உன்னால்தான் எல்லாம்
- G Kuppuswamy
- Feb 23
- 10 min read
- ஜி.குப்புசாமி

பாலூ என்று உன்னை நான் அழைப்பதற்கு, நீயும் நானும் நேரில் அறிந்தவர்களோ, நண்பர்களோ, உறவுக்காரர்களோ அல்ல. ஆனால் உன்னை எனக்கு 69ம் வருடத்திலிருந்து பழக்கம். என்னைவிட பதினைந்து வயது மூத்த, உடன்பிறக்காத சகோதரன் நீ. உன்னை அயலார் போல செயற்கை மரியாதையோடு விளிக்க என்னால் ஆகாது. என்னில் ஒரு பகுதியாக நிறைந்திருக்கும் நீ எப்போதும் என் பேச்சில் வரும்போது ஏகவசனத்தில்தான் வருவாய். அதுதான் நமக்கு இயல்பாக இருக்கமுடியும். இப்போது என்னைவிட்டு, (’எங்களைவிட்டு’ என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என மற்றவர்கள் சொல்லலாம்; ஆனால் நீ எனக்கானவன், எனக்கு மட்டுமேயானவன் என்று மனம் நம்பும்போது- என்னைவிட்டு என்பதுதான் சரி) போய்விட்டதால் பழக்கத்தை மாற்றி மரியாதையாக அழைக்கவேண்டுமா என்ன? என்னுடைய சகோதரர்களை நான் அவர் இவர் என்று கூப்பிடும் வழக்கம் இல்லை.
உன்னால் நான் எத்தனைமுறை அழுதிருக்கிறேன் என்று நினைத்துப்பார்க்கிறேன். சற்று நேரத்துக்குமுன் உன்னை நல்லடக்கம் செய்தபோது வழிந்த கண்ணீர் ரொம்பவும் ஜூனியர். உன்னால் முதல்முறை நான் அழுதது 71ம் வருடம். அப்போது நான் ஆறாம்ப்பு படித்துக்கொண்டிருந்தேன். வரலாறு வகுப்பு நடந்துகொண்டிருந்தது. ஜெயராமன் வாத்தியார் மிகவும் கண்டிப்பானவர். பாடத்தை கவனிக்காவிட்டால்கூட பரவாயில்லை, வகுப்பில் பேசக்கூடாது. ஆனால் நான் பேசியே தீரவேண்டியிருந்தது. அதற்கு முன்தினம்தான் வீட்டில் எல்லோரும் ‘அவளுக்கென்று ஒரு மனம்’ பார்த்துவிட்டு வந்திருந்தோம். அந்தப் படத்தில் வரும் மிக அற்புதமான பாடல்களைப் பற்றி பக்கத்தில் உட்கார்ந்திருந்த லட்சுமணனிடம் சொல்லியே தீரவேண்டியிருந்தது. அவனும் நல்ல இசை ரசிகன். முக்கியமாக உன்னை அவனுக்குப் பிடிக்கும். வகுப்பின் இடைவேளையில் ‘இயற்கையெனும் இளைய கன்னி’ பாடலை சன்னமான குரலில் பாடுவான். அதனால் “நேத்து சினிமா போயிருந்தோம்’’ என்று கிசுகிசுத்தேன். எந்தப் படம் என்று ஜாடையில் கேட்டான். சொன்னேன். பிறகு பாடல்களைப் பற்றிச் சொல்ல முயன்றேன். “அதில் எல்லா பாட்டும் எஸ்.பி,” என்றேன். அவனுக்குப் புரியவில்லை. “மங்கையரே மகராணி…பிரமாதமா இருக்கு” என்று அவன் காதருகே குனிந்து சொன்னேன். (’மங்கையரில் மகராணி’ என் காதில் மங்கையரே என்று விழுந்திருக்கிறது. நீ இன்னும் சரியாக உச்சரித்திருக்கலாம். உன்னால் எனக்கு எவ்வளவு சங்கடங்கள், என்று பார்த்துக்கொள்) லட்சுவுக்கு வழக்கமாக நன்றாக காதுகேட்கும்தான். அன்று என்னவோ பாதி செவிடாக இருந்தான். “அ?’’ என்றான். மீண்டும் “மங்கையரே.. மங்கையரே..” என்றேன். ’‘அ?’’ என்றான். உடனே பேனாவை எடுத்து வரலாறு புத்தகத்தில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் வரைபடத்தின் மார்ஜினில் ‘மங்கையரே’ என்று எழுதிக்காட்டினேன். அவன் அதீதமாகத் தலையை சாய்த்து என் புத்தகத்தைப் பார்க்க, ஏதோ சம்திங் ராங் என்று புரிந்து ஜெயராமன் சார் எங்களருகே வந்து உடனடியாக புத்தகத்தைப் பறிமுதல் செய்தார். ‘மங்கையரே’ பளிச்சென்று தெரிகிறது. “என்னடா இது?” என்றார். ஆருயிர் நண்பன் உடனடி துரோகியாக மாறி ‘‘இவன்தான் எழுதினான் சார்” என்று காட்டிக்கொடுத்தான். ஆசிரியருக்கு அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் பெண்பிள்ளைகள் இருக்கும் வகுப்பில் ‘மங்கையரே’ என்று ஒரு துஷ்டப்பயல் எழுதினால் சும்மா விடுவதா என்று “இந்த வயசிலேயே இதெல்லாம் கேட்குதா உனக்கு?” என்று விளாசியெடுத்தார். உன்னால் நான் அழுதது அதுதான் முதல் முறை.
