top of page

எங்கிருந்து அழைக்கிறேன் - ரேமண்ட் கார்வர்

Raymond Carver Typing Short Story

தமிழில் : ஜி.குப்புசாமி


ஜே.பி.யும் நானும் ஃபிராங்க் மார்டினின் குடிநோயர் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தின் முகமண்டபத்தில் இருக்கிறோம். ஃபிராங்க் மார்டின் மையத்தில் இருந்த எங்கள் எல்லோரையும் போலவே ஜே.பியும் ஒரு குடிநோயர்தான். அதுமட்டுமல்லாமல் அவன் ஒரு புகைப்போக்கி துப்புரவாளனும் கூட. அவனுக்கு இங்கே முதல்முறை. பயந்திருக்கிறான். நான் இதற்குமுன் ஒருமுறை இங்கே இருந்திருக்கிறேன். என்ன சொல்ல? திரும்ப வந்துவிட்டேன். ஜே.பியின் உண்மையான பெயர் ஜோ பென்னி. ஆனால் அவனை ஜே.பி.என்று கூப்பிடச் சொல்கிறான். முப்பது வயது இருக்கலாம். என்னைவிட இளையவன். அதிகமல்ல, கொஞ்சம். திரும்பவும் வேலைக்குச் செல்லவேண்டும்,எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக என்று சொல்லிக்கொண்டிருக்கிறான். பேசும்போது கைகளை அதீதமாக ஆட்டி ஆட்டி ப் பேசுகிறான். ஆனால் அவன் கைகள் நடுங்குகின்றன. தொடர்ந்து உதறிக்கொண்டே இருக்கின்றன. ”இதுபோல இதற்குமுன் எனக்கு ஆனதேயில்லை,” என்கிறான். இந்த கைநடுக்கத்தைதான் சொல்கிறான். அவனுக்கு ஆறுதல் சொல்கிறேன். நடுக்கம் குறைந்து சரியாகிவிடும் என்கிறேன். நின்றுவிடும். ஆனால் நாளாகும்.


நாங்கள் இங்கு வந்து இரண்டுநாட்கள்தான் ஆகின்றன. இன்னும் அபாயகட்டத்தைத் தாண்டியிருக்கவில்லை. ஜே.பிக்கு இந்தக் கை நடுக்கம் அதிகமாகவே இருக்கிறது. பெரும்பாலும் ஏதோவொரு நரம்புதான் இதற்கு காரணமாக இருக்கவேண்டும் – அல்லது நரம்பு காரணமாக இல்லாமல் வேறு ஏதோ இருக்கலாம் – எனக்கும் தோள் பகுதியில் ஒரு துடிப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் கழுத்தின் பக்கவாட்டில். இது ஏற்படும்போது என் வாய் உலர்ந்துவிடுகிறது. அப்போது எதையும் விழுங்குவது மிகவும் சிரமமாக இருக்கும். ஏதோ நடக்கப்போகிறது என்று எனக்குத் தெரியும். அதைத் தடுப்பதற்காகத்தான் வந்திருக்கிறேன். இது ஏற்படும்போது அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டேன். பேசாமல் கண்களை மூடிக்கொண்டு அது அடங்கும்வரை காத்திருப்பேன். அது என்னிடமிருந்து வேறு யாருக்காவது போகும்வரை. ஜே.பி. கொஞ்சநேரம் காத்திருக்கலாம்.


நேற்று காலை ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதைப் பார்த்தேன். அந்த ஆளை இவர்கள் டைனி என்று அழைப்பார்கள். ஆஜானுபாகுவான மனிதர். ஸாண்டா ரோஸாவில் எலெக்ட்ரிஷியனாக இருப்பவர். அவர் இங்கே இரண்டு வாரங்களுக்கு மேல் இருப்பதாகவும், இப்போது அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டிருப்பதாகவும் சொன்னார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் வீட்டுக்குத் திரும்புவதாக இருந்தார். நியு இயர் ஈவை மனைவியுடன் டிவி பார்த்துக்கொண்டு, சூடாக சாக்லேட் பானம் அருந்திக்கொண்டு, குக்கீகளை சுவைத்துக்கொண்டு கொண்டாடுவதற்கு திட்டமிட்டிருந்தார். நேற்று காலை உணவுக்காக அவர் இறங்கிவந்தபோது நன்றாகத்தான் இருந்தார். வாத்துக்களை மேய்க்கும்போது அவற்றை எப்படி அழைப்பது என்று வாயால் சொல்லிக்காட்டினார்.”பிளாம், பிளாம்,“ என்று டைனி நடித்துக் காட்டியதும் இரண்டுபேர் சிரித்தார்கள். டைனியின் தலை ஈரமாக இருந்தது. தலைமுடி மழமழப்பாக வழித்து ஒட்டிக்கொண்டிருந்தது. குளித்துவிட்டு நேராக வந்திருக்கிறார். முகாவயில் சவரம் செய்து கொண்டதில் உண்டான வெட்டுக்காயமும் இருந்தது. அதனால் என்ன? ஃபிராங்க் மார்ட்டினில் இருக்கும் எல்லோருக்குமே முகத்தில் வெட்டுக்காயங்கள் இருக்கும். சாதாரணமாக நடப்பதுதான் அது. உணவுமேசையில் டைனி நெருக்கிக்கொண்டு உட்கார்ந்தார். அவரது குடிகார நாட்களில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி சொல்லத்தொடங்கினார். எல்லோரும் வயிறு குலுங்க சிரித்துக்கொண்டே முட்டைப் பொரியலை சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். டைனி எதையாவது சொல்லிவிட்டு சிரிப்பார், பிறகு மேசையில் இருப்பவர்களின் ஒப்புதலுக்காக எல்லோரையும் திரும்பிப் பார்ப்பார். அவர் சொல்வதைப் போன்ற மோசமான, பைத்தியக்காரத்தனமான காரியங்களை நாங்கள் எல்லோருமே செய்திருக்கிறோம் என்பதால் எல்லோருமே ரசித்து சிரித்துக்கொண்டிருந்தோம். டைனி தட்டில் முட்டைப் பொரியலோடு சில பிஸ்கெட்டுகளையும், தேனையும் வைத்திருந்தார். நானும் அவர்களோடு உட்கார்ந்திருந்தாலும், எனக்குப் பசி இல்லை. என்னெதிரே காபி மட்டும் இருந்தது. திடீரென்று டைனியைக் காணவில்லை. நாற்காலியோடு பெரும் சத்தத்தோடு பின்னால் சாய்ந்துவிட்டிருந்தார். மல்லாந்து கிடந்தவரின் கண்கள் மூடியிருந்தன. கால்களை லினோலியத்தரையில் உதைத்துக் கொண்டிருந்தார். எல்லோரும் ஃபிராங்க் மார்டினைக் கூப்பிட்டு அலறிய அலறலில் அவர் பதறிக்கொண்டு ஓடிவந்தார். அதற்குள் ஒருவன் டைனி நாக்கைக் கடித்துக் கொள்ளாமல் இருப்பதற்காக அவர் வாய்க்குள் விரல்களை நுழைத்து தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்தான். ஃபிராங்க் மார்டின், ”எல்லோரும் பின்னால் விலகி நில்லுங்கள் !” என்று சத்தமிட்டபோதுதான் ஒரு கும்பலே டைனியின் மேல் குனிந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்தேன்.”அவருக்கு மூச்சுவிடுவதற்கு காற்று வேண்டும். தூரச்செல்லுங்கள்!“ என்றார் ஃபிரங்க் மார்டின். பின் அவர் ஆம்புலன்ஸை கூப்பிடுவதற்கு அலுவலக அறைக்கு ஓடினார்.


டைனி இன்று மீண்டும் எழுந்து நடமாடத்தொடங்கிவிட்டார். மீண்டெழுதல் என்ற சொற்றொடர் நினைவுக்கு வந்தது. இன்று காலை ஃபிராங்க் மார்டின் அவரை மருத்துவமனையிலிருந்து அழைத்துவந்தார். காலை உணவாக வழங்கப்படும் முட்டைகளை வாங்குவதற்குத் தாமதமாகத்தான் வந்தார். ஆனல் உணவு அறையில் காபி மட்டும் வாங்கிக்கொண்டு மேசையில் அமர்ந்தார். சமையலறையில் இருந்த யாரோ அவருக்கு ரொட்டி சுட்டுத்தந்தார்கள், ஆனால் அதை டைனி சாப்பிடவில்லை. காபியை வைத்துக்கொண்டு கோப்பையையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். அவ்வப்போது கோப்பையை முன்னும் பின்னுமாக நகர்த்திக்கொண்டிருந்தார்.


அவருக்கு அந்த வலிப்பு ஏற்படுவதற்கு முன் ஏதாவது அறிகுறி தெரிந்ததா என்று கேட்க விரும்பினேன். அவருடைய இதயம் ஒரு துடிப்பைத் தவறவிட்டதா, அல்லது படபடவென்று அடித்துக்கொண்டதா என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். அவருடைய கண் இமை துடித்ததா? ஆனால் எதையும் கேட்க முற்படவில்லை. அவரும் இதைப்பற்றிப் பேச விரும்புகிறவராகத் தெரியவில்லை. ஆனால் டைனிக்கு நடந்ததை என்னால் எப்போதும் மறக்க முடியாது. தரையில் மல்லாந்து விழுந்து கால்களை உதைத்துக்கொண்டு இருந்ததை. அதனால் ஒவ்வொரு முறையும் எனக்கு உடம்பில் எந்த இடத்திலாவது சின்னதாக ஒரு துடிப்பு ஏற்படுவதை உணர்ந்தால் மூச்சை ஆழமாக இழுத்துக்கொள்கிறேன். பின்னால் சாய்ந்து தரையில் விழுவதற்கு தயாராகிக் கொள்கிறேன். தலையை உயர்த்திப் பார்க்கிறேன், யாராவது என் வாய்க்கு விரல்களைச் செருகுகிறார்களாவென்று.


