top of page

காதலைப்பற்றி பேசும்போது நாம் பேசுவது - ரேமண்ட் கார்வர்

Updated: Feb 15

Raymond Carver
Raymond Carver

என் நண்பனும், இருதய சிகிச்சை மருத்துவனுமான ஹெர்ப்மெக்கின் பேசிக்கொண்டிருந்தான். அவனது சமையலறை மேஜையில் நாங்கள் நால்வர் அமர்ந்து ஜின் அருந்திக்கொண்டிருந் தோம். அது சனிக்கிழமை பிற்பகல். ஸிங்க்குக்குப் பின்னாலிருந்த பெரிய சன்னலிலிருந்து சூரிய வெளிச்சம் சமையலறையை நிரப்பியிருந்தது. அங்கே இருந்தது ஹெர்ப்பும், நானும், அவனுடைய இரண்டாவது மனைவி தெரசாவும் - அவளை டெர்ரி என்றழைப்போம்- என் மனைவியும். எங்கெங்கிருந்தோ வந்திருந் தாலும் நாங்கள் இப்போது அல்புகெர்கீவில்தான் வசித்து வருகிறோம். மேஜையில் ஒரு ஐஸ் பக்கெட் இருந்தது. பக்கத்தில் ஜின்னும் டானிக் வாட்டரும். பேச்சு எப்படியோ காதல் என்ற விஷயத்தைப் பற்றி நகர்ந்துவிட்டது. உண்மையான காதல் என்பது ஆத்மார்த்தமானது என்று ஹெர்ப் நினைத்தான். அவன் தனது இளம்வயதில் மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கு முன்னால் ஐந்து வருடங்கள் ஒரு சமய போதனைக் கூடத்தில் இருந்திருக்கிறான். அதே நேரத்தில்தான் சர்ச்சையும் துறந்திருக்கிறான். ஆனால் அந்த மதப்பள்ளியில் அவன் கழித்த வருடங்கள்தான் அவன் வாழ்க்கையிலேயே முக்கியமான வருடங்கள் என்று இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறான்.


ஹெர்ப்போடு வாழத்தொடங்குவதற்கு முன்னால் டெர்ரியோடு வாழ்ந்துவந்தவன் அவளை மிகவும் உக்கிரமாக காதலித்து வந்தான் என்றும் அதற்காக அவளைக் கொல்வதற்கே முயன்றான் என்றும் டெர்ரி சொன்னாள். அதை கேட்டதும் ஹெர்ப் உரக்க சிரித்தான். முகத்தை கோணலாக்கிக் காட்டினான். டெர்ரி அவனைப் பார்த்தாள். பின், “அவன் ஒருநாள் என்னைப்போட்டு அடித்தான். அதுதான் நாங்கள் ஒன்றாக கழித்த கடைசி இரவு. என் கணுக்காலைப் பிடித்து வசிப்பறை முழுக்க என்னை இழுத்து வந்தான்.”ஐ லவ் யூ, உனக்குத் தெரியுமா? ஐ லவ் யூ, பெட்டை நாயே, என்று கத்திக்கொண்டே என்னைத் தரதரவென்று இழுத்து வந்தான். என் தலை வழியெங்கும் இடித்துக் கொண்டே வந்தது. மேஜையில் அமர்ந்திருந்த எங்களை நிமிர்ந்து பார்த்துவிட்டு கோப்பையைப் பிடித்திருந்த தன் கைகளை உற்றுப்பார்த்தாள். “இதைப் போன்ற ஒரு காதலை வைத்துக்கொண்டு என்ன செய்வீர்கள்?” என்றாள். அவள் ஓர் அழகான முகம் கொண்ட ஒல்லிக்குச்சிப் பெண். கரிய விழிகள். முகுதுகில் வழியும் பழுப்புக்கூந்தல்.


டர்க்காய்ஸ் நெக்லஸ்களும் நீண்ட தொங்கட்டான் காதணிகளும் அவளுக்கு விருப்பமானவை. ஹெர்ப்பை விட பதினைந்து வருடங்கள் இளையவள். அவ்வப்போது அனோரெக்ஸியா என்ற பசியின்மையில் அவதியுற்றிருக்கிறாள். 1960களின் பிற்பகுதியில், ஒரு செவிலியர் பள்ளிக்குச் செல்வதற்கு முன் அவள் பள்ளியிலிருந்து ‘டிராப் அவுட்’ ஆகியிருக்கிறாள். அவளே தன்னை அழைத்துக்கொள்வதைப் போல ‘தெருப்பொறுக்கி’யாக இருந்திருக்கிறாள். ஹெர்ப் அவளை சிலமுறை ஆசையோடு அவனுடைய ஹிப்பி என்பான்.


“மைகாட், அபத்தமாகப் பேசாதே. அதைப்போய் காதல் என்பாயா? என்றான் ஹெர்ப். “அதை என்னவென்று சொல்வதற்குப் தெரியவில்லை - பைத்தியக்காரத்தனம் என்று வேண்டுமானால் சொல்வேன் - ஆனால் நிச்சயமாகக் காதல் கிடையாது”


“நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள், ஆனால் அவன் என்னைக் காதலித்தான் என்பது எனக்குத் தெரியும்,” டெர்ரி சொன்னாள். “எனக்கு அது நன்றாகவே தெரியும். உங்களுக்கு பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம், ஆனால் அதுதான் உண்மை. எவ்வளவோ விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்” ஹெர்ப். சில வேளைகளில் அவன் வெறித்தனமாக நடந்திருக்கலாம். சரி, ஆனால் அவனுக்கு என் மேல் பெரும் காதல் இருந்தது. அவனுக்கே உரித்தான ஒரு விதத்தில் என்னை அவன் நேசித்தான். அதில் காதல் இருந்தது, ஹெர்ப். இல்லையென்று சொல்லாதீர்கள்”


ஹெர்ப் கனமாக பெருமூச்செறிந்தான். கோப்பையை எடுத்துக் கொண்டு என்னையும் லாராவையும் நோக்கித் திரும்பினான். “அவன் என்னைக் கூட கொலை செய்வதாக பயமுறுத்தியிருக்கிறான். “கோப்பையை காலிசெய்துவிட்டு ஜின் பாட்டிலை எடுத்தான். டெர்ரி ஒரு ரொமாண்டிக். டெர்ரி,” என்னை- நீ- எட்டி உதைத்தாலும்- என்னை- நீ -நேசிக்கிறாய்- என்பது- தெரியும்” என்கிற ஸ்கூலைச் சேர்ந்தவள். டெர்ரி, ஹாங்..., என்னை அப்படிப் பார்க்காதே” மேஜை மேல் குனிந்து, அவள் கன்னத்தை விரல்களால் தொட்டான். அவளைப்பார்த்து சிரித்தான்.


“இப்போது என்னை சமாதானப்படுத்துகிறாராம்,” என்றாள் டெர்ரிட் “இவ்வளவு தூரத்திற்கு பேசியபிறகு....” அவள் புன்னகைத்துக் கொண்டிருக்கவில்லை.


“எதற்காக சமாதானம் செய்கிறேன் என்கிறாய்?” என்றான் ஹெர்ப். “ சமாதானம் செய்யும்படி என்ன நடந்துவிட்டது? எனக்கு நன்றாகத் தெரிந்த ஒரு விஷயத்தைச் சொன்னேன், அவ்வளவுதான்”.


“அப்படியென்றால் அதை என்னவென்று சொல்வீர்கள்?” என்றாள் டெர்ரி. “இந்த விஷயத்தை எப்படித்தான் சொல்வது?” அவள் தன் கோப்பையை உயர்த்திவிட்டு பருகினாள். “ஹெர்ப்புக்கு எப்போதுமே மனம் முழுக்க காதல்தான், என்றாள். இல்லையா ஹனி?” அவள் இப்போது புன்னகைத்தாள். சண்டை தீர்ந்துவிட்டது என்று நினைத்தேன்,


“கார்ல்லின் நடத்தையை காதல் என்று சொல்லமாட்டேன் என்று தான் சொல்கிறேன், ஹனி” என்றான் ஹெர்ப். லாராவையும் என்னையும் நோக்கித்திரும்பி, “ நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றான். “அதைக் கேட்டால் காதல் என்று உங்களுக்குப் படுகிறதா?”


நான் தோளைக் குலுக்கினேன். “இதைக் கேட்பதற்கு நான் சரியான ஆள் அல்ல. அந்த மனிதனைப்பற்றி எனக்குத் தெரியவே தெரியாது. போகிறபோக்கில் கேள்விப்பட்டதுதான். கார்ல். அது ஒரு பெயர். அதைத்தவிர வேறெதுவும் எனக்குத் தெரியாது. எல்லா விபரங்களையும் தெரிந்துகொண்டு பேசவேண்டும், இல்லையா? ஒரேயடியாக காதல் அல்ல என்றும் சொல்லிவிடமுடியாது, ஆனால் யாரால் சொல்லமுடியும்? அன்பைக் காட்டுவதற்கு எவ்வளவோ வித்தியாசமான நடத்தைகள். ஆனால் அது என் வழியல்ல. ஆனால் ஹெர்ப், காதல் என்பது வரம்பற்ற முழுமை கொண்டது என்று நீ சொல்கிறாயா?”


“நான் சொல்லவருகிற காதல் எந்த விதமானதென்றால்,” என்று ஆரம்பித்தான் ஹெர்ப், “நான் சொல்லவருகிற காதல் என்பது ஆட்களைக் கொல்வது அல்ல”


லாரா, என் அன்புக்குரிய குண்டுப்பெண்ணான இனிய லாரா நிதானமாகப் பேசினாள்’ “கார்ல்லைப் பற்றியோ, அப்போதிருந்த நிலைமையைப்பற்றியோ எதுவும் எனக்குத் தெரியாது. வேறு ஒருவரின் நிலைமையைப் பற்றி மற்றவர் எப்படி மதிப்பிட முடியும்? ஆனால் இப்படியெல்லாம் உன்மீது வன்முறை பிரயோகிக்கப் பட்டிருப்பது இதுவரை எனக்குத் தெரியாது.”


லாராவின் பின்னங்கையைத் தொட்டேன். என்னைப் பார்த்து புன்னைத்துவிட்டு டெர்ரியின் பக்கம் திரும்பினாள். லாராவின் கையை எடுத்து வைத்துக்கொண்டேன். கை வெதுவெதுப்பாக இருந்தது. நகங்கள் பாலீஷ் இடப்பட்டு நேர்த்தியாக வெட்டப்பட்டி ருந்தன. அவளுடைய கனமான மணிக்கட்டை என் விரல்களால் வளையலைப் போல சக்கரமிட்டு பற்றிக்கொண்டேன்.


“நான் அவனை விட்டு வந்தபின், எலி மருந்தை குடித்துவிட்டான்” என்றாள் டெர்ரி. கைகளைக் கோர்த்துக்கொண்டாள். “நாங்கள் அப்போது வசித்துவந்த ஸாண்டாஃபேவில் உள்ள மருத்துவமனையில் அவனைச் சேர்த்தார்கள். உயிர் பிழைத்துவிட்டானென்றாலும் அவன் பல்லீறுகள் தனியாகப் பிளந்து கொண்டன. அதாவது, பற்களிலிருந்து விடுபட்டு சுருண்டு கொண்டன. அப்புறம் அவன் பற்களெல்லாம் பாம்புப் பற்கள் போல துருத்திக்கொண்டு தெரிந்தன, ஐயோ கடவுளே,” என்றாள். ஒரு நிமிடம் கழித்து கைகளை விடுவித்துக் கொண்டு கோப்பையை எடுத்தாள்.


“மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்!” என்றாள் லாரா. “அவர்மேல் பாவமாகத்தான் இருக்கிறது, அவர் செய்தது பிடிக்கவில்லையென்றாலும் இப்போது எங்கே இருக்கிறார்?”


“இப்போது இல்லை, இறந்துவிட்டான்” என்றான் ஹெர்ப். எலுமிச்சம்பழங்கள் வெட்டி வைக்கப்பட்டிருந்த தட்டை என்னிடம் நகர்த்தினான். ஒன்றை எடுத்து என் பானத்தில் பிழிந்து கொண்டேன். ஐஸ் கட்டிகளை விரல்களை வைத்துக் கலக்கிக் கொண்டேன்.


“கோரமான சாவு” என்றாள் டெர்ரி. “வாயில் வைத்து சுட்டுக் கொண்டான். அதையும் சரியாகச் செய்யவில்லை சொதப்பி விட்டான். கார்ல் பாவம்,” என்றாள். தலையை குலுக்கிக் கொண்டாள்.