அடுத்ததாக உன்னால் நான் அடி வாங்கி அழுதது பத்தாவது படிக்கும்போது. மாடியில் குரூப் ஸ்டடி பண்ணும் சாக்கில் மூன்று நண்பர்களோடு ஒரு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தேன். நாளை நமதே படத்தில் ‘அன்பு மலர்களே’ பாடலில் டியெம்மெஸ்ஸை விட எஸ்பியின் குரல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று வாதிட்டுக்கொண்டிருந்தேன். மேலும், ‘என்னை விட்டால் யாருமில்லை’ பாடலை எஸ்பி பாடியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று விளக்கிக் கொண்டிருக்கும்போதே ஒட்டு கேட்டுக்கொண்டிருந்த அப்பா உள்ளே பிரவேசித்தார். என்னை இழுத்து, தலையில் ஓங்கி இரண்டு குட்டு வைத்து பொறிகலங்க வைத்தார். “இதுதான் நீ படிக்கிற லட்சணமா? இனிமே எவனும் இங்கே படிக்க வரக்கூடாது” என்று நண்பர்களையும் விரட்டிவிட்டார். நண்பர்களுக்கெதிரே அடி வாங்கிய அவமானம் சாமான்யமல்ல. அடுத்த நாள் நண்பர்களாக இருந்த துரோகிகள் நான் அடி வாங்கிய கதையை பள்ளியில் எல்லோரிடமும் சொல்லி்விட்டது அதைவிட அசிங்கம். எல்லாம் உன்னால்தான்.
என்மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த கணக்கு ட்யூஷன் ஆசிரியர் ஜி.எஸ்.எஸ். சார் அவர்களின் நன்மதிப்பிலிருந்து (அநியாயமாக) நான் சரிந்துவிட்டதும் உன்னால்தான். அவர் ட்யூஷன் எடுத்துவந்தது ஒரு பெரிய மனிதர் வீட்டு மொட்டை மாடியில். நாங்கள் ஏறக்குறைய ஐம்பது பேர் படித்துவந்தோம். ஒரு மினி பள்ளிக்கூடம் அது. நிறைய கண்டிஷன்கள் உண்டு. மொட்டைமாடியின் கைப்பிடி சுவர் அருகே செல்லக்கூடாது, பால்கனிக்கு செல்லக்கூடாது, யாரும் வெளியே வேடிக்கை பார்க்கக்கூடாது. ஒருநாள் பள்ளியிலிருந்து சார் வருவதற்கு சற்று தாமதமானபோது, தடை விதிக்கப்பட்டிருந்த பிரதேசத்துக்கு அத்துமீறி நுழைந்து, வீட்டுக்குப் பின்னாலிருந்த தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போதுதான் கவனித்தேன். எதிரிலிருந்த வீட்டின் வாசலில் ஒரு பாவாடை தாவணி. எங்களுக்கு முதுகைக் காட்டியபடி திரும்பி நின்று உள்ளே யாரிடமோ பேசிக்கொண்டிருந்தாள். நான் சக தோழர்களை சீக்கிரம் வாங்கடா என்று அழைத்தேன். அடுத்த கணம் கைப்பிடிச் சுவர் ஹவுஸ்ஃபுல்லாகிவிட்டது. எல்லோரும் அவள் எப்போது திரும்புவாள் என்று ஆவலோடு எதிர்பார்த்திருக்கும்போது, அவள் உள்ளே போய்விட, முகத்தை முழுசாகப் பார்க்க முடியவில்லையே என்று பையன்களுக்கு ஒரே ஏமாற்றம். அப்போதுதான் என் நாக்கில் சனி விளையாடியது. சிச்சுவேஷன் சாங் போல உன் பாட்டுதான் வாயில் வந்தது. ”அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன்…இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன்..” பையன்கள் எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் அசோக்கும் ஸ்ரீதரும் அடுத்த நாள் முதல் கைப்பிடி சுவரையொட்டி நின்றுகொண்டு ’உன்னை நான் பார்த்தது..’ என்று பாடுவார்கள் என்று அப்போது எதிர்பார்க்கவில்லை. ட்யூஷன் முடிந்து இன்னும் இரண்டு மூன்று பேர்களோடு சைக்கிளில் அந்தப் பெண்ணின் வீட்டின் முன்னால் வட்டமிடப்போகிறார்கள் என்றும் எதிபார்க்கவில்லை. அப்புறம் அந்தப் பெண்ணின் அப்பா ட்யூஷன் சாரிடம் புகார் செய்ததையும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்துவிடச் சொல்வாரென்றும் எதிர்பார்க்கவில்லை. பரீட்சை நெருங்கும் சமயத்தில் இடத்தை காலிசெய்யவேண்டியிருந்ததில் சார் மிகவும் நொந்துபோயிருந்தார். அதைவிட மிகப்பெரிய துயரம், நண்பர்கள் என்ற பெயரில் இருந்த அந்த துரோகிகள் நான்தான் பாட்டு பாடியது என்று சாரிடம் சொல்லிவிட்டதும், இவையெல்லாவற்றுக்கும் நான்தான் காரணம் என்று சார் நினைத்ததும். . “நீயுமாடா? உன்னை நான் எவ்வளவு நல்ல பையன்னு நெனச்சிருந்தேன்…” என்று ஜி.எஸ்.எஸ். சார் என்னிடம் கேட்டது இன்னொரு Et tu Brutus .
