ஜெயபேரிகை கொட்டியவர்
- G Kuppuswamy
- Feb 23
- 6 min read
ஜி. குப்புசாமி

ஜெயகாந்தனின் மறைவையொட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்புகள் பலவற்றில் இலக்கிய பெருமரம் வீழ்ந்துவிட்டதென்றும் தமிழ்இலக்கிய வானில் இருள் சூழ்ந்துவிட்டதென்றும் எழுதப்பட்ட உணர்ச்சி மேலிட்ட வரிகளை ‘incurable optimist’ என்று தன்னை வர்ணித்துக் கொண்டிருந்த ஜெயகாந்தன் மேலுலகில் படிக்க நேர்ந்தால் எப்படியெல்லாம் கோபப்பட்டிருப்பார் என்று கற்பனை செய்து பார்க்க சுவாரசியமாக இருக்கிறது.
ஜெயகாந்தன் ஒரு நிரந்தர வெளிச்ச விரும்பி. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் இந்தியாவில் நிலவிவந்த நிச்சயமற்ற எதிர்காலக் கனவுகளுக்கும் விரக்திக்கும் கொந்தளிப்புகளுக்கும் அவநம்பிக்கைகளுக்கும் புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் சாளரமாக இருந்ததைப்போல சுதந்திரத்துக்குப்பின் தனது கால்களை ஊன்ற முயற்சித்து புதிய நம்பிக்கைகளோடு தனக்கான அடையாளங்களை மறுஆய்வு செய்து தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த புதிய இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவை ஜெயகாந்தனின் படைப்புகள்.
அறுபது எழுபதுகளில் வாசிப்பைத் தொடங்கி இன்று தீவிர படைப்புத் தளத்தில் இயங்கிவரும் இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு அவர்தான் ஆரம்ப ஆசான். இவர்களுக்குப் புதிய சிந்தனா முறையை அறிமுகப்படுத்தி, பழமை களைந்து மனித தர்மத்துக்குப் புதிய பார்வையை, புதிய கோணத்தைக் கற்றுத் தந்த அவரிடமிருந்து தொடங்கி வேறு இடங்களுக்கு நகர்ந்திருப்பவர்கள்தான் இன்று அவரைக் கடுமையாக விமரிசிப்பவர்களும் கூட. அவர் தயாரித்தளித்த ஆயுதங்களை அவர் மீதே பிரயோகிப்பது குறித்து அவர் கவலைப்பட்டதும் இல்லை. ஒருவேளை உள்ளூர பெருமைப்பட்டிருக்கக் கூடும். இவற்றையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்பவர் அல்ல அவர். அவர் அணிந்திருந்த பாதுகாப்புக் கவசங்கள்தான் அவர் பயன்படுத்திய பேராயுதங்களாகவும் இருந்திருக்கின்றன.
அவர் எழுதத் தொடங்கிய 1945ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய முதல் ஆறு வருடங்களுக்கு சரஸ்வதி, சாந்தி, ஹனுமான், மனிதன் போன்ற சிற்றிதழ்களில்தான் எழுதிவந்திருக்கிறார். அதன்பிறகு, முக்கியமாக ஆனந்தவிகடன் முதலான பிற வெகுஜன இதழ்களில் எழுதத்தொடங்கிய பிறகுதான் அவரது பெயர் தமிழகமெங்கும் தீயாகப் பரவியிருக்கிறது. கேளிக்கை இதழ்களில் எழுதி வந்தாலும் அந்தப் பொதுநீரோட்டத்தில் எதிர்நீச்சல் அடிப்பவையாகவே அவரது எழுத்துகள் இருந்திருக்கின்றன. சமூகச் சீர்திருத்தம் என்ற ஒற்றைப்படையான சிந்தனைக்குள் அடங்கியிருக்கும் பல்வேறு பரிமாணங்களை அவரது கதைகள் அநாயசமாக சித்தரிக்கின்றன. பற்பல ‘புரட்சி’க் கருத்துக்களை அந்த அளவுக்கு அலட்டிக்கொள்ளத் தேவையில்லாத சாதாரண விஷயங்கள்தான் என்று அழுத்தம் திருத்தமாகக் காட்டியிருக்கின்றன. தூய இலக்கியவாதிகளாக அறியப்பட்ட அகிலனும், நா. பார்த்தசாரதியும் வெகுஜன இதழ்களில் எழுதி வந்ததைப்போல வாசகர்களின் விருப்பத்திற்காக ஜெயகாந்தன் எழுதியதில்லை. தான் எதைச் சொல்லவேண்டும் யாருக்குச் சொல்லவேண்டும் என்பதில் எப்போதுமே அவர் மிகத்தெளிவாக இருந்திருக்கிறார்.
