வம் இல்லைதான். ஃபிரான் தோளைக் குலுக்கினாள். இது இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்று சொல்வதைப்போலிருந்ததது. அவளைப் பொறுத்தவரை ஒரு நாள் பாழாகிவிட்டது.


“இன்னும் இருபது சுற்றுகக்கள் பாக்கியிருக்கின்றன.“ என்றான் பட்.


“இப்போது போட்டி மும்மரமாகியிருக்கிறது. கொஞ்ச நேரத்துககு முன்பு பெரிய விபத்து. ஆறு கார்கள் ஒன்றோடென்று மோதி களேபரமாகிவிட்டது. சில ஓட்டுநர்களுக்கு நல்ல அடி. எந்தளவுக்கு பலத்த காயம் என்று இவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.“


“அதை விடு,“ என்றேன். “போட்டியைப் பார்ப்போம்.“


“இந்த அசிங்கம் பிடித்த கார்களில் ஒன்று இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்குபோதே வெடித்துச் சிதறினால் நன்றாக இருக்கும்,“ என்றாள் ஃபிரான். “இல்லாவிட்டால் ஏதாவது ஒரு கார் கூட்டத்துக்குள் புகுந்து அங்கே ஹாட் டாக்ஸ் விற்றுக் கொண்டிருப்பவன் மீது மோதி நசுக்கவேண்டும்.“ அவள் முடிக்கற்றை ஒன்றை விரல்களுக்டையில் சுழற்றிக்கொண்டு தொலைக்காட்சித் திரையை வெறித்தபடியே சொன்னாள்.


அவள் ஏதாவது கிண்டல் செய்கிறாளா என்பதுபோல பட் அவளைப் பார்ததான். “அந்த விபத்து….. அய்யோ, பயங்கரம். ஒரு கார் மீது இன்னொரு கார், அதன் மீது பின்னால் வந்த கார் என்று ஒன்றோடொன்று மோதி, அந்த இடம் முழுக்க கார்களின் உடைந்த பாகங்களும் மனிதர்களும் சிதறியிருந்தததைப் பார்க்கும் போது………….. சரி,என்ன சாப்பிடுகிறீர்கள்? எங்களிடம் ஏல் (மாவடி) இருக்கிறது. ஒரு பாட்டில் ‘ஓல்டு க்ரோ‘ இருக்கிறது.”


“நீ என்ன குடிக்கப்போகிறாய்?“ என்று பட்டிடம் கேட்டேன்.


“ஏல்“ என்றான். “நன்றாக, குளிர்ச்சியாக இருக்கிறது.“


“நானும் ஏல் அருந்துகிறேன்.“ என்றேன்.


“நான் அந்த ‘ஓல்டு க்ரோ‘ கொஞ்சம் தண்ணீர் கலந்து எடுத்துக் கொள்கிறேன்,“ என்றாள் ஃபிரான்.


“கொஞ்சம் பெரிய கோப்பை வேண்டும். ஐஸ் கட்டிகளோடு. நன்றி, பட்“.


“சரி,“ என்றான் பட். தொலைக்காட்சி மீது இன்னொரு முறை பார்வையை ஓட்டிவிட்டு சமையலறைக்கு நகர்ந்தான்.


------------------------------------------------------------


ஃபிரான் என்னைச் சீண்டி, தொலைக்காட்சிப்பெட்டி இருந்த திசையை நோக்கி சாடை காட்டினாள். ‘’அதன் மேலே இருப்பதைப் பாருங்கள்,“ என்று கிசுகிசுத்தாள். “பார்த்தீர்களா?“ அவள் பார்க்கும் இடம் நோக்கி பார்வையை செலுத்தினேன். ஒரு மெல்லிய சிவப்பு பூச்சாடியில் தோட்டத்தில் மலர்ந்த டெய்ஸி பூக்களை செருகி வைத்திருந்தார்கள். பூச்சாடிக்குப் பக்கத்தில் ஓர் அலங்கார விரிப்பின் மேல் பிளாஸ்டர் – ஆஃப் – பாரிஸில் செய்யப்பட்ட ஒரு போலிப் பல்செட் ஒன்று அமர்ந்திருந்தது. மிகவும் அவலட்சணமான, உருக்கோணலான பல்வரிசை வார்ப்பு. அந்த அசிங்கமான பல்வரிசைக்கு உதடுகள் இல்லை. தாடையும் இல்லை. வெறும் பிளாஸ்டர் வார்ப்புப் பற்களுக்கிடையில் கனமான மஞ்சள் ஈறு போல ஏதோவொன்று அடைத்திருந்தது.


இந்த நேரத்தில் ஓலா ஒரு பாத்திரத்தில் வறுத்த கொட்டைகளும், ஒரு பாட்டில் ரூட் பியரும் எடுத்துக்கொண்டு வந்தாள். இப்போது ஏப்ரனை கழற்றிவிட்டிருந்தாள். வறுத்த முந்திரிப்பருப்புகளையும், பியரையும் அந்த அன்னத்துக்குப் பக்கத்தில் மேசை மீது வைத்தாள். “எடுத்துக்கொள்ளுங்கள். பட் பானங்களைக் கொண்டு வருகிறார்.“ இதைச் சொல்லும்போது ஓலாவின் முகம் மீண்டும் சிவந்தது. ஒருபழைய மூங்கில் ஆடும் நாற்காலியில் உட்கார்ந்து லேசாக முன்னும்பின்னும் ரூட் பியரை அருந்தியபடியே தொலைக்காட்சியை பார்க்கத் தொடங்கினாள். பட் ஒரு சின்ன மரத்தட்டில் ஃபிரானுக்காக ஒரு கிளாஸில் விஸ்கியும், தண்ணீர் பாட்டிலும் எனக்காக ஒரு பாட்டில் ஏலும் எடுத்து வந்தான். அவனுக்காகத் தனியாக ஒரு பாட்டில் ஏல் வைத்திருந்தான்.


“உனக்கு ஒரு கிளாஸ் வேண்டுமா?“ என்று என்னிடம் கேட்டான்.


நான் தலையசைத்தேன். அவன் என் கால்முட்டியில் தட்டிவிட்டு, ஃபிரான் பக்கம் திரும்பினான்.


அவள் பட்டிடமிருந்து கிளாஸை வாங்கிக்கொண்டு, ’‘நன்றி’‘ என்றாள். அவள் பார்வை மீண்டும் அந்தப் பற்களுக்குச் சென்றது. அவள் பார்ப்பதை பட் கவனித்தான். பந்தயத் தடத்தில் கார்கள் கிறீச்சிட்டன. ஏலை அருந்தியபடியே கவனத்தை தொலைக்காட்சிக்குத் திருப்பினேன். இநதப் பற்களைப் பற்றிய சிந்தனையை ஒதுக்க முயன்றபோது, பட் ஃபிரானிடம் “ஒலாவின் பற்கள் சீரமைக்கப்படுவதற்கு முன் இப்படித்தான் இருந்தன.“ என்றான். “எனக்கு அது பழகிவிட்டது. அங்கே அதை காட்சிப்பொருள் போல வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இவள் எதற்காக அதை அங்கே வைத்திருக்கிறாளோ தெரியவில்லை. “அவன் ஓலாவைத் திரும்பிப் பார்த்தான். பின் என்னைப் பார்த்து கண் சிமிட்டினான். அவனது ‘லேஸி பாய்‘ சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கால் மீது காலைப் போட்டுக் கொண்டான். ஏலை அருந்திக் கொண்டே ஓலாவைப் பார்த்தான்.


ஓலாவுக்கு மீண்டும் முகம் சிவந்தது. கையில் ரூட் பியரை வைத்திருந்தாள். ஒரேயொரு மிடறு அருந்திவிட்டு, “அது அங்கே இருப்பது நான் எந்தளவுக்கு பட்டுக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை எனக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பதற்காக.“ என்றாள்.