வீட்டிலும் என் தாத்தாவிடம் திட்டு வாங்கியிருக்கிறேன். உன் சகலவித குழைவுகளோடும், நெளிவு சுளிவுகளோடும் "மார்கழிப் பனியில்ல்ல்ல்…. மயங்கிய நிலவில்ல்ல்ல்ல்… ஊ…ர்வசி வந்தாள்ள்ள்ள்…. எனைத்தேடி…. கார்குழல் தழுவி…. கனியிதழ் பருகி…." என்று மனமுருகிப் பாடத் தொடங்கியவுடனே தாத்தாவின் கம்பீரக்குரல் அதிரும். “ச்ச்சே…என்னடா பாட்டு இது… அரட்டை பசங்க மாதிரி முக்கி முனகிக்கிட்டு… படிக்கிற பையனா ஒழுங்கா இல்லாம…” மேலும் பாடினால் அப்பாவின் காதுக்கு கொண்டுபோய்விடுவார் என்பதால் தாத்தா, அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில், ‘மார்கழிப் பனியில்ல்ல்ல்ல்…’ என்று சஞ்சாரிப்பேன். ஒரு சின்னப் பையனுக்கு சுதந்திரம் இல்லாத நாடு இது.
ஆனால் (எனக்கு எட்டிக்காயாக இருந்த) கணக்கு பாடத்தில் ஓரளவு சுமாராக (அதாவது ஃபெயில் ஆகாமல் ஐம்பது, ஐம்பத்தைந்து ரேஞ்சில்) பரீட்சை மார்க் வாங்க நீதான் காரணமாக இருந்திருக்கிறாய். இது எப்படி ஆரம்பித்தது என்று ஞாபகத்தில் இல்லை. ஆனால் கணக்குப் பரீட்சைக்கு வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்னால் என் அறைக்குள் கதவை சார்த்திக்கொண்டு “நந்தா என் நிலா…ஆஆஆஆ….நந்தா நீ என் நிலா நிலா…” என்று உரத்த குரலில் நான்கு வரி பாடிவிட்டு, பரீட்சைக்குச் சென்றால் அந்தப் பாட்டின் ராசியில் கேள்வித்தாள் சுலபமாக இருந்துவிடும். நானும் ஏதோ சுமாரான மார்க் வாங்கி ஒப்பேற்றிவிடுவேன். ஒருமுறை மந்த்லி டெஸ்ட்டின் போது இதை சோதித்துப் பார்ப்பதற்காக நந்தா என் நிலாவைப் பாடாமல் சென்று, அந்த டெஸ்ட்டில் வெறும் இருபது மார்க் வாங்கி ஃபெயில் ஆனேன். அன்று உன்னை மனதுக்குள் திட்டிய திட்டு இருக்கிறதே….
மற்றவர்களால் அவமானப்பட்டதும் அழுததுமெல்லாம் அத்தோடு போயிற்று. அப்புறம் அழவைக்கும் வேலையை நீ எடுத்துக்கொண்டாய். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது அன்று பஸ்ஸில் அதிகம் கூட்டம் இல்லை. என் பக்கத்து இருக்கைகூட காலியாக இருந்தது. என் தலைக்கு மேலே பஸ்ஸின் ஸ்பீக்கர். ‘சின்னப்புறா ஒன்று, எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது’ என்று உன் ஏக்கக் குரல் என்னை ஆக்கிரமித்திருக்கிறது. ‘ஒருவன் இதயம் உருகும் நிலையை அறியா குழந்தை நீ வாழ்க’ என்ற வரிகள் எனக்குள் எதையோ புரட்டிப்போடத் தொடங்குகிறது. ‘உலகம் முழுதும் உறங்கும் பொழுதும் உறங்கா மனதை நீ காண்க..’ என்று நீ கரையும்போது நான் உதட்டைக் கடித்து, மிகவும் பிரயாசைப்பட்டு நான் தளும்பிவிடாமல் சமாளித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அடுத்த சரணத்தில் உன் குரல் உச்சஸ்தாயிக்கு எழும்பி ‘அவை ராகங்களா இல்லை சோகங்களா…சொல்லம்மா..” என்று இதயத்தை உலுக்கியெடுக்க, கட்டுப்படுத்தமுடியாமல் உடைந்து நொறுங்கினேன். உடனே பஸ்ஸில் யாராவது பார்த்துவிடுவார்களோவென்று பயந்து முகத்தை கைக்குட்டையில் புதைத்துக்கொண்டேன். உன்னால் எவ்வளவு சங்கடங்கள் ஏற்படுகிறது பார்.
இதேபோல அடுத்த வருடம் கல்லூரி சுற்றுலா சென்றிருந்தபோது கோவாவில் இரவு தங்கியிருந்த டார்மெட்டரியில் நண்பனின் டேப்ரிகார்டரில் 'வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பாத்தேன்’ (’ஒரு கிராமத்து அத்தியாயம்’) கேட்கும்போதும் நிகழ்ந்தது. ‘'காத்தோட போயாச்சு என்னோட பாரம், ஆத்தோட போயாச்சு என் கால நேரம், காத்தோட போயாச்சு என்னோட பாரம், காவேரி நீர்மேலே கண்ணீர் போட்ட கோலம்…' என்று ஊமை வலியில் துவண்டிருந்த உன் குரல் ’அம்மா….டி…. அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம் எல்லாமே தப்பாச்சு ஏதோ வேகம்' என்று உச்சத்தில் மேலேறித் துடிக்கும்போது யாரால் தாளமுடியும் என்று நீ யோசித்துப் பார்த்தாயா? இன்பச்சுற்றுலா வந்த இடத்தில், கோவா எனும் குதூகலப் பிரதேசத்தில் ஒரு பதினெட்டு வயதுப் பையனை ’அம்மா….டீ….’ என்று உயிரைப் பிசைந்து அழவைத்திருக்கிறாய், இது நியாயம்தானா சொல்.