------------------------


முகப்பறையில் ஜே.பி. அவன் மடியின் மீது கைகளை வைத்துக்கொண்டு நாற்காலியில் அமர்ந்திருக்கிறான். நான் சிகரெட் புகைத்துக்கொண்டு, பக்கத்தில் இருக்கும் ஒரு பழைய குப்பைக்கூடையை சாம்பல் குடுவையாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். ஜே.பி. வாய் ஓயாமல் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இப்போது மணி காலை பதினொன்று – மதிய உணவுக்கு இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கிறது. இருவருக்குமே பசியில்லை. ஆனாலும் உள்ளே சென்று மேசையில் உட்கார்ந்துவிடுவோம். ஒருவேளை அப்போது பசியெடுக்கத் தொடங்கிவிடலாம்.


சரி, ஜே.பி. எதைப்பற்றி பேசிகொண்டிருக்கிறான்? அவனுக்கு பனிரெண்டு வயதாக இருக்கும்போது ஒரு நாள் காலை அவன் வசித்துவந்த பண்ணைக்கு அருகில் இருந்த ஒரு பழைய கிணற்றில் தவறி விழுந்துவிட்டதைச் சொல்லிக்கொண்டிருக்கிறான். அதிர்ஷ்டவசமாக தண்ணீர் இல்லாத கிணறு அது.” அல்லது, துரதிருஷ்டவசமாக என்றும் சொல்லிக்கொள்ளலாம்,” என்று தலையைக் குலுக்கியபடி சுற்றுமுற்றும் பார்க்கிறான். அவன் அங்கு விழுந்திருப்பதை பிற்பகலில் கண்டுபிடித்தபின் அவனுடைய அப்பா ஒரு கயிறைக் கொண்டுவந்து அவனை வெளியே தூக்கிவிட்ட கதையைச் சொல்கிறான். அதற்குள் ஜே.பி. அவன் கால்சராயையெல்லாம் ஈரப்படுத்தி விட்டிருந்தானாம். அந்தக் கிணற்றுக்குள் இருந்தபோது எல்லாவிதமான பயங்கரங்களையும் அனுபவித்திருக்கிறான். உதவிகேட்டு கத்திக்கத்தி தொண்டை கம்மிவிட்டதாம். ஆனாலும் விடாமல் கத்திக்கொண்டே இருந்தானாம். கிணற்றின் அடியில் கிடந்தது ஓர் அழிக்கமுடியாத பாதிப்பை அவனிடம் ஏற்படுத்திவிட்டதாகச் சொன்னான். அங்கே உட்கார்ந்து கொண்டு தலையை உயர்த்தி மேலே கிணற்றின் வாயை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறான். மேலே வட்டமாகத் தெரியும் நீலவானம். அவ்வப்போது கடந்து செல்லும் வெண்மேகம். ஒரு பறவைக் கூட்டம் கடந்துசென்றதைப் பார்த்தபோது அவற்றின் சிறகடிப்பு ஒரு கொந்தளிப்பை உண்டாக்குவதுபோல் இருந்திருக்கிறது. அவனுக்கு வேறுசில சத்தங்களும் கேட்டிருக்கின்றன. அவனுக்கு மேலே கிணற்றின் சுவரில் ஏதேதோ சின்னச்சின்ன சலசலப்புகள். அவன் தலைமீது ஏதாவது விழுமோ என்று பயந்திருக்கிறான். பூச்சிகளை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். கிணற்று வாயின் மேல் காற்று வீசிக்கொண்டிருப்பதைக் கேட்டான். அந்த ஒலியும் அவனுக்கு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், கிணற்றின் அடியில் அவன் வாழ்க்கை தொடர்பான எல்லாமும் வேறாக இருந்தது. ஆனால் அவன் மீது எதுவும் விழவில்லை, அச்சிறிய நீலவட்டமும் மூடப்படவில்லை. பிறகு அவனுடைய அப்பா நீளமான கயிறுடன் வந்திருக்கிறார். ஜே.பி. அதுவரை வாழ்ந்துவந்த உலகத்துக்குத் திரும்பிவிட்டான்.


“ மேலே சொல்லு, ஜே.பி. அப்புறம் என்ன?” என்கிறேன்.


அவனுடைய பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு எந்த வேலையும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தபோது, ஒருநாள் பிற்பகல் அவனுடைய நண்பனை சந்திக்கச் சென்றான். இந்த நண்பனின் வீட்டில் கணப்படுப்பு இருந்தது. ஜே.பி.யும் அவனுடைய நண்பனும் பியர் அருந்திக்கொண்டு காற்றாட அமர்ந்திருந்தார்கள். சில இசைத்தட்டுகளை இசைத்தார்கள். பின் அழைப்புமணி அடிக்கிறது. அவனுடைய நண்பன் எழுந்து கதவைத் திறக்கிறான். வந்திருப்பது புகைக்கூண்டை சுத்திகரிப்புச் செய்வதற்காக ஓர் இளம்பெண். நெடுந்தொப்பி அணிந்திருக்கும் அவளைப்பார்த்து ஜே.பி.க்கு தூக்கிவாரிப் போடுகிறது. அவள் ஜே.பி.யின் நண்பனைப் பார்த்து அவர்கள் வீட்டு புகைப்போக்கியை சுத்தம் செய்வதற்காக அழைப்பு வந்ததன்பேரில் வந்திருப்பதாகச் சொல்கிறாள். நண்பன் மரியாதையாகக் குனிந்து அவள் உள்ளே வருவதற்கு வழிவிடுகிறான். அவள் அவனைப் பொருட்படுத்தாமல் சென்று கணப்படுப்புக்கு முன்னால் ஒரு துணியை விரித்து அதன் மேல் தனது சாதனங்களை எடுத்து வைக்கிறாள். அவள் கருப்பு பேன்ட்டும், கருப்புச்சட்டையும், கருப்பு ஷுக்களும், சாக்ஸும் அணிந்திருக்கிறாள். வேலையை ஆரம்பிக்கும்போது தொப்பியை எடுத்துவிடுகிறாள். அவளைப் பார்க்கும்போது அவனுக்குப் பெரும் பிரமிப்பு ஏற்பட்டுவிட்டதாக ஜே.பி.சொல்கிறான். ஜே.பி.யும் அவனுடைய நண்பனும் பியர் அருந்திக்கொண்டு, இசைத்தட்டுகளை ஒலிக்கவைத்துக் கொண்டிருக்கையில் அவள் தன் வேலையில் கவனமாக இருக்கிறாள். அவர்கள் அவளை, அவள் வேலை செய்வதை கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்போது ஜே.பி.யும் அவனுடைய நண்பனும் ஒருவரையொருவர் பார்த்து கண்ணிமைத்து, சிரித்துக்கொள்கிறார்கள். அந்தப்பெண்ணின் மேல்பாதி உடம்பு புகைப்போக்கிக்குள் நுழைந்து மறைந்தபோது அவர்கள் புருவங்கள் உயர்கின்றன. அவள் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தாள் என்றான் ஜே.பி.


அவள் வேலையை முடித்ததும் தரைவிரிப்பிலிருந்த தனது சாதனங்களையெல்லாம் எடுத்து சுருட்டிக்கொண்டாள். ஜே.பி.யின் நண்பன் அவனுடைய பெற்றோர் தந்திருந்த காசோலையை அவளிடம் கொடுத்தான். அதை வாங்கிக்கொண்டு அவன் தன்னை முத்தமிட விரும்புகிறானா என்று கேட்கிறாள்.”அது நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதாகச் சொல்கிறார்கள்,“ என்கிறாள். அவள் நண்பனிடம் அப்படிக் கேட்டது ஜே.பி.யை வீழ்த்துகிறது. அவன் நண்பன் திருதிருவென்று விழிக்கிறான். கோமாளித்தனமாக உடம்பை ஆட்டிக்கொண்டு, வெட்கமுற்றவனைப்போல தயக்கத்துடன் அவள் கன்னத்தில் முத்தம் தருகிறான். அந்த நிமிடத்தில் ஜே.பி.எதையோ முடிவு செய்து விட்டான். கையிலிருந்த பியரை கீழே வைத்தான். சோபாவிலிருந்து எழுந்தான். கதவை நெருங்கிவிட்ட அந்தப் பெண்ணை மறித்தான்.


“எனக்கும்?" என்றான் ஜே.பி.அவளிடம்.


அவள் அவனை ஏறஇறங்கப் பார்த்தாள். அவனுடைய இதயம் தாறுமாறாக அடித்துக்கொண்டது என்கிறான். அந்தப்பெண்ணின் பெயர் ராக்ஸியாம்.


“ஓ, அதனாலென்ன?“ என்கிறாள் ராக்ஸி.”என்னிடம் கொஞ்சம் முத்தங்கள் இருக்கின்றன,” என்றபடியே அவள் அவன் உதட்டிலேயே ஒரு முத்தம் கொடுத்துவிட்டு நடந்தாள்.


சட்டென்று கண்ணிமைக்கும் நேரத்தில் ஜே.பி.யும் அவளைப் பின்தொடர்ந்து வெளியே வந்துவிட்டான். வாசல்திரையை அவளுக்காக விலக்கினான். அவளோடு சேர்ந்து படியிறங்கி, அவள் நிறுத்தியிருந்த சரக்கு வண்டி வரை வந்தான். நடப்பது எல்லாமே அவன் கைமீறி சென்றுவிட்டிருந்தது. உலகில் உள்ள எதுவும் ஒரு பொருட்டாக இல்லை. அவன் கால்களை நடுங்கவைக்கக்கூடிய ஒருத்தியை சந்தித்துவிட்டதாக நம்பினாள். அவள் தந்த முத்தம் இன்னமும் அவன் உதடுகளில் எரிந்துகொண்டிருப்பதை உணர முடிந்தது. ஜே.பியால் எதையும் பகுத்தறிந்து சிந்திக்க முடியவில்லை. அவனுள் நிரம்பிவிட்ட உணர்ச்சிப் பிரவாகம் அவனை அதன் போக்கில் செலுத்திக் கொண்டிருந்தது.