“என்ன விஷயம்?“ என்றாள் ஃபிரான். முந்திரிக்கொட்டைகளைத் தேடியெடுத்துக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு ஓலாவை நோக்கினாள். “ஸாரி, நீங்கள் சொன்னதை நான் கவனிக்கவில்லை,“ அவள் என்ன சொல்லப்போகிறாள் என்ற எதிர்பார்ப்போடு ஃபிரான் ஓலாவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.


ஓலாவின் முகம் மீண்டும் சிவந்தது. “நான் நிறைய விஷயங்களுக்கு நன்றி சொல்லவேண்டியவளாக இருக்கிறேன்.,” என்றாள். “நான் நன்றி சொல்லவேண்டியவற்றுள் இது ஒன்று. நான் எந்தளவுக்கு பட்டுக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என்று எனக்கு எப்போதும் நினைவூட்டிக்கொண்டிருப்பதற்காகவே இதை அங்கே வைத்திருக்கிறேன்.” ருட்பியரை இன்னொரு மிடறு அருந்திவிட்டு, பாட்டிலை கீழே வைத்தாள். “உங்களுக்கு மிக அழகான பற்கள், ஃபிரான். முதலிலேயே கவனித்தேன். ஆனால் எனக்குச் சின்னவயதில் பற்கள் வளரும்போதே கோணல்மாணலாக வளர்ந்து விட்டன.“ அவளுடைய முன்பற்களை விரல் நகத்தால் சுண்டினாள். “எங்கள் வீட்டில் அவற்றை சீரமைப்பதற்கான வசதி இல்லை. அந்தப் பல்வரிசை அப்படியே இருந்தது. என் முதல் கணவனுக்கு என் தோற்றத்தைப் பற்றி அக்கறையே இல்லை. என்னைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது! அடுத்த வேளை குடிப்பதற்கு கிடைக்குமா என்பதுதான் அவருக்கு ஒரே கவலை. அவருக்கு அலுவலகத்தில் ஒரெயொரு நண்பன்தான். அது பாட்டில்,“ அவள் தலையை ஆட்டிக்கொண்டாள். “அப்புறம்தான் பட் வந்தார். அந்த நரகத்திலிருந்து என்னை விடுவித்து விட்டார். நாங்கள் சேர்ந்து வாழ ஆரம்பித்ததும், பட் முதலில் சொன்னதே ’இந்தப் பல்வரிசையை சீரமைக்க வேண்டும்’ என்பதுதான். நானும் பட்டும் பற்கள் சீரமைப்பாளரிடம் இரண்டு முறை சென்று அந்த வார்ப்பை செய்துகொண்டேன். அதற்கு முன் பற்களுக்கு இடுக்கி அணிந்திருந்தேன்.”


ஓலாவின் முகத்திலிருந்த சிவப்பு குறையாமலிருந்தது. தொலைக்காட்சியை சில கணங்கள் கவனித்தாள். ரூட் பியரை அருந்தினாள். மேலும் எதுவும் சொல்வதற்கு இல்லாதது போல் காணப்பட்டாள்.


“அந்த பற்கள் சீரமைப்பாளர் நிச்சயம் ஒரு மந்திரவாதியாகத்தான் இருக்கவேண்டும்,“ என்றாள் ஃபிரான். தொலைக்காட்சிப் பெட்டியின் மீது வைக்கப்பட்டிருந்த பயங்கரப் பற்களை மீண்டும் ஒரு முறை பார்த்துக் கொண்டாள்.


“அவர் அற்புதமானவர்,” என்றாள் ஓலா. நாற்காலியில் அமர்ந்திருந்தவள் திரும்பி, “பார்த்தீர்களா?“ என்று வாயைத் திறந்து பல்வரிசையைக் காட்டினாள். இப்போது அவளிடம் கூச்சம் இல்லை.


பட் எழுந்து தொலைக்காட்சிப் பெட்டியின் மேலிருந்த அந்தப் பொய்ப்பல்செட்டை எடுத்தாள். ஓலாவிடம் வந்து அவள் கன்னத்திற்கு பக்கத்தில் வைத்தான். “சிகிச்சைக்கு முன், சிகிச்சைக்குப் பின்,“ என்றான்.


ஓலா அவனிடம் சென்று அந்த வார்ப்பை வாங்கினாள். “உங்களுக்கு ஒன்று தெரியுமா? அந்த சீரமைப்பாளர் இதை அவரே வைத்துக் கொள்ள விரும்பினார்.“ அவள் அதை மடிமீது வைத்துக்கொண்டு பேசினாள். “நான் முடியவே முடியாது என்றேன். இவை என்னுடைய பற்கள்“ என்று கூறினேன். அதனால் இந்த வார்ப்பை அவர் படம் மட்டும் எடுத்து வைத்துக் கொண்டார். அவர் இநதப் படத்தை ஒரு மருத்துவ இதழில் வெளியிடப்போவதாகச் சொன்னார்.“


“அந்த மருத்துவ இதழ் எப்படிப்பட்டதாக இருக்குமென்று நினைத்துப் பாருங்கள். இந்த மாதிரியான படங்களை வெளியிடும் இதழை யார் வாங்கிப் பார்க்கமுடியும், எனக்குத் தெரியவில்லை,“ என்றான். எல்லோரும் சிரித்தோம்.


“பல் இடுக்கிகளை எடுத்துவிட்ட பிறகும், நான் சிரிக்கும்போது கையால் வாயை மூடிக்கொண்டிருந்தேன். இப்படி,“ என்றாள். “சில நேரங்களில் இன்னும் கூட இப்படி செய்து கொண்டிருக்கிறேன். பழக்கமாகிவிட்டது. ஒரு நாள் பட் சொன்னார், இனி இப்படி வாயை மூடிக்கொள்வதை நீ நிறுத்தி விடலாம். இவ்வளவு அழகான பல்வரிசையை மறைக்க வேண்டியதில்லை. இப்போது உன் பற்கள் அழகாக இருக்கினறன.“ ஓலா பட்டை நோக்கினாள். பட் அவளைப் பார்த்து கண் இமைத்தான். அவள் புன்னகைத்து பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.


ஃபிரான் தனது கிளாஸிலிருந்து கொஞ்சம் பருகினாள். நான் எனது ஏலை சற்று அருந்தினேன். எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. ஃபிரானும் எதுவும் பேசமுடியாமல் இருந்தாள். ஆனால் வீட்டுக்குத் திரும்பியதும் என்னிடம் இதைப்பற்றி நிச்சயமாக நிறையவே பேசுவாள் என்று எனக்குத் தெரிந்தது.


“ஒலா, ஒருமுறை உங்கள் வீட்டுக்கு நான் போன் செய்தேன். நீங்கள்தான் எடுத்தீர்கள். ஆனால் நான் போனை வைத்துவிட்டேன். ஏன் பேசாமல் வைத்துவிட்டேனென்று எனக்கே தெரியவில்லை.“ என்றேன். ஏலை சற்று பருகினேன். எதற்காக இந்த விஷயத்தை இப்போது எடுத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை.


“எனக்கு நினைவில்லை,“ என்றாள் ஓலா. “அது எப்போது?“


“கொஞ்சநாட்கள் முன்பு,“


“எனக்கு நினைவில்லை.“ என்று தலையை ஆட்டினாள். மடியில் வைத்திருந்த வார்ப்பு பல்லை வருடினாள். தொலைக்காட்சியில் கார் பந்தயத்தைச் சில நொடிகள் பார்த்தாள். பின் நாற்காலியில் முன்னும் பின்னுமாக ஆடத்தொடங்கினாள்.