ஆனால் கடந்த ஐம்பது வருடங்களாக என்னை உயிர்ப்போடு வைத்திருந்தது உன் குரலின் அன்பும், கரிசனமும்தான். நான் மகிழ்ச்சிப் பரவசத்தில் ஆழ்ந்திருந்த கணங்கள் எல்லாவற்றிலும் உன் பங்கு இருந்திருக்கிறது. 'ஆ..ஹஹ்ஹா..ஒஹ்ஹோ.. ஹஹ்ஹா ஹொஹ்ஹோ…ஹஹ்ஹஹ்ஹா …ஹாஆஆ….' என்று உற்சாகத்துள்ளளோடு ஆரம்பிக்கும் ‘ஆயிரம் நினைவு, ஆயிரம் கனவு, காணுது மனது ஓஹ்ஹோ…' அதை முதன்முதலாகக் கேட்கும் ஒன்பது வயதுப் பையனின் மனதில், இந்த வாழ்க்கையை எளிதாக வாழ்ந்து வெற்றிகண்டுவிடலாம் என்ற நம்பிக்கையை உன் உற்சாகக்குரல் ஏற்படுத்தியது என்பதைச் சொன்னால் நம்புவாயா நீ?
அப்போதெல்லாம் உன் பாடல்களைக் கேட்கும்போது நான் வரிகளை கவனித்ததில்லை. இசையை ரசித்ததில்லை. உன் குரலின் ஒவ்வொரு குழைவிலும், கொஞ்சலிலும், சிரிப்பிலுமே கவனம் இருக்கும். ‘தொடுவதென்ன தென்றலோ மலர்களோ’ வில் முதல் சரணத்தின் முடிவில் ‘இன்று சித்திர முத்தங்கள் சிந்திய ரத்தினம் யா…ரோ, அவள் யா…..ரோ…’ என்று நீ சிலிர்க்கும்போதெல்லாம் நான் பெண்ணாகப் பிறந்திருந்தால் உன்னைக் கடத்திக்கொண்டுவந்து காதலித்திருக்கலாமே என்று தோன்றும். அந்தப் பாடலின் முடிவில் ‘என் மனமெங்கும் நெருப்பாவதென்ன ஹா…ங்” என்று முடிக்கும் இடத்தை எத்தனைமுறை ரீவைண்ட் செய்து கேட்டிருப்பேன் என்பதை அறிவாயா நீ?
’உன்னைத்தொட்ட காற்று வந்து என்னைத் தொட்டது’ பாடலில் சுசீலாவின் அடியொற்றி சுதந்திர உற்சாகியாக வருகின்ற உன் ‘ஆஹாஹா ஓஹோஹோ…ம்ம்ம்ம் லல்லல்லா…’ போன்ற கள்மிஷமில்லாத சந்தோஷப்பீறிடல்கள் வளரிளம் பருவத்தினரின் மனங்களில் தோன்றக்கூடிய வன்முறை எண்ணங்களை அழித்துவிடும் தன்மைகொண்டவை என்பேன். சந்தேகமிருந்தால் உளவியலாளர் யாரிடமாவது நீ கேட்டுக்கொள்.
உன் குரலைக் கேட்கும்போது எனக்குள் நிகழும் ரசவாதம் விசேஷமானது. அன்பும் இனிமையும் செவிகளில் நுழைந்து, உயிரெங்கும் கலந்து என் இயல்பையே உன்னைப்போலாக்கிவிடும் மாயம் அதற்கு இருக்கிறது.. அதனால்தான் உன் பாடலைக் கேட்கும்பொழுதிலெல்லாம் ஒவ்வொருவனும் தன்னளவில் அன்பான, இனிமையான, யாரையும் தாழ்வாக நினைக்காத இன்னொரு எஸ்.பி.பாலசுப்பிரமணியனாகிவிடுகிறான்.
இத்தனை ஆயிரம் பாடல்களை நீ பாடியிருந்தாலும் எந்தெந்தப் பாடல்களில் உன் குரல் மிக மிக இனிமையாக, காதலோடு, அன்பாக இருந்தன என்று நண்பர்கள் விவாதிப்போம். நீ எல்லா பாடல்களையுமே மிக இனிமையாகத்தான் பாடியிருக்கிறாய் என்று சில நண்பர்கள் ஆட்சேபிப்பார்கள். நான் அவர்களிடம் உன்னுடைய சில பாடல்களை ஒலிக்கவைத்துக் காட்டுவேன். வழக்கத்தைவிட கூடுதலான காதலும் அன்பும் கொண்டிருக்கும் பாடல்கள் என்று நான் தேர்ந்தெடுத்துவைத்திருக்கும் அந்தப் பாடல்களை அவர்கள் கேட்கும்போது ஒப்புக்கொள்வார்கள். அதில் முதலில் இடம்பெறுவது எது தெரியுமா? ‘நான் உன்ன நெனச்சேன்…நீ என்ன நினச்சே..’ உன்னோடு வாணி ஜெயராமும் ஜிக்கியும் பாடுகிற அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் அன்னப்பறவை போல உன் குரலை மட்டும் தனியாகப் பிரித்துவைத்துக் கேட்பேன். ‘நித்தம் நித்தம் பூத்தாயே நான் பறிச்ச ரோசாவே.. இனிமே (இந்த இடத்தில் உன் பிரத்தியேகமான குறுஞ்சிரிப்பு) எப்போ வரும் பூவாசம்’.