“பாவமெல்லாம் இல்லை” என்றான் ஹெர்ப். “அவன் அபாயகரமானவன்”. ஹெர்ப்புக்கு நாற்பத்தி ஐந்து வயது. உயரமாக, ஒல்லியாக, அலைபாயும் நரைமுடிகளுடன் இருந்தான். அவன் ஆடிய டென்னிஸ் காரணமாக முகமும் கைகளும் பழுப்பாக இருந்தன. போதையில்லாமல் அவன் இருக்கும்போது அவன் நடத்தை, அசைவுகள் எல்லாமே கச்சிதமாக, ஜாக்கிரதையாக இருக்கும்.


“அவன் என்னை நேசித்தான், ஹெர்ப், நான் சொல்வதை ஒப்புக்கொள்ளுங்கள்,” என்றாள் டெர்ரி. “அவ்வளவுதான் கேட்கிறேன். நீங்கள் என்னை நேசிக்கிற விதத்தில் அவன் நேசிக்கவில்லை. அப்படி நான் சொல்லவில்லை. ஆனால் அவன் என்னை நேசித்தான். அதைக் கூட ஒப்புக்கொள்ள மாட்டீர்களா? நன் கேட்பது அதிகமில்லையே!”


“சொதப்பிவிட்டான் என்றாயே, என்ன அது?” என்று கேட்டேன் லாரா கோப்பையோடு முன்னால் குனிந்தாள். முழங்கைகளை மேஜையில் ஊன்றிக் கொண்டு, கோப்பையை இரண்டு கைகளாலும் அணைத்துப் பிடித்துக்கொண்டாள். ஹெர்ப்பையும் டெர்ரியையும் மாறி மாறிப் பார்த்தாள். வியப்புற்றிருந்த அவள் முகத்தில் தனக்கு நெருக்கமாகத் தெரிந்தவர்களின் வாழ்க்கைகளில் இப்படியெல்லாம் கூட நடக்குமாவென்ற பாவம் தெரிந்தது. ஹெர்ப் தனது கோப்பையை முடித்தான். “தற்கொலை செய்துகொள்ளும் போது சொதப்பிவிட்டான் என்றால் எப்படி?” என்று மறுபடியும் கேட்டேன்.


“என்ன நடந்ததென்று நான் விளக்குகிறேன்,” ஹெர்ப் சொன்னான். “டெர்ரியையும் என்னையும் பயமுறுத்துவதற்காக அவன் வாங்கியிருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டான். ஓ, நான் சீரியஸாகத்தான் சொல்கிறேன். அதை உபயோகப்படுத்தத் தான் திட்டமிட்டிருந்தான். நாங்கள் அந்த நாட்களில் வாழ்ந்த விதத்தை நீங்கள் பார்த்திருக்கவேண்டும். தலைமறைவாகும் குற்றவாளிகள் போல. என்னை ஓர் அகிம்சாவாதியாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன், ‘ஆனால் நானே ஒரு கைத்துப்பாக்கி வாங்கி வைத்துக்கொண்டேன், தற்பாதுகாப்புக்காக. பையிலேயே வைத்திருந்தேன். சில நேரங்களில் நட்டநடு ராத்திரியில் எழுந்து மருத்துவமனைக்கு செல்லவேண்டியிருக்கும், டெர்ரிக்கும் எனக்கும் அப்போது திருமணமாகியிருக்கவில்லை. என் முதல் மனைவி எனது வீடு, குழந்தைகள், நாய்க்குட்டி எல்லாவற்றையும் கவர்ந்து கொண்டு சென்றுவிட்டிருந்தாள். நானும் இவளும் இந்த அபார்ட்மெண்ட்டில் குடியிருந்தோம். நான் சொன்னதைப்போல, சிலநேரங்களில் நள்ளிரவு இரண்டு, மூன்று மணிக்கெல்லாம் கூட மருத்துவமனையிலிருந்து அழைப்பு வரும். கார் நிறுத்துமிடம் இருட்டாக இருக்கும். காருக்கருகே போய் சேருவதற்குள் எனக்கு பயத்தில் வியர்த்துவிடும். பக்கத்தில் புதரிலிருந்து மேலே பாய்வானோ, அல்லது காருக்குப் பின்னால் ஒளிந்திருந்து சுடுவானோ என்று பயமாக இருக்கும். அவன் ஒரு வெறிபிடித்த கிறுக்கன். என் காரில் குண்டுகூட வைக்கக்கூடியவன். எதுவேண்டுமானாலும் செய்திருப்பான். என் தொலைபேசியின் ஆன்ஸரிங் கருவியில் கண்டநேரத்தில் அவன் என்னை அழைத்திருப்பது தெரியும். டாக்டரிடம் பேசவேண்டும் என்று குரலைப் பதிவு செய்திருப்பான். கூப்பிட்டால். நாய்க்குப் பிறந்தவனே, உனது நாட்கள் எண்ணப்பட்டுவிட்டன” என்பான், இதைப்போல சில்லரைத்தனமான விஷயங்கள். ஆனால் ஒன்று சொல்கிறேன், ரொம்பவுமே பயமாகத்தான் இருந்தது”


“இப்போதும் அவனை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது” என்றாள் டெர்ரி. அவள் பானத்தை உறிஞ்சிக் கொண்டே ஹெர்ப்பை வெறித்தாள். ஹெர்ப் பதிலுக்கு மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.


“பயங்கரமான துர்க்கனவைப் போலிருக்கிறது.” என்றாள் லாரா. “அவர் சுட்டுக்கொண்டதும் உண்மையில் என்னதான் நடந்தது?” லாரா ஒரு சட்டச்செயலாளர். தொழில்ரீதியாக சந்தித்தோம். சுற்றிலும் நிறைய பேர் இருந்தனர். ஆனாலும் நாங்கள் மட்டும் பேசிக்கொண்டேயிருந்தோம். இரவு உணவுக்கு அவளை அழைத்தேன். என்னவென்று அறிந்துகொள்வதற்கு முன்பே எங்களுக்குள் ஒரு பிணைப்பு ஏற்பட்டிருந்தது. அவளுக்கு முப்பதைந்து வயது. என்னை விட மூன்று வயது இளையவள். காதல் என்பதைத்தாண்டி, இருவருக்கும் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருக்கும் கம்பெனி மிகவும் பிடித்திருந்தது. அவளோடு பேசிக்கொண்டிருப்பது அவ்வளவு சுலபமானது. “என்ன நடந்தது?” லாரா மீண்டும் கேட்டாள்.


ஹெர்ப் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தான். கோப்பையை கையில் சுழற்றிக்கொண்டிருந்தான். பின் பேசினான்: “அறையைப் பூட்டிக்கொண்டு வாய்க்குள் வைத்து சுட்டுக்கொண்டான். யாரோ சத்தம் கேட்டு மேலாளரிடம் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் மாற்று சாவியைக் கொண்டு கதவைத் திறந்து, என்ன நடந்திருக்கிறது என்பதை பார்த்துவிட்டு ஆம்புலன்ஸை கூப்பிட்டிருக்கின்றனர். அவரசப்பிரிவுக்கு அவனைக் கொண்டு வந்தபோது நான் அங்கேயிருந்தேன். வேறு ஒரு கேஸை கவனித்துக்கொண்டிருந்தேன். அவன் உயிரோடுதான் இருந்தான். ஆனால் யாரும் எதுவும் செய்து காப்பாற்ற முடியாத நிலை. இருந்தாலும் அவன் மேலும் மூன்று நாட்கள் உயிரோடு இருந்தான். அவன் தலை இரண்டு மடங்கு வீங்கியிருந்தது: ஆம், நன் பொய் சொல்லவில்லை. அதைப்போல அதற்குமுன் நான் பாத்ததேயில்லை, பார்க்கவும் விருப்பமில்லை.


டெர்ரிக்குத் தெரிந்ததும் அவள் மருத்துவமனைக்கு வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்திருக்க வேண்டுமென்றாள். அதற்காக எங்களுக்குள் சண்டை நடந்தது. அவன் அந்த நிலையில் இருப்பதை அவள் பார்க்கவேண்டாமென்று நினைத்தேன்.”


“சண்டையில் யார் ஜெயித்தது?” லாரா கேட்டாள்.


“அவன் இறந்தபோது அவனோடு அறையில் இருந்தேன்,” என்றாள் டெர்ரி.” அவனுக்கு நினைவு திரும்பவேயில்லை. எந்த நம்பிக்கையும் இருக்கவில்லை. ஆனாலும் அவனருகே அமர்ந்திருந்தேன். அவனுக்கென்று யாரும் இல்லை”


“அபாயாகரமான பைத்தியம் அவன்” என்றான் ஹெர்ப். “அதை காதல் என்று நீ சொல்வதாக இருந்தால் சொல்லிக்கொள்.”


“அது காதல்தான்” என்றாள் டெர்ரி. “ பெரும்பாலானோர்களின் பார்வையில் அது அசாதாரணமாகத்தான் தெரியும், ஆனால் அதற்காக அவன் உயிரைக் கொடுக்கவும் தயாராகவும் இருந்தான். உயிரையும் கொடுத்திருக்கிறான்”


“என் தலையே போனாலும் அதைக் காதல் என்று சொல்ல மாட்டேன்,” என்றான் ஹெர்ப். “அவன் எதற்காக செத்தான் என்று நமக்குத் தெரியாது. நான் நிறைய தற்கொலைகளைப் பார்த்திருக்கிறேன். அப்படி இறந்தவர்களுக்கு நெருக்க மானவர்களாக இருந்தவர்களுக்கு அதற்கான நிச்சயமான காரணம் தெரிவதேயில்லை. அவர்கள் காரணமென்று கூறுகின்ற விஷயங்களும் சந்தேகமாகவே இருந்திருக்கின்றன..” அவன் கைகளை கழுத்துக்குப் பின்னால் கோர்த்துக்கொண்டு நாற்காலியின் பின்னங்கால்களுக்கு சாய்த்தான். “அந்த மாதிரியான காதலில் எனக்கு ஆர்வமில்லை. அது காதலென்றால், அப்படியே இருக்கட்டும்.”


ஒரு நிமிடம் கழித்து டெர்ரி பேசினாள்: “ நாங்கள் மிரண்டு போயிருந்தோம். ஹெர்ப் கலிபோர்னியாவில் இருக்கும் அவருடைய சகோதரருக்கு தனது உயிலை எழுதி அனுப்பிவிட்டார். தனக்கு மர்மமாகவோ, அல்லது மர்மமின்றியோ ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்துவிட்டால் அதற்குக் காரணம் யாராக இருக்கும் என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்!” அவள் தலையை குலுக்கிக் கொண்டு சிரித்தாள். அவள் கோப்பையிலிருந்து அருந்தினாள். தொடர்ந்தாள்: “ஆனால் நாங்கள் தலைமறைவு குற்றவாளிகள் போலத்தான் பதுங்கியிருந்தோம். அவன் மேல் பயமாக இருந்தது, அதில் சந்தேகமே இல்லை. ஒரு கட்டத்தில் நான் காவல் நிலையத்திலேயே புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் உதவியாக இல்லை. அவள் ஹெர்ப்பை ஏதாவது உண்மையிலேயே செய்யும் வரை அவனை கைது செய்யவோ, வேறு எந்த நடவடிக்கை எடுக்கவோ முடியாது என்றனர். வேடிக்கையாக இல்லை?” அவள் கோப்பையில் கடைசி ஜின்னை சரித்துக்கொண்டு காலி பாட்டிலை ஆட்டிக்காட்டினாள். ஹெர்ப் எழுந்து அலமாரிக்குச் சென்று இன்னொரு பாட்டில் ஜின்னை எடுத்து வந்தான்.


“நிக்கும் நானும் காதலிக்கிறோம்” என்றாள் லாரா. “இல்லையா நிக்?” என் முட்டியின் மேல் அவள் முட்டியை இடித்தாள். “ நீங்கள் ஏதாவது இப்போது பேசவேண்டும்,” அவள் அகலமான புன்னகையை என் மீது வீசினாள். “எங்களுக்குள் நன்றாக ஒத்துப்போகிறது, என்றுதான் நினைக்கிறேன். எப்போதும் ஒன்றாக வாழவே விரும்புகிறோம். ஒருவர் மற்றவரை இதுவரை அடித்தது இல்லை, அதற்காக கடவுளுக்கு நன்றி. நாங்கள் பரிபூர்ண சந்தோஷத்தில் இருப்பதாகத்தான் சொல்வேன்” என்றாள்.


இதற்கு பதிலளிப்பதுபோல அவள் கையை எடுத்து என் உதடுகளுக்கு உயர்த்தினேன். அவள் கையை முத்தமிடுவது போல பாவித்தேன். அனைவரும் சிரித்தனர். “நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் தாம்,” என்றேன்.