ஃபிரான் என் பக்கம் பார்வையைத் திருப்பினாள். கீழுதட்டை மடித்து உள்ளிழுத்துக் கொண்டாள். எதுவும் பேசவில்லை.


“சரி,அப்புறம் புதிதாக என்ன செய்தி?“ என்றான் பட்.


“இன்னும் கொஞ்சம் முந்திரி, கடலை எடுத்துக்கொள்ளுங்கள்,“ என்றாள் ஓலா. “உணவு இன்னும் சற்று நேரத்தில் தயாராகிவிடும்.“


இப்போது வீட்டின் உள்ளறையிலிருந்து அழுகுரல் கேட்டது.


“அவன்தான்.“ ஓலா பட்டிடம் சொல்லிவிட்டு முகத்தை சுளித்தாள்.


“பெரியவர் விழித்துவிட்டார்.“ என்றான் பட். நாற்காலியில் நன்றாக சாய்ந்துகொண்டு மீதமிருக்கும் மூன்று நான்கு சுற்று பந்தயத்தை ஒலியைக் குறைத்துவிட்டு பார்க்கத் தொடங்கினான்.


இன்னும் இரண்டு மூன்று முறை குழந்தையின் சிணுங்கல் உள்ளறையிலிருந்து கேட்டது.


“ஏன் இந்த நேரத்தில் எழுந்து விட்டானென்று தெரியவில்லை.“ என்றாள் ஓலா. நாற்காலியிலிருந்து எழுந்தாள். “நாம் சாப்பிட உட்காரும் நேரத்தில். எல்லாம் தயாராக இருக்கிறது. உள்ளே சென்று குழம்பை மட்டும் எடுத்து வரவேண்டும். அதற்குள் அவனை முதலில் கவனித்துவிட்டு வந்து விடுகிறேன். நீங்கள் எல்லோரும் உணவு மேசையில் அமர்ந்து விடலாமே? ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன்.”


“நான் குழந்தையைப் பார்க்க வேண்டும்,“ என்றாள் ஃபிரான்.


ஓலா இன்னமும் அந்த பல்செட்டை கையில் வைத்திருந்தாள். தொலைக்காட்சிப் பெட்டியிடம் சென்று அதன் மீது வைத்தாள். ‘’இப்போது தூக்கி வந்தால் அழுவான்.“ என்றாள். “புதியவர்கள் இன்னும் அவனுக்குப் பழகவில்லை. நான் அவனை மீண்டும் தூங்கவைக்கமுடிகிறதாவென்று பார்க்கிறேன். அப்புறம் நீங்கள் வந்து பார்க்கலாம். அவன் தூங்கும்போது.“ அவள் கூடத்தைக் கடந்து ஒரு அறைக் கதவைத்திறந்து கொண்டு உள்ளே சென்றாள். அவள் கதவை மூடியதும் குழுந்தையின் அழுகையும் நின்றது.


**********************************************************


பட் தொலைக்காட்சியை அணைத்தான். சமையலறைக்குள் சென்று உணவு மேசையில் அமர்ந்தோம். பட்டும் நானும் எங்கள் வேலை தொடர்பாக பேசினோம். ஃபிரான் கேட்டுக்கொண்டிருந்தாள். அவ்வப்போது குறுக்கிட்டு ஏதாவது சந்தேகம் கூட கேட்டாள். ஆனால் அவள் பெரிதும் சலிப்புற்றிருக்கிறாள் என்பது தெரிந்தது. குழந்தையைக் காட்டாததால் அவளுக்கு ஒலாவின் மீது எரிச்சல் இருக்கக்கூடும். ஓலாவின் சமையலறைறை சுற்றிப்பார்த்தாள். முடியை கற்றையாக விரல்களுக்கிடையில் சுற்றிக் கொண்டு ஓலாவின் பொருட்களை ஆராய்ந்தாள்.


ஓலா திரும்பி வந்தாள். “அவனுக்கு உடை மாற்றிவிட்டு விளையாடுவதற்கு அவனுடைய ரப்பர் வாத்து பொம்மையை கொடுத்துவிட்டு வந்தருக்கிறேன். இப்போது நம்மை நிம்மதியாக சாப்பிட விடுவானென்றுதான் நினைக்கிறேன். ஆனால் சொல்லமுடியாது.“ இடுப்பிலிருந்த வாணலியின் மூடியை எடுத்தாள். கொதித்துக் கொண்டிருந்த சிவப்புக் குழம்பை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மேசைக்கு எடுத்துவந்தாள். மற்ற பாத்திரங்களின் மூடிகளையும் எடுத்துவிட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள். மேசையில் வேகவைத்த பன்றித்தொடை உணங்கல், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு கூட்டு, லிமா பீன்ஸ், வேகவைத்த சோளக்கதிர், சாலட் கீரைகள். ஃபிரானின் ரொட்டி நடுமையத்தில் பிரதானமாக பன்றிக்கறிக்குப் பக்கத்தில்.


“நாப்பின்களை மறந்து விட்டேன்.“ என்றாள் ஓலா.


“சாப்பிட ஆரம்பிக்கலாம். யாருக்கு என்ன குடிப்பதற்கு வேண்டும்? பட் எந்த சாப்பாடு எனறாலும் கூடவே பால்தான் குடிப்பார்.“


“எனக்கும் பால்” என்றேன்.


ஃபிரான், “எனக்கு தண்ணீர்,“ என்றாள். “நானே எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் எழுந்திருக்க வேண்டாம். உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.“ அவள் இருக்கையிலிருந்து எழுவதற்கு முயன்றாள்.


“இருங்கள். நீங்கள் விருந்தினர். அமைதியாக அமர்ந்திருங்கள். நான் எடுத்து வருகிறேன்.“ என்றாள் ஓலா. மீண்டும் முகம் சிவந்திருந்தாள்.


மடியின் மீது கைகளை பதித்துக்கொண்டு காத்திருந்தோம். நான் அந்த பொய்ப்பற்களை பற்றி யோசித்தேன். நாப்பின்கள், பட்டுக்கும் எனக்கும் பெரிய கண்ணாடி டம்ளர்களில் பால், ஃபிரானுக்கு ஐஸ்வாட்டர் சகிதம் ஓலா வந்தாள். ஃபிரான், “தேங்க்ஸ்“, என்றாள்.


“யு ஆர் வெல்கம்.“ என்றபடி அவளும் உட்கார்ந்தாள். பட் தொண்டையை கனைத்துக்கொண்டான். தலையைக் குனிந்து இறைவனுக்கு நன்றி நவின்றான். மிக மெல்லிய குரலில் பிரார்த்தனை செய்த அவன் வார்த்தைகளை அறிந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் தின்று தீர்க்கப் போகிற உணவை அளித்ததற்காக முழுமுதற் சக்தியிடம் நன்றி சொல்கிறான் போல.


அவன் முடித்ததும், ஓலா, “ஆமென்“ என்றாள்.


பன்றிக் கறி இருந்த தட்டை என் பக்கம் நகர்த்திவிட்டு பட் கொஞ்சம் உருளைக் கிழங்கு கூட்டை எடுத்து தனக்கு வைத்துக் கொண்டான். சாப்பிடத் தொடங்கினோம். நானோ,பட்டோ அவ்வப்போது, “பிரமாதமான ஹாம் (பன்றிக் கறி),” அல்லது “நான் சாப்பிட்டதிலேயே அற்புதமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு இதுதான்,“ என்றதைத்தவிர யாரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.


“இந்த ரொட்டிதான் எல்லாவறையும் விட ரொம்ப ஸ்பெஷல்,“ என்றாள் ஓலா.


ஃபிரான் சற்று சகஜமாகி, “ஓலா, கொஞ்சம் சாலட் எடுத்துக்கொள்கிறேன், ப்ளீஸ்.“ என்றாள்.