அடுத்த பாடல் “ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்” . அதில் ஜானகி பாடும்போது அடிக்கோடிடுவதைப்போல உன் ஹம்மிங்… அந்தப் பாடலை பாடும்போது எப்படி அவ்வளவு இனிமை உன் குரலில்!
அதற்கு ஒரு படி கூடுதலாக ‘தாழம்பூவே வாசம் வீசு’. கண் தெரியாத மனைவிக்கு இவ்வளவு அன்பான குரலோடு ஒரு கணவன் கிடைத்தால் வேறென்ன வேண்டும் அவளுக்கு?
‘மல்லிகை மோகினி’ என்ற படத்தில் வரும் உன் “ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பாட்டுப் பாடினேன்” பாடல் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? மாநிலக் கல்லூரியில் வகுப்பு முடிந்ததும் நானும் நண்பன் இளவழகனும் கடற்கரைக்குச் சென்று இருட்டும் வரை உட்கார்ந்திருப்போம். அவன் மிக இனிமையாகப் பாடுவான் (இப்போது ஒரு இசைக்குழு வைத்திருக்கிறான்). தினமும் அந்தப் பாடலைப் பாடுவான். அந்தப் பாடலைப் பாடும்போதுமட்டும் அவன் வேறு மனிதனாகியிருப்பான். அந்தியிருட்டில் அவன் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி அவன் இருந்த இடத்தில் நீ உட்கார்ந்திருப்பாய். ‘உந்தன் ஞாபகம் வரும்போதெல்லாம் நான் வானில் பறக்கின்றேன்’ என்ற வரிகளைப் பாடும்போது நீ மெரீனா மணற்பரப்பிலிருந்து இரண்டடி மேலே எழும்புவதுபோல எனக்குத்தோன்றும்.
உன் குரலின் மயக்கத்தில் ஆழ்ந்து இறங்கவேண்டிய நிறுத்தத்தில் இறங்காமல் அடுத்த ஊரில் இறங்கி திரும்பிவந்த கதையும் உண்டு. உன் மிக இனிமையான குரலில் அமைந்த மற்றொரு பாடலால் நிகழ்ந்த விபத்து அது. ‘குங்குமச்சிமிழ்’ படத்தில் உன் தனிக்குரலில் வருகின்ற ‘நிலவு தூங்கும் நேரம்’ பாடல்தான் அது. ஒரு சோனி 60 கேசட்டில் இரண்டு பக்கங்களிலும் அந்தப் பாடலையே திரும்பத் திரும்பப் பதிவு செய்துத் தரச்சொல்லி அந்தப் பாடல் பதிவேற்றும் கடையில் தந்தேன். அந்தக் கடையில் இருந்தவனுக்கு நான் சொல்வது புரியாமல் அதை விளக்கிச் சொல்லவே நெடுநேரமாயிற்று. அடுத்த நாள் பதிவான கேசட்டைக் கேட்டுப்பார்த்தால், அவன் நீயும் ஜானகியும் பாடிய டூயட்டை இரண்டு பக்கத்திலும் பதிவு செய்து தந்திருக்கிறான். ஒரே பாட்டை கேசட் முழுக்க பதிவு செய்ததால் வேலை நிறைய ஆனதாகச் சொல்லி வழக்கத்தைவிட அதிக கட்டணமும் கேட்டான். அவனோடு சண்டையிட்டு, பதிவேற்றியதை அழித்துவிட்டு, உன் ஸோலோவை அடுத்த நாள் பதிவு செய்து வாங்கிவந்தேன். அடுத்த வாரம் வேலூருக்குப் பக்கத்தில் இருந்த செதுவாலை என்ற கிராமத்துக்கு என் ஆய்வுப் பேராசிரியரோடு செல்லவேண்டியிருந்தது. அவ்வூரில் நிலக்கடலைப் பயிரைத் தாக்கியிருந்த இலை சுருட்டுப் புழு ஒழிப்பு பற்றிய சோதனை நடத்தவேண்டும். பேராசிரியர் அவர் மட்டும் தனியாக சென்னையிலிருந்து வந்துவிடுவார். அவருக்குமுன் நான் சென்று காத்திருக்கவேண்டும். காதில் ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு உன் ‘நிலவு தூங்கும் நேரம்’ வரிசையாகப் பாடிக்கொண்டேயிருந்ததில் செதுவாலையில் இறங்காமல் விட்டுவிட்டேன். அப்புறம் அடுத்த ஸ்டாப்பில் இறங்கி, ஒரு விவசாயியின் சைக்கிளில் டபுள்ஸில் வந்து சேர்ந்தேன். பேராசிரியர் கடும் கோபத்தில் இருந்தார். அவர் முதலிலேயே வந்து பஸ் ஸ்டாப்பில் எனக்காகக் காத்திருந்தார் என்று தெரிந்தது. நான் ஜன்னல் சீட்டில் கண்களை மூடிக்கொண்டு இறங்காமல் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து என்னை உரக்கக் கூப்பிட்டும் இருக்கிறார். நான் ’நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே, வானம் காற்று பூமி இவை சாட்சியானதே' என்று மூழ்கியிருந்தது தெரியாமல் “அப்படி என்ன தூக்கம் உனக்கு?” என்று திட்டினார். நிலவுதான் பாலுவின் குரலில் தூங்கியது. நான் கேட்டுக்கொண்டிருந்தேன் என்று அவரிடம் எப்படிச் சொல்வது?