சரக்கு வண்டியின் பின்கதவை அவளுக்காகத் திறந்தான். அவளது சாதனங்களை உள்ளே வைப்பதற்கு உதவினான். அவள் அவனிடம்,”நன்றி,“ என்றாள். அவன் வாயிலிருந்து வார்த்தைகள் வெடித்துக்கொண்டு வந்துவிட்டன - அவளை மீண்டும் சந்திப்பதற்கு விரும்புகிறான். அவனோடு ஒரு திரைப்படத்துக்கு வருவாளா? அவன் தனது வாழ்க்கையைப் பற்றி,எதிர்காலத்தைப் பற்றி யோசித்துவிட்டிருந்தான். அவள் செய்யும் தொழிலையே தானும் செய்வது என்று முடிவெடுத்துவிட்டான். புகைப்போக்கி சுத்திகரிப்பாளனாக. ஆனால் அப்போது அவளிடம் அதைச் சொல்லவில்லை.


அவள் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அவனை மேலும்கீழும் பார்த்ததாக ஜே.பி.சொல்கிறான். அதன்பின், வண்டியின் முன்னிருக்கையிலிருந்து தனது வர்த்தக அட்டையை எடுத்து அவனிடம் தந்தாள்.”இன்றிரவு பத்து மணிக்கு மேல் கூப்பிடு. பேசுவோம். இப்போது நான் போகவேண்டும்,“ என்று தொப்பியை மாட்டிக்கொண்டு திரும்பினாள். மீண்டும் ஒருமுறை தலையைத் திருப்பி ஜே.பி.யைப் பார்த்தாள். அவனை அவளுக்குப் பிடித்திருக்கவேண்டும். இம்முறை புன்னகைத்தாள். அவள் வாயருகே புகைக்கரி படிந்திருப்பதாகச் சொன்னான். வண்டியில் ஏறி, ஒருமுறை ஹாரனை அடித்துவிட்டு கிளம்பிச் சென்றாள்.


“அப்புறம் என்ன?“ என்கிறேன்.”நிறுத்தாமல் சொல், ஜே.பி.“


எனக்கு ஆர்வம் மேலிட்டிருந்தது. ஆனால் அவன் எப்படி குதிரைகளுக்கு லாடம் அடிக்கும் வேலைக்குச் செல்ல ஒருநாள் முடிவெடுத்துவிட்டான் என்பதை விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்திருக்காவிட்டால் நானும் தொடர்ந்து கேட்டிருப்பேன்.


------------------------------------


நேற்றிரவு மழை பெய்தது. மேகங்கள் மலைகளுக்கெதிராக பள்ளத்தாக்கில் அணிதிரண்டிருந்தன. ஜே.பி. தொண்டையைக் கனைத்துக்கொண்டு அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். முகவாயை நீவிக்கொள்கிறான். பின் பேசத் தொடங்குகிறான்.


ராக்ஸி அவனோடு வெளியே ‘டேட்டிங்‘ செல்லத் தொடங்குகிறான். அவளோடு சேர்ந்து அவனும் அந்த வேலைக்கு வருவதாக கேட்டுக்கொண்டே இருக்கிறான். ராக்ஸி, அவளுடைய அப்பாவும் சகோதரனும் நடத்தும் தொழிலில் வேலைப்பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவர்களுக்கே வேலை சரியாக இருக்கிறது. வேறுயாரும் அவர்களுக்குத் தேவையும் இல்லை. மேலும் யார் இந்தப் பையன் ஜே.பி.? இந்த ஜே.பி.க்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அவனிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அவளிடம் சொன்னார்கள்.


ஆனால் அவளும் ஜே.பி.யும் சில திரைப்படங்களுக்கு ஒன்றாகச் சென்றார்கள். சில நடன விருந்துகளுக்கும் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஒன்றாகச் சென்றது புகைப்போக்கி சுத்திகரிப்பு வேலைகளுக்களுக்காகத்தான். சில நாட்களிலேயே அவர்கள் திருமணம் செய்து கொள்வதைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டதாக ஜே.பி.சொல்கிறான். கொஞ்ச காலம் சென்றதும் அவர்கள் திருமணமும் செய்து கொள்கின்றனர். ஜே.பி.யின் புதிய மாமனார் அவனை முழுநேர பங்குதாரராக ஏற்றுக்கொள்கிறார். ஒருவருடம் கழித்து ராக்ஸிக்கு குழந்தை பிறக்கிறது. அவள் புகைப்போக்கி வேலையை விட்டுவிட்டாள். அவளால் வேறு எந்த வேலைக்கும் போயிருக்க முடியாது. விரைவிலேயே இரண்டாவது குழந்தையும் பிறந்துவிட்டது. ஜே.பி.இப்போது இருபதுகளின் மத்தியில் இருந்தான். வீடு ஒன்றை வாங்குகிறான். அவன் வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததாகச் சொல்கிறான்.”எல்லாம் நல்லவிதமாக நடந்து கொண்டிருந்தன,“ என்கிறான்.”எனக்குத் தேவையான எல்லாமும் கிடைத்திருந்தன. அன்பான மனைவியும் குழந்தைகளும். என் வாழ்க்கையை ஒழுங்காகவே நடத்திக்கொண்டிருந்தேன்.“ ஆனால் எப்படியோ – நாம் ஏன் சில விஷயங்களைச் செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் என்பதை யார் அறிவார்? _ அவனது குடிப்பழக்கம் அதிகரித்தது. அடுத்த சில வருடங்கள் அவன் பியர்,பியர், பியரிலேயே மூழ்கியிருந்தான். எந்த ரக பியராக இருந்தாலும் பொருட்டில்லை. இருபத்திநான்கு மணிநேரமும் அவனால் பியர் குடித்துக்கொண்டே இருக்கமுடிந்தது என்கிறான். இரவு டிவி பார்க்கும்போதும் பியர் குடிப்பானாம். அவ்வப்போது ‘கனமான‘ பானங்களையும் அருந்தினான். அது அவன் எப்போதாவது நகரத்துக்குச் செல்லும்போது மட்டுமே, அல்லது நண்பர்கள் குழாம் கூடும்போது. அதன் பிறகு, அவனுக்கே ஏனென்று தெரியாமல், பியரிலிருந்து ஜின்னுக்கு மாறினான். இரவுஉணவுக்குப்பின், டிவி முன்னால் உட்கார்ந்துகொண்டு ஜின்-டானிக் அருந்தத் தொடங்கிவிடுவான். அவன் கையில் எப்போதும் ஜின்-டானிக் கோப்பை இருந்தது. அவனுக்கு அந்த ருசி மிகவும் பிடித்திருந்ததாகச் சொல்கிறான். வேலை முடிந்து திரும்பும்போது வழியில் மதுக்கூடங்களுக்குச் சென்று குடிப்பான். பிறகு வீட்டுக்கு வந்ததும் மேலும் குடிப்பான். பிறகு இரவு உணவைத் தவிர்க்கத் தொடங்கினான். பலநாட்கள் வீட்டுக்கே வரமாட்டான். வந்தாலும் எதையும் சாப்பிடமாட்டான். மதுக்கூடத்தில் சாப்பிட்ட நொறுக்குத்தீனிகளே வயிறை நிரப்பிவிட்டது என்பான். சிலநேரங்களில் வீட்டுக்குள் நுழைந்ததுமே மதியஉணவு எடுத்துச்சென்ற பாத்திரத்தை காரணமேயில்லாமல் கூடத்தில் வீசியெறிவான். ராக்ஸி அதற்காக அவனிடம் கத்தினால் மீண்டும் வெளியே போய்விடுவான். குடிக்க ஆரம்பிக்கும் நேரத்தை அவன் வேலையில் இருக்கவேண்டிய பின்மதிய நேரத்துக்கு உயர்த்திவிட்டிருந்தான். காலையில் இரண்டுமுறை குடித்துவிட்டுத்தான் ஒரு தினத்தையே அவன் தொடங்கி வந்ததாகச் சொல்கிறான். பல் துலக்குவதற்கு முன்பே ஆரம்பித்துவிடுவானாம். பிறகுதான் காபியே குடிப்பானாம். மதியஉணவு பாத்திரப்பையில் ஒரு தெர்மாஸ் ஃபிளாஸ்கில் வோட்காவோடு சென்று கொண்டிருந்ததாகச் சொல்கிறான்.


ஜே.பி.பேசுவதை நிறுத்துகிறான். சட்டென்று வாயை மூடிக்கொண்டுவிட்டான். என்ன ஆயிற்று? நான் அவன் சொல்வதற்கு செவிசாய்த்துக் கொண்டிருக்கிறேன். இது என் இறுக்கத்தைத் தளர்த்துவதாக இருக்கிறது. எனது சொந்த நிலைமையிலிருந்து இது என்னை மறக்க வைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது பேச்சை நிறுத்திவிட்டிருக்கிறான். ஒருநிமிடம் கழித்து,”என்ன ஆச்சு? பேசு ஜே.பி,“ என்கிறேன். அவன் முகவாயை நீவிக்கொள்கிறான். சற்றுநேரம் கழித்து மீண்டும் பேசத்தொடங்குகிறான்.