“இதை நிறைய வைத்துக்கொள்.“ என்று பன்றிக்கறி பாத்திரத்தையும், சிவப்புக் குழம்பு கிண்ணத்தையும் பட் என்னிடம் நகர்த்தினான்.


கொஞ்சநேரத்துக்கு ஒருமுறை குழந்தை சத்தம் எழுப்புவது கேட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொருமுறையும் ஓலா தலையைத் திருப்பி கவனிப்பாள். அது வெறுமனே சிணுங்கத்தான் செய்கிறது என்று சமாதானப்படுத்திக்கொண்டு சாப்பிடத்தொடங்குவாள்.


“குழந்தை இன்று சிணுங்கிக்கொண்டே இருக்கிறது.“ என்று பட்டிடம் சொன்னாள்.


“எனக்கு குழந்தையைப் பார்க்க ஆசையாக இருக்கிறது.“ என்றாள் பட்டிடம். “என் சகோதரிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. டென்வரில் இருக்கிறாள். எப்போது டென்வருக்குப் போய் குழந்தையைப் பார்ப்போம் என்று இருக்கிறது. எனக்கு மகள் வந்து விட்டாள், ஆனால் என்னால்தான் இன்னும் பார்க்க முடியவில்லை. “ஃபிரான் ஒரு கணம் நிறுத்தி யோசித்தாள். பின் சாப்பிடத் தொடங்கினாள்.


ஓலா முட்கரண்டியால் பன்றிக்கறியைக் குத்தி வாயில் செலுத்திக்கொண்டு, ”தூங்கிவிடுவான் என்று நினைக்கிறேன்.“ என்றாள்.


“எல்லா பதார்த்தங்களும் அப்படியே இருக்கின்றன. நிறைய சாப்பிடுங்கள் நண்பர்களே,“ என்றான். “ஹாமையும் சர்க்கரை வள்ளிக் கிழங்கையும் இன்னும் வைத்துக் கொள்ளுங்கள்.“


“என்னால் இன்னும் ஒரு வாய்கூட சாப்பிட முடியாது.“ என்று ஃபிரான் முட்கரண்டியை தட்டில் வைத்தாள். “பிரமாதமான உணவு. ஆனால் இதற்குமேல் என்னால் சாப்பிடமுடியாது.“


“கொஞ்சம் இடத்தை வயிற்றில் வைத்துக்கொள்ளுங்கள். ஓலா ருபார்ப் மோதகம் செய்திருக்கிறாள்.“ என்றான் பட்.


“அதை மட்டும் கொஞ்சம் சாப்பிட முடியுமென்று நினைக்கிறேன். நீங்களெல்லாம் சாப்பிடும்போது,“


“நானும்,“ என்றேன். அதை வெறும் நாகரிகத்துக்காதான் சொன்னேன். உண்மையில் அது எனக்கு கொஞ்சம் பிடிக்காது. பதிமூன்று வயதில் ஸ்ட்ராபெரி க்ரீமோடு சேர்த்து அதை சாப்பிட்டதிலிருந்து அந்த வெறுப்பு.


தட்டில் இருந்ததையெல்லாம் காலி செய்தோம். அப்போது அந்த நாசம் பிடித்த மயிலின் கத்தல் மீண்டும் கேட்டது.


அது இப்போது கூரையின் மேல் இருந்தது. மரப்பாவோடுகள் மீது அது குறுக்கும் நெடுக்குமாக நடைபழகும் சத்தம் தலைக்கு மேல் கேட்டது.


பட் தலையை ஆட்டினான். “ஜோயி இன்னும் ஒரு நிமிடத்தில் இங்கே வந்துவிடும் பாரேன். வெகு சீக்கிரத்திலேயே அதற்கு களைப்பு ஏற்பட்டுவிடும். அந்த மரங்களில் ஏதாவது ஒன்றில் ஏறிக்கொண்டு தூங்கிவிடும்.“


அந்தப் பறவை அதன் கொடூரமாமன அகவலை மீண்டும் ஒருமுறை எழுப்பியது. “மே – ஆங் !“ யாரும் எதுவும் பேசவில்லை. சொல்வதற்கு என்ன இருக்கிறது?


“அது உள்ளே வரவேண்டும், பட்,“ என்றாள் ஒலா.


“கூடவே கூடாது.“ என்றான் பட். “விருந்தாளிகள் வந்திருப்பது உன் கண்ணுக்குத் தெரியவில்லையா? இதைப்போல ஒரு அசிங்கமான பறவை வீட்டுக்குள் உலாத்துவதை இவர்கள் விரும்புவார்களா? அந்த அழுக்குப் பறவையும் உன் பழைய பல்செட்டும்! எல்லோரும் என்ன நினைப்பார்கள்?“ அவன் தலையை ஆட்டினான், உரக்க சிரித்தான். நாங்களும் சிரித்தோம். எங்களோடு சேர்ந்து ஃபிரானும் சிரித்தாள்.


“அது ஒன்றும் அழுக்கு அல்ல, பட்,“ என்றாள் ஓலா. “உங்களுக்கு என்ன ஆயிற்று? உங்களுக்கு ஜோயியை பிடிக்கும்தானே? எப்போதிலிருந்து அதை அழுக்கு என்று சொல்லத் தொடங்கியிருக்கிறீர்கள்? “


“நம் கம்பளி விரிப்பின் மீது அது எப்போது கழிந்து வைத்ததோ, அப்போதிலிருந்து,“ என்றான். ஃபிரானிடம் திரும்பி, “சாப்பிடும்போது அவச்சொல்லுக்காக மன்னியுங்கள்,“ என்றான். “ஆனால் பார்த்துக்கொண்டேயிரு, என்றாவது ஒருநாள் இந்த அசட்டு பறவையின் கழுத்தைத் திருகி உடைக்கப் போகிறேன். அப்படி சாகடிப்பதற்குக்கூட தகுதியற்ற பறவைதான் அது, இல்லையா ஓலா? சில நேரங்களில் நடுராத்திரியில் நான் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும்போது இப்படி மரணஓலம் எழுப்பி திடுக்கிட்டு எழுந்திருக்க வைத்துவிடுகிறது. ஒரு காசுக்கு பிரயோசனமில்லாத வஸ்து இது, இல்லையா ஓலா?“


பட்டின் அபத்தப் பேச்சைக் கேட்டு ஓலா தலையை குலுக்கிக் கொண்டாள், லிமா பீன்ஸ் கொஞ்சம் எடுத்து தட்டில் போட்டுக்கொண்டாள்.


“அது சரி, இந்த மயில் எப்படி உங்களுக்கு கிடைத்தது?“ ஃபிரான் கேட்டாள்.


தட்டிலிருந்து ஓலா தலையை உயர்த்தினாள். “மயில் ஒன்றை வளர்க்கவேண்டும் என்று எனக்கு எப்போதுமே ஆசை இருந்தது. சின்னப் பெண்ணாக இருக்கும்போது பத்திரிக்கையில் வந்திருந்த மயிலின் படம் ஒன்றை பார்த்ததிலிருந்து அந்த ஆசை. நான் பார்த்ததிலேயே மிக அழகான உயிரினம் அதுதான் என்று நினைத்தேன். அந்தப் படத்தை வெட்டி என் படுக்கைக்குப் பக்கத்தில் ஒட்டி வைத்தேன். பல வருடங்கள் அந்தப்படம் இருந்தது. அப்புறம் பட்டும் நானும் இந்த இடத்துக்கு வந்தபோது அந்த ஆசை மறுபடியும் தலைதூக்கியது, ’பட், எனக்கு ஒரு மயில் வேண்டும்’ என்றேன். அதைக் கேட்டதும் பட்டுக்கு ஒரே சிரிப்பு.”


