top of page

அமைதி - ரேமண்ட் கார்வர்



'Peace' Short Story written by Raymond Carver

(தமிழில் ; ஜி.குப்புசாமி )


நாவிதன் எனக்கு முடிவெட்டிக்கொண்டிருந்தான். நான் உட்கார்ந்திருந்த நாற்காலிக்குப் பின்னால் சுவரையொட்டி மூன்று பேர் உட்கார்ந்திருந்தார்கள். காத்திருந்த இருவரை இதற்குமுன் பார்த்ததில்லை. மற்றவனின் முகம் பரிச்சயமாக இருந்தாலும் தெளிவாக நினைவுக்கு வரவில்லை. கத்தரி என் கேசத்தில் விளையாடிக்கொண்டிருக்க, நான் அந்த ஆளையே திரும்பத்திரும்ப பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் பல் குச்சியால் வாய்க்குள் நோண்டிக் கொண்டிருந்தான். கட்டுமஸ்தானவன். குட்டையான சுருட்டை முடி. அப்போது என் மனக்கண்ணில் அவன் தொப்பியும் சீருடையும் அணிந்து வங்கியின் வரவேற்பறையில் இடுங்கிய கண்களால் வருவோர் போவோரை கண்காணித்துக் கொண்டிருக்கும் காட்சி தோன்றியது.


மற்ற இருவரில் ஒருவன் மற்றவர்களை விடப்பெரியவன். தலை முழுக்க நரைத்த சுருட்டை முடி. புகைத்துக கொண்டிருந்தான். மூன்றாமவன் அவ்வளவு வயதானவன் அல்ல. உச்சியில் ஏறக்குறைய வழுக்கை. ஆனால் பக்கவாட்டில் செவிகளை மூடும்படி முடி தொங்கிக் கொண்டிருந்தது. மரம் வெட்டிகளின் பூட்ஸும், மிஷின் ஆயில் படிந்த பளபளப்பான காலசராயும் அணிந்திருந்தான்.


நாவிதன் என் உச்சியில் கைவைத்து தலையைத் திருப்பினான. காவலன் பக்கம் திரும்பி,”என்ன சார்லஸ், மான் கிடைத்ததா ? ‘‘ என்றான்.


எனக்கு இந்த நாவிதனைப் பிடிக்கும்.பெயர் சொல்லி கூப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு நாங்கள் இருவரும் நெருக்கமானவர்கள் அல்ல. ஆனால் முடிவெட்டிக்கொள்ள வரும்போது சிநேகமாக இருப்பான். மீன் பிடித்தல் எனது பொழுது போக்கு என்பதை அறிவான். மீன் பிடித்தலைப் பற்றி பேசுவோம். அவன் வேட்டையாடச் செல்வானா என்று தெரியாது. ஆனால் அவனால் எதைப்பற்றியும் பேசமுடியும். இந்த வகையில் அவன் ஒரு நல்ல நாவிதன்தான்.


“பில், அது பெரிய தமாஷ். பாழாப்போன கதை.”என்றான் அந்தக் காவலன். பல்குச்சியை வெளியில் எடுத்து சாம்பல் குடுவையின் மேல் வைத்தான். தலையை ஆட்டிக் கொண்டான்.”அகப்பட்டது என்றும் சொல்லலாம், அகப்படவில்லை என்றும் சொல்லலாம். ஆமாம், இல்லை என்றுதான் உன் கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.


எனக்கு அவன் குரலைப் பிடிக்கவில்லை. ஒரு காவலாளிடம் எதிர்பார்க்கக்கூடிய குரலாக இல்லை. அவன் தோற்றத்துககுப் பொருத்தமில்லாத குரல்.


பத்திரிக்கையைப் புரட்டிக்கொண்டிருந்த பெரியவனும் செய்தித்தாளை வைத்திருந்தவனும் நிமிர்ந்தனர். படித்துக்கொண்டிருந்ததைக் கீழே வைத்துவிட்டு அந்தக் காவலன் பேசுவதைக் கேட்கத் திரும்பி உட்கார்ந்தார்கள்.


“என்ன ஆச்சு என்று சொல்லு சார்லஸ், நாங்களும் கேட்கிறோம்” என்றான் நாவிதன்.


நாவிதன் என் தலையை மீண்டும் திருப்பி, கத்தரிக்கோலை இயக்கத் தொடங்கினான்.