அப்புறம் ஜே.பிக்கும் ராக்ஸிக்கும் இடையே நிஜமான சண்டைகளே நடக்கத் தொடங்கிவிட்டிருக்கிறது. அதாவது அடிதடி சண்டையே. ஒருமுறை அவள் அவன் முகத்தில் ஓங்கிக் குத்தியதில் மூக்கு உடைந்துவிட்டதென்று ஜே.பி சொல்கிறான்.” இங்கே பார்,“ என்று மூக்கின் நடுவே இருக்கும் தழும்பைக் காட்டுகிறான்.”இந்த இடத்தில் எலும்பு உடைந்துவிட்டது,“ என்கிறான். ஆனால் பதிலுக்கு இவனும் அடித்திருக்கிறான். அவளுடைய தோள்பட்டை கழன்றுவிட்டதாம். இன்னொருமுறை அடித்த அடியில் அவளுடைய உதட்டைக் கிழித்துவிட்டானாம். குழந்தைகளுக்கு எதிரிலேயே அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டிருக்கின்றனர். எல்லாமே கைமீறிப் போய்க்கொண்டிருந்தது. ஆனால் அவன் தொடர்ந்து குடித்துக்கொண்டிருந்தான். அவனால் நிறுத்த முடியவில்லை. எதுவும் அவனை நிறுத்தவும் முடியவில்லை. ராக்ஸியின் அப்பாவும் சகோதரனும் அவனைக் கடுமையாக மிரட்டி அடிக்க வந்ததுகூட பலனளிக்கவில்லை. அவர்கள் ராக்ஸியிடம் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வெளியே வந்துவிடச் சொன்னார்கள். ஆனால் ராக்ஸி அது அவளுடைய சொந்தப் பிரச்சனை, மற்றவர்கள் தலையிடவேண்டாம், அவளே தீர்த்துக்கொள்வாள் என்று சொல்லிவிட்டாள்.


ஜே.பி. இப்போது மீண்டும் மௌனமாகி, தோள்களைக் குலுக்கிக்கொண்டு நாற்காலியில் களைத்து அமர்கிறான். இந்த இடத்துக்கும் தூரத்து மலைகளுக்குமிடையே செல்லும் சாலையில் போகின்ற ஒரு காரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.


“மிச்சக் கதையைச் சொல்லு, ஜே.பி.பேசு,“ என்கிறேன்.


“தெரியவில்லை,“ என்கிறான். உடம்பைக் குலுக்கிக் கொள்கிறான்.


“பரவாயில்லை,“ என்கிறேன். அவன் தொடர்ந்து பேசுவதே அவனுக்கு நல்லது என்று தோன்றுகிறது.”சொல்லு, ஜே.பி.“


இந்தப் பிரச்சனையை முடிப்பதற்கு அவள் ஒரு வழியை தேர்ந்தெடுத்ததாக ஜே.பி சொல்கிறான். அவள் ஒரு ஆண்நண்பனைத் தேடிக் கொண்டாளாம். வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு அவளுக்கு எப்படி இதற்கு நேரம் கிடைத்தது என்று தெரியவில்லை என்கிறான்.


அவனை உற்றுப் பார்க்கிறேன். ஒரு வளர்ந்த மனிதன் இப்படிப் பெசுவது எனக்கு வியப்பாக இருக்கிறது. “இதோ பார், உனக்கு ஒன்றில் இறங்குவதற்கு விருப்பம் இருந்தால் அதற்கான நேரம் கிடைத்துவிடும்,” என்கிறேன்.”நேரம் என்பது நாம் உருவாக்கிக் கொள்வது.“


ஜே.பி தலையை ஆட்டிக்கொள்கிறான்.”அப்படித்தான் போல,“ என்கிறான்.


எப்படியோ, அவன் இந்த விவரத்தை – ராக்ஸியின் ஆண் நண்பன் தொடர்பை - கண்டுபிடித்துவிட்டான். ராக்ஸியின் விரலிலிருந்து அவர்களுடைய திருமண மோதிரத்தை எப்படியோ வலுக்கட்டாயமாகக் கழற்றி எடுத்து, அதை ஒயர்கட்டரை வைத்து துண்டுத்துண்டாக வெட்டிவிட்டானாம். இந்தக் காரியத்தை நிதானமாக சந்தோஷமாக செய்து முடித்திருக்கிறான். அப்புறம் அவர்களிடையே இரண்டு பாட்டம் சண்டையும் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தநாள் காலை வேலைக்கு அவன் செல்லும்போது குடித்துவிட்டு வண்டியோட்டிச் சென்றதற்காக கைதுசெய்யப்படுகிறான். அவனது ஓட்டுநர் உரிமத்தையும் இழக்கிறான். இனி அவனால் வேலைக்கு வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லமுடியாது. அதுவும் ஒருவிதத்தில் நல்லதுக்குதான் என்கிறான். ஏனென்றால் அதற்கு ஒரு வாரம் முந்தி, கூரையிலிருந்து விழுந்து விரலை ஒடித்துக்கொண்டானாம். அடுத்ததாக கழுத்தை முறித்துக்கொள்வதற்குள் இப்படி நடந்து வேலைக்குச் செல்வது நின்று போயிற்று, என்கிறான்.


••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


இப்படியாக இவன் தனது வாழ்க்கையை சரிப்படுத்திக் கொள்வதற்கான சிகிச்சைக்காக ஃபிராங்க் மார்ட்டினிடம் வந்திருக்கிறான். இவனும் நானும் எங்கள் விருப்பத்துக்கு மாறாக இங்கு கொண்டுவரப்பட்டவர்கள் அல்லர். எங்களை ஒன்றும் அடைத்து வைத்திருக்கவில்லை. விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் வெளியேறிவிடலாம். ஆனால் குறைந்தபட்சம் ஒருவாரம் தங்குவது அவசியம். இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதம் தங்குவது என்பது அவர்கள் கூற்றுப்படி ‘சிறப்பானது‘.


நான் முன்பே சொன்னதைப்போல ஃபிராங்க் மார்ட்டினில் நான் தங்குவது இரண்டாவது முறை. ஒரு வாரத் தங்கலுக்கான முன்பணமாக காசோலையில் கையெழுத்திட முற்பட்டபோது ஃபிராங்க் மார்ட்டின்,”விடுமுறை தினங்கள் எப்போதுமே சரியாக அமைவதில்லை. இம்முறை சற்று கூடுதலான நாட்கள் தங்குவதைப் பற்றி ஏன் நீங்கள் யோசிக்கக்கூடாது? இரண்டு வாரங்கள் போல இருக்கலாம். யோசித்துப் பாருங்கள். இப்போது உடனே முடிவெடுக்கத் தேவையில்லை,“ என்றார். காசோலை மீது அவர் கட்டைவிரலை வைத்து அழுத்திப் பிடித்திருக்க, நான் கையெழுத்திட்டேன். பிறகு என் தோழியோடு வாசற்கதவுவரை சென்று அவளுக்கு விடை கொடுத்தேன்.”குட்பை,“ என்று அவள் திரும்பி நடந்தபோது நிலைப்படியில் அவளுக்கு கால் இடறியது. அது பின்மதிய நேரம். மழை பெய்து கொண்டிருந்தது. நான் கதவிலிருந்து சன்னலுக்கு நகர்கிறேன். திரைச்சீலையை விலக்கி அவள் செல்வதைப் பார்க்கிறேன். அவள் என் காரில்தான் செல்கிறாள். குடித்திருக்கிறாள். நானும் குடித்திருக்கிறேன், அதற்கு ஒன்றும் செய்யமுடியாது. கணப்புக்குப் பக்கத்திலிருந்த பெரிய நாற்காலிக்கு வந்து அமர்கிறேன். டிவி பார்த்துக் கொண்டிருந்த சிலர் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிக்குத் திரும்புகிறார்கள். நான் அங்கேயே அமர்ந்திருக்கிறேன். அவ்வப்போது தொலைக்காட்சியில் நடப்பதை ஆர்வமின்றி கவனிக்கிறேன்.


அன்று பிற்பகல் முன்கதவு வேகமாகத் திறக்கப்பட்டு ஜே.பி. இரண்டு ஆஜானுபாகுவான ஆட்களால் – அவனுடைய மாமனாரும் மைத்துனனும் என்று பிறகு தெரிந்தது – கைத்தாங்கலாக அழைத்துவரப்பட்டான். அவனை அவர்கள் மெதுவாக உள்ளே கூட்டிவந்தார்கள். அந்த வயதான மனிதர் காசோலையில் கையெழுத்திட்டு ஃபிராங்க் மார்ட்டினிடம் கொடுத்தார். பின் அந்த இருவரும் ஜே.பி.யை மாடிக்கு ஆதரவாகத் தாங்கிப் பிடித்தபடி அழைத்துச் சென்றார்கள். அவனை அறையில் படுக்க வைத்திருக்கக்கூடும். கொஞ்சநேரத்திலேயே அந்த வயதானவரும் இன்னொருவனும் கீழேவந்து வாசலை நோக்கிச் சென்றனர். இந்த இடத்தைவிட்டு வேகமாக போய்த்தொலையவேண்டுமென்று அவசரத்தில் இருப்பதைப் போல தெரிந்தது. இந்த ஜே.பி. விவகாரத்தை இத்தோடு சுத்தமாக கைகழுவிவிடவேண்டும் என்று அவர்களுக்கு இருக்கலாம். அவர்களைக் குற்றம் சொல்லமாட்டேன். நிச்சயமாக மாட்டேன். அவர்களுடைய இடத்தில் நான் இருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்பேனென்று தெரியவில்லை.


அடுத்த நாள் ஜே.பி.யும் நானும் முன் தாழ்வாரத்தில் சந்திக்கிறோம். இருவரும் கைகுலுக்கிக்கொண்டு வானிலை குறித்து பேசிக்கொள்கிறோம். ஜே.பி.க்கு கைகள் நடுங்குகின்றன. நாங்கள் உட்கார்ந்து கால்களைத் தூக்கி கிராதியின் மேல் வைத்துக்கொண்டு எங்கள் சாய்வு நாற்காலிகளில் சாய்ந்தபடி ஏதோ வேட்டைநாய்களைப் பற்றிப் பேசப்போவதைப் போன்ற பாவனையில் எங்கள் இறுக்கங்களைத் தளர்த்திக் கொண்டு அமைதியில் மூழ்கியிருந்தோம். அப்போதுதான் ஜே.பி. தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.