“அப்புறம் நான் தேட ஆரம்பித்தேன்,“ என்றான் பட். “பக்கத்து கவுன்டியில் ஒரு பையன் மயில்களை வளர்த்து வருகிறான் என்று கேள்விப்பட்டு போய்ப்பார்த்தேன். அவன் மயில்களை ‘சொர்க்கத்தின் பறவைகள்’ என்றான். அந்த சொர்க்கத்தின் பறவைக்காக நாங்கள் நூறு டாலர்கள் கொடுத்தோம்.“ அவன் நெற்றியில் அடித்துக்கொண்டான். “கடவுளே, இப்படி ஒரு ஆடம்பர ரசனை கொண்ட ஒரு பெண் எனக்கு வந்து சேர்ந்து விட்டாளே!“ அவன் ஓலாவைப் பார்த்து சிரித்தான்.


‘’பட், இதெல்லாம் உண்மையல்லவென்று உனக்கே தெரியும். எல்லாவற்றையும் விட ஜோயி ஒரு நல்ல காவல்காரன்.“ என்றாள். ஃபிரானிடம் திரும்பி, “ஜோயி இருப்பதால் எங்களுக்கு காவல் நாயே தேவைப்படவில்லை. லேசான சத்தத்தைக் கூட கேட்டுவிடும்.“


“ஆனால் அது ரொம்பவும் எரிச்சலூட்டிக்கொண்டே இருக்கிறது. என்றாவது ஒருநாள் அதை அத்தனை பெரிய தோகையோடு சேர்த்து பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து குழம்பாக்கிவிடப் போகிறேன்.”


“பட்! போதும், இதுவொன்றும் தமாஷாக இல்லை, “என்றாள் ஓலா. ஆனாலும் சிரித்தாள். அவளது நேர்த்தியான பல்வரிசையை மீண்டும் பார்க்க முடிந்தது.


குழந்தை மீண்டும் அழத்தொடங்கியது. இம்முறை பலமாக. ஓலா நாப்கின்னை எடுத்துவிட்டு மேசையிலிருந்து எழுந்தாள்.


“ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்று வந்துவிடுகிறது. அவனை இங்கே தூக்கிக் கொண்டு வா,“ என்றான் பட்.


“அதற்குத்தான் போகிறேன்.“ என்று ஓலா குழந்தையைத் தூக்கிக்கொண்டு வரச்சென்றாள்.


•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


மயில் மீண்டும் ஓலமிட்டது. என் பின்னங்கழுத்தில் மயிர்கள் குத்திட்டு நின்றதை உணர்ந்தேன். ஃபிரானைப் பார்த்தேன். அவள் நாப்கின்னை எடுத்துவிட்டு, மீண்டும் வைத்துக் கொண்டாள். சமையலறை சன்னலை நோக்கிப் பார்த்தேன். வெளியே இருட்டாக இருந்தது. சன்னல் கண்ணாடிகள் உயர்த்தப்பட்டிருந்தன. சட்டகத்தில் வலை அடிக்கப்பட்டிருந்தது. முன் தாழ்வாரத்திலிருந்து மயிலின் சத்தம் வந்ததாக நினைத்தேன்.


ஃபிரான் கூடத்தை நோக்கி தலையைத் திருப்பி ஓலாவும் குழந்தையும் வருகிறார்களாவென்று பார்த்துக் கொண்டிருந்தாள்.


கொஞ்ச நேரத்தில் ஓலா குழந்தையோடு வந்தாள். குழந்தையைப் பார்த்தேன் மூச்சை உள்ளிழுத்துக் கெண்டேன். ஓலா குழந்தையோடு மேசையில் அமர்ந்தாள். குழந்தையின் கைகளுக்கடியில் பிடித்து, நாங்கள் பார்க்கும்படியாக மடிமீது நிற்கவைத்துக்கொண்டாள். ஃபிரானைப் பார்த்தாள். பின் என்னைப் பார்த்தாள். இப்போது அவள் வெட்கப்படவில்லை. எங்களில் யாராவது ஒருவர் பேசுவதற்காகக் காத்திருந்தாள்.


“ஆ!“ என்றாள் ஃபிரான்.


ஓலா உடனே, “என்ன?“ என்றாள்.


“ஒன்றுமில்லை.“ என்றாள் ஃபிரான். “சன்னலில் ஏதோ தெரிந்ததைப் போலிருந்தது. வௌவால் என்று நினைக்கிறேன்.“


“இங்கே வௌவால்கள் கிடையாது.“ என்றாள் ஓலா.


“இல்லையென்றால் அந்துப்பூச்சியாக இருக்கும்,“ என்றாள் ஃபிரான். “அது எதுவோ, இருக்கட்டும். குழந்தை என்னமாக இருக்கிறது!“


பட் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் ஃபிரான் பக்கம் பார்வையை நகர்த்தினான். நாற்காலியை பின்னால் சாய்த்துக்கொண்டு தலையை ஆட்டினான். மீண்டும் தலையை ஆட்டியபடியே, “பரவாயில்லை, இருக்கட்டும். யாரும் எதற்காகவும் கவலைப்பட வேண்டாம். இவன் தற்போதைக்கு அழகுப்போட்டி எதிலும் ஜெயிக்கப் போவதில்லை. இவன் ஒன்றும் கிளார்க் கேபிள் அல்ல. கொஞ்ச காலம் போகட்டும். அதிர்ஷ்டமிருந்தால் இவனும் அவங்கப்பனைப் போலவே ஆகிவிடுவான்.“


குழந்தை ஓலாவின் மடியில் நின்றுகொண்டு, மேசையைச் சுற்றி உட்கார்ந்திருந்த எங்களைப் பார்த்தது. ஓலா தன் கைகளின் பிடியை எடுத்துவிட்டு முதுகைத் தாங்கிக் கொண்டாள். குழந்தை தனது புஷ்டியான கால்களில் ஆடிக்கொண்டு நின்றது. இதை சொல்லித்தான். ஆகவேண்டும், நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் அவலட்சணமான குழந்தை இதுதான். எந்தளவுக்கு விகாரமெனறால் என்னால் எதுவும் பேசமுடியாத அளவுக்கு. வாயிலிருந்து ஒரு சொல்லும் வரவில்லை, அது நோய்வாய்ப்படிருப்பதாகவோ, உருக்குலைந்ததிருப்பதாகவோ சொல்லவில்லை. அப்படியெல்லாம் இல்லை. வெறும் அவலட்சணம். அவ்வளவுதான். அதற்கு பெரிய சிவந்த முகம் இருந்தது. புடைத்திருக்கும் கண்கள், அகன்ற நெற்றி, அப்புறம் அந்தத் தடித்த, பெரிய உதடுகள். கழுத்தையே காணோம். மூன்று நான்கு மடிப்புகள் அந்த இடத்தில் இருந்தன. அவை ஒன்று திரண்டு இரண்டு காதுகள் வரை உருண்டிருந்தன. வழுக்கைத் தலையிலிருந்தது துருத்திக் கொண்டிருக்கும் காதுகள். கொழுப்புச்சதை மணிக்கட்டுகளிலிருந்தது தொங்கின. கைகளும் விரல்களும் கொழுத்திருந்தன. அசிங்கம் என்று சொல்வதுகூட குறைத்துச் சொல்வதாகவே இருக்கும்.


••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


அந்த விகாரமான குழந்தை சத்தமெழுப்பியபடி அதன் அம்மாவின் மடியில் மேலும் கீழும் குதித்தது. பின் குதிப்பதை நிறுத்தியது. முன்னால் குனிந்து, அதன் தடிமனான கையை நீட்டி ஓலாவின் தட்டைத்தொட முயன்றது.