நீ இதுவரை பாடிய 46000 பாடல்களில் இளையராஜாவின் இசையில் பாடியது எத்தனை இருக்கும்? 3000? 5000? அல்லது 10000? எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கட்டும். ராஜாவின் இசையில் நீ பாடியவற்றுள் மிகச் சிறந்த பாடல்கள் எவ்வெவை என்பது எங்களிடையே நடக்கும் இன்னொரு விவாதம். வரிகளுக்காக, இசைக்காக என்றில்லாமல் உன் குரல் மிக அழகாக ஒலிக்கும் ராஜாவின் பாடல்கள் எவை என்பதே எங்கள் விவாதம். நான் நூற்றுக்கணக்கான பாடல்களிலிருந்து மிகவும் சிரமப்பட்டு பத்து பாடல்களைத் தேர்ந்தெடுப்பேன். எப்போதும் முதல் இடத்தில் இருப்பது ‘ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன’ (அன்பே ஓடி வா). உன் அடங்கிய குரலில் தோய்ந்திருக்கும் ஏக்கமும், எதிர்பார்ப்பும் 84ம் வருடத்திலிருந்து இன்றுவரை சற்றும் உக்கிரத்தைக் குறைக்காமல் இப்படலைக் கேட்கும்போது என்னை அவஸ்தைக்குள்ளாக்கிவருகிறது. ‘இருவரும் பழகினோம், இடையிலே விலகினோம், காலம் மீண்டும் கையோடு கை சேர்க்க…ஜோடிநதிகள் பாதை விலகிச் சேர்ந்தன..’ நீ எத்தனை பேரின் மனக்குரலாக இந்த வரிகளைப் பாடியிருக்கிறாய் என்று தெரியுமா பாலு?
குரலிலேயே அருவிச் சாரலை கேட்பவர் மீது தெளிக்கும் வித்தை அறிந்தவன் நீ. உன்னுடைய குரல் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்று ஆரம்பிக்கும்போதே எனக்கு ஸ்வெட்டரை எடுத்துப் போட்டுக்கொள்ளவேண்டும் போலத் தோன்றும். ’உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ, உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ’ என்று நீ பாடும்போது உன் குரலில் தெரியும் தாபம், இந்த வரிகளை கவிஞர் எழுதினாரா அல்லது நீயே எழுதியதா என்றுதான் இன்றுவரை சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
இளையராஜாவின் பாடல்களில் எனக்கு எப்போதும் முதலிடத்தில் இருக்கும் பாடலைப் பாடியதும் நீதான். உண்மையில் சொல்லப்போனால் இந்தப் பாடல் ஜானகிக்கான பாடல். ஆனால் இப்பாடலின் மேற்கத்திய செவ்வியல் இசையை உன் குரல் மிக அற்புதமாக பிரதிபலிக்கும். இன்றுவரை ‘உறவெனும் புதிய வானில் பாடலை’ நான் ஒருமுறை மட்டும் கேட்டு நிறுத்துவதில்லை. முதல்முறை கேட்கும்போது ஏதோ வியன்னாவில் உள்ள இசையரங்கில் அமர்ந்திருக்கும் உணர்வு ஏற்படும். அடுத்தமுறை ஜானகிக்காக. மூன்றாவது முறை ‘பார்வை ஒவ்வொன்றும் கூறும் பொன்காவியம். பாவை என்கின்ற கோலம் பெண் ஓவியம்’ என்று கனவிலிருந்து ஒலிப்பதுபோலக் கேட்கும் உன் குரலுக்காக.
‘அழகான பூக்கள் மலர்ந்தாடுமே…நீ வந்து நின்றால் வாய் மூடுமே..’ ஆர்ப்பாட்டமில்லாத மகிழ்ச்சியில் மனம் திளைத்திருக்கும்போதெல்லாம் உன்னுடைய இந்தக் குரலைத் தேடியெடுத்து கேட்டுக்கொண்டிருப்பேன். ‘காலங்களே சொல்லுங்களேன், காதல் ஒரு வேதம், மேகங்களின் சாரங்களில் நான் பாடுவேன் நாளும், ஓடைக்கரை பூக்கள் எல்லாம் உன் பேரையே பாடும், நீ சூடும் பூவெல்லாம் மோட்சம் போகுமா… ஜீவன் தொடும் தேவன் மகள் யா….ரது நீ….யா’. உண்மையைச் சொல், பாலு. இந்த வரிகளை உன் கண்களை மூடிக்கொண்டு ஏதோவொரு மானசீக உருவத்தை மனக்கண் முன் கொண்டுவந்துதானே பாடினாய்? பாம்பின் கால் பாம்பறியும். இந்தப் பாடலை நாங்களும் கண்களை மூடிக்கொண்டுதான் கேட்கிறோம்.
மூலப்பாடல் தெலுங்கில் இருந்தாலும் தமிழிலும் அதே உணர்ச்சியைக் கொண்டுவந்துவிடமுடிகிறது உன்னால். ஆனால் எனக்கென்னவோ, தெலுங்கைவிட தமிழில் ‘மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம்’ உன் குரலில் உயிர்ப்போடு கேட்கிறது. ‘இளமைச் சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ, புலம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ’ என்று நீ கேட்பது பலருடைய கனவுகளிலும் இப்போதுவரை கேட்டுக்கொண்டிருக்கும் இனிய கேள்வி.