அடித்தட்டு மக்களை, அவர்களின் வாழ்வை, அவர்களின் மேன்மையை ஜெயகாந்தன் எழுதியிருப்பதைப்பற்றி நிறையவே சொல்லப்பட்டிருக்கிறது. முன்னேறிய சமூகத்தினருக்குத் தயக்கமாக இருக்கக்கூடிய பல முன்னெடுப்புகளை அவர்கள் எவ்வளவு எளிதாக, இயல்பாக செய்துகாட்டுகிறார்கள் என்பதைச் சித்தரித்திருப்பதுதான் அவர் கதைகளின் சிறப்பு. அடித்தட்டு மக்கள்மீது வாசகர்களுக்குப் பரிதாபம் தோன்றச் செய்யும் உத்திகளை அவர் கட்டோடு வெறுத்திருக்கிறார். அவர்களது சுயமரியாதைக்கு மிகப்பெரிய கௌரவம் அளிக்கும் மேன்மை அவரது எழுத்தில் இருந்தது.
ஆரம்பகாலச் சிறுகதைகளிலும் குறுநாவல்களிலும் அடித்தட்டு மக்களைச் சொல்லிவந்த ஜெயகாந்தன் ஆனந்தவிகடனில் எழுதத் தொடங்கிய பிறகுதான் பிராமண சமூகத்தைத் தனது கதைகளில் கொண்டுவரத் தொடங்கினார். பழைய மதிப்பீடுகளைத் தமக்கு மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் ஆதார கௌரவங்களாக நினைத்து நடைமுறைவாழ்வை எதிர்கொள்ளத் திண்டாடிவரும் உயர்குடி மக்களின் எல்லாச் சிக்கல்களும் அநேகமாக ஜெயகாந்தனின் கதைப்பொருட்களாகியிருக்கின்றன. சில கதைகளில் பழையகாலத்தின் பிரதிநிதிகளே புதிய தலைமுறையினருக்கு அதிகமும் அலட்டிக்கொள்ளாமல் மாறுதல்களை ஏற்றுக்கொள்ளவும் தகவமைத்துக்கொள்ளவும் கற்றுத் தருகின்றனர். (அக்கினிப்பிரவேசம், யுகசந்தி, ரிஷிமூலம்) இத்தகைய ‘சீர்திருத்தக்கதை’களைப் பிராமண சமூகத்தை மட்டுமே வைத்து அவர் எழுதியதும் நன்கு யோசித்து செயல்படுத்திய உத்தியாகத்தான் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக முன்னேறியிருந்த அச்சமூகம்தான் இப்புதிய மாற்றங்களையும் திறந்த மனதோடு தாங்கிக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் செய்யும் என்றறிந்து செய்த உத்தி. கங்கா ஒரு பிராமணப்பெண்ணாக இல்லாமல் ஏதேனும் ஒரு இடைநிலை சாதிப்பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்தால் ஜெயகாந்தன் ஒன்று தாக்கப்பட்டிருப்பார் அல்லது அச்சிறுகதை எவ்வித அறிவார்ந்த விவாதங்களுக்கும் உட்படாமல் வெற்றுக் கூச்சல்களால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும். ‘ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்’ பற்றி எழுதப்பட்ட ‘ரிஷிமூலம்’ குறுநாவலிலும் பிராமண சமூகத்தைத் தவிர்த்து வேறு எந்த சமூகப்
பிரிவையும் சொல்லிவிட்டுத் தப்பியிருக்க முடியா தென்றுதான் தோன்றுகிறது.