••••••••••••••••••••••••••••


“நாங்கள் ஃபிக்கிள் ரிட்ஜ் முகட்டில் ஏறிக் கொண்டிருந்தோம். கிழவனும் நானும் அந்தப் பையனும். இரலை மான்களை வேட்டையாடுவதுதான் நோக்கம். கிழவன் ஒரு குழுவில் முன்னணியில் இருந்தான். நானும் இந்தப் பொடியனும் இன்னொன்றில். பொடியனுக்கு ஹாங்க் ஓவர். அவன் தோலை உரிச்சிருக்கணும். போதை தெளியவேயில்லை நாள் முழுக்க தண்ணீராகக் குடித்துக் கொண்டிருந்தான். விடியற்காலையில் வந்தோம். இப்போது பிற்பகல் ஆகிவிட்டிருந்தது. எதுவும் அகப்படவில்லை, ஆனால் நம்பிக்கை இருந்தது. கீழே இருக்கும் வேட்டைக் காரர்க்ள் நாங்கள் இருக்கும் திசையை நோக்கி மானை விரட்டுவார்கள் என்று மர திமிசுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டு காத்திருந்தோம். கீழே பள்ளத்தாக்கில் சுடுகிற சத்தம் கேட்டது.


“கீழே அந்த இடத்தில் பழத்தோட்டங்கள் இருக்கின்றன,” என்றான் செய்தித்தாள்களை வைத்திருந்தவன். எதற்காகவோ அவன் படபடப்பாகவே இருந்தான். கால்மேல் காலைப் போட்டுக் கொண்டான், பூட்ஸ் பாதத்தை வேகமாக ஆட்டிக் கொண்டிருந்தான், மீண்டும் காலை மாற்றிப் போட்டுக் கொண்டான். இந்த இரலைமான்களெல்லாம் அந்தப் பழத்தோட்டங்களுக்குப் பக்கத்தில்தான் சுற்றிக் கொண்டிருக்கும்.”


“உண்மைதான்,”என்றான் காவலாள்.” இந்தப் பொறுக்கி மான்கள் அங்கே நுழைந்து பச்சை ஆப்பிள் பிஞ்சுகளையெல்லாம் சாப்பிட்டுவிடும். கீழே துப்பாக்கி சுடுகிற சத்தம் கேட்டதும், எங்க இடத்துக்குத்தான் ஓடிவரும் என்று குத்துக்காலிட்டு காத்துக்கிட்டிருந்தோம். அப்போ நுறு அடி தூரத்திலிருந்த புதரிலிருந்து இந்த இரலை பாய்ந்து வந்துச்சு. ரொம்பப் பெரிசு. இந்தப் பொடியனும் நானும் ஓரே நேரத்தில் பார்த்துட்டோம். அவன் சட்டுனு துப்பாக்கியை எடுத்து கன்னாபின்னான்னு சுடத் தொடங்கிட்டான். மரமண்டை. ஒரு குணடுகூட அதுமேல படலை. அதுக்கு எங்கிருந்து சுடறாங்கன்னு தெரியாம, எந்தப்பக்கம் பாயறதுன்னு குழம்பி திணறிக்கிட்டிருந்தது. அப்புறம் நான் சுட்டேன். இந்தக் குழப்பத்துக்கு மத்தியிலே அதை சரியா ஸ்தம்பிக்க வெச்சுட்டேன்.”


“ஸ்தம்பிக்க வெச்சுடறதுன்னா ?”நாவிதன் கேட்டான்.


“அதான், ஸ்தம்பிக்க வெச்சுட்டேன்,”என்றான்.”குண்டு சரியா பாய்ந்துட்டது. அது அந்த மானை அப்படியே ஸ்தம்பிக்க வெச்சுட்டது. தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு, நடுங்கி நடுங்கி திணறிக்கிட்டிருக்கு. இந்தப் பொடியன் விடாம சுடறான். எனக்கு மறுபடியும் கொரியாவுக்குப் போயிட்ட மாதிரி இருந்தது. மறுபடியும் சுட்டேன். ஆனா படலை. அந்தக் கிடாய் புதருக்குள்ளே போயிருச்சு. அதுக்கு இதுக்குள்ளே எல்லா சக்தியும் போயிட்டிருக்கும். இந்த முட்டாள் பையன் எதுக்காகவோ புதரைப் பாத்து சுட்டுக்கிட்டே இருக்கான். ரவையெல்லாம் தீர்ந்துட்டது. சரியா ஒரு குத்து விட்டேன். அவன் வயத்துலயே. அவனும் ஸ்தம்பிச்சுட்டான்.”