“ஹேய், நிறுத்துங்கள்,” என்றாள் டெர்ரி. “நீங்கள் என்னை நோகடிக்கிறீர்கள் நீங்கள் இன்னமும் தேனிலவில்தான் இருக்கிறீர்கள். அதனால்தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறீர்கள். ஒருவர் மேல் மற்றவருக்கு உள்ள பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை. கொஞ்சம் பொறுங்கள். எவ்வளவு நாள் இப்படியே இருந்துவிடப்போகிறீர்கள்? எவ்வளவு வருடமாகிறது? ஒரு வருடமா? ஒரு வருடத்திற்கு அதிகமா?”


“ஒன்றரை வருடங்கள்,” லாரா இன்னமும் நாணத்தில் சிவந்து புன்னகைத்துக்கொண்டிருந்தர்கள்.


‘ நீங்கள் இன்னமும் தேனிலவில்தான் இருக்கிறீர்கள்” என்றாள் மறுபடியும். “கொஞ்சநாள் பொறுத்திருங்கள்” கோப்பையை ஏந்தியபடி லாராவை நேராகப் பார்த்து, “சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்,” என்றாள்.


ஹெர்ப் ஜின்னைத் திறந்துகொண்டு மேஜையைச் சுற்றி வந்தான். “டெர்ரி, ஜீஸஸ், நீ அதைப்போலப் பேசக்கூடாது, தமாஷுக்காகக் கூட, விளையாட்டுக்காகக்கூட, துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவந்துவிடும். நீங்கள் இருவரும் இங்கே பாருங்கள். உங்களுக்காக, உங்கள் காதலுக்காக, தூய்மையான காதலுக்காக இதைப் பருகுவோம்.”


“காதலுக்காக” என்றோம் கூட்டாக.


வெளியே, பின்கட்டிலிருந்து நாய் ஒன்று குரைக்கும் சத்தம் கேட்டது. ஜன்னலுக்கு குறுக்கே சாய்ந்திருந்த ஆஸ்பென் மரத்தின் இலைகள் காற்றில் சிலிர்த்துக்கொண்டன. பிற்பகல் சூரியவெளிச்சம் தானும் ஓர் அங்கத்தினன் போல அறைக்குள் இருந்தது. திடீரென சூழல் இளகி, மேஜையில் நட்புணர்வும் இணக்கமும் பரவியது. நாங்கள் எங்கு வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். எங்கள் கோப்பைகளை மீண்டும் உயர்த்தினோம். ஏதோ உடன்படிக்கை ஏற்பட்ட குழந்தைகள் போல ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம்.


இதை உடைக்கும் விதமாக, கடைசியில் ஹெர்ப் பேசினான்; “உன்மையான காதல் என்றால் என்னவென்று நான் சொல்கிறேன். ஒரு நல்ல உதாரணம் தருகிறேன், பிறகு நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.” அவன் கோப்பைக்குள் இன்னும் கொஞ்சம் ஜின் ஊற்றிக்கொண்டான். ஐஸ் கட்டிஒன்றையும், எலுமிச்சம் துண்டு ஒன்றையும் சேர்த்துக்கொண்டான். பானத்தை உறிஞ்சியபடி அவன் பேசக் காத்திருந்தோம். லாராவும் நானும் எங்கள் முட்டிகளால் மீண்டும் தொட்டுக்கொண்டோம். அவளது வெதுவெதுப்பான தொடையின் மீது கையைப் பதித்து அப்படியே எடுக்காமல் இருந்தேன்.


“உன்மையான காதலைப் பற்றி நம்மில் யாருக்காவது ஏதாவது தெரியுமா?” என்று கேட்டான் ஹெர்ப். “ நான் சொல்வதை நீங்கள் மன்னிப்பதாக இருந்தால், ஒன்று சொல்கிறேன். எனக்கென்னவோ நாமெல்லோருமே காதல் விஷயத்தில் கற்றுக்குட்டிகள் என்றுதான் தோன்றுகிறது. ஒருவரையொருவர் காதலிப்பதாக சொல்லிக் கொள்கிறோம், காதலிக்கிறோம் தான், அதில் சந்தேகமில்லை. ஒருவரையொருவர் காதலிக்கிறோம், ஆழமாகக் காதலிக்கிறோம். நாமெல்லோருமே. நான் டெர்ரியைக் காதலிக்கிறேன், டெர்ரி என்னை காதலிக்கிறாள், நீங்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறீர்கள். நான் இப்போது பேசிக் கொண்டிருக்கிற காதல் உங்களுக்குத் தெரியும் செக்ஸுவல் காதல். மற்றவர் மேல், துணையின் மேல் உண்டாகிற இனக்கவர்ச்சி. அப்புறம் சாதாரணமான, எளிய, தினசரி காதல். மற்றவர் நலன் மீது அக்கறை, பிரியம் கொண்டிருக்கும் இருவரும் பக்கத்திலேயே இருக்கவேண்டுமென்ற வழக்கமான காதல். பாலுணர்வு காதல், பிறகு உணர்ச்சிகர காதல், அப்புறம் மற்றவர் மேல் அக்கறை கொண்ட பாசமிகு காதல். சிலநேரங்களில், என்னுடைய முதல் மனைவியைக் கூட நான் ஆழமாகக் காதலித்திருக்கக்கூடுமென்று தோன்றும். ஆனால் அதுதான் உண்மை, நான் அவளை காதலித்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். அதனால், நீங்கள் எதுவும் சொல்வதற்கு முன்பாகவே நானே சொல்லிவிடுகிறேன். இந்த விஷயத்தில் நானும் டெர்ரியைப்போலத்தான். டெர்ரியும் கார்ல்லும்..” அவன் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு தொடர்ந்தான். “ஒரு காலத்தில் என் முதல் மனைவியை என் உயிரைவிட அதிகமாக நேசிப்பதாக நினைத்தேன், ஆனால் இப்போது அடிவயிற்றிலிருந்து வெறுக்கிறேன். ஆம். இதற்கு என்ன சொல்கிறீர்கள்? அந்தக் காதலுக்கு என்ன ஆயிற்று? கரும்பலகையில் இருந்ததை அழித்துவிட்டதைப் போல அந்தக் காதல் இல்லவே இல்லாததைப் போல இதுவரை நடந்தேயிருக்காததைப் போல அழிந்துவிட்டதா? அதற்கு என்ன நேர்ந்தது என்பதைத்தான் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். அப்புறம் கார்ல். சரி, கார்ல் விஷயத்திற்கு மீண்டும் வருகிறோம். அவன் டெர்ரியை கொலை செய்ய முயற்சிக்குமளவுக்கு அவளை காதலித்திருக்கிறான், கடைசியில் தற்கொலையும் செய்து கொண்டிருக்கிறான்” அவன் பேசுவதை நிறுத்திவிட்டு தலையை குலுக்கிக்கொண்டான். “நீங்கள் இருவரும் பதினெட்டு மாதங்களாக ஒன்றாக இருக்கிறீர்கள், ஒருவரையொருவர் உக்கிரமாகக் காதலிக்கிறீர்கள், அது உங்களிடம் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. காதலில் நீங்கள் ஜொலித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பதற்கு முன்னால் வேறு யாரையோ காதலித்திருக்கிறீர்கள். எங்களைப் போலவே உங்களுக்கும் இதற்குமுன் திருமணம் ஆகியிருக்கிறது. அதற்கு முன்னாலும் நீங்கள் வேறு சிலரை காதலித்திருக்கலாம் டெர்ரியும் நானும் ஐந்து வருடங்களாக ஒன்றாக இருக்கிறோம், திருமணமாகி நான்கு வருடங்களாகின்றன. இதில் உள்ள மோசமான விஷயம், படுமோசமான விஷயம் என்னவென்றால், அதை நல்ல விஷயம் என்றுகூட சொல்லலாம், எங்களில் ஒருவருக்கு ஏதாவது நடந்து விட்டால் - இதைச் சொல்வதற்காக மன்னியுங்கள் - நாளைக்கே எங்களில் யாருக்காவது ஏதாவது நடந்துவிடால் மற்றவர் என்ன செய்வார்? கொஞ்ச காலம் துக்கப்படுவார். அப்புறம் உயிரோடு இருக்கும் அந்த நபர் வேறு யாரையாவது மீண்டும் காதலிக்கத் தொடங்கிவிடுவார். அப்புறம் இவையெல்லாம், இந்தக் காதல் எல்லாம், - ஏசுவே, அதை என்னவென்று சொல்ல? - வெறும் ஞாபகங்களாகத்தான் ஆகிவிடும். ஞாபகங்களாகக்கூட இல்லாமல் போகலாம். அப்படித்தான் இருக்கவும் வேண்டும் என்கிறேன். நான் சொல்வது தவறா? அபத்தமாகப் போசுகிறேனா? டெர்ரியிம் நானும் எவ்வளவுதான் உண்மையாக காதலித்து வந்தாலும், அப்படித்தான் எங்கள் விஷயத்திலும் நடக்கும். நம் எல்லோருக்குமே அப்படித்தான். நிச்சயமாகச் சொல்வேன். நாமெல்லோருமே அதை நிரூபித்திருக்கிறோம். எனக்குப் புரியவில்லை. நான் சொல்வது தவறாக இருந்தால் திருத்துங்கள். எனக்குத் தெரியவேண்டும். எனக்கு ஏதாவது தெரியாவிட்டால் அதை தயக்கமில்லாமல் ஒப்புக்கொள்ளும் முதல் ஆள் நான்தான்.”


“ஹெர்ப், தயவுசெய்து மேலே பேசாதீர்கள், “ என்றாள் டெர்ரி. “விசாரமான விஷயம். பேசப்பேச மனக்குலைவுதான் உண்டாகும். அதுதான் உண்மையென்று நீங்கள் நினைத்தாலும் கூட அதைப் பேசவேண்டாம்.” அவள் கையை நீட்டி அவன் மணிக்கட்டை பற்றினாள். “அதிகம் குடித்துவிட்டீர்களா ஹெர்ப்? அன்பே, போதை அதிகமாகிவிட்டதா?”


“அன்பே, நான் வெறுமனே பேசுகிறேன், அவ்வளவுதான்,” என்றான் ஹெர்ப். “என் மனதில் இருப்பதைச் சொல்வதற்கு நான் குடித்திருக்க வேண்டுமென்பதில்லை, சரிதானே? நான் போதையில் இல்லை. நாம் வெறுமனே பேசிக் கொண்டிருக்கிறோம், சரியா?” என்றான். அவன் குரல் மாறியது. “ஆனால் குடிக்கவேண்டுமென்று முடிவெடுத்தால், குடிப்பேன். எனக்கு என்ன இஷ்டமோ அதைச் செய்வேன்” அவள் மீது பார்வையை நிலைகுத்தினான்.


“அன்பே, நான் உங்களைக் குறை கூறவில்லை,” என்றாள் அவளது கோப்பையை எடுத்தாள்.


“இன்று எனக்கு வேலை இல்லை”, என்றான் ஹெர்ப். “எனக்கு என்ன இஷ்டமோ அதைச் செய்வேன். நான் களைப்பாக இருக்கிறேன், அவ்வளவுதான்”.


“ஹெர்ப், உங்களை எங்களுக்குப் பிடித்திருக்கிருக்கிறது” என்றாள் லாரா.


ஹெர்ப் லாராவை நோக்கினான். கொஞ்ச நேரத்திற்கு அவளை அடையாளம் தெரியாததைப் போல காணப்பட்டான். அவள் தொடர்ந்து புன்னைகையுடன் அவனைப் பார்த்தபடி இருந்தாள். அவள் கன்னங்கள் சிவந்து, கண்களின் மேல் வெயில் விழுவதால் கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் சட்டென்று தளர்ந்தான். “உன்னையும் எனக்கு பிடித்திருக்கிறது லாரா. நிக், உன்னையும் கூட, நீங்கள் என் நண்பர்கள்” என்றான். அவனது கோப்பையை எடுத்தான். “என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆம், கொஞ்ச நாட்களுக்கு முன் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி உங்களுக்கு சொல்வதற்கு இருந்தேன். நடந்ததை அப்படியே சொன்னால் நான் சொல்லவருகிற கருத்து விளங்கும். இது சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்தது, இப்போதும் நடந்து வருகிறது. காதலைப் பற்றிப்பேசும் போது நாம் பேசுவது நமக்கு அவமானத்தை உண்டாக்கக்கூடும்.”