நான் எத்தனையோ குழந்தைகளைப் பார்த்திருக்கிறேன். என் இளம் வயதில் என்னுடைய அக்காக்கள் இருவருக்கும் மொத்தம் ஆறு குழந்தைகள் இருந்தன. நான் சிறுவனாக இருந்த காலத்திலும் என்னைச் சுற்றிலும் நிறைய குழந்தைகள் இருந்தன. கதைகளிலும் இன்னபிற விஷயங்களிலும் குழந்தைகளை நிறையவே பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தக் குழந்தையைப் போல பார்த்ததேயில்லை. ஃபிரானும் வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள். அவளுக்கும் என்ன சொல்வதென்றே தெதியவில்லை போல.


“குழந்தை புஷ்டியாகத்தான் இருக்கிறது, இல்லையா?“ என்றேன்.


“எதிர்காலத்தில் கால்பந்து விளையாடச் சென்றால் இவனை அடித்துக்கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள். நன்றாக சாப்பிடுகிறான். சாப்பாட்டுக்கு மட்டும் இந்த வீட்டில் குறையே வைப்பதில்லை,“ என்றான் பட்.


அதை உறுதிப்படுத்துவதைப் போல ஓலா முட்கரண்டியால் சர்கரை வள்ளிக்கிழங்கை குத்தியெடுத்து குழந்தையின் வாய்க்கருகே நீட்டினாள். எங்களைப் பொருட்படுத்தாமல், “இவன் என் குழந்தை, இல்லையா?“ என்றாள் அந்த குண்டுப்பாப்பாவிடம்.


குழந்தை முன்னால் குனிந்து வள்ளிக்கிழங்குக்காக வாயைத் திறந்தது. ஓலா முட்கரண்டியால் நேர்த்தியாக ஊட்டினாள். குழந்தை உற்சாகமாக மென்றபடி ஓலாவின் மடியில் முன்னும் பின்னுமாக ஆடியது. தனியாக எடுத்து எதிலோ செருகி வைத்திருப்பதைப் போல துருத்திக் கொண்டிருக்கும் கண்கள்.


“வித்தியாசமான குழந்தை, ஓலா,“ என்றாள் ஃபிரான். குழந்தையின் முகம் கோணியது. திரும்பவும் சிணுங்கத் தொடங்கியது.


“ஜோயியை உள்ளே வரவிடுங்கள்,“ ஓலா பட்டிடம் சொன்னாள். பட் ஆடும் நாற்காலியை நிறுத்தினான். “இவர்களுக்கு ஏதாவது ஆட்சேபம் உண்டா என்று கேட்கவேண்டும்.“ என்றான்.


ஓலா ஃபிரானைப் பார்த்தாள். பின் என்பக்கம் பார்வையைத் திருப்பினாள். அவள் முகம் மீண்டும் சிவந்தது. குழந்தை அவள் மடியில் விடாமல் துள்ளிக்கொண்டிருந்தது. கீழே இறங்க முயன்றது.


“இங்கே நாமெல்லோரும் நண்பர்கள்,“ என்றேன். “நீங்கள் என்னை வேண்டுமானாலும் விரும்புவதைச் செய்யலாம்.“


“வந்திருக்கும் இடத்தில் ஜோயியைப் போன்ற ஒரு ராட்சத பறவை அங்குமிங்கும் அலைவது இவர்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அதை நினைத்துப் பார்த்தாயா, ஓலா?,“


ஓலா எங்களிடம், “உங்களுக்குப் பரவாயில்லையா நண்பர்களே?“ என்று கேட்டாள் “ஜோயி உள்ளே வந்தால்? இந்தப் பறவையால் இன்றிரவு ஒரே பிரச்சனையாக இருக்கிறது. குழந்தையும் கூடத்தான். இவன் தூங்குவதற்கு முன்பு ஜோயியோடு விளைபாடுவது பழக்கமாகிவிட்டது. மயிலும் சரி, இவனும் சரி, அதற்காகத்தான் நிலைகொள்ளாமல் தவிக்கிறார்கள்.”


“இதற்கெல்லாம் எங்களைக் கேட்கவேண்டாம்,“ என்றாள் ஃபிரான். “அது இங்கே வந்தால் எனக்கொரு பிரச்சனையுமில்லை, இவ்வளவு கிட்டத்தில் மயில்களை நான் இதற்குள் பார்த்ததில்லை. அதனால் ஒரு ஆட்சேபணையுமில்லை.“ அவள் என்னை நோக்கினாள். நானும் ஏதாவது சொல்லவேண்டுமென்று நினைக்கிறாள் என்று தெரிந்தது.


“அட, அதற்கென்ன, அதை உள்ளே விடுங்கள்,“ என்றேன். என் கிளாஸை எடுத்து பாலை காலி செய்தேன்.


பட் எழுந்தான். முன் கதவுக்குச் சென்று திறந்தான். முற்றத்து விளக்குகளைப் போட்டான்.


“உங்கள் குழந்தையின் பெயர் என்ன?“ ஃபிரான் கேட்டாள்.


”ஹெரால்ட்,” என்றாள் ஓலா. தட்டிலிருந்து இன்னும் கொஞ்சம் சர்க்கரை வள்ளிக்கிழங்கை எடுத்து குழந்தைக்கு ஊட்டினாள். “இவன் ரொம்பவும் கெட்டிக்காரன். இவனிடம் என்ன சொன்னாலும் புரிந்து கொள்வான். இல்லையா ஹெரால்ட்? உங்களுக்கும் குழந்தை பிறக்கட்டும், அப்போது புரிந்துகொள்வீர்கள் ஃபிரான்.”


ஃபிரான் அவளது உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் பார்த்தாள். முன்கதவு திறப்பதும், பிறகு மூடப்படுவதும் கேட்டது.


‘இவன் கெட்டிக்காரன்தான்,” என்றபடியே பட் சமையலறைக்குள் வந்தான். “ஓலாவின் அப்பா செய்த சாதனையை முறியடிப்பதுதான் இவன் குறிக்கோளாக இருக்கும். மிகவும் சாமர்த்தியசாலி.”


**********************************************************


பட்டுக்குப் பின்னால் கூடத்தில் அந்த மயில் நடை பழகிக்கொண்டிருப்பது தெரிந்தது. முகம் பார்க்கும் கண்ணாடியை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்ப்பதைப்போல அதன் தலையை இருபுறமும் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தது. உடம்பை ஒருமுறை சிலிர்த்து உதறிக்கொள்ள, அது பக்கத்து அறையில் யாரோ சீட்டுக்கட்டுகளைக் குலுக்கிக் கலைத்துப் போடுவதைப்போல சத்தம் எழுப்பியது.


மெதுவாக ஓர் அடி முன்வைத்தது. பின் இன்னோர் அடி.


“குழந்தையை நான் வைத்துக் கொள்ளலாமா?” ஃபிரான் கேட்டாள். ஓலா இதற்கு அனுமதிப்பதே ஃபிரானுக்கு செய்யும் பேருதவியாக இருக்கும் என்பது போலிருந்தது அவள் கேட்ட விதம்.


ஓலா குழந்தையை அவளிடம் மேசையைத் தாண்டிக் கொடுத்தாள்.


ஃபிரான் குழந்தையை மடியில் உட்காரவைக்க முயன்றாள். அது சிணுங்கிக்கொண்டே நெளிந்தது.


”ஹெரால்ட்”, என்றாள் ஃப்ரான்.


ஓலா குழந்தையையும் ஃபிரானையும் புன்னகையுடன் கவனித்தாள். “ஹெரால்டின் தாத்தா பதினாறு வயதாக இருக்கும்போது ஒரு முயற்சியில் ஈடுபட்டார். கலைக்களஞ்சியத்தில் A முதல் Z வரை படித்து முடிப்பதென்று. படித்தும் முடித்தார். அவரது இருபது வயதில் கலைக்களஞ்சியத்தை முழுதாகப் படித்து முடித்துவிட்டார். என் அம்மாவை சந்திப்பதற்கு முன்பாகவே”.