••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


குளிராக இருக்கிறது. ஆனால் கடுங்குளிராக அல்ல. ஃபிராங்க் மார்ட்டின் தனது சுருட்டைப் பிடித்து முடிப்பதற்காக வெளியே வருகிறார். அணிந்திருந்த ஸ்வெட்டர் கழுத்துவரை பட்டன்கள் இடப்பட்டிருந்தது. ஃபிராங்க் மார்ட்டின் குள்ளமாக, குண்டாக இருந்தார். சின்ன தலையில் நரைத்த சுருள்முடி. அவர் உடம்புக்கு தலை பொருத்தமில்லாத அளவில் சிறியதாக இருந்தது. ஃபிராங்க் மார்ட்டின் சுருட்டை வாயில் கடித்துக் கொண்டு மார்புக்கு மேல் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கிறார். வாயில் கவ்வியபடியே சுருட்டைப் புகைத்தபடி எதிரே பள்ளத்தாக்கை மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். குஸ்திப்போட்டியின் வெற்றிப்புள்ளிகளை அறிந்த குத்துச்சண்டை வீரனைப்போல காணப்படுகிறார்.


ஜே.பி. மீண்டும் மௌனமாகிறான். மூச்சுவிடாமல் இருப்பதைப் போலத் தோன்றுகிறது. எனது சிகரெட்டை கரிவாளியில் போட்டுவிட்டு ஜே.பி.யை உற்றுப் பார்க்கிறேன். அவன் இருக்கையில் மேலும் சரிந்து கொள்கிறான். காலரை மேலே ஏற்றிவிட்டுக்கொள்கிறான். இங்கே என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று யோசிக்கிறேன். ஃபிராங்க் மார்டின் கைகளை விடுவித்துக்கொண்டு சுருட்டை இழுக்கிறார். மெதுவாகப் புகையை விடுவிக்கிறார். முகவாயை மலைகளை நோக்கி உயர்த்திக் கொண்டு,”இந்தப் பள்ளத்தாக்குக்கு மறுபுறத்தில்தான் ஜாக் லண்டனுக்கு சொந்தமாக ஒரு பெரிய இடம் இருந்தது. அதோ நீங்கள் பார்க்கிறீர்களே, அந்த பச்சை மலைக்குப் பின்னால். ஆனால் ஆல்கஹால் அவரைக் கொன்றுவிட்டது. அது உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும். நம்மெல்லோரையும் விட உயர்ந்தவர் அவர். ஆனால் அவரால் அந்தப் பழக்கத்தை ஒழிக்கமுடியாமல் போய்விட்டது,“ என்கிறார். சுருட்டில் எவ்வளவு மிச்சமிருக்கிறதென்று பார்க்கிறார். அது தீர்ந்துவிட்டிருக்கிறது. அதை பாக்கெட்டுக்குள் போட்டுவிட்டு,”நீங்கள் இங்கே இருக்கும்போது எதையாவது படிக்க விரும்பினால் அவருடைய புத்தகம் ‘கானகத்தின் குரல்‘ – ஐ எடுத்துப் படியுங்கள். அந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா? நீங்கள் படிப்பதற்கு நிறைய புத்தகங்கள் உள்ளே வைத்திருக்கிறோம். இந்த நாவலில் ஒரு மிருகம் வருகிறது. பாதி நாயும், பாதி ஓநாயுமான மிருகம் அது. சரி, என் பிரசங்கம் இத்தோடு முடிந்தது,“ என்று தனது பேன்ட்டை மேலே இழுத்துவிட்டுக் கொண்டு ஸ்வெட்டரை கீழே இழுத்துக் கொள்கிறார்.”நான் உள்ளே செல்கிறேன். மதிய உணவின்போது சந்திப்போம்,“ என்கிறார்.


“இவர் பக்கத்தில் இருக்கும்போது அற்பப்பூச்சியைப் போல உணர்கிறேன்.“ ஜே.பி. தலையை ஆட்டிக்கொள்கிறான்.”ஜாக் லண்டன் என்ன ஒரு பெயர் ! எனக்கு இப்படி ஒரு பெயரை வைத்திருக்கக் கூடாதா? எனக்கும் இருக்கிறதே ஒரு பெயர்!”


•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••


இங்கு என்னை முதல்முறை அழைத்து வந்தது என் மனைவி. அப்போது நாங்கள் ஒன்றாக இருந்தோம். சிக்கல்களைத் தீர்த்துக்கொண்டு ஒழுங்காக வாழ்வதற்கு முயன்று கொண்டிருந்த நேரம் அது. என்னை இங்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டு ஒன்றிரண்டு மணிநேரங்கள் அவளும் இருந்தாள். ஃபிராங்க் மார்டினைத் தனியாக சந்தித்து பேசிக்கொண்டிருந்தாள். பிறகு கிளம்பிச் சென்றாள். அடுத்தநாள் காலை ஃபிராங்க் மார்ட்டின் என்னைத் தனியாக அழைத்துப் பேசினார்.”நாங்கள் உனக்கு உதவமுடியும், அதாவது எங்களுடைய உதவியை நீ விரும்பும் பட்சத்தில். நாங்கள் சொல்வதைக் கேட்டு நீ நடக்கும்பட்சத்தில் உன்னுடைய பிரச்சனைகள் தீரும்.“ ஆனால் அவர்களால் எனக்கு உண்மையிலேயே உதவமுடியுமாவென்று எனக்குத் தெரியவில்லை. என் ஒரு பகுதி உதவியை விரும்பியது. ஆனால் என்னிடம் இன்னொரு பகுதியும் இருந்தது.


இம்முறை என்னை இங்கு அழைத்து வந்தது என் தோழி. என் காரை அவள்தான் ஓட்டிக்கொண்டு வந்தாள். அப்போது வழியெங்கும் பலத்த மழை. வரும் வழி முழுக்க ஷாம்பெய்ன் குடித்துக்கொண்டே வந்தோம். இங்கு வந்து வண்டியை நிறுத்தும்போது இருவருமே நல்ல போதையில் இருந்தோம். என்னை இங்கே இறக்கிவிட்டு அவள் உடனே திரும்புவதாகத்தான் நினைத்திருந்தாள். அவளுக்கு சில வேலைகள் இருந்தன. அவள் ஒரு மின்னணு சாதனங்கள் நிறுவனத்தில் செயலாளராக, சுமாரான வேலையில் இருந்தாள். அவளுக்கு ஒரு வாயாடி மகனும் இருந்தான். இந்த இரவில், மழையில் வண்டியை ஓட்டிச்செல்ல வேண்டாமென்பதற்காக நகரத்தில் ஏதாவது ஒரு ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு காலையில் கிளம்பிச்செல்லுமாறு சொன்னேன். அவளுக்கு அறை கிடைத்ததா என்று தெரியவில்லை. என்னை இங்கே இறக்கிவிட்டு, ஃபிராங்க் மார்டினின் அலுவலகம் வரை வந்து அவர்களிடம்,”யார் வந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்,“ என்று என்னை ஒப்படைத்துவிட்டு சென்றதற்குப் பிறகு அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.


எனக்கொன்றும் அவள் மீது கோபம் இல்லை. என் மனைவி என்னை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்னபிறகு, என் தோழி தனது வீட்டை எனக்குத் திறந்துவிட்டு என்னை அங்கு தங்கிகொள்ள சொன்னபோது என்ன மாதிரியான தொல்லையை அவள் வரவழைத்துக் கொள்கிறாள் என்பதை உணர்ந்திருக்கவில்லை. அவளுக்காக நான் பரிதாபப்பட்டேன். நான் பரிதாபப்பட்டதற்குக் காரணம், கிருஸ்துமஸ்ஸுக்கு முதல்நாள் அவளது பாப் ஸ்மியர் சோதனை முடிவுகள் வந்தது ( செர்விகல் கேன்ஸர் பரிசோதனை ). அதுவொன்றும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இல்லை. அவள் மருத்துவரைப் பார்க்க, அதுவும் உடனே சென்று பார்க்க வேண்டியிருந்தது. நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து குடிக்கத் தொடங்குவதற்கு இந்தமாதிரியான செய்தியே போதுமானதாக இருந்ததால் எங்கள் மனநிலையை சரியாக்கிக் கொள்வதற்காக குடித்தோம், குடித்தோம். மேலும் குடித்தோம். கிருஸ்துமஸ் தினத்தன்றும் குடித்தோம். அவளுக்கு சமையல் செய்ய விருப்பமில்லாததால் உணவகத்துக்குச் செல்லவேண்டியிருந்தது. எங்களோடு அவளுடைய வாயாடி மகனும் சேர்ந்து, வந்திருந்த பரிசுப் பொட்டலங்களைப் பிரித்தான். பிறகு அவள் குடியிருப்புக்கு அருகிலிருந்த ‘ஸ்டீக்‘ உணவகத்துக்குச் சென்றோம். எனக்குப் பசியே இல்லை. கொஞ்சம் சூப்பும், ‘ஹாட்ரோ‘லும் சாப்பிட்டேன். சூப்போடு ஒரு பாட்டில் ஒயினையும் சேர்த்து அருந்தினேன். அவளும் கொஞ்சம் ஒயின் குடித்தாள். பிறகு ‘பிளடி மேரிஸ்‘ காக்டெய்லைத் தொடங்கினோம். அடுத்த இரண்டு நாட்களுக்கு உப்பிட்ட கடலையைத் தவிர வேறுஎதையுமே நான் சாப்பிடவில்லை. ஆனால் ‘பூர்பன் ‘ நிறைய குடித்தேன். பிறகுதான் அவளிடம் சொன்னேன்:”இனியவளே, நான் இப்போதே கிளம்புவதுதான் உத்தமம். நான் ஃபிராங்க் மார்ட்டினில் சேர்ந்துவிடுகிறேன்.“


அவள் தன் மகனிடம் சற்று வெளியில் சென்றுவர வேண்டியிருக்கிறது என்றும், திரும்பி வருவதற்கு ஓரிருநாட்களாகுமென்பதால் அவனை வெளியில் சென்று சாப்பிட்டுக் கொள்ளவும் சொன்னாள். ஆனால் நாங்கள் இருவரும் ஒன்றாகக் கிளம்பும் நேரத்தில் இந்த வாயாடிப்பையன்,“ரெண்டு பேரும் போய்த் தொலையுங்கள்! திரும்பி வரவே வராதீர்கள்! ரெண்டு பேரும் போய்ச் சாவுங்கள்!“ என்று கத்தினான். எப்படி இருக்கிறான் பாருங்கள் இந்தப்பையைன்!