“ஹெர்ப், கம் ஆன்,” என்றாள் டெர்ரி, “நீங்கள் அதிகமாகக் குடித்திருக்கிறீர்கள். இதைப்போலப் பேசாதீர்கள். நீங்கள் குடித்தி ருக்கவில்லையென்றால் குடிகாரன் போல பேசாதீர்கள்”.


“ஒரு நிமிடம் பேசமால் இருக்கிறாயா?” என்றான் ஹெர்ப். “நானே சொல்கிறேன். இது என் மனதிலேயே இருக்கிறது. ஒரு நிமிடம் வாயை மூடிக்கொண்டிரு. அது முதலில் நடந்தபோதே உன்னிடம் அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். ஒரு வயதான ஜோடி விபத்தில் சிக்கிக்கொண்டது? சின்னப்பையன் ஒருவன் நேராக வந்து அவர்கள் வண்டியின் மேல் மோதிவிட்டான். உடல் முழுக்க அடி. பிழைக்க வாய்ப்பே அரிதாகத்தான் தென்பட்டது. விளக்கமாகச் சொல்கிறேன். டெர்ரி, ஒரு நிமிடம் வாயைத்திறக்கக்கூடாது. சரியா?”


டெர்ரி எங்களை நோக்கினாள். பின் ஹெர்ப்பின் பக்கம் திரும்பினாள். அவள் கவலையுற்றிருப்பதைப் போலிருந்தது. ஹெர்ப் பாட்டிலை எடுத்தான்.


“உங்கள் கதையைச் சொல்லி என்னை ஆச்சரியப்படுத்துங்கள்” என்றாள் டெர்ரி.


“இருக்கலாம்,” என்றான் ஹெர்ப். “நானே ஆச்சரியங்களால் தொடர்ந்து ஆச்சரியப்பட்டு வந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் உள்ள எல்லாமே என்னை ஆச்சரியப்படுத்துகின்றன.” அவன் அவளை ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தான். பின் பேசத் தொடங்கினான்.


“அன்றிரவு எனக்கு டியூட்டி இருந்தது. அது மே அல்லது ஜூனாக இருக்கும். டெர்ரியும் நானும் இரவு உணவுக்காக அப்போதுதான் உட்கார்ந்தோம். மருத்துவமனையிலிருந்து கூப்பிட்டார்கள். ஏதோ விபத்தாம். ஒரு பதின்பருவ வாலிபன் குடிபோதையில் அவனுடைய அப்பாவின் பிக்அப் வண்டியை இந்த வயதான தம்பதியினர் ஓட்டி வந்த காரின் மேல் முழு வேகத்தில் மோதியிருக்கிறான். அவர்களுக்கு சுமார் எழுபத்தைந்து வயதிருக்கும். அந்தப் பையனுக்கு பதினெட்டோ பத்தொன்பதோ. மருத்துவமனைக்கு எடுத்துவரும்போதே அந்த இளைஞன் இறந்துவிட்டிருந்தான். அவன் மார்புக்கூட்டுக்குள் ஸ்டீரியங் வீல் நுழைந்து விட்டிருந்தது. விபத்து நடந்த கணமே அவன் இறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த வயதான ஜோடி இன்னமும் உயிரோடுதான் இருந்தது.. ஆனால் குற்றுயிராக. பல இடங்களில் அவர்களுக்கு எலும்புமுறிவும், காயங்களும், சிராய்ப்பு களும் இருந்தன. இருவருக்கும் ’கன்கஷன்’ எனப்படும் தலையில் கலக்கம் உண்டாகியிருந்தது. மிக மோசமான நிலையில் இருந்தனர். வயதும் அவர்களுக்கு சாதகமாக இல்லை. அவரை விட அந்தக் கிழவி மோசமான நிலையில் இருந்தார். அவருடைய மண்ணீரல் சிதைந்திருந்தது. இவை போதாதென்று அவரது இரண்டு கால் முட்டி களும் நொறுங்கியிருந்தன. ஆனால் அவர்கள் ஸீட் பெல்ட்டுகள் அணிந்திருந்தனர். இல்லாவிட்டால் என்ன ஆகியிருக்குமோ, கடவுளுக்கே வெளிச்சம். ஸீட் பெல்ட்டுகள்தாம் அவர்களைக் காப்பாற்றியிருக்கின்றன.”


“எல்லோரும் கவனியுங்கள்! தேசிய பாதுகாப்புக் குழுவின் விளம்பரம் இது” என்றாள் டெர்ரி. “இது உங்கள் செய்தித் தொடர் பாளர் டாக்டர் ஹெர்ப் மெக்கின்னிஸ் பேசுவது. கவனித்துக் கேளுங்கள்,” என்று அறிவித்துவிட்டு உரக்க சிரித்தாள். பின் குரலைத்தாழ்த்தி, “ஹெர்ப், சில நேரங்களில் நீங்கள் மிகையாகச் சென்றுவிடுகிறீர்கள். ஐ லவ் யூ அன்பே” என்றாள்.


அனைவரும் சிரித்தோம், ஹெர்ப்பும் சிரித்தான், “அன்பே, ஐ லவ் யூ. உனக்குத்தான் தெரியுமே” அவன் மேஜை மீது குனிந்து பாதி வழியில் டெர்ரியை அடைந்து, அவர்கள் முத்தமிட்டுக் கொண்டனர். “டெர்ரி சொல்வது சரிதான்” என்றான். “நமது பாதுகாப்பிற்காக ஸீட் பெல்ட் அணிந்துகொள்ள வேண்டும். டாக்டர் ஹெர்ப் சொல்வதைக் கேளுங்கள். ஆனால் விளையாட்டு இல்லை. உண்மையாகவே சொல்கிறேன். அந்தக் கிழவனும் கிழவியும் கோரமான நிலையில் இருந்தனர். நான் போய்சேர்ந்த போது உதவியாளர்களும் செவிலியர்களும் ஏற்கனவே சிகிச்சையை தொடங்கிவிட்டிருந்தனர். நான் ஏற்கனவே சொன்னதைப் போல, அந்தப் பையன் இறந்துவிட்டிருந்தான். ஒரு மூலையில் இருந்த ஸ்ட்ரெச்சரில் அவனைப் படுக்க வைத்திருந்தனர். அதற்குள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டிருந்தனர். ஈமச்சடங்கு ஆட்கள் வந்துகொண்டிருந்தனர். அந்த வயதான ஜோடியைப் பார்த்தேன். அவசர சிகிச்சை செவிலியரிடம் எனக்கு உடனே ஒரு நரம்பியல் மருத்துவரும், எலும்புமுறிவு சிகிச்சையாளரும் வரவேண்டும் என்று தெரிவித்தேன். சரி அப்புறம் நடந்தை சுருக்கமாகச் சொல்கிறேன். மற்ற மருத்துவர்களும் வந்து சேர்ந்தனர் வயதான ஜோடியை அறுவைசிகிச்சையறைக்கு கொண்டு சென்றோம். இரவு முழுக்க அறுவை சிகிச்சை நடந்தது. இந்தக் கிழவனுக்கும் கிழவிக்கும் அசாதாரணமான தாங்கும் சக்தி இருந்திருக்கவேண்டும். அதைப்போல காண்பது அரிது. எங்களால் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையும் செய்தோம். காலை நெருங்கும்போது அவர்களுக்கு 50-50 வாய்ப்பு இருப்பதாக, இல்லை, அதை விடக் குறைவாக 30-70 வாய்ப்பு இருப்பதாக நினைத்தோம். முக்கியமாக அந்தக் கிழவிக்கு. அவர் பெயர் அன்னா கேட்ஸ். அசாதாரணமான பெண்மணி. அடுத்த நாள் காலையிலும் அவர்கள் உயிருடன் இருந்தனர். அவர்கள் சுவாசத்தையும் மற்ற செயல்பாடுகளையும் இருபத்திநான்கு மணி நேரமும் கண்காணிப்பதற்காக அவர்களை ஐ.சி.யு.க்கு மாற்றினோம். தீவிர சிகிச்சை பிரிவில் ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு இருந்தனர். அந்தக் கிழவி அதைவிடக் கூடுதலாக இருந்தார். அதன்பின் அவர்கள் நிலைமை சீரடைந்து தனி அறைகளுக்கு அவர்களை மாற்றினோம்”


ஹெர்ப் பேசுவதை நிறுத்தினான். பின் கொஞ்சநேர மௌனத்திற்குப் பிறகு, “இந்த ஜின்னை காலி செய்வோம். அதன் பிறகு இரவு உணவுக்குச் செல்கிறோம், சரியா? டெர்ரிக்கும் எனக்கும் ஒரு இடத்தைத் தெரியும். அது ஒரு புதிய இடம். அங்கே போகலாம். இந்த ஜின்னை முடித்துவிட்டுப் போகலாம்,” என்றான்.


“அந்த இடத்திற்கு ‘தி லைப்ரரி’என்று பெயரிட்டிருக்கிறார்கள்,” என்றாள் டெர்ரி. “நீங்கள் அங்கே சென்று உணவருந்தியது இல்லைதானே?” லாராவும் நானும் இல்லையென்று தலையாட்டினோம். “நல்ல இடம். ஒரு புதிய உணவகச் சங்கிலி. ஆனால் அப்படி சங்கிலி உணவகம் போலவும் இருக்காது, நான் சொல்வது புரிகிறதா? அங்கே புத்தக அலமாரிகள் வைத்திருக்கின்றனர். அவற்றில் உண்மையாகவே புத்தகங்கள் இருக்கின்றன. சாப்பிட்டு விட்டு எந்த புத்தகத்தையாவது எடுத்துப்படிக்கலாம்; வீட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டு, அடுத்தமுறை சாப்பிட வரும்போது எடுத்துவரலாம். உணவுவகைகள் நம்பமுடியாதளவுக்கு சுவையாக இருக்கும். ஹெர்ப் Ivanhoe வை எடுத்துப் படித்தார்! சென்றவாரம் சென்றிருந்தபோது அட்டை ஒன்றில் கையெழுத்து போட்டுவிட்டு அந்தப் புத்தகத்தை விட்டுக்கு கொண்டுவந்தார், உண்மையான நூலகத்தைப் போலவே.”


”Ivanhoe எனக்குப் பிடிக்கும்,” என்றான் ஹெர்ப். “அது ஒரு மகத்தான நூல். மறுபடியும் பள்ளியில் சேர வாய்ப்பு கிடைத்தால் நான் இலக்கியம் படிப்பேன். தற்போது எனக்கு ஓர் அடையாளச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சரிதானே டெர்ரி?” ஹெர்ப் சிரித்தான். ஐஸ் கட்டியை கோப்பையில் துழாவினான். அடையாளச் சிக்கல் பல வருடங்களாக எனக்கிருக்கிறது. டெர்ரிக்குத் தெரியும் டெர்ரி உங்களிடம் சொல்வாள். ஆனால் இதை மட்டும் சொல்கிறேன். மற்றொரு பிறவியில், வேறொரு காலத்தில் நான் திரும்பப் பிறக்க நேர்ந்தால் என்னவாக இருக்க விருப்பம் தெரியுமா? ஒரு போர் வீரனாக இருப்பேன். உடல் முழுக்க கவசங்களை அணிந்து கொண்டு இருப்பதால் உங்களுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. துப்பாக்கி மருந்தும், மஸ்கட் துப்பாக்கிகளும், பிஸ்டல்களும் வருவதற்கு முன்னால் அந்தக் காலத்தில் ஒரு போர்வீரனாக இருப்பதில் பிரச்சினை இருந்திருக்கப்போவதில்லை”


“எப்போதுமே இல்லை,” என்றாள் லாரா.


“அடிமைகளுக்கு அந்த நாட்களில் பிரச்சனையில்லாமல் இல்லையே” என்றாள் டெர்ரி.


“அடிமைகள் எல்லாக்காலங்களிலும் கொடுமைப்பட்டே வந்திருக்கிறார்கள்” என்றான் ஹெர்ப்.


“அந்த வயதான ஜோடிக்கு என்ன ஆனது ஹெர்ப்?” என்று கேட்டாள் லாரா. “நீங்கள் ஆரம்பித்த கதையை முடிக்கவில்லை” லாராவுக்கு சிகரெட்டைப் பற்ற வைப்பதில் சிரமம் இருந்தது. தீக்குச்சிகள் அணைந்து போய்க்கொண்டே இருந்தன. இப்போது அறைக்குள்ளிருந்த வெளிச்சம் வேறுமாதிரியாக, மங்கலாக மாறிக்கொண்டிருந்தது. சன்னலுக்கு வெளியே இலைகள் இன்னமும் சிலிர்த்துக் கொண்டிருந்தன. சன்னல் கண்ணாடியிலும், அடியில் ஃபார்மைகா மேஜையிலும் அவை உண்டாக்கிக் கொண்டிருந்த சுருள் சுருளான நிழல்வடிவங்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். லாரா தீக்குச்சிகளை உரசும் சத்தத்தைத் தவிர வேறில்லை.