“இப்போது அவர் எங்கே இருக்கிறார்?” என்று கேட்டேன். “என்ன செய்துகொண்டிருக்கிறார்?’’ இப்படிப்பட்ட ஒரு குறிக்கோளோடு அதை நிறைவேற்றியும் காட்டிவிட்ட ஒருவர் அப்புறம் என்னவானார் என்று தெரிந்துகொள்ள விரும்பினேன்.


“அவர் காலமாகிவிட்டார்’’, என்றாள் ஓலா. ஃபிரானிடமிருந்து அவள் பார்வை விலகவில்லை. ஃபிரான் இப்போது குழந்தையை மடியில் படுக்கவைத்துவிட்டிருந்தாள். அதன் கழுத்து மடிப்பை வருடிக்கொண்டே குழந்தை மொழியில் பேசத் தொடங்கினாள்.


“அவர் காட்டுவேலை செய்துகொண்டிருந்தார். மரம் வெட்டுபவர்கள் வெட்டிக்கொண்டிருந்த மரம் அவர் மீது விழுந்துவிட்டது,” என்றான் பட்.


“அம்மாவுக்குக் கொஞ்சம் காப்பீட்டுத் தொகை கிடைத்தது. ஆனால் எல்லாம் செலவாகிவிட்டது. ஒவ்வொரு மாதமும் பட் கொஞ்சம் பணம் அனுப்புகிறார்”.


“ஒன்றும் அதிகம் இல்லை. எங்களுக்கே பெரிய வருமானம் ஒன்றும் கிடையாது. ஆனால் அவர் ஓலாவின் அம்மா இல்லையா?” என்றான் பட்.


இதற்குள் மயில் கொஞ்சம் தைரியம் பெற்று, அசைந்தாடியபடி சமையலறையை நோக்கி சற்று வெட்டியிழுத்துக்கொண்டு வந்தது. தலை மட்டும் விறைப்பாக, ஒரு கோணத்தில் சாய்ந்திருக்க, சிவந்த கண்கள் எங்கள் மீது குத்திட்டிருந்தன. தலையின் உச்சியில் சிலிர்த்திருந்த கொண்டையில் சிறு கிளைகளாக இறகுகள். எந்நேரத்திலும் எழுந்து விரிந்துவிடும் போன்ற அடர்த்தியான தோகையை இழுத்துக்கொண்டு மேசைக்கு சில அடிகள் முன் நின்று எங்களைப் பார்த்தது.


‘’இவற்றை சொர்க்கத்தின் பறவைகள் என்று சொல்வது மிகையல்ல,” என்றான் பட்.


ஃபிரான் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. குழந்தையின் மீதே கண்ணும் கருத்துமாக இருந்தாள். குழந்தையின் உள்ளங்கையில் ‘பேட்டி-கேக்’ – ‘பேட்டி–கேக்’ என்று அவள் செல்லமாகத் தட்டிக்கொண்டிருந்ததை அது ரசிப்பது போலிருந்தது. சிணுங்கலை நிறுத்திவிட்டிருந்தது. குழந்தையைத் தூக்கி முகத்தருகே கொண்டுவந்து, அதன் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.


“நான் சொன்னதை யாரிடமும் சொல்லிவிடாதே,” என்று எல்லோரும் கேட்கும்படிச் சொன்னாள்.


குழந்தை அதன் புடைத்த விழிகளால் அவளை உற்றுப் பார்த்தது. கையை நீட்டி ஃபிரானின் பொன்னிறக்கூந்தலைக் கற்றையாகப் பற்றியது. மயில் மேசைக்கு நெருக்கமாக வந்தது. யாரும் எதுவும் பேசவில்லை. எல்லோரும் அசையாமல் அமர்ந்திருந்தோம். குழந்தை ஹெரால்ட் அந்தப் பறவையைப் பார்த்தது. கையில் பிடித்திருந்த ஃபிரானின் தலைமுடியை விட்டுவிட்டு, அவள் மடியில் எழுந்து நின்றது. அதன் தடிமனான விரல்களை மயிலை நோக்கி நீட்டியது. இருந்த இடத்திலேயே மேலும்கீழும் குதித்துக்கொண்டு சத்தமெழுப்பியது.


மயில் மேசையை சுற்றிக்கொண்டு வந்து குழந்தையிடம் சென்றது. அதன் நீண்ட கழுத்தை குழந்தையின் கால்களுக்குக் குறுக்கே துருத்தியது. குழந்தையின் கணுக்காலருகே பைஜாமாவுக்குள் அலகை நுழைத்து அதன் விறைப்பான தலையை முன்னும் பின்னுமாக ஆட்ட, குழந்தை சிரித்துக்கொண்டே எட்டி உதைத்தது. முதுகை அரக்கிக்கொண்டு ஃபிரானின் மடியிலிருந்து வழுக்கிக்கொண்டு முட்டிக்கு நகர்ந்து தரையில் இறங்கியது. மயில் ஏதொவொரு விளையாட்டைப்போல தொடர்ந்து குழந்தையை தலையால் முட்டிக்கொண்டே இருந்தது. ஃபிரான் குழந்தையை முன்னால் போகவிடாமல் தன் கால்களால் இறுக்கிக்கொண்டாள்.


“என்னால் இதை நம்ப முடியவில்லை,” என்றாள்.


“இந்த மயில் சரியான கிறுக்கு,” என்றான் பட். “இந்த முட்டாள் பறவைக்கு தான் ஒரு பறவை என்பதே தெரியவில்லை. அதனிடம் இருக்கும் பெரிய தொல்லை அதுதான்.”


ஓலா வாயைத் திறந்து பற்கள் பளிச்சிட சிரித்தாள். பட்டைத் திரும்பிப் பார்த்தாள். பட் நாற்காலியை மேசையிலிருந்து நகர்த்திவிட்டு தலையை ஆட்டினான்.


அது அவலட்சணமான குழந்தைதான். ஆனால் அது பட்டுக்கோ, ஓலாவுக்கோ ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை என்று தெரிந்தது. ஒருவேளை வருத்தம் இருந்தாலும், ‘சரி, அசிங்கமாகவே இருந்தாலும் இது நம்முடைய குழந்தை. இது ஒரு கட்டம். விரைவில் இது மாறி அடுத்த கட்டம் வரும். அதன்பிறகு அடுத்தது, என அடுத்தடுத்த கட்டங்கள் வரும். நாளாக ஆக, இந்தக் கட்டங்கள் எல்லாம் கடந்த பிறகு எல்லாம் சரியாகிவிடும்’, என்று நினைத்திருக்கலாம்.


பட் குழந்தையைத் தூக்கி, தலைக்கு மேல் சுற்ற, அது கிறீச்சிட்டது. மயில் அதன் தோகையை சிலிர்த்துக்கொண்டது. கவனித்தது.


ஃபிரான் மீண்டும் தலையை குலுக்கிக்கொண்டாள். குழந்தை இருந்த இடத்தில் தன் ஆடையின் சுருக்கங்களை நீவிக்கொண்டாள். ஓலா முட்கரண்டியை எடுத்து கொஞ்சம் லிமா பீன்ஸை தட்டில் வைத்துக் கொண்டாள்.


பட் குழந்தையை இடுப்பில் மாற்றி வைத்துக்கொண்டு, “இன்னும் மோதகமும் காபியும் சாப்பிட இருக்கின்றன,” என்றான்.