நகரை விட்டு நீங்குவதற்குமுன் ஒரு கடையில் அவளை நிறுத்தச் சொல்லி, ஷாம்பெய்ன் வாங்கினேன். இன்னோர் இடத்தில் நிறுத்தி பிளாஸ்டிக் கப்புகள் வாங்கினேன். அடுத்ததாக ஓரிடத்தில் ஒரு பக்கெட் ‘ஃபிரைடு சிக்கன்‘ வாங்கினேன். கொட்டும் மழையில் வண்டியில் குடித்துக்கொண்டு, சங்கீதம் கேட்டுக்கொண்டு ஃபிராங்க் மார்ட்டினுக்குச் சென்றுகொண்டிருந்தோம். அவள் வண்டியை ஓட்ட, நான் ரேடியோவை இயக்கிக்கொண்டு, மதுவை ஊற்றிக்கொடுத்துக் கொண்டு வந்தேன். சின்னதாக ஒரு கொண்டாட்டச் சூழலை உருவாக்கிக் கொள்ள முயன்றோம். ஆனால் இயலவில்லை. இருவரும் வருத்தத்துடன்தான் இருந்தோம். கோழிவறுவல் அப்படியே இருந்தது, நாங்கள் அதைத் தொடவேயில்லை.


அவள் வீட்டுக்குப் பத்திரமாக போய்ச்சேர்ந்திருப்பாள் என்றுதான் நினைக்கிறேன். இல்லையென்றால் எனக்கு செய்திவந்திருக்கும். அவளும் என்னை அழைத்துப் பேசவில்லை, நானும் அழைக்கவில்லை. அவளுடைய மருத்துவ சோதனை பற்றி ஏதாவது தகவல் இப்போது கிடைத்திருக்கும். எதுவும் இல்லாமலும் இருக்கலாம். முதலில் வந்த முடிவே தப்பானதாக இருக்கக்கூடும். அது வேறுயாருடைய சோதனை முடியவாகவோ இருந்திருக்கலாம். என் காரை அவள்தான் வைத்திருக்கிறாள். என் பொருட்களும் அவள் வீட்டில் இருக்கின்றன. நாங்கள் மீண்டும் சந்திப்போம் என்று தெரியும்.


சாப்பாடு நேரத்துக்கான அழைப்புமணி ஒலிக்கிறது. ஜே.பி.யும் நானும் எழுந்து உள்ளே செல்கிறோம். முற்றத்தில் குளிர் அதிகமாகி விட்டிருக்கிறது. நடக்கும்போது எங்கள் மூச்சுக்காற்று புகையாக தப்பித்துச் செல்வதைப் பார்க்க முடிகிறது.


••••••••••••••••••••••••••••••••••••••••••••••


நியூ இயர் ஈவ் அன்று காலை என் மனைவியை தொலைபேசியில் அழைக்க முயன்றேன். பதிலே இல்லை. பரவாயில்லை. அதனால் என்ன, நான் என்னதான் செய்திருக்க முடியும்? இரண்டு வாரங்களுக்கு முன் அவளுடன் தொலைபேசியில் பேசியபோது இருவருமே கத்தி சண்டையிட்டுக்கொண்டோம். அவளை சில அற்புதமான வசைச்சொற்களால் அழைத்தேன்.”குடித்துக் குடித்து உன் மூளை அழுகிவிட்டது,வெட் பிரெய்ன்!“ என்று அவள் கத்திவிட்டு போனை வைத்துவிட்டாள்.


ஆனால் இப்போது அவளுடன் பேச விரும்பினேன். சில விஷயங்களைப் பேசித் தீர்க்கவேண்டும். அவள் வீட்டிலும் என் பொருட்கள் சில இன்னும் இருக்கின்றன.


இங்கே இருக்கும் ஒருவன் ஊர்சுற்றி. ஐரோப்பாவுக்கும் மற்ற இடங்களுக்கும் அடிக்கடி செல்பவனாம். அப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறான்.”பிஸினஸ்“, என்கிறான். அவனது குடிப்பழக்கம் இப்போது கட்டுக்குள் வந்துவிட்டதாக எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் அவன் எதற்காக ஃபிராங்க் மார்ட்டினுக்கு வந்தான் என்பது நினைவில் இல்லையாம். ஞாபகம் இல்லாததை நினைத்துச் சிரிக்கிறான்.”இதைப்போன்ற முழு உணர்விழப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்,“ என்கிறான்.”இது எதற்கான அறிகுறியும் அல்ல.“


அவன் குடிகாரன் அல்லவாம் – எங்களிடம் சொல்கிறான். நாங்களும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.”அப்படியொரு குற்றச்சாட்டை என் மீது சுமத்துவது அநியாயம்,“ என்கிறான்.”அப்படிச் சொல்வது ஒரு நல்ல மனிதனின் எதிர்காலத்தைப் பாழாக்கிவிடும்.”விஸ்கியுடன் ஐஸ் கட்டிகளைச் சேர்க்காமல், வெறும் தண்ணீரை மட்டும் கலந்து அருந்தினால் இப்படிப்பட்ட முழுஉணர்விழப்பு அவனுக்கு நேர்வதில்லையாம். மதுவில் நீங்கள் சேர்க்கும் ஐஸ்கட்டிகள்தான் அதற்கு காரணம் என்கிறான்.”உனக்கு எகிப்தில் யாரையாவது தெரியுமா?“ என்று என்னிடம் கேட்கிறான்.”அவர்கள் பெயரைச் சொல்லி அங்கே சிலகாரியங்களை சாதித்துக்கொள்வேன்.“


புத்தாண்டுக்கு முந்தையதின விருந்தாக ஃபிராங்க் மார்ட்டின் ஸ்டீக்கும் வேகவைத்த உருளைக்கிழங்கும் பரிமாறுகிறார். எனது பசி மீண்டும் திரும்பி வருகிறது. என் தட்டில் வைத்த எல்லாவற்றையும் காலிசெய்து விடுகிறேன். என்னால் இன்னும் சாப்பிடமுடியும். பக்கத்திலிருக்கும் டைனியின் தட்டைப் பார்க்கிறேன். அடப்பாவி என்கிறேன் மனதுக்குள். இந்த மனிதர் எதையுமே தொடவில்லை. அவருடைய ஸ்டீக் அப்படியே உட்கார்ந்திருக்கிறது. டைனி பழைய உற்சாக டைனியாக இல்லை. பாவம் இந்த ஆள் இன்றிரவை வீட்டில் மனைவியோடு செலவழிக்க முடியமென்று நினைத்திருந்தார். பண்டிகை உடையும் காலணிகளும் அணிந்து மனைவியோடு கைகோர்த்தபடி தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்திருக்கவேண்டுமென்று திட்டமிட்டிருந்தார். எல்லாம் பாழாகிவிட்டது. இப்போது இங்கிருந்து செல்வதற்கு பயப்படுகிறார். என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருமுறை வலிப்பு வந்தென்றால் இன்னொருமுறை வருவதற்கும் தயாராக இருக்கவேண்டும். அதற்குப் பிறகு டைனி தன்னைப்பற்றிய வேடிக்கைக் கதைகள் எதையும் சொல்லவில்லை. எதுவும் பேசாமல் ஒடுங்கிப் போயிருக்கிறார். அவருடைய ஸ்டீக்கை எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கிறேன். தட்டை என்னிடம் தள்ளிவிடுகிறார்.


ஃபிராங்க் மார்ட்டின் எங்களுக்காக கேக்கை எடுத்து வரும்போது எங்களில் பலரும் தூங்காமல் டிவியில் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த மிகப்பெரிய கேக்கை அவர் எங்கள் ஒவ்வொருவருக்கும் முன்பாக எடுத்துவந்து பெருமையாகக் காட்டுகிறார். இதுவொன்றும் அவரே தயாரித்தது அல்ல. பேக்கரி கேக்தான். ஆனாலும் கேக், கேக்தான். பிரமாண்டமான வெள்ளைநிற கேக். அதன் உச்சியில் இளஞ்சிவப்பு நிறத்தில் HAPPY NEW YEAR –ONE DAY AT A TIME என்ற எழுத்துக்கள்.


ஆபாசச் சொல் ஒன்றை உதிர்த்துவிட்டு,”எனக்கு இந்த கேக் ஒன்றும் வேண்டாம்,“என்கிறான் ஐரோப்பாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் செல்பவன்.”ஷாம்பெய்ன் எங்கே?“ என்று கேட்டு சிரிக்கிறான்.


நாங்கள் எல்லோரும் உணவு அறைக்குச் செல்கிறோம். ஃபிராங்க் மார்டின் கேக்கை வெட்டுகிறார். நான் ஜே.பி.க்குப் பக்கத்தில் அமர்கிறேன். அவன் இரண்டு துண்டுகள் சாப்பிட்டுவிட்டு ஒரு கோக் அருந்துகிறான். நான் ஒரு துண்டை மட்டும் சாப்பிட்டுவிட்டு இன்னொன்றை பிறகு சாப்பிடலாமென்று காகிதக் கைக்குட்டையில் சுற்றிக் கொண்டு வருகிறேன்.