ஒரு நிமிடம் கழித்து, “அந்த வயதானார்களுக்கு என்ன ஆயிற்று?” என்றேன். “தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து மாற்றி விட்டதாக கடைசியில் சொல்லிக்கொண்டிருந்தாய்?”


“வயதாகி விட்டதில் மறதி.” என்றாள் டெர்ரி.


ஹெர்ப் அவளை முறைத்தான்.


“ஹெர்ப், அதைப்போல பார்க்காதீர்கள். கதையைச் சொல்லுங்கள். நான் விளையாட்டுக்குச் சொன்னேன். அப்புறம் என்ன நடந்தது. எங்கள் எல்லோருக்கும் கேட்க ஆர்வமாக இருக்கிறது”


“டெர்ரி. நீ சில சமயங்களில்...”


“ப்ளீஸ், ஹெர்ப். எப்போதுமே சீரியஸாக இருக்காதீர்கள். தயவுசெய்து தொடர்ந்து சொல்லுங்கள். நான் வேடிக்கைக்காகத் தான் சொன்னேன். ஜோக்காக எடுத்துக்கொள்ளமாட்டீர்களா?”


“இதில் எந்த ஜோக்கும் இல்லை”, என்றான் ஹெர்ப். கோப்பையைப் பிடித்துக்கொண்டு அவளையே வெறித்துக் கொண்டிருந்தாள்.


“அப்புறம் என்ன ஆயிற்று ஹெர்ப்? எங்களுக்கு கேட்க ஆவலாக இருக்கிறது” என்றாள் லாரா.


ஹெர்ப் லாராவின் பக்கம் பார்வையைத் திருப்பினான். சட்டென்று அவன் முகம் சிரிப்பில் மலர்ந்தது. “லாரா, ஒன்று சொல்கிறேன்: எனக்கு மட்டும் டெர்ரி இல்லாமல் இருந்து, அவளை நானும் காதலிக்காமல் இருந்து, நிக்கும் என் நண்பனாக இல்லாமல் இருந்திருந்தால், நன் உன்னைக் காதலித்திருப்பேன். உன்னை அப்படியே தூக்கிக்கொண்டு போய்விட்டிருப்பேன்”


“ஹெர்ப், யூ ஷிட்! உங்கள் கதையைச் சொல்லுங்கள். நான் உங்கள் மேல் காதலாக இருக்காவிட்டால் இந்த இடத்தில் நான் ஏன் இருக்கப்போகிறேன். உங்கள் கதையைச் சொல்லி முடியுங்கள் அப்புறம் ‘தி லைப்ரரி’க்குப் போகலாம். ஓ.கே?


“ஓகே” என்றான் ஹெர்ப். “எங்கே இருந்தேன்? எங்கே இருக்கிறேன்? இந்தக் கேள்வி சரியாக அமைந்திருக்கிறது.” அவன் ஒரு நிமிடம் காத்திருந்தான். பின் பேசத்தொடங்கினான்.


“அபாய கட்டத்தைத் தாண்டியதும் அவர்களை தீவிர சிகிச்சைப் பிரிவிருந்து மாற்றிவிட முடிந்தது. ஒவ்வொரு நாளும் அவர்களை, சில நட்கள் இரண்டு முறை கூட, போய் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் இருவருக்கும் தலைமுதல் பாதம் வரை மாவுக்கட்டும் பேண்டேஜ்களும் போடப்பட்டிருந்தது. திரைப்படங்களில் பாத்திருப்பீர்களே, அதைப்போல. நினைத்துப் பாருங்கள். தலையிலிருந்து பாதம் வரை. அந்தத் திரைப்படங்களில் நடிகர்கள் எப்படி அபத்தமாகத் தெரிவார்களோ, அதே போல. ஆனால் இது நிஜம். அவர்கள் தலை முழுக்க கட்டு போடப்பட்டிருந்தது. கண்களுக்கும் மூக்கிற்கும் வாய்க்கும் மட்டும் ஓட்டைகள் விடப்பட்டு. அன்னா கேட்ஸுக்கு காலை உயர்த்தி கட்டிவைக்கப்பட்டிருந்தது. அந்தக் கிழவரை விட இந்தப் பெண்மணிக்கு கூடுதலாக காயங்கள் ஏற்பட்டிருந்ததைச் சொன்னேன். அவர்கள் இருவருக்குமே ரத்தக் குழாய் வழியாக குளுகோஸ் செலுத்தப்பட்டு வந்தது. ஹென்றி கேட்ஸ் மிகவும் மனத்தளர்ச்சியுற்றிருந்தார். அவருடைய மனைவி பிழைத்துக் கொண்டார், குணமாகி விடுவார் என்று தெரிந்தபிறகும் பெரும் கலக்கத்திலேயே இருந்தார். விபத்தைப் பற்றி மட்டுமல்ல. ஆனாலும் அந்த விபத்து அவரை புரட்டித்தான் போட்டிருந்தது. ஒரு நிமிடம் நீங்கள் பரிபூரண நலத்தோடு இருக்கிறீர்கள், அடுத்த நிமிடம், டமால்! கண்ணுக்கெதிரே நரகம்! அதிலிருந்து மீண்டு வந்தது அபூர்வம். ஆனால் அது தனது அடையாளங்களை உங்கள் மேல் பதித்து விடுகிறது. ஒருநாள் அவரது படுக்கைக்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறேன். அவர் மெதுவான குரலில் பேசிக் கொண்டிருக்கிறார். சிலநேரங்களில் அவர் பேசுவது சரியாகக் கேட்பதற்காக அவரது வாய்ப்பகுதி துவாரத்தில் காதை வைத்துக் கேட்கவேண்டியதாயிருந்தது சாலையின் மத்தியக் கோட்டைக் கடந்து அந்தப் பையனின் கார் இவரது வண்டி செல்லும் பக்கத்திற்கு வந்து இவரது காரை நோக்கி நேராக வந்தபோது அவருக்கு எப்படி இருந்தது, எப்படி உணர்ந்தார் என்பதை சொல்லிக்கொண்டிருந்தார். எல்லாம் முடிந்தது, இந்தக் காட்சிதான் இவ்வுலகத்தில் தான் பார்க்கும் கடைசி காட்சி என்று அவருக்கு அந்தக் கணம் தோன்றியதாகச் சொன்னார். அவ்வளவுதான். வேறு எதுவும் அவர் மனதைக் கடந்து செல்லவில்லை, கடந்த வாழ்க்கை கண்முன்னால் நகர்ந்து செல்லவில்லை, அதைப்போல எதுவும் தோன்றவில்லை என்றார். அப்போது அவருக்கேற்பட்ட ஒரே வருத்தம், அவருடைய அன்னாவை இனிமேல் பார்க்கமுடியாது என்பதுதான் என்றார். அவர்கள் அவ்வளவு இனிமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றனர். அதுமட்டும்தான் அவரது ஒரே வருத்தமாக இருந்தது. அவர் நேராகப் பார்த்தார். ஸ்டீயரிங் சக்கரத்தை இறுகப் பிடித்தபடி அந்தப் பையனின் கார் அவர்களை நோக்கி வருவதை கவனித்தார். “அன்னா! கெட்டியாகப் பிடித்துக்கொள், அன்னா!” என்றதைத் தவிர வேறு எதுவும் அவரால் சொல்லமுடியவில்லை.


“கதி கலங்க வைக்கிறது” என்றாள் லாரா. “ ப்ர்ர்ர்” என்றபடி தலையைக் குலுக்கினாள்.


ஹெர்ப் தலையசைத்தான். தொடர்ந்து பேசினான். “தினமும் அவர் படுக்கைக்கருகில் கொஞ்சநேரம் உட்கார்ந்திருப்பேன். அவர் கால்மாட்டில் இருந்த ஜன்னலை வெறித்தபடி, அத்தனை பாண்டேஜ்களோடும் படுத்திருப்பார். அந்த உயரமான ஜன்னலில் மரங்களின் உச்சி மட்டுமே தெரியும். அதைத்தான் மணிக்கணக்காக பார்த்துக் கொண்டிருந்தார். மற்றவர் உதவியில்லாமல் தலையை அவரால் திருப்ப முடியாது. ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே தலையைத் திருப்ப அவருக்கு அனுமதிக்கப் பட்டிருந்தது. ஆனால் நான் அவரோடு பேசிக்கொண்டிருக்கும் நேரங்களில் அந்த ஜன்னலை மட்டும்தான் அவர் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். அவர் மிகவும் மனமுடைந்து போயிருந்தார். அவருடைய மனைவி வேகமாக குணமடைந்து வருகிறார், விரைவில் சரியாகிவிடுவார் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்ட பிறகு அவர் மேலும் தளர்ந்து போனார். அவர் கஷ்டத்திற்குக் காரணம் அவர் மனைவியோடு தன்னால் சேர்ந்து இருக்க முடியாதது. அவரைப் பார்க்கமுடியவில்லையே, தினமும் அவரோடு இருக்க முடியவில்லையே என்ற கவலை அவருக்குப் பெரிதாக இருந்தது. அவர்கள் 1927ல் திருமணம் செய்து கொண்டதாகவும், அதற்குப் பிறகு இரண்டே இரண்டு நாட்கள்தான் அவர்கள் பிரிந்திருந்ததாகவும் சொன்னார். அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தபோது அவர்களுக்குச் சொந்தமான கால்நடை பண்ணையில்தான் இருந்ததாகவும், அவர்கள் தினமும் ஒன்றாகப் பேசிக்கழித்துக் கொண்டிருந்ததாகவும் கூறினார். அவர்கள் பிரிந்திருந்த இரண்டு சந்தர்ப்பங்களாக, முதலில் 1940ல் அன்னாவின் அம்மா இறந்தபோது அவர் செயிண்ட் லூயிஸ்ஸுக்குச் சென்றதும், 1952ல் அவருடைய சகோதரி லாஸ் ஏஞ்செலீஸ்ஸில் காலமானபோது அவரது உடலைப் பெறுவதற்காகச் சென்றதும் மட்டும்தான் என்றார். அவர்களுக்கு ஓரிகானில் பெண்டுக்கு எழுபத்தைந்து மைல் தூரத்தில் ஒரு சிறிய கால்நடைப் பண்ணை இருந்திருக்கிறது. அதில்தான் அவர்களுடைய பெரும்பான்மையான வாழ்க்கையைக் கழித்திருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன் அதை விற்றுவிட்டு பெண்ட் நகருக்குக் குடிபெயர்ந்திருக்கின்றனர். இந்த விபத்து நடந்தபோது அவர்கள் ஹென்றியின் சகோதரியைப் பார்ப்பதற்காக டென்வர் சென்றுகொண்டிருந்தனர். எல் பாஸோவில் அவர்களுடைய ஒரு மகனையும் பேரக் குழந்தைகளையும் பார்த்துவிட்டு வரும் திட்டமும் இருந்தது. அவர்கள் மணவாழ்க்கை காலம் முழுக்க இரண்டே இரண்டு முறைகள் தான் பிரிந்திருந்தனர் என்கிறார். நினைத்துப் பாருங்கள். ஏசுவே, அவர் மனைவிக்காக ஏங்கிப் போயிருந்தார். ஏக்கம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை இந்த மனிதரைப் பார்ப்பதற்கு முன் அறிந்ததில்லை. அவர் மனைவியின் அருகாமைக்காக அவர் வாட்டமுற்றிருந்தார். நானும் ஒவ்வொருநாளும் அன்னாவின் உடல்நிலை முன்னேறிக்கொண்டே வருவதை அவருக்குத் தெரிவித்துக் கொண்டிருப்பேன். அவருடைய கட்டுகளும் பேண்டேஜ்களும் இப்போது பிரிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர் மிகவும் தனிமையில் வதங்கிக் கொண்டிருந்தார். அவருக்குக் கொஞ்சம் சுமாரானதும், அதாவது ஒரு வாரத்தில், அவரை சக்கர நாற்காலியில் அமர்த்தி அவருடைய மனைவியிடம் அழைத்துப் போவதாக வாக்களித்தேன். இதற்கிடையே அவரோடு தினமும் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தேன். 1920களின் பிற்பகுதியிலும் முப்பதுகளின் துவக்கத்திலும் அவர்களது பண்ணையில் கழித்த அவர்கள் வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் சொன்னார்.” ஹெர்ப் பேசுவதை நிறுத்திவிட்டு மேஜையில் அமர்ந்திருந்தவர்களை நிதானமாக பார்வையால் வருடினான். அவன் சொல்லப்போவதின் அசாத்தியத்தை உணர்ந்ததைப் போல தலையை ஆட்டிக்கொண்டான். “குளிர்காலத்தில் தொடர்ச்சியாகப் பனி பொழிந்து கொண்டிருக்கும்” என்று சொன்னார். மாதக்கணக்கில் பொழியுமாம். அவர்களால் பண்ணையை விட்டு வெளியே நகர முடியாது. சாலைகள் மூடப்பட்டிருக்கும். அதைத்தவிர கால்நடைகளுக்கு அந்தக் குளிர்கால மாதங்களில் தினமும் தீவனம் வைக்க வேண்டிய வேலையை அவர்தான் செய்யவேண்டும். அந்தப் பண்ணையில் அவரும் அவர் மனைவியும் மட்டும்தான் இருப்பார்கள். அப்போது அவர்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. மாதக்கணக்கில் இதே வழக்கமான நடைமுறை தான், மூன்றாவது நபர் என்று யாரையும் பார்க்கவோ பேசவோ முடியாது. இரண்டு பேர் மட்டும். ஆனால் அவர்களுக்கு அது போதுமானதாக இருந்தது. ‘பொழுதைப் போக்க என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டேன். சீரியஸாகத்தான் கேட்டேன். எனக்குத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. மனிதர்கள் இதைப்போல எப்படி வாழமுடியும் என்று ஆச்சரியமாக இருந்தது. இந்தக் காலத்தில் யாராவது இப்படி வாழமுடியுமென்று தோன்றுகிறதா? சாத்தியமே இல்லை. அவர் என்ன சொன்னார் தெரியுமா? அவர் அப்படியே படுத்தபடி யோசித்தார். கொஞ்சநேரம் எடுத்துக்கொண்டார். பின் சொன்னார்; ‘ஒவ்வொரு இரவிலும் நாங்கள் நாட்டியமாடச் சென்றோம்’ ‘என்ன?’ என்று கேட்டேன். ‘மன்னிக்கவும் ஹென்றி’, என்று அவரருகே குனிந்து ‘சரியாகக் கேட்கவில்லை’ என்றேன். ‘நடனத்திற்குச் செல்வோம் ஒவ்வொரு இரவிலும்’ என்றார் மறுபடியும். அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. அவர் தொடர்ந்து பேச காத்திருந்தேன். அவர் அந்தக் காலத்தை மீண்டும் நினைவு பtuத்திப் பார்த்தார். சிறிது நேரம் கழித்து,’ ‘எங்களிடம் விக்ட்ரோலாவும் சில ரிகார்டுகளும் இருந்தன டாக்டர். ஒவ்வொரு இரவிலும் விக்ட்ரோலாவைப் போட்டு ரிகார்டுகளைக் கேட்டபடி வசிப்பறையில் நடனமாடுவோம்.