“அப்புறம் என்ன ?”என்றான் செய்தித்தாளை வைத்திருந்தவன். பேப்பரை சுருட்டி கால்முட்டியில் தட்டிக்கொண்டிருந்தான்.”அப்புறம் என்ன ? துரத்திக்கிட்டு போயிருப்பீங்க. இதுங்க எல்லாம் எங்கேயாவது கண்டுபிடிக்க முடியாத இடமா பாத்து உயிரை விடும்.”


பெரியவன்,”துரத்திக்கிட்டு போனிங்கதானே ?”என்றான். அது ஒரு கேள்வியாக தொனிக்காவிட்டாலும்.


“போனோம். நானும் பொடியனும் பின்னாலேயே துரத்திக்கிட்டு போனாம். இந்தப் பொடியன் எதுக்கும் லாயக்கில்லாதவன், அவனால நடக்கவே முடியல. துவண்டுட்டான். மண்டுப்பயல்.”அந்தக் காவலன் நடந்ததை நினைத்து இப்போது சிரித்துத்தான் ஆகவேண்டும்.”பீர் குடிச்சிட்டு ராத்திரி முழுக்க துரத்திகிட்டு ஓடணும்னா எப்படி ? என்னால முடியலேங்கறான். அது இவனுக்க இப்பத்தான் தெரியுது, கடவுளே ! ஆனாலும் இழுத்துக்கிட்டு ஓடினேன். ரெண்டு பேரும் துரத்தினோம். சரியான ஓட்டம். தரையெல்லாம், செடி இலையிலெல்லாம், வழியெங்கும் ரத்தம். எல்லா இடத்திலும் ரத்தம். என்னதான் பெரிய இரலைன்னாலும் இவ்வளவு ரத்தம் இருக்குமா ? நான் பார்த்ததேயில்லை. அந்தப் பிசாசு எப்படி ஓடிக்கிட்டேயிருந்ததுனு தெரியலை.”


“சில நேரங்களில் அப்படித்தான் ஓடுவதை நிறுத்தவே நிறுத்தாது,”என்றான் செய்தித்தாள் வைத்திருந்தவன்.”ஒவ்வொரு முறையும் கண்டுபிடிக்க முடியாத இடமா பார்த்தது உயிரை விடும்.”


“அந்தப் பயலை ஒழுங்கா சுடலைன்னு சவட்டி எடுத்தேன். அவன் என்னாடான்னா, எதிர்த்துக்கிட்டு வரான். விட்டேன் ஒரு குத்து, இங்கே”காவலாள் தலையின் பக்கவாட்டில் தொட்டுக்காண்பித்து சிரித்தான்.”அவனுக்கு காது கிழிஞ்சிட்டிருக்கும். உபயோகமத்த பயல். அவனுக்கென்ன வயசா ஆயிடுச்சு ? அவனுக்கு அந்த அடி தேவைதான். ஆனா என்னன்னா, இருட்டிவிட்டதாலே தொடர்ந்து தேட முடியலே. இந்தப் பொடியனும் உட்கார்ந்து வாந்தியெடுக்க ஆரம்பிச்சுட்டான்.”


“இந்நேரம் அந்த இரலையை ஓநாய் கூட்டம் சாப்பிட்டு காலிசெய்து விட்டிருக்கும்,”என்றான் செய்தித்தாள் வைத்திருந்தவன்.”ஓநாய், காக்கை, பருந்து ……………”


அவன் செய்தித்தாளை விரித்தன். ஒழுங்காக மடித்தான். பக்கத்தில் வ்ததுவிட்டு கால் மேல் கால் போட்டுக கொண்டான். எங்கள் எல்லோரையும் தலையைத் திருப்பி வரிசையாகப் பார்த்தான். தலையை ஆட்டிக்கொண்டான்.


பெரியவன் நாற்காலியில் திரும்பி உட்கார்ந்து சன்னலுக்கு வெளியே பார்த்தான். சிகரெட் பற்றவைத்துக் கொண்டான்.