ஜே.பி. ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்கிறான் – அவனுடைய கைகள் இப்போது நடுங்காமல் இருக்கின்றன – அவனுடைய மனைவி மறுநாள் காலை, புதுவருடத்தின் முதல்தினத்தில், வரப்போவதாகச் சொல்கிறான்.


“அப்படியா, நல்லது,“ என்கிறேன். தலையை ஆட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டு,விரலில் ஒட்டியிருக்கும் கிரீமைச் சுவைக்கிறேன்.”நல்ல செய்திதான்,ஜே.பி.“


“நான் உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்,“ என்கிறேன்.


“மகிழ்ச்சி,“ என்கிறேன்.


இருவருமே குட்நைட் சொல்லிக்கொள்கிறோம். புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கைக்குட்டையால் விரல்களைத் துடைத்துக் கொள்கிறேன். நாங்கள் கைக்குலுக்கிக்கொள்கிறோம்.


தொலைபேசியிடம் செல்கிறேன். ஒரு நாணயத்தை உள்ளே நுழைத்துவிட்டு என் மனைவியின் எண்களைச் சுழற்றுகிறேன். இம்முறையும் யாரும் பதிலளிக்கவில்லை. என் தோழியை அழைக்கலாமாவென்று யோசிக்கிறேன். அவள் எண்களைச் சுழற்றும்போது, அவளிடம் பேசவேண்டாமென்று தோன்ற, பாதியில் நிறுத்துகிறேன். ஒருவேளை அவளும் இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்கும் அதே டிவி நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கலாம். எப்படியிருந்தாலும் அவளோடு பேசுவதற்கு விருப்பம் இல்லை. அவள் நலமாக இருப்பாளென்றுதான் நம்புகிறேன். அவள் உடல்நலமின்றி இருக்கிறாளென்றால், அது எனக்குத் தெரியவும் வேண்டாம்.


**********************************************


காலை உணவுக்குப் பிறகு ஜே.பி.யும் நானும் காபியை எடுத்துக்கொண்டு முன்தாழ்வாரத்துக்கு வருகிறோம். தெளிவான வானம். ஆனால் ஸ்வெட்டரும் மேல்கோட்டும் தேவைப்படுமளவுக்கு குளிர்.


“குழந்தைகளையும் அழைத்துவரலாமா என்று கேட்டாள்,“ என்கிறான் ஜே.பி.”குழந்தைகள் வீட்டிலேயே இருக்கட்டும் என்றேன். நினைத்துப்பார்க்க முடிகிறதா? கடவுளே, குழந்தைகளை இந்த இடத்துக்கு கூட்டி வருவதாவது!“


கரிவாளியை புகைக்குடுவையாகப் பயன்படுத்துகிறோம். பள்ளத்தாக்குக்கு அப்பால் ஜாக்லண்டன் வசித்த இடத்தை வெறித்துப் பார்க்கிறோம். இன்னும் கொஞ்சம் காபி எடுத்து வந்து அருந்திக் கொண்டிருக்கையில் அந்தக் கார் சாலையிலிருந்து திரும்பி எங்கள் மையத்தை நோக்கி வருகிறது.


“அவள்தான்,“ என்கிறான் ஜே.பி. கோப்பையை நாற்காலிக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு, எழுந்து படியிறங்கிச் செல்கிறான்.


அந்தப்பெண் காரை நிறுத்துவதைப் பார்க்கிறேன். ஜே.பி. காரின் கதவைத் திறப்பதைப் பார்க்கிறேன். அவள் வெளியில் வருவதைக் கவனிக்கிறேன். அவர்கள் இருவரும் கட்டித்தழுவிக் கொள்வதைப் பார்க்கிறேன். தலையைத் திருப்பிக் கொள்கிறேன். மீண்டும் பார்க்கிறேன். ஜே.பி.யும் அவளும் கைக்கோர்த்துக்கொண்டு படியேறி வருகிறார்கள். இந்தப்பெண் ஒருமுறை ஒரு மனிதனின் மூக்கை உடைத்திருக்கிறாள். இவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருக்கின்றன, எவ்வளவோ பிரச்சனைகள் தலையெடுத்திருக்கின்றன, ஆனாலும் இந்த மனிதனை இவ்வளவு நேசிச்கிறாள், அவனும் இவளை சேர்த்தணைத்து அழைத்து வருகிறான். நான் நாற்காலியிலிருந்து எழுகிறேன்.


ஜே.பி. அவன் மனைவியிடம்,”இது என் நண்பன்,“ என்கிறான். ‘ஹேய், இவள்தான் ராக்ஸி.“


ராக்ஸி என் கையைப் பற்றிக் குலுக்குகிறாள். அவள் உயரமான, அழகான தோற்றம் கொண்ட பெண். கையால் பின்னப்பட்ட தொப்பியும், ஒரு கோட்டும், கையில்லாத கனமான ஸ்வெட்டரும் அணிந்திருக்கிறாள். முன்பு ஜே.பி. ஒரு பாய்ஃபிரண்ட் பற்றியும், ஒயர் கட்டர் பற்றியும் சொன்னது நினைவுக்கு வருகிறது. இப்போது அவள் விரலில் திருமண மோதிரம் எதுவும் இல்லை. அது ஏதோ ஓரிடத்தில் துண்டுத்துண்டாக இருக்குமென்று தோன்றுகிறது. அவள் கைகள் அகன்றிருந்தன. விரல்களின் கணுக்கள் உருண்டு திரண்டிருந்தன. முஷ்டியை மடக்கி இவள் ஒரு குத்து விட்டால் எப்படியிருக்குமென்று புரிகிறது.


“உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்,“ என்கிறேன்.”ஜே.பி.உங்கள் இருவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது என்று சொன்னான். புகைப்போக்கியைப் பற்றி, ஜே.பி. சொல்லியிருக்கிறான்.“


“ஆம், புகைப்போக்கிதானே,“ என்கிறாள்.”உங்களிடம் இவர் சொல்லாத பல விஷயங்களும் இருக்கும்,“ என்கிறாள்.”எல்லாவற்றையும் உங்களிடம் சொல்லியிருக்க மாட்டார் என்று பந்தயம் கட்டுவேன்,“ என்று சிரிக்கிறாள். பின்பு – அவளால் அங்கே வழியிலேயே நின்று கொண்டிருக்க முடியாததால் - ஜே.பியை சுற்றியணைத்து அவன் கன்னத்தில் முத்தமிடுகிறாள். அவர்கள் கதவை நோக்கி நடக்கிறார்கள்.”உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி,“ என்கிறாள்.”ஹேய், எங்கள் தொழிலில் ஜே.பி.தான் ஆகச்சிறந்த புகைப்போக்கி சுத்திகரிப்பாளர், அதை இவர் சொன்னாரா?“


“கம் ஆன் ராக்ஸி,“ என்கிறான் ஜே.பி. கதவின் கைப்பிடியில் அவன் கை இருக்கிறது.


“எல்லாவற்றையும் அவன் உங்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டதாகச் சொல்லியிருக்கிறான்,“ என்கிறேன்.


“அது என்னவோ உண்மைதான்.“ அவள் மீண்டும் சிரிக்கிறாள். ஆனால் அவள் வேறு எதைப்பற்றியோ நினைத்துக்கொண்டிருப்பதைப் போல தோன்றுகிறது. ஜே.பி.கதவின் கைப்பிடியைத் திருகுகிறான். ராக்ஸி அவன் கையின் மீது தன் கையை வைக்கிறாள்.”ஜோ, நாம் மதிய உணவுக்கு நகரத்துக்குச் செல்லலாமா? எங்காவது போகலாமே?“


ஜே.பி. தொண்டையைக் கனைக்கிறான்.”இன்னும் ஒரு வாரம் ஆகவில்லை.“ கைப்பிடியிலிருந்து கையை எடுக்கிறான்.


விரல்களை முகவாய்க்குக் கொண்டுவருகிறான்.”இன்னும் கொஞ்சநாட்களுக்கு நான் இங்கிருந்து வெளியே செல்லாமல் இருக்கவேண்டும் என்றே இவர்கள் விரும்புவார்கள். நாம் இங்கே காபி சாப்பிடலாம்.“ என்கிறான்.


“அப்படியானால் சரி,“ என்றபடி மீண்டும் என்னிடம் பார்வையைத் திருப்புகிறாள்.” இங்கே ஜோ நண்பர் ஒருவரைப் பெற்றிருப்பது திருப்தியளிக்கிறது. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.“


அவர்கள் உள்ளே செல்லத் தொடங்குகிறார்கள். அப்போது நான் செய்ய உத்தேசித்தது மடத்தனமான காரியம் என்று தெரியும், ஆனால் செய்துவிடுகிறேன்.”ராக்ஸி,“என்று கூப்பிடுகிறேன். அவர்கள் வாசலிலேயே நின்று திரும்பிப் பார்க்கிறார்கள்.”எனக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவைப்படுகிறது,“ என்கிறேன்.”விளையாட்டுக்குச் சொல்லவில்லை. ஒரு முத்தம் கிடைத்தால் எனக்குப் போதும்.“


ஜே.பி. உற்றுப்பார்க்கிறான். கதவு திறந்திருந்தாலும் அதன் குமிழை இன்னும் பிடித்துக் கொண்டிருக்கிறான். குமிழை முன்னும் பின்னுமாகத் திருகுகிறான். நான் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். ராக்ஸி புன்னகைக்கிறாள்.”நான் இப்போது சுத்திகரிப்பு வேலை செய்வதில்லையே,“ என்கிறாள்.”வருடக்கணக்காகி விட்டது. உங்களிடம் ஜோ சொல்லவில்லையா? சரி, அதனாலென்ன, உங்களுக்கு முத்தம் தருகிறேன்.“


அவள் அங்கிருந்து என்னிடம் வருகிறாள். என் தோள்களைப் பற்றுகிறாள் – நான் அவளைவிட மிகவும் உயரமானவன், பருமனானவன் – என் உதடுகளில் முத்தம் பதிக்கிறாள்.”சரியா?“ என்கிறாள்.