“வாழ்க்கையை உருவாக்குகிறதும் நிறைவைத் தருகிறதும் எது என்கிற விஷயம் சூழ்நிலைக்கும் வாழ்கின்ற சமூகத்துக்கும் ஏற்ப மாறும். அந்த மாற்றத்தால் விளையும் ஒரு குறிப்பிட்ட மனிதனின் செயல், நான் கடைப்பிடிக்கும் கொள்கைக்குப் புறம்பு என்பதை உத்தேசித்து அதை நான் மறுக்காமல், அந்த மனிதனின் அந்தச் செயலில் பொதிந்துள்ள மனித தர்மத்தைக் காண்பதையே கடமையாகக் கொள்கிறேன்.” ஜெயகாந்தனின் இந்தப் பிரகடனம் அநேகமாக அவரது எல்லாக் கதைகளுக்கும் முன்பாகக் குறிப்பிட்டாக வேண்டிய அடையாள வாசகம் என்றே சொல்லலாம்.
சமூகச் செயல்பாடுகள் அனைத்திலும் உள்ள நேர் மறையான அம்சங்களை மட்டுமே தனது எழுத்துகளில் பரிந் துரைப்பது என்பதை தனது இலக்கியக் கொள்கையாகவே வைத்திருந்த இவர் பிழைகள் எல்லாவற்றிற்குள்ளும் நேராக நுழைந்து அடித்தளம்வரை சென்று அலசி, அந்த விலகல்களை நேர்கோட்டில் இணைப்பதையும், முரண்பாடுகளை இயல்பாக மாற்றுவதையும் தொடர்ந்து நிகழ்த்தி வந்திருக்கிறார். அவரை வெகுவாக கவர்ந்திருந்த ‘அன்னா கரீனினா’வைக்கூடத் தனது நாவலின் வழியே தண்டனையை விலக்கி இயல்பாக நகர்ந்து செல்ல வைக்கிறார். அவரது ‘பாரீஸுக்குப் போ’ அம்மகத்தான படைப்பின் பாதிப்பிலிருந்தே எழுந்தது என்பதை எளிதாக ஊகிக்கமுடியும். அதற்கான தடயங்களையும் அந்நாவலிலேயே விட்டுவைத்திருக்கிறார். ஆனால் அன்னா செய்த ‘தவறு’க்கு தல்ஸ்த்தோய் ரயிலில் அடிபட்டுச் சாகும் தண்டனையைத் தந்திருக்க ஜெயகாந்தன் அந்த வழுவலைக் குற்றவுணர்வின்றி இயல்பாக ஏற்றுக்கொண்டு, வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துவிடும் நேர்மறையான மார்க்கத்தைக் காட்டிவிடுகிறார். மானுடத்தின் மீது பேரன்பு கொண்டிருக்கும் ‘வெளிச்சசொரூபிக்கு’ மட்டுமே வாய்க்கக்கூடிய படைப்பு மனம் இது. இக்கதையைத்தவிர வேறு சில சிறுகதைகளிலும் அயல்மொழிக் கதைகளின் பாதிப்பு தெரிந்திருக்கிறது. சில சிறுகதைகளில் மாப்ப சானின் வாசனை தென்பட்டிருக்கிறது. அத்தகைய கதை களுக்கான தூண்டுதல்களை எங்கிருந்து பெற்றார் என்பதை ஒருபோதும் சொன்னதில்லை. அவரது புகழ்பெற்ற ஹென்றியும்கூட, தனது படைப்பில் அவர் உருவாக்க நினைத்த இயேசு கிறிஸ்து என்று சிலர் சொல்லியிருக் கின்றனர். ஆனாலும் மக்ஸீம் கார்க்கியின் The Life of Matvei Kozhemyakin நாவலின் பாதிப்பு ஹென்றியில் காணப் படுவதை எங்கள் ஊர்க் கூட்டத்தில் நண்பர் ஒருவர் குறிப்பிட்டுக் கேட்டபோது, ஆமோதிக்கவும் செய் யாமல் மறுக்கவும் இல்லாமல் கேள்வி கேட்டவரை உற்றுப் பார்த் தார். “ம்...ம்...ம்...” என்ற ஆழமான செருமல் மட்டும் அவரிடமிருந்து வந்தது.