“அப்படித்தான் நினைக்கிறேன்,” என்றான் காவலாள்.”பாவம், எவ்வளவு பெரிசு அது ! பில், உன் கேள்விக்கு பதில் சொல்லணும்னா, மானைப் பிடிச்சேன், பிடிக்கலை. அப்படித்தான் சொல்லணும். ஆனா, அன்னிக்கு ராத்திரி எங்களுக்கு மான்கறி விருந்து கிடைச்சது. கிழவன் ஒரு மான் குட்டியை எப்படியோ வேட்டையாடிட்டிருக்கான்.நான் கீழே முகாமுக்குப் போறதுக்குள்ளே அதை வெட்டி தொங்க விட்டிருக்காங்க. ஈரல், இதயம், சிறுநீரகத்தையெல்லாம் மெழுகு பேப்பர்ல பொட்டலம் கட்டி வெச்சிருக்காங்க. வேலை சுத்தம். சரியான வேசிமகன் அந்தக் குள்ளக்கிழவன். கில்லாடி.”


அவன் பேச்சை நிறுத்திவிட்டு ஏதோ ஞபாகத்துக்கு வந்ததைப்போல சுற்றுமுற்றும் பார்த்தான். பல் குச்சியை எடுத்து மீண்டும் வாய்க்குள் நோண்டத் தொடங்கினான்.


பெரியவன் சிகரெட்டை அணைத்துவிட்டு, காவலாள் பக்கம் திரும்பினான். மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டான்.”நீ அந்த இரலலைமானைக் கண்டுபிடிக்கறத்துக்குப் பதிலாக முடிவெட்டிக் கொள்ள வந்துவிட்டாயா ?”


காவலாள் திடுக்கிட்டு,”அந்த மாதிரியெல்லாம் பேசாதே” என்றான். ”கிழட்டுப்பயலே, அப்புறம் உன்னை கவனிக்க வேண்டிருக்கும்.”


நாவிதன் குறுக்கிட்டான்.” போதும் நிறுத்துங்கள். இது என்னோட இடம்.”


“உன் காதுல குத்தியிருக்கணும்,” என்றான் பெரியவன்.


“அப்படியா, முயற்சி செய்து பாரேன்,” காவலாள் சொன்னான்.


“சார்லஸ்,” என்று நாவிதன் அவனை அடக்கினான்.


சீப்பையும் கத்தரிக்கோலையும் மேசை மேல் வைத்துவிட்டு, என் தோளின் மீது கைகளை வைத்தான், ஏதோ நான் துள்ளிக் குதித்து நடுவில் சென்று விடுவேன் என்று நினைத்தவன் போல.


“ஆல்பர்ட், நான் சார்லஸும், அவன் பையனுக்கும் வருடக்கணக்கா முடிவெட்டிக் கொண்டிருக்கிறேன். இதற்கு மேல் பேச்சு வளரக்கூடாது.”


நாவிதன் ஒவ்வொருவர் முகத்தையும் தனித்தனியாக நிறுத்தி நிதானமாகப் பார்த்துவிட்டு, மீண்டும் என் தோளை அழுத்தினான்.


“வெளியில் வைத்துக் கொள்ளுங்கள்,” என்றான் செய்தித்தாளை வைத்திருந்தவன். ஏதோ நடக்குமென்ற எதிர்பார்ப்பில் அவன் முகம் சிவந்திருந்தது.


“இதோடு போது சார்லஸ், இதற்கு மேல் ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது. ஆல்பர்ட், நீதான் அடுத்து வரவேண்டும், இப்போது.”நாவிதன், செய்தித்தாள் வைத்திருந்தவன் பக்கம் திரும்பினான்.”நீ இதற்குமுன் பழக்கமில்லைல, மிஸ்டர், இந்த விவகாரத்தில் நீ எதுவும் மூக்கை நுழைக்காமல் இருந்தால் நல்லது.”


•••••••••••••••••••••••••••••••••••••


காவலாள் எழுந்தான்.”நான் அப்புறம் வந்து வெட்டிக் கொள்கிறேன். கப்பெனி உத்தரவு .”


கதவை வேகமாக அறைந்து மூடிக்கொண்டு வெளியேறினான்.


பெரியவன் தொடர்ந்து சிகரெட் புகைத்தபடி உட்கார்ந்திருந்தான். சன்னலுக்கு வெளியே பார்த்தான். பின்னங்கையை திருப்பி எதையோ ஆராய்ந்தான். எழுந்து தொப்பியை அணிந்து கெண்டான்.