“போதும்,“ என்கிறேன்.


“பரவாயில்லை,“ என்கிறாள். அவள் இன்னும் என் தோள்களைப் பிடித்துக்கொண்டிருக்கிறாள். என் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.”குட்லக்,“ என்று சொல்லிவிட்டு தோளிலிருந்து கையை எடுக்கிறாள்.


ஜே.பி.”பிறகு சந்திப்போம், நண்பா,“ என்கிறான். கதவை முழுசாகத் திறந்து அவர்கள் உள்ளே செல்கிறார்கள்.


தாழ்வாரப் படிக்கட்டுகளில் உட்கார்ந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைக்கிறேன். என் கை என்ன செய்கிறது என்று கவனித்து தீக்குச்சியை ஊதி அணைக்கிறேன். என் கை நடுங்குகிறது. இன்று காலையே கவனித்தேன். இன்று காலை குடிக்க வேண்டும் போலிருந்தது. இது மிகவும் அயர்வளிப்பதாக இருந்தாலும் ஜே.பி.யிடம் எதுவும் சொல்லவில்லை. மனதை வேறு எதிலாவது செலுத்த முயல்கிறேன்.


புகைப்போக்கி சுத்திகரிப்பை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் – ஜே.பி. என்னிடம் சொன்ன எல்லாவற்றையும் பற்றி. பிறகு என்ன காரணத்தினாலோ திடீரென நானும் என் மனைவியும் முன்பு வசித்துவந்த ஒரு வீட்டைப் பற்றி நினைக்கத் தொடங்குகிறேன். அந்த வீட்டில் புகைப்போக்கி இருக்கவில்லை. ஆனால் இப்போது அந்த வீடு எதற்காக ஞாபகத்துக்கு வருகிறது என்று புரியவில்லை. ஆனால் அந்த வீடும், அந்த வீட்டுக்கு குடிபுகுந்த ஒருசில வாரங்கள் கழித்து ஒருநாள் காலை வெளியே கேட்ட சத்தமும் ஞாபகத்துக்கு வருகிறது.


அதுவொரு ஞாயிற்றுக்கிழமை காலை. படுக்கையறையில் இன்னும் இருள் இருந்தது. ஆனால் படுக்கையறை சன்னலிலிருந்து மங்கலான வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. கவனித்துக்கேட்டேன். வீட்டின் பக்கவாட்டுச் சுவரில் ஏதோ உராய்கிற சத்தம். கட்டிலிலிருந்து குதித்தெழுந்து என்னவென்று பார்க்கச் சென்றேன்.


“மை காட்!“ என்று என் மனைவி எழுந்து உட்கார்ந்து கொண்டு தலைமுடியை முகத்திலிருந்து தள்ளிவிட்டுக் கொள்கிறாள். பின் பலமாக சிரிக்கத் தொடங்குகிறாள்.”அது மிஸ்டர் வென்டூரினி,“ என்கிறாள்.”நான் உங்களிடம் சொல்வதற்கு மறந்துவிட்டேன். வீட்டுக்கு பெயின்ட் அடிக்க இன்று வருவதாகச் சொன்னார். வெயில் சூடேறுவதற்கு முன் விடியற்காலையிலேயே வந்துவிடுவதாகச் சொன்னார். நான்தான் மறந்துவிட்டேன்.“ அவள் சிரிக்கிறாள்.”வந்து படுங்கள், அன்பே. அது அவர்தான்.“


“ஒரு நிமிடம்,“ என்கிறேன்.


சன்னலிலிருந்து திரைச்சீலையைத் தள்ளுகிறேன். வெளியே இந்தக் கிழவர் வெள்ளை ஓவர் ஆல் அணிந்தபடி ஏணிக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். சூரியன் மலைகளுக்குப் பின்னாலிருந்து எட்டிப்பார்க்கத் தொடங்குகிறது. கிழவரும் நானும் ஒருவரையொருவர் பார்க்கிறோம். ஓவர்ஆலில் இருக்கும் கிழவர் இந்த வீட்டின் உரிமையாளர்தான். இந்த மனிதரின் அளவுக்கு ஓவர்ஆல் மிகவும் பெரிதாக இருக்கிறது. முகச்சவரமும் செய்து கொள்ளாமல் இருக்கிறார். வழுக்கைத் தலையை மறைக்க பேஸ்பால் தொப்பி. ஒரு விசித்திரமான கிழவர் என்று நினைக்கிறேன். சட்டென்று ஒரு சந்தோஷ அலை என் மீது பரவுகிறது, நான் இந்தக் கிழவராக இல்லையென்பதால். நான், நான்தான். இந்தப் படுக்கையறையில் என் மனைவியோடு இருக்கும் நான்.


அவர் கட்டைவிரலை சூரியனை நோக்கிக் காட்டுகிறார். நெற்றியில் வியர்வையைத் துடைப்பது போல சைகை செய்கிறார். அவருக்கு போதிய நேரம் இல்லையென்று எனக்கு உணர்ந்த முயல்கிறார். புன்னகைக்கிறார். அப்போதுதான் நான் நிர்வாணமாக இருப்பதை உணர்கிறேன். குனிந்து பார்த்துக் கொள்கிறேன். அவரை மீண்டும் பார்த்து, தோள்களைக் குலுக்கிக் கொள்கிறேன். அவர் என்ன எதிர்பார்த்தார்?


என் மனைவி சிரிக்கிறாள்.”வாருங்கள்,“ என்கிறாள்.”வந்து படுங்கள், உடனே வருகிறீர்களா இல்லையா? வந்து படுங்கள்,“


நான் திரைச்சீலையை மூடுகிறேன். ஆனாலும் சன்னலிலேயே நின்று கொண்டிருக்கிறேன். அந்தக் கிழவர்,”போ, மகனே, போய்ப்படு, எனக்குப் புரிகிறது,“ என்று சொல்வதைப்போல தனக்குத்தானே தலையாட்டிக் கொள்வது தெரிகிறது. தொப்பியின் மறைப்பை சரிசெய்து கொள்கிறார். தனது வேலையைத் தொடங்குகிறார். வாளியை எடுத்துக் கொள்கிறார். ஏணியில் ஏற ஆரம்பிக்கிறார்.


************************************


எனக்குப் பின்னாலிருந்த படிக்கட்டின் மீது சாய்ந்துகொண்டு கால்மேல் காலைத்தூக்கிப் போட்டுக்கொள்கிறேன். இன்று பிற்பகலுக்குப் பிறகு என் மனைவிக்கு போன் செய்யலாம் என்றிருக்கிறேன். பிறகு என் தோழியை அழைத்து அவளுக்கு எப்படியிருக்கிறது என்று கேட்பேன். அவளுடைய வாயாடி மகன் போனை எடுத்துவிடக் கூடாது. நான் போன் செய்யும்போது அவன் வீட்டில் இல்லாமல் வேறு எங்காவது எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும். ஜாக் லண்டனுடைய புத்தகங்களை எப்போதாவது படித்திருக்கிறேனா என்று நினைவுப்படுத்திப் பார்க்கிறேன். ஞாபகமே வரவில்லை. ஆனால் உயர்நிலைப் பள்ளியில் படித்த கதை ஒன்று இருக்கிறது.” தீ வளர்க்க,“ என்ற கதை. யூகோனில் உள்ள ஒருவன் பனிக்குளிரில் உறைந்து கொண்டிருக்கிறான். யோசித்துப் பாருங்கள் – அவன் எப்படியாவது நெருப்பை மூட்டாவிட்டால் குளிரில் உறைந்து செத்துப்போய்விடுவான். நெருப்பை மூட்டினால் அவனது காலுறைகள், பொருட்கள் எல்லாவற்றுடன் அவனும் சூடேற்றிக்கொண்டு பிழைத்துக் கொள்வான்.


எப்படியோ நெருப்பை மூட்டிவிடுகிறான். ஆனால் எதிர்பாராதது நடந்துவிடுகிறது. பனி மூடிய ஒரு மரக்கிளை ஒடிந்து நெருப்பில் விழுந்து அணைத்துவிடுகிறது. குளிர் இன்னும் அதிகரிக்கிறது. இரவு நெருங்கிக் கொண்டிருக்கிறது.


பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் சில்லரைகளை எடுக்கிறேன். முதலில் என் மனைவிலைய அழைப்பேன். அவள் இணைப்பில் வந்தால், அவளுக்குப் புத்தாண்டு வாழ்த்து சொல்வேன். அவ்வளவுதான். மற்ற விஷயம் எதையும் எடுக்கமாட்டேன். குரலை உயர்த்த மாட்டேன். அவளே எதையாவது ஆரம்பித்தாலும்கூட. எங்கிருந்து அழைக்கிறேன் என்று கேட்பாள். நான் சொல்லியாக வேண்டும். புத்தாண்டுத் தீர்மானங்கள் குறித்து எதுவும் சொல்லமாட்டேன். அதை வைத்து ஜோக் அடிப்பதில் அர்த்தமில்லை. அவளிடம் பேசிமுடித்த பிறகு, என் தோழியை அழைப்பேன். அல்லது முதலில் அவளையே அழைப்பேன். அவளுடைய பையன் போனை எடுக்கமாட்டான் என்று நான் நம்பியாக வேண்டும். அவள் எடுத்தவுடன்,”ஹலோ, என் சர்க்கரைக்கட்டியே,“ என்பேன்.”நான்தான் பேசுகிறேன்,“


***************************************

Comments


© 2025 by G. Kuppuswamy

bottom of page