‘தினமும் இரவுகளில் நடனமாடுவோம். சில நேரங்களில் வெளியே பனி பொழிந்து கொண்டிருக்கும். வெப்பநிலை பூஜ்யத்துக்குக் கீழே இருக்கும். ஜனவரியிலும் பிப்ரவரியிலும் வெப்பநிலை வெகுவாகக் குறைந்துவிடும். காலுறை அணிந்து கொண்டு வசிப்பறையில் எல்லா ரிக்காடுகளையும் கேட்டு முடிப்போம். பிறகு கணப்பை மூட்டிவிட்டு, ஒரே ஒரு விளக்கைத் தவிர எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு படுக்கைக்குச் செல்வோம். சில இரவுகளில் வெளியே பனி பொழிகிற மெல்லிய சத்தம் கேட்கும். உண்மைதான் டாக்டர்” என்றார். ‘உங்களால் கேட்கமுடியும், சில நேரங்களில் வெளியே நிசப்தமாக இருக்கும்போது பனி விழுகிற சத்தம் கேட்கும். நீங்கள் அமைதியாக இருந்தால், மனம் தெளிவாக இருந்தால், நிம்மதியாக இருந்தால் இருட்டில் படுத்துக்கொண்டு பனி விழும் ஒலியைக் கேட்க முடியும். முயற்சி செய்து பாருங்கள்’ என்றார். ‘இங்கே எப்போதாவதுதான் பனி பொழியும் இல்லையா? முயன்று பாருங்கள். எது எப்படியோ ஒவ்வோர் இரவும் நாங்கள் நடனமாடச் செல்வோம். அப்புறம் படுக்கைக்குச் சென்று போர்வை மேல் பேர்வையாகப் போர்த்திக்கொண்டு கதகதப்பாக காலை வரை தூங்குவோம். தூங்கி எழுந்திருக்கும்போது உங்கள் மூச்சை உங்களால் பார்க்கமுடியும்,’ என்றார்.


“அவருடைய கட்டுகள் எல்லாவற்றையும் பிரித்துவிட்டதால், அவர் குணமானதும் சக்கர நாற்காலியில் உட்காரவைத்து ஒரு நர்ஸீம் நானும் அவரை அவருடைய மனைவி இருக்கும் பிரிவுக்குத் தள்ளிச்சென்றோம். அன்று காலை அவர் சவரம் செய்துகொண்டு லோஷன் போட்டுக்கொண்டிருந்தார். அவர் அவரது குளியலறை உடுப்பிலும் மருத்துவமனை கவுனிலும் இருந்தார். ஆனாலும் சக்கர நாற்காலியில் விறைப்பாக உட்கார்ந்து வந்தார். இருப்பினும் அவர் பதற்றத்தோடு இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அன்னாவின் அறையை நாங்கள் ‘நெருங்க , அவர் நிறம் சிவந்தது. அவர் முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பை என்னால் வர்ணிக்க முடியாது. சக்கர நாற்காலியை நான் தள்ளிக்கொண்டு சென்றேன். நர்ஸ் பக்கத்தில் நடந்து வந்தாள். இந்தச் சூழ்நிலை அந்த நர்ஸுக்கு புரிந்திருந்தது. செவிலியர்கள் பொதுவாக கலக்கமடைய மாட்டார்கள். எவ்வளவோ பார்த்திருப்பதால், அவர்கள் அவ்வளவு சுலபத்தில் உடைந்துவிட மாட்டார்கள், ஆனால் இது அவளை அன்று காலை முதலே உலுக்கியெடுத்திருந்தது. கதவு திறந்திருந்தது. ஹென்றியை அறைக்குள் தள்ளிச் சென்றேன். திருமதி அன்னா கேட்ஸ் இன்னும் அசையமுடியாமல்தான் படுத்திருந்தார். தலையையும் இடது கையையும் அசைக்க முடிந்தது. அவர் கண்களை மூடியிருந்தார். நாங்கள் அறைக்குள் நுழைந்ததுமே அவர் கண்கள் சட்டென்று திறந்தன. அவருக்கு இன்னமும் இடுப்புக்கு கீழே மாவுகட்டு பிரிக்கப்படாமலிருந்தது. ஹென்றியை அவரது இடப்புறமாகத் தள்ளிச்சென்று, ‘அன்னா, உங்களுக்கு ஒரு துணை கிடைத்திருக்கிறது,’ என்றேன். அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. அவர் மெலிதாகப் புன்னகைத்தார். முகம் பிரகாசமுற்றது.


போர்வையின் அடியிலிருந்து அவரது கை வெளியே வந்தது. அது நீலம் பாரித்து கன்றிப் போயிருந்தது. ஹென்றி அந்தக் கையை தன் கைகளுக்குள் பொதித்துக்கொண்டார். எடுத்து முத்தமிட்டார். ‘ஹலோ, அன்னா. என் செல்லமே, எப்படியிருக்கிறாய்? என்னைத் தெரிகிறதா?’ என்றார். அன்னாவின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. அவர் தலையசைத்தார். ‘உன்னைப் பிரிந்து பல நாட்கள்...’ என்றார். அன்னா தொடர்ந்து தலையசைத்துக் கொண்டிருந்தார். நர்ஸும் நானும் அறையை விட்டு வெளியேறினோம், அறைக்கு வெளியே வந்ததும் நர்ஸ் உடைந்து பெருகினாள். அவள் ஒரு தைரியமான பெண்தான். என்ன ஒரு அனுபவம்! அதன்பிறகு ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் அவரை அங்கே அழைத்துச்சென்றோம். அன்னாவின் அறையிலேயே மதிய உணவும் இரவு உணவும் உண்ண ஏற்பாடு செய்தோம். இடையிலுள்ள நேரங்களில் அவர்கள் கைகளைப் பிணைத்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள், அப்படி என்னதான் பேசுவார்களோ!’


“ஹெர்ப், இதை இதற்கு முன் நீங்கள் சொல்லவேயில்லை” என்றாள் டெர்ரி. “விபத்து நடந்த அன்று லேசாகச் சொன்னீர்கள். அதற்குப் பிறகு எதையுமே சொல்லவில்லை. உங்கள் தலையில் இடி விழ! இப்போது சொல்லி என்னை அழ வைக்கிறீர்கள். ஹெர்ப், இந்தக் கதைக்கு சோகமான முடிவு இருக்கவேண்டாம். அப்படி இல்லைதானே? நீங்கள் சும்மாவேனும் கதை அளக்கிறீர்களா? சோகமாக இருந்தால் இதற்கு அப்புறம் எதுவும் சொல்லவேண்டாம். இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.”


லாரா, “அவர்களுக்கு என்ன ஆனது ஹெர்ப்?” என்றாள். “தயவு செய்து முடியுங்கள். இன்னும் கதை இருக்கிறதா? நானும் டெர்ரியைப் போலத்தான். அவர்களுக்கு எதுவும் நடக்கக் கூடாது.”


“அவர்கள் இப்போது நன்றாக இருக்கிறார்களா?” என்று கேட்டேன். நானும் கதையில் ஆழ்ந்துவிட்டேன். ஆனால் போதை தலைக்கு ஏறியிருந்தது. மனதைக்குவிக்க முடியவில்லை. அறையிலிருந்த வெளிச்சம் அந்த ஜன்னல் வழியாக, வந்த வழியிலேயே வெளியே சென்றுகொண்டிருப்பதைப் போலிருந்தது. யாரும் மேஜையிலிருந்து எழுந்து விளக்கைப் போடுகிற மாதிரி தெரியவில்லை.


“ஆம், அவர்கள் நலமாகவே இருக்கிறார்கள்,” என்றான் ஹெர்ப். “அதற்குப் பிறகு சில நாட்கள் கழித்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்கள். சில வாரங்களுக்கு முன்புதான். கொஞ்சநாள் கழித்து ஹென்றி கவட்டுக்கட்டை வைத்து நடக்கத் தொடங்கினார். பின்பு ஊன்றுகோல் வைத்து நடந்தார். அப்புறம் மருத்துவமனை முழுக்க சுற்றி வந்தார். முழு உற்சாகம் அவருக்குத் திரும்பிவிட்டது. ஒவ்வொரு நாளும் அவருடைய மனைவியைப் பார்ப்பதே அவருக்கு தெம்பை அதிகரித்து வந்தது. அன்னா படுக்கையிலிருந்து எழுந்திருக்க முடிந்ததும், அவர்களுடைய மகன் எல் பாஸோவிலிருந்து அவன் மனைவியோடு ஒரு பெரிய வண்டியை எடுத்து வந்தான். அவன் பெற்றோர்களை கூட்டிச் சென்றுவிட்டான். அன்னாவுக்கு இன்னும் சிகிச்சைகள் தேவைப்பட்டு வருகிறது, ஆனால் குணமாகிக் கொண்டு வருகிறார். ஹென்றியிடமிருந்து சில நாட்களுக்கு முன் ஒரு கார்டு வந்தது. அதனால்தான் அவர்கள் ஞாபகம் இப்போது வந்தது. அதுவும் நாம் காதலைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததால்.”


“கேளுங்கள்” ஹெர்ப் தொடர்ந்தான். “இந்த ஜின்னை முடித்து விடலாம். நிறைய மிச்சமிருக்கிறது. அப்புறம் சாப்பிடப்போகலாம். ‘தி லைப்ரரி’க்குப் போகலாம். என்ன சொல்கிறீர்கள்? அந்த இடத்தை நீங்கள் பார்க்கவேண்டுமே. ஒவ்வொரு நாளும் ஏதோ புதிதாக அங்கே வந்து கொண்டேயிருக்கிறது. அவரோடு நான் பேசிக்கொண்டிருந்த சில விஷயங்கள்... அந்த நாட்களை நான் மறக்கவே மாட்டேன். ஆனால் அதைப் பற்றிப் பேசியதில் என் மனம் சோர்வடைந்து விட்டது. திடீரென்று மிகவும் துக்கமாக இருக்கிறது.”