“ஐயாம் ஸாரி, பில்,” என்றான் பெரியவன்.” இன்னும் கொஞ்சநாள் முடி வளரட்டும். அப்புறம் வரேன்.”


“பரவாயில்லை ஆல்பர்ட்.”


பெரியவன் வெளியில் சென்றதும், நாவிதன் சன்னலுக்குச் சென்று அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டே பேசினான்; ”ஆல்பர்ட்டுக்கு எம்ஃபிசிமா வந்தது செத்துப் பிழைத்தான். நாங்கள் ஒன்றாக மீன் பிடிக்கப் போவோம். சால்மனை எப்படிப்பிடிப்பது என்றெல்லாம் சொல்லிக்கொடுத்தது அவன்தான். இந்தப் பெண்கள் இருக்கிறார்களே, கிழவன் மேல் வந்து விழுவார்கள். அவன் முன்கோபிதான். ஆனால் எப்போதுமே அவன் கோபத்தைத் தூண்டிவிடுகிறார் போலத்தான் ஏதாவது நடந்து விடுகிறது.


செய்தித்தாளை வைத்திருந்தவனால் அசையாமல் உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்து உலாத்தினான். எல்லாவற்றையும் ஆராய்ந்தான். தொப்பி ஸ்டாண்ட், பில்லும் அவன் நண்பர்களும் இருக்கும் புகைப்படங்கள், ஹார்டுவேர் கம்பெனியின் காலண்டர். ஒவ்வொரு மாதத்துக்கும் இயற்கை காட்சிகள் இருந்ததை ஒவ்வொன்றாகத் தூக்கிப்பார்த்தான். அலமாரிக்குச் சென்று சட்டம் போட்டிருந்த பில்லின் முடிதிருத்துநர் லைசன்ஸைக்கூட ஆராய்ந்தான். பின் திரும்பி,”நானும் போகிறேன்,”என்று வெளியேறினான்.


“சரி, நீங்கள் எப்படி ?”உங்களுக்கு முடி வெட்டட்டுமா, வேண்டாமா ?”என்றான் நாவிதன், ஏதோ நான்தான் எல்லாவற்றுக்கும் காரணம் போல.


•••••••••••••••••••••••••••••••••••••


நாவிதன் கண்ணாடிக்கு நேராக என் முகத்தைத் திருப்பினான், என் தலைக்கு இரண்டு பக்கங்களிலும் தன் கைகளைப் பதித்தான். கடைசி முறையாக என்னைச் சரியாக அமைத்துவிட்டு தன் முகத்தை என் முகத்துக்குப் பக்கத்தில் கொண்டு வந்தான்.


நாங்கள் இருவரும் ஒன்றாகக் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் கைகள் இன்னும் என் தலையை அழுத்திக் கொண்டிருந்தன.


நான் என்னையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவனும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எதையாவது கவனித்ததிருந்தானென்றால், அது எதனையும் சொல்லவில்லை.


என் முடிக் கற்றைகளுக்கிடையே விரல்களை ஓட்டினான். எதையோ யோசித்துக் கொண்டிருப்பவனைப்போல மெதுவாக விரல்களை கேசத்தின் நடுவே துழாவினான். மென்மையாக, காதலன் வருடுவதைப் போல.


இது நடந்தது கலிபோர்னியாவில் ஓரிகன் எல்லையோரத்தில் இருந்த கிரஸென்ட் சிடியில். அடுத்து நானும் உடனே கிளம்பிவிட்டேன். ஆனால் இன்று அந்த ஊரான கிரெஸென்ட் சிடியையும், அப்போது என் மனைவியுடன் புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க முயன்று கொண்டிருந்ததையும், அந்தக் காலை வேளையில் அந்த நாவிதனின் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது தீர்மானித்த முடிவையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.


அந்த சமயத்தில் என் விழிகள் மூடியிருந்தன. கேசத்துகிடையே அவன் விரல்கள் அளைந்து கொண்டிருந்தன. அதற்குள் முடி வளர்வதைப் போல அப்போது தோன்றியது. அந்த விரல்களின் இனிமையில் என்னிடம் பரவிய அந்த அமைதியை பற்றி இன்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

Comments


© 2025 by G. Kuppuswamy

bottom of page