பட், ஓலா – இவர்கள் இருவரோடும் கழித்த அந்த மாலைப்பொழுது அற்புதமானது. அது நிகழ்ந்துகொண்டிருக்கும்போதே அது அற்புதமானதாக இருப்பதை உணர்ந்திருந்தேன் . அந்த மாலை நேரத்தில் என் வாழ்க்கையின் கிட்டத்தட்ட எல்லா விஷயங்களுக்காகவும் திருப்தியாக உணர்ந்திருந்தேன். அப்போது என் மனதில் எழுந்திருந்த உணர்ச்சிகளை ஃபிரானோடு பகிர்ந்துகொள்ளும் தனியான சந்தர்ப்பத்துக்காக உள்ளம் தவித்துக் கொண்டிருந்தது. அந்த மாலைப்பொழுதில் எனக்குள் ஒரு வேண்டுதல் எழுந்தது. அந்த மேசையில் அமர்ந்திருந்தபோது, கண்ணை ஒரு நிமிடம் மூடி, தீவிரமாக மனதை ஒருநிலைப்படுத்தி சிந்தித்தேன். அப்போது என் மனதில் வேண்டிக்கொண்டதை ஒருபோதும் என்னால் மறக்கவோ, அந்தத் தருணத்தை மனதிலிருந்து அகற்றவோ முடியாது. துரதிருஷ்டவசமாக அந்த ஒரு வேண்டுதல் பின்னர் நிறைவேறியது. அது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.


”என்ன யோசித்துக்கொண்டிருக்கிறாய், ஜேக்?” என்றான் பட்.


’‘சும்மா ஏதோ யோசனை’’, என்றேன். அவனைப் பார்த்து சிரித்தேன்.


”என்ன யோசனை என்றுதான் சொல்லுங்களேன்”, என்றாள் ஓலா.


நான் இன்னும் சற்று புன்னகைத்து தலையை ஆட்டிக் கொண்டேன்.


**********************************************************


பட், ஓலாவிடம் விடைபெற்றுக்கொண்டு அன்றிரவு வீட்டுக்கு வந்து, படுக்கையில் சாய்ந்ததும், ஃபிரான், “அன்பே, உங்கள் வித்தால் என்னை நிரப்புங்கள்,“ என்றாள். அவள் சொன்னது என் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உசுப்பிவிட, பொங்கியெழுந்து அவளுக்குள் பிரவாகித்தேன்.


அதன் பிறகு எங்களுக்கு எல்லாமே மாறின. குழந்தை பிறந்தது. பட்டின் வீட்டில் கழித்த அந்த மாலைப்பொழுதுதான் அதற்குப்,பிறகு நடந்த எல்லா மாற்றங்களுக்கும் ஆரம்பம் என்று ஃபிரான் சொல்லத் தொடங்கினாள். ஆனால் அது சரியல்ல. மாற்றம் நிகழத் தொடங்கியது அதற்குப் பிறகு – அது எங்களை அடைந்தபோது, மற்றவர்களுக்கு நிகழ்ந்ததைப்போலத்தான் இருந்ததேயொழிய, எங்களுக்கு நடந்திருக்கக்கூடியதாக இருக்கவில்லை.


இரவு நேரங்களில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஃபிரான் குறிப்பாக எந்தக் காரணமுமின்றி, “அந்தப் பாழாய்ப்போன ஜென்மங்களும், அவர்களுடைய அசிங்கம்பிடித்த குழந்தையும்’’, என்பாள். “அப்புறம் அந்த நாற்றமடிக்கும் பறவை’’, என்றும் சேர்த்துக்கொள்வாள். “ஏசுவே, யாருக்குத் தேவை அது!“ என்பாள். அந்த ஒரு முறைக்குப் பிறகு அவள் ஓலாவையும் பட்டையும் பார்த்திருக்காவிட்டாலும்கூட இதைப்போல அவ்வப்போது ஏதாவது சபித்துக்கொண்டே இருக்கிறாள்.


ஃபிரான் இப்போது அந்த க்ரீமெரி வேலையை விட்டுவிட்டாள். தலைமுடியையும் பல வருடங்களுக்கு முன்பே வெட்டிவிட்டாள். உடம்பும் பெருத்து, அடிக்கடி என் மீது கோபப்படுகிறாள். நாங்கள் இதைப்பற்றி அதிகம் பேசிக்கொள்வதும் இல்லை. பேசத்தான் என்ன இருக்கிறது?


பட்டை இப்போதும் தொழிற்சாலையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இருவரும் ஒன்றாக வேலை செய்கிறோம், ஒன்றாக உட்கார்ந்து மதிய உணவுப் பொட்டலங்களைப் பிரிக்கிறோம். நான் விசாரித்தால் அவனும் ஓலா, ஹெரால்டைப் பற்றிச் சொல்கிறான். ஜோயி இப்போது இல்லையாம். ஒருநாள் இரவு தூங்குவதற்கு மரத்துக்குப் பறந்து செண்ற அது, அப்புறம் காணவேயில்லை. திரும்பி வரவேயில்லை. அதற்கும் வயதாகிவிட்டிருந்தது. ஆந்தைகள் அதன் கதையை முடித்துவிட்டிருக்கும். பட் தோளைக் குலுக்கிக் கொள்கிறான். சாண்ட்விச்சைக் கடித்துக்கொண்டே, “நீ இப்போது ஹெரால்டைப் பார்க்கவேண்டுமே. ஒருநாள் அவன் அமெரிக்கன் புட்பாலில் லைன்பேக்கராக விளையாடத்தான்போகிறான், பார்த்துக்கொண்டேயிரு”, என்கிறான். நான் ஒப்புதலாகத் தலையை அசைத்துக்கொள்கிறேன். நாங்கள் இன்னமும் நண்பர்கள்தாம். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் அவனிடம் எதைப்பற்றிப் பேசுவது என்பதில் கவனமாக இருக்கிறேன். அது அவனுக்கும் தெரிகிறது. இப்படி இருக்கவேண்டாமே என்றுதான் அவனும் நினைக்கிறான். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.


எப்போதாவது அபூர்வமாக என் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கிறான். அவன் கேட்கும்போது, நானும் எல்லோரும் நன்றாக இருப்பதாகச் சொல்கிறேன். “எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்,” என்பதைத் தவிர வேறேதும் சொல்வதில்லை. சாப்பாட்டுப் பாத்திரத்தை மூடிவிட்டு, சிகரெட்டுகளை எடுக்கிறேன். பட் தலையை அசைத்துவிட்டு காபியை உறிஞ்சுகிறான். உண்மை என்னவென்றால் என் பையனிடம் துர்ச்செயல்களுக்கு ரகசிய உடந்தையாக இருக்கின்ற குணம் இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி நான் பேசுவதில்லை. அவனுடைய அம்மாவிடம் கூட. முக்கியமாக அவளும் பேசுவதில்லை. நானும் அவளும் பேசுவதே குறைந்து விட்டது. பெரும்பாலும் தொலைக்காட்சி மட்டும்தான். ஆனால் எனக்கு அந்த இரவு ஞாபகத்தில் இருக்கிறது. அந்த மயில் தனது சாம்பல் நிறப் பாதங்களை மெதுவாக அடியெடுத்து மேசையைச் சுற்றிவந்த விதம், என் நண்பனும் அவன் மனைவியும் அவர்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் நின்றுகொண்டு எங்களுக்கு குட்நைட் சொன்னதும், ஃபிரானுக்கு ஓலா சில மயிலிறகுகளை அன்பளித்ததும், நாங்கள் கைக்குலுக்கிக்கொண்டதும், கட்டியணைத்துக்கொண்டதும், விடைபெற்றுக்கொண்டதும் ஞாபகத்தில் இருக்கின்றன. காரில் திரும்பும்போது ஃபிரான் என்னிடம் நெருக்கமாக ஒட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். என் தொடையின் மீது தன் கையை வைத்திருந்தாள். என் நண்பனின் வீட்டிலிருந்து அப்படித்தான் வீடுவரை வந்தோம்.


(Feathers by Raymond Carver)

Comments


© 2025 by G. Kuppuswamy

bottom of page