”சோர்வடையாதீர்கள், ஹெர்ப் “ என்றாள் டெர்ரி. “ஹெர்ப், ஒரு மாத்திரை எடுத்துக்கொள்ளுங்களேன்” அவள் லாராவின் பக்கம் திரும்பி, “ஹெர்ப் இந்த மன எழுச்சி மாத்திரைகள் சாப்பிடுவது வழக்கம். இது ஒன்றும் ரகசியமில்லையே ஹெர்ப்?”


ஹெர்ப் தலையை ஆட்டினான். “என்னவெல்லாம் இருக்கிறதோ அவையெல்லாவற்றையும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்திருக்கிறேன். ரகசியம் எதுவுமில்லை”


“என் முதல் மனைவி கூட சாப்பிடுவாள்” என்றேன்.


“அவை அவளுக்கு உதவியிருக்கிறதா?” லாரா கேட்டாள்.


“இல்லை, மாத்திரை சாப்பிட்ட பிறகும் சோர்வோடுதான் இருப்பாள். நிறைய அழுவாள்.”


“சிலர் மனவருத்த நோயுடனே பிறக்கிறார்கள் என்று நினைக்கிறேன்,” என்றாள் டெர்ரி. “ சிலர் துக்கத்தோடு பிறக்கிறார்கள். துரதிருஷ்டசாலிகளாக சிலரைப் பார்த்திருக்கிறேன், எல்லா விஷயங்களிலும் துரதிருஷ்டசாலிகளாகவே இருப்பார்கள். வேறு சிலரோ - அன்பே, நான் உங்களைச் சொல்லவில்லை-தம்மைத்தாமே துக்கப்படுத்திக்கொண்டு வருத்தமாகவே பொழுதை கழிப்பார்கள்.” அவள் மேஜையில் இருந்த எதையோ விரலால் தேய்த்துக்கொண்டிருந்தாள். பின் தேய்ப்பதை நிறுத்தினாள்.


“சாப்பிடப்போவதற்கு முன் என் குழந்தைகளைக் கூப்பிட வேண்டும்,” என்றான் ஹெர்ப். “உங்களுக்குப் பரவாயில்லையா? அதிக நேரமாகாது. வேகமாகக் குளித்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு சாப்பிடப் போகலாம்”


“அதற்கு நீங்கள் மஜோரியிடம் பேசவேண்டியிருக்கும் ஹெர்ப். அவள் முதலில் போனை எடுக்கிறாளா என்று பார்க்கலாம். அது ஹெர்பின் முன்னாள் மனைவி. மஜோரியைப் பற்றித்தான் நீங்கள் கேள்விப்பட்டியிருப்பீர்களே. இப்போது அவளிடம் பேச வேண்டாம் ஹெர்ப். அது உங்களுக்கு மேலும் மனச்சோர்வை ஏற்படுத்தி விடும்.”


“இல்லை, நான் மஜோரியிடம் பேசப்போவதில்லை. என் பிள்ளைகளிடம் பேசப்போகிறேன். அவர்களைப் பார்க்காமல் பேசாமல் நான் வாடிப் போயிருக்கிறேன். எனக்கு ஸ்டீவ்வை பார்க்கவேண்டும். அவன் குழந்தையாக இருந்தபோது நடந்த வற்றையெல்லாம் நேற்றிரவு தூக்கம் வராமல் யோசித்துக் கொண்டிருந்தேன். அவனோடு பேசவேண்டும். கேத்தியுடன் கூட பேசவேண்டும். அவர்களுடைய அம்மா தொலைபேசியை எடுத்தால் எடுக்கட்டும். நாய்க்குப் பிறந்தவள்.”


“அவள், சீக்கிரம் வேறு கல்யாணம் பண்ணித் தொலைக்க வேண்டும், அல்லது செத்துத் தொலைக்க வேண்டும் என்று ஹெர்ப் கூறாத நாளில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால், அவளால் எங்களுக்கு திவாலாகிறது. இரண்டு குழந்தைகளையும் அவள்தான் வைத்துக் கொண்டிருக்கிறாள். கோடையில் ஒரே ஒரு மாதம்தான் அவர்கள் இங்கே வரமுடியும். அவரை வெறுப்பேற்றுவதற்காகவே அவள் கல்யாணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்துகிறாள் என்று ஹெர்ப் சொல்கிறார். அவளுக்கு ஒரு ஆண் சிநேகிதன் இருக்கிறான். அவர்களோடுதான் அவனும் இருக்கிறான். ஹெர்ப் அவனுக்கும் சேர்த்து செலவுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.”


“அவளுக்குத் தேனீக்கள் என்றால் அலர்ஜி,” என்றான் ஹெர்ப். “அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகவேண்டுமென்று நான் கடவுளை வேண்டிக்கொள்ளாவிட்டால், அவள் கிராமப் பகுதிக்குப் போகும்போது தேனீக்கூட்டம் அவள் மேல் மொய்த்து, கடிபட்டு அவள் செத்துப்போகவேண்டுமென்று பிரார்த்தனை செய்வேன்.”


“ஹெர்ப், இது கொடூரம்,” என்று லாரா கண்ணீர் வருமளவு சிரித்தாள்.


”கொடூரமான வேடிக்கை,” என்றாள் டெர்ரி. நாங்கள் அனைவரும் சிரித்தோம். நாங்கள் சிரித்தோம், மேலும் சிரித்தோம்.


“புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” என்று விரல்களை தேனீக்களாக்கிக் கொண்டு ஹெர்ப், டெர்ரியின் தொண்டையிலும் நெக்லஸ்ஸிலும் கொத்தினான். சட்டென்று தளர்ந்து சரிந்து அமர்ந்தான். மீண்டும் சீரியசான முகபாவத்திற்கு மாறினான்.


“அவள் ஒரு அழுகிப்போன பெட்டைநாய், உண்மையைத்தான் சொல்கிறேன்,” என்றான். “ கேடுகெட்ட பெண். சில நேரங்களில் இப்போது குடித்திருப்பதைப் போல நல்ல போதையில் இருக்கும்போது, ஒரு தேனீ வளர்ப்பவன் போல பெரிய தொப்பி, கெட்டியான கையுறை, தடிமனான கோட் அணிந்து, அவள் அறைக்குள் நுழைந்து ஒரு பெட்டி நிறைய தேனீக்களை அவள் மேல் ஏவி விடலாமாவென்று தோன்றும். ஆனால் முதலில் என் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டுத்தான் அதைச் செய்ய வேண்டும்.” கொஞ்சம் சிரமத்தோடு கால்மேல் காலைத்தூக்கிப்போட்டான். உடனே இரண்டு கால்களையும் தொங்கவிட்டு, மேஜைமேல் முழங்கைகளை ஊன்றியபடி முன்னால் குனிந்தான். முகவாயை உள்ளங்கைகளில் தாங்கிகொண்டும்,” டெர்ரி, நீ சொல்வது சரி. அது நல்ல ஐடியாவாக இருக்காதுதான். சரி, நான் போய் ஒரு அவசரக்குளியல் போட்டு விட்டு, உடையை மாற்றிக்கொண்டு வருகிறேன். சாப்பிடப் போகலாம். என்ன சொல்கிறீர்கள்?”


“எனக்கு சம்மதம்,” என்றேன். “சாப்பாடோ இல்லையோ. அல்லது தொடர்ந்து குடிப்பதோ. சூரியாஸ்தமனத்துக்குள் நேராகச் சென்றுவிடுவேன்.”


“அப்படியென்றால்?” லாரா என்னைப் புதிராகப் பார்த்தப்படி கேட்டாள்.


“அப்படியென்றால், நான் சொன்னதுதான். வேறெதுவுமில்லை. அதாவது, நான் தொடர்ந்து போய்க்கொண்டேயிருப்பேன். அதுதான் அர்த்தம். ,அதைத்தான் சூரியாஸ்தமனம் எனலாம்.” சூரியன் மறைந்துகொண்டிருக்க சன்னல் கண்ணாடியில் இப்போது செம்மை படர்ந்திருந்தது.”


“நான் ஏதாவது சாப்பிடுகிறேன்,” என்றாள் லாரா.”பசிப்பது இப்போதுதான் உறைக்கிறது. கொறிக்க என்ன இருக்கிறது?”


“கொஞ்சம் பாலாடைக்கட்டியும் பிஸ்கட்டுகளும் தருகிறேன்.” என்றாள் டெர்ரி. ஆனால் எழுந்திருக்கவில்லை. உட்கார்ந்தே இருந்தாள்.


ஹெர்ப் அவனது பானத்தை முடித்தான். மேஜையிலிருந்து மெதுவாக எழுந்து, “ எக்ஸ்க்யூஸ் மீ, குளிக்கப் போகிறேன்” என்றான். சமையலறையை விட்டு மெதுவாக ஹாலை நோக்கி நடந்தான். போகும்போது கதவை சாத்திக்கொண்டு போனான்.


“ஹெர்ப் பற்றி எனக்கு கவலையாக இருக்கிறது.” என்றாள் டெர்ரி. தலையைக் குலுக்கிக் கொண்டாள். “சில நேரங்களில் வழக்கத்தை விட அதிகமாகக் கவலையாயிருக்கும். இப்போ தெல்லாம் உண்மையிலேயே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அவள் தனது கோப்பையை வெறித்தாள். பாலாடைக் கட்டியையும் பிஸ்கட்டுகளையும் எடுத்துத்தர அவள் நகர்வதாகத் தெரியவில்லை. நானே எழுந்து ரிப்ரிஜிரேட்டரில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாமென்று முடிவெடுத்தேன்.


லாரா பசி தாங்கமாட்டாள். “நிக், நீங்களே போய் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். எது நன்றாகத் தெரிகிறதோ எடுத்துவாருங்கள். பாலாடைக்கட்டி அங்கே இருக்கிறது. ஸலாமி ஸ்டிக் கூட இருக்கிறதென்று நினைக்கிறேன். அடுப்புக்கு மேலேயிருக்கும் அலமாரியில் பிஸ்கட்டுகள் இருக்கின்றன. நான் மறந்துவிட்டேன். ஏதாவது கொறிக்கலாம். எனக்குப் பசியில்லை, ஆனால் உங்களுக்கு நல்ல பசியிருக்கும். எனக்கு இப்போதெல்லாம் பசியே எடுப்பதில்லை. நான் என்ன சொல்லிக்கொண்டிருந்தேன்?” அவள் கண்களை மூடித்திறந்தாள். “உங்களிடம் இதைச் சொல்லியிருக்கிறோமா என்று தெரியவில்லை. சொல்லியிருக்கலாம், ஞாபகமில்லை. ஹெர்பின் முதல் திருமணம் முறிந்து அவர் மனைவி குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு டென்வர் போய்விட்டதும் அவருக்கு தற்கொலை எண்ணங்கள் எல்லாம் வரத்தொடங்கிவிட்டன. ஒரு மனநல மருத்துவரிடம் மாதக்கணக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இப்போது கூட அங்கே சென்று வரவேண்டுமென்று சிலநேரம் கூறுகிறார்.” காலி பாட்டிலை எடுத்து அவள் கோப்பையின் மேல் கவிழ்த்தாள். சமையலறை மேடையில் ஸலாமியை ஜாக்கிரதையாக வெட்டிக்கொண்டிருந்தேன். “இப்போதெல்லாம் மறுபடியும் தற்கொலை பற்றி பேசுகிறார். குறிப்பாக குடிக்கும்போது. சில நேரங்களில் அவர் மிகவும் பலவீனமானவராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். தற்காப்புக்காக அவரிடம் எதுவுமில்லை. எதையும் எதிர்த்து நிற்கக்கூடிய திராணி அவருக்கில்லை.” என்றாள். “நானும் ரெடியாக வேண்டும். முகத்தைக் கழுவிக்கொண்டு கொஞ்சம் லிப்ஸ்டிக் போட்டுக்கொள்கிறேன். நீங்கள் இரண்டு பேரும் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இதேபோல் ஒருவர் மேல் ஒருவர் காதலோடு இருக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இன்றிலிருந்து நான்கு வருடங்கள் கழித்து ஒரு கட்டம் வரும். உண்மை நிதர்சனமாகும் கட்டம். இந்த விஷயத்தில் நான் சொல்வது இவ்வளவுதான்.” அவளுடைய மெலிந்த கைகளை அணைத்துக் கொண்டு மேலும் கீழுமாக வருடிக்கொண்டாள். கண்களை மூடிக்கொண்டாள்.