தெலுங்கில் உன் குரலில் தெய்வீகப் பாடலாக உருவெடுத்திருந்த ஒரு பாடலை நீ தமிழில் பாடாததற்காக உன்னையும் ராஜாவையும் நாங்கள் இதுவரை மன்னிக்கவில்லை. ’ஓ பாப்பா லாலி’ ராஜாவின் படைப்புகளில் அமரத்துவம் வாய்ந்த ஒரு பாடல். உன் மனோகரக் குரல் சர்வ அழகுகளுடன் மிளிர்ந்ததும் இந்தப் பாட்டில்தான். உனக்கொன்று தெரியுமா பாலு. பலருடைய வீடுகளில் ‘இதயத்தை திருடாதே’ கேசட்டை விட ‘கீதாஞ்சலி’தான் அதிகம் இருந்தது. ‘நா ஜோலலா லீலகா தாகாலனி காலினே கோரனா ஜாலிகா நீ சவ்வடே சன்னகா உண்டாலனி கோரனா குடெனே கோரிகா’ என்றால் என்ன அர்த்தம் என்றே தெரியாமல் உன் சுந்தரத் தெலுங்கில் திளைத்திருந்த காலம் அது.
உன் ‘கேளடி கண்மணி’ மூலமாக எவ்வளவு நாட்கள் எத்தனை பேருக்கு மருந்திட்டிருக்கிறாய்! குறிப்பாக இந்தப் பாட்டில் உன் குரல் வேறு பரிமாணத்தை அடைந்திருக்கும். இதற்குமுன் உன் குரலில் தரிசிக்காத ஒரு லயிப்பு இந்தப் பாடலில் கேட்கும். கிட்டத்தட்ட ‘முதல் மரியாதை’யின் ‘பூங்காற்று திரும்புமா’ பாடலின் இன்னொரு urban வடிவம்தான் இது. ‘எந்நாளும்தானே தேன் விருந்தாவது பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான் இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்’. இந்த வரிகள் உனக்கே உனக்காக எழுதப்பட்டதுபோல் பாடியிருப்பாய். இந்தப் பாடலை நாங்கள் தனியறையில் கதவை மூடிக்கொண்டு பாடிப்பார்க்கும்போதும், குளியலறையில் சுதந்திரமாகப் பாடும்போதும் நாங்கள் ஒரு சோகையான எஸ்.பி.பி.யாக மாறிவிடுவது உனக்குத் தெரியுமா?
சில பாடல்களை ராஜா உனக்காக மட்டுமேவென்று பிரத்தியேகமாக உருவாக்கியிருப்பதைப் போலத்தோன்றும். 'இளைய நிலா பொழிகிறதே', 'விழியிலே மலர்ந்தது', 'கூட்டத்திலே கோயில் புறா', 'கீரவாணி', (தெலுங்கில்) 'சுமம் ப்ரதி சுமம் சுமம்', (கன்னடத்தில்) 'ஜோதேயலி' (தமிழில் 'விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்')… இதுபோல நிறையப் பாடல்களைச் சொல்லலாம். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த உன்னுடைய ஒரு பாடல் உனக்கான பாடலே அல்ல, அது முகமது ரஃபி மட்டுமே பாடவேண்டிய பாடல் என்று இசை அறிந்த என் நண்பர் ஒருவர் ஆக்ரோஷமாக என்னிடம் வாதிட்டார். ’அம்மன் கோயில் கிழக்காலே’ வில் இடம்பெற்ற உன் ஸோலோ ‘காலைநேரப் பூங்குயில் கவிதை பாடக் கூவுதே’ மிக நிச்சயமாக உனக்கான பாடலாகத்தான் எனக்குத் தோன்றும். ‘கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ..’ என்ற இடத்தில் உன் குரலில் எட்டிப்பார்க்கும் விம்மல் நண்பரின் வாதத்தைப் பொய்யாக்குகிறது. ‘இளமையென்னும் மோகனம் இணைந்துபாடும் என் மனம் பட்டு விரித்தது புள்வெளி பட்டுத் தெறித்தது விண்ணொளி.. தினமும் பாடும் எனது பாடல் காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் எந்நாளும்….’ என்னது? இது உனக்கான பாடல் இல்லையா? நான்சென்ஸ்!
‘இளமையெனும் பூங்காற்று‘ யாருக்கான பாட்டு? எண்பதுகளின் தொடக்கத்தில் ஒரு தலைமுறைக்கே சொந்தமாக இருந்த இந்தப் பாட்டைத்தான் கல்லூரிகளுக்கிடையிலான ஆண்டு விழாவில் மேடையேறிப் பாடினேன். ஜுவாலஜி டிபார்ட்மெண்ட் மாணவர்களையும் வேறு சில உதிரி கைத்தட்டல்களையும் தவிர என் பாட்டுக்கு அன்று பெரிய வரவேற்பு இருக்கவில்லை. ஆனால் மேடையிலிருந்து இறங்கியதும் ஆக்ஸீலியம் கல்லூரி மாணவிகள் பிரிவிலிருந்து மிக மிக அழகான ஒரு பெண் எழுந்து என்னிடம் வந்து, , “மை ஃபேவரைட் ஸாங். யூ ஸேங் இட் ஸோ வெல்,” என்று மோகனமாகப் புன்னகைத்துவிட்டு மறைந்தாள். அது எப்படி பார்த்துக்கொண்டிருக்கும்போதே மறைய முடியும், அப்புறம் தேடிப் பார்த்தாலும் அவளைப் பார்க்கவே முடியவில்லையே, அது என் பிரமையா, அல்லது அவள் உண்மையில் மனிதப் பிறவியே இல்லையா, தேவதையா .… எதுவும் விளங்கவில்லை. ஆனால் இன்றுவரை உன் பாட்டால் ஒரு இனிய ஞாபகம் மனதுக்குள் பொதிந்திருக்கிறது. அதற்காகவே அந்தப் பாடல் ஒலிக்கும்போதெல்லாம் உனக்கு மானசீகமாக முத்தமிட்டுக்கொண்டிருக்கிறேன்.