நான் மேஜையிலிருந்து எழுந்து லாராவின் நாற்காலிக்குப் பின்னால் சென்றேன். பின்னாலிருந்து அவள் மேல் குனிந்து மார்புக்குக்குறுக்கே கைகளை பிணைத்துக் கொண்டேன். அவள் முகத்தின் மேல் என் முகத்தைப் பதித்துக் கொண்டேன். லாரா என் கைகளை அழுத்தினாள். மேலும் அழுத்தமாக என் கையை பிடித்து இறுக்கினாள்.


டெர்ரி அவள் கண்களைத் திறந்தாள், எங்களைப் பார்த்தாள். தனது கோப்பையை எடுத்தாள். “உங்களுக்காக,” என்றாள். “நம்மெல்லோருக்காகவும்.” அவள் கோப்பையை காலி செய்தாள். ஐஸ் கட்டிகள் அவள் பற்களுக்கிடையில் கிணுகிணுப்பது வெளியே கேட்டது. “கார்ல்லுக்காகவும்,” கோப்பையை மேஜை மேல் வைத்துவிட்டுச் சொன்னாள். “கார்ல் பாவம். ஹெர்ப் அவனை ஒரு கிறுக்கன் என்று நினைக்கிறார்,. ஆனால் ஹெர்ப்புக்கு அவன் மேல் உண்மையாகவே பயம் இருந்தது. கார்ல் கிறுக்கன் அல்ல. அவன் என்னைக் காதலித்தான், நான் அவனைக் காதலித்தேன். அவ்வளவுதான். அவனை இப்போது கூட சில நேரங்களில் நினைத்துக்கொள்கிறேன். அதுதான் உண்மை. அதைச் சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. சில நேரங்களில் அவன் நினைப்பு, பழைய ஞாபகம் ஏதாவது திடீரென்று எட்டிப்பார்க்கும். ஒன்று சொல்கிறேன். வாழ்க்கை எப்படி ஒரு நாடகமாகி விடுகிற தென்று பாருங்கள். அது உங்களுக்குச் சொந்தமாக இருப்பதில்லை. அப்படித்தான் இருக்கிறது. அவனால் நான் கர்ப்பமாயிருந்தேன். அப்போதுதான் அவன் முதன்முதலாக எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றான். நான் கர்ப்பமாக இருப்பது அவனுக்குத் தெரியாது. நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. நான் கருச்சிதைவு செய்துகொள்ள முடிவெடுத்தேன். அவனிடம் அதைப் பற்றிச் சொல்லவில்லை. இப்போது நான் சொல்வது எதுவுமே ஹெர்ப்புக்கு தெரியாதவையல்ல. ஹெர்ப்புக்கு எல்லாமே தெரியும். எனக்கு கருச்சிதைவு செய்ததே ஹெர்ப்தான். ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா? கார்ல் வெறி பிடித்தவனாக அந்த சமயத்தில் இருந்தான். அவன் குழந்தை எனக்கு வேண்டாம் என்று தோன்றிவிட்டது. ஆனால் அவன் இம்முறை தற்கொலை செய்துகொண்டுவிட்டான். ஆனால் அவன் போனபிறகு, அவனைப் பற்றி எதுவும் பேசவோ, அவன் பக்கத்து நியாயத்தை யோசிக்கவோ, அவனைப்பற்றி பயப்படவோ அவசியமில்லாமல் ஆனபிறகு, எனக்கு பெரும் மன உளைச்சலாக இருந்தது. அவனுடைய குழந்தையை கலைத்துவிட்டேனே என்று மனமுடைந்து போனேன். கார்ல்லை நான் நேசிக்கிறேன், அதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. இப்போதும் அவனை நேசிக்கிறேன்! ஆனால் தெய்வமே, நான் ஹெர்ப்பையும் தானே நேசிக்கிறேன்! அது உங்களுக்குத் தெரியும், இல்லையா? நான் அதைச் சொல்ல வேண்டியதில்லை. ஓ இவையெல்லாமே மிகையாகப் போய்விட்டது, இல்லையா?” அவள் முகத்தை கைகளில் புதைத்துக்கொண்டு அழத்தொடங்கினாள். மெதுவாகக் குனிந்து மேஜையின் மேல் தலையை சாய்த்துக்கொண்டாள்.


லாரா அவளது உணவுத் தட்டை கீழே வைத்தால். எழுந்து அவளிடம் சென்று, “டெர்ரி, அன்பே” என்று கிசுகிசுத்தப்படி டெர்ரியின் கழுத்தையும் முதுகையும் தேய்த்துக்கொடுத்தாள்.


நான் ஒரு ஸலாமி துண்டை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அறை மிகவும் இருட்டாகி விட்டிருந்தது. வாயில் இருந்ததை மெல்வதை நிறுத்தி, விழுங்கிவிட்டு, சன்னலை நோக்கிச் சென்றேன். வெளியே கொல்லைப்புறத்தை பார்வையால் துழாவினேன். ஆஸ்பென் மரத்தையும், புல்வெளி நாற்காலிகளுக்கிடையில் தூங்கிக் கொண்டிருந்த இரு கருப்பு நாய்களையும் வெறித்தேன். என் பார்வை நீச்சல் குளத்தைத் தாண்டி, கதவு திறந்திருந்த அச்சிறிய தொழுவத்தையும், காலியான குதிரை லாயத்தையும் கடந்து சென்றது. காட்டுப்புற்கள் வளர்ந்திருக்கும் இடத்தை வேலியிட்டிருந்தது. அதற்கும் பின்னால் இன்னொரு பண்ணை, அதைத் தாண்டினால் ஆல்பு கெர்கீ வையும் எல் பாஸோவையும் இணைக்கும் ‘இண்டர்ஸ்டேட்’. நெடுஞ்சாலையில் கார்கள் போய்வந்தபடி இருந்தன. ம்லைகளுக்குப் பின்னால் சூரியன் சரிந்துகொண்டிருந்தது. மலைத்தொடர் கருத்திருந்தது. எங்கும் நிழல்கள் விரவியிருந்தன. என் பார்வையில் படும் விஷயங்களை மென்மையாக்குவதைப் போல கூடவே வெளிச்சமும் இருந்தது. குளிர்காலம் போல மலையுச்சியருகே வானம் சாம்பல் நிறத்தில் இருந்தது. சாம்பல் வானத்துக்கு மேலே நீலவானம் வெப்பமண்டல போஸ்ட்கார்டு போட்டோக்களில் போல, மத்திய தரைக்கடல் நீலத்தைப் போல தீட்டியிருந்தது. குளத்தின் நீர் பரப்பில் சிற்றலைகளை பெருக்கித் தள்ளிய மென்காற்று ஆஸ்பென் இலைகளையும் நடுங்க வைத்தது. இந்த நாய்களில் ஒன்று ஏதோ சமிக்ஞை கிடைத்தாற்போல தலையை உயர்த்தி, காதுகளை நிமிர்த்தி ஒரு நிமிடம் உற்றுக்கேட்டுவிட்டு, தலையை பாதங்களுக்கிடையே புதைத்துக் கொண்டது.


ஏதோ நடக்கபோகிறது என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. இந்த நிழல்களிலும் வெளிச்சத்திலும் இருக்கும் மெதுவான தன்மையில் அது இருந்தது. அது எதுவாக இருந்தாலும் அது என்னைத் தன்னுடனே கொண்டு சென்று விடுமென்று தோன்றியது. அது நிகழ்வதற்கு எனக்கு விருப்பமில்லை. புற்களின் ஊடாக காற்று அலையாக தழுவிக் கொண்டு செல்வதை பார்த்துக்கொண்டி ருந்தேன். காற்றில் புற்கள் வளைந்து, பின் நிமிர்வதைப் பார்க்க முடிந்தது. அந்த இரண்டாவது வயல் நெடுஞ்சாலை வரைக்கும் மேடிட்டிருந்தது. காற்று அலையலையாக மேடேறிப்போய்க் கொண்டிருந்தது. நான் அங்கேயே நின்றுகொண்டு புல்லிதழ்கள் காற்றில் வளைவதைப் பார்க்க காத்துக்கொண்டிருந்தேன். என் இதயம் துடிப்பதை என்னால் கேட்கமுடிந்தது. வீட்டின் பின்புறத்தில் எங்கேயோ குளியலறை ஷவர் சரிந்து கொண்டிருப்பது கேட்டது. டெர்ரி இன்னமும் அழுது கொண்டிருந்தாள். மெதுவாக, யத்தனப்பட்டு அவளைப் பார்க்கத்திரும்பினேன். அவள் மேஜை மீது தலையை சாய்த்திருந்தாள். முகம் அடுப்பை நோக்கியிருந்தது. அவள் கண்கள் திறந்திருந்தன. ஆனால் அவ்வப்போது கண்ணைச் சிமிட்டி சிமிட்டி கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தால். லாரா நாற்காலியை இழுத்து அவளருகே போட்டுக்கொண்டு டெர்ரியின் தோளை அணைத்தபடி அவள் செவியில் என்னவோ கிசுகிசுத்துக் கொண்டிருந்தாள்.


“நிச்சயம், நிச்சயம்,” என்றாள் டெர்ரி. “அதைப் பற்றிச் சொல்”


“டெர்ரி, ஸ்வீட் ஹார்ட், “ லாரா மிருதுவாகப் பேசினாள். “எல்லாம் சரியாகிவிடும், நீயே பாரேன். எல்லாம் சரியாகிவிடும்.”


லாரா அவள் கண்களை உயர்த்தி என் பார்வையை சந்தித்தாள். அவள் பார்வை கூர்மையாகத் துளைப்பதாக இருந்தது. என் இதயம் மெதுவாகியது. நெடுநேரம் என்று தோன்றுமளவுக்கு என் கண்களையே வெறித்தபடியிருந்தாள். பின் தலையை அசைத்தாள். அதுமட்டும்தான் செய்தாள். அவள் கொடுத்த ஒரே சைகை. ஆனால் அது போதும். கவலைப்படாதீர்கள், இதைக் கடந்து சென்று விடுவோம், எல்லாம் நன்றாகவே நடக்கப் போகிறது, நீங்களே பார்க்கப் போகிறீர்கள் என்று அவள் சொல்வதைப் போல இருந்தது. அந்தப் பார்வையை அப்படித்தான் என்னால் கருத முடிந்தது, நான் நினைப்பது தவறாக இருக்கலாம் என்ற போதிலும் கூட.


ஷவர் சரிவது நின்றது. அடுத்த நிமிடம் ஹெர்ப் சீழ்க்கையடித்தபடியே குளியலறைக் கதவை திறப்பதைக் கேட்டேன். மேஜையில் அமர்ந்திருந்த பெண்களையே பார்த்தபடியிருந்தேன். டெர்ரி இன்னமும் கரைந்துகொண்டிருந்தாள். லாரா அவள் முடியைக் கோதிக் கொண்டிருந்தாள். நான் சன்னலுக்குத் திரும்பினேன். வானத்தின் நீலத் தீற்றல் இப்போது விலகி மற்ற பகுதியைப் போலவே இருண்டுகொண்டிருந்தது. ஆனால் நட்சத்திரங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. வெள்ளியை அடையாளம் கண்டுபிடித்தேன். அதிலிருந்து வெகுதூரம் தாண்டி, ஓரத்தில் வெள்ளியளவுக்கு பிரகாசமாக இல்லாவிட்டாலும் தொடுவானத்தில் செவ்வாய். காற்று வேகம் பிடித்தது. காலியான வயல்களில் அது என்ன செய்கிறது என்பதைப் பார்க்க பார்வையை திருப்பினேன்.


மெக்கின்னிஸ் தம்பதியினர் இப்போதெல்லாம் குதிரைகளை வளர்க்காதிருப்பது துரதிருஷ்டவசமானது என்று காரணமே இல்லாமல் நினைத்தேன். இந்த ஏறக்குறைய இருட்டில் இந்த வயல்களினூடே குதிரைகள் நாலுகால் பாய்ச்சலில் ஓடுவதையும், அல்லது வேலிக்கருகே தலையை எதிரெதிர் திசைகளில் திருப்பிக் கொண்டு வெறுமனே நின்றுகொண்டிருப்பதையும் கற்பனை செய்ய விரும்பினேன். சன்னலில் நின்றபடி காத்திருந்தேன். கண்ணில் படுவதற்கு ஏதாவது ஒன்று வரும்வரை அந்த வீட்டுக்கு வெளியே உற்றுப் பார்த்துக்கொண்டு இன்னும் கொஞ்சநேரம் நின்று கொண்டிருக்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்தது.

Comments


© 2025 by G. Kuppuswamy

bottom of page