எத்தனை பேருக்கு உன் பாடல்கள் காதல் தூதாகியிருக்கின்றனவென்று தெரியுமா? 91ம் வருடம் அந்த ஊரில் ஒரு மாதம் அலுவலகப்பணி இருந்தது. மாலை ஆறு முப்பது மணிக்கு சென்னையிலிருந்து எங்கள் ஊருக்கு வரும் பேருந்துக்காக அந்த நிறுத்தத்துக்கு அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு நாளும் ஓட்டமும் நடையுமாக வருவேன். முதல் நாள் அந்த நிறுத்தத்துக்கு வந்து நின்றபோது பக்கத்து கடையிலிருந்து உன்னுடைய ‘மலையோரம் வீசும் காத்து’ ஒலித்துக்கொண்டிருந்தது. அடுத்த நாளும் அதே நேரத்தில் அதே பாட்டு. அந்த வாரம் முழுக்க அந்த நேரத்தில் நான் வந்து நிற்கும்போது அந்தப் பாட்டுதான் பாடிக்கொண்டிருக்கும். அடுத்த வாரம்தான் காரணம் விளங்கியது. அன்று சற்று சீக்கிரமே பேருந்து நிறுத்தத்துக்கு சென்றிருந்தேன். பாடல் எதுவும் ஒலிக்கவில்லை. ஆனால் அந்தக் கடை வாசலில் மூன்று இளைஞர்கள் அந்த வழியைப் பார்த்தபடி நின்றிருந்தனர். வழக்கமாக அந்த நேரத்துக்கு பக்கத்திலிருந்த தொழிற்சாலையிலிருந்து திரும்பும் இளம் பெண்கள் கூட்டம் தூரத்தில் வந்துகொண்டிருந்தது. அவர்கள் நிறுத்தத்தை நெருங்கும்போது அந்த இளைஞர்களில் ஒருவன் “வந்தாச்சுடா. பாட்டைப் போடு” என்றான். உன் ஏக்கக் குரல் 'மலையோரம் வீசும் காத்து மனதோடு பேசும் பாட்டு கேக்குதா கேக்குதா.' என்று ஆரம்பித்தது. அந்தப் பெண்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்தேன். இருபது பெண்களாவது இருப்பார்கள். அவற்றில் எந்தப் பெண்ணுக்காக நீ தூது சென்றுகொண்டிருந்தாய்? அந்த இருபது பேரில் அப்போது ஐந்து பெண்கள் சிரித்துக்கொண்டிருந்தார்கள். மூன்று பேர் வெட்கத்தில் இருந்ததைப்போல எனக்குத் தோன்றியது. அவர்களில் ஒருத்தி மட்டும் முகத்தை ரொம்பவும் கோபமாக வைத்திருந்ததைப்போலிருந்தது. ஒருவேளை இந்தப் பெண்ணுக்காகத்தானா? உனக்குத் தெரியுமா பாலு, அது யாருக்காக நீ தூது பாடியதென்று?
உன் குரல் எவ்வளவோ பேருக்காக பாடியிருக்கிறது, தூது சென்றிருக்கிறது, காயங்களை ஆற்றியிருக்கிறது, இடைவெளிகளை சேர்த்திருக்கிறது. நீ எல்லோருக்குமானவன் என்பது உன் மிக இனிய குரலால் மட்டும் நேர்ந்ததல்ல. உன் குரலைவிட இனிமையான உன் குணத்தால்தான் உன் மரணத்தை எல்லோரும் அவர்கள் வீட்டில் நிகழ்ந்த இழப்பைப்போல துக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அடைந்த உயரங்களை எப்போதும் வெளிக்காட்டிக்கொள்ளாதவன் நீ. எளியோரிலும் எளியோனாக நீ உன்னை வைத்துக்கொண்டதும், உன் பணிவும், உன் பெருந்தன்மையும் வலிந்து வரவழைக்கப்பட்ட குணங்களோ, அல்லது தேர்ந்த நடிப்போ அல்ல என்பதை நாங்கள் எல்லோருமே உணர்ந்திருந்தோம். அதனால்தான் நீ எங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமான அந்தரங்கக் காதலனாக இருந்தாய். மூன்று தலைமுறை மக்களையும் பிருந்தாவனக் கோபிகைகளாக மாற்றி வைத்திருந்த கோபாலன் நீதான் உன் குணத்தின் தெய்வாம்சத்தால்தான் எழுபத்து நான்கு வயது வரையிலும் உன் குரலில் பிசிறோ, தேய்வோ ஏற்படவில்லை. தெய்வாம்சம் உன்னிடத்தில் உறைந்திருந்தது என்பதற்கு நீ பாடிய ‘தேவனுகே பதி இந்திரா தாரகே பதி சந்திரா’ என்ற ஸ்வாதித் திருநாளின் பாடல் முதன்மையான உதாரணம். மனம் நெகிழ்ந்து கண்கள் ஈரமாவது உன்னுள் நிறைந்திருந்த அந்த தெய்வீகத்தின் நிமித்தமாகத்தான். எங்கள் எல்லோருடை வாழ்விலும் தேமதுரத் தருணங்களை உண்டாக்கிவிட்டுச் சென்றிருக்கிறாய். அவற்றுக்கு மரணமில்லை.
Comentarios