அவரது சிறுகதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது, சமூகத்தில் சீர்செய்தாக வேண்டிய சிக்கல்களை வரிசையாக எழுதிவைத்துக்கொண்டு, ஒவ்வொன்றைச் சுற்றியும் ஒரு கதையை உருவாக்கி ஒட்டவைத்து, அப்பிரச்சனையை எல்லாத் திசைகளிலிருந்தும் அணுகி அலசி ஆராய்ந்து தனது தீர்ப்பைச் சொல்லும்விதமாக கதைகளை ‘உண்டாக்குகிறாரோ’ என்று தோன்றும். இது ஓரளவுக்கு உண்மையாகவும் இருக்கக்கூடும். ‘யுகசந்தி’, ‘சுயதரிசனம்’, ‘சமூகம் என்பது நாலுபேர்’, ‘தவறுகள் குற்றங்கள் அல்ல’ போன்ற கதைகளில் கடிதங்கள் அவருக்கு உசிதமான சாதனங்களாகிவிடுகின்றன. அவற்றில் எல்லா ‘பாயின்ட்’டுகளையும் குறிப்பெடுத்துக் கொண்டுவந்து பாடம் எடுத்துவிடுகிறார். ‘திரஸ்காரம்’ போன்ற கதைகளில் கதை முடிந்தபிறகும் ஒரு பக்கத்துக்குக் கதாசிரியர் பேசுகிறார். ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறா’ளில் கதாசிரியர் வேலையைப் பாத்திரங்களே மேற்கொண்டு பேசித்தீர்க்கிறார்கள்.
இந்தக் கதை சொல்லும் உத்தியை வைத்து ஜெயகாந்தனின் கதைகளை, அவற்றின் இலக்கிய அந்தஸ்தை மதிப்பிடுவதோ புறந்தள்ளுவதோ அவை எழுதப்பட்ட நோக்கத்திற்கு செய்யும் துரோகமாகிவிடும். அவர் தனது கதைகளின் வழியே தமிழ்ப் பொதுச் சமூகத்தை நோக்கியே உரையாடி வந்திருக்கிறார். அப்பெருங்கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் தெள்ளத்தெளிவாகத் தனது கருத்துக்கள் சென்றடைய வேண்டுமென்பதற்காக loud and clear ஆக அவர் முழங்க வேண்டியிருந்திருக்கிறது. ஆனால் இது மட்டுமே ஜெயகாந்தன் அல்ல என்பதுதான் அவரது பலம். அவரது ‘குருகுலம்’, ‘பிணக்கு’, ‘எங்கோ - யாரோ - யாருக்காகவோ’ போன்ற சிறுகதைகளும்,கோகிலா என்ன செய்துவிட்டாள்?, ரிஷிமூலம், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன போன்ற குறுநாவல்களும் ‘ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்’, ‘பாரீசுக்குப் போ’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ போன்ற நாவல்களும் அவரை ஒரு நித்திய கலைஞனாக நிலைநிறுத்தி வைக்கின்றன.
அவரிடம் பொதிந்து இருக்கும் உன்னதக்கலைஞன் பல கதைகளுக்குத் தீர்மானமான முடிவை, தீர்வைச் சொல்லாமல் திரிசங்கு சொர்க்கத்தில் நிறுத்திவிடுகிறார். ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ சிறுகதையில் வைதீகத் தர்மத்துக்கும் சாஸ்திரங்களுக்கும் கட்டுப்பட்ட வேதாந்தியின் மனைவிக்கு லாட்டரி சீட்டில் லட்சரூபாய் விழுந்துவிடுகிறது. “நீ வேண்டுமானால் இன்னார் சகதர்மிணின்னு சொல்லிக்காம லட்சம் ரூபாயை வாங்கிண்டு தனியா காலம் தள்ளிக்கோ. எனக்கு வேண்டாம் இந்தப் பாவம்” என்று போய்விடுகிறார். மனைவிக்கு வேதவிற்பன்னரான கணவனின் பேச்சை மீறவும் மனமில்லாமல், அவர் காலத்துக்குப் பிறகு கையில் பணமும் இல்லாவிட்டால் நிராதரவாக நிற்போமோ என்ற பயமும் சேர்ந்துகொண்டு என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் நம்மிடம் ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ என்று கேட்கிறார். இக்கதை அந்தப் பெண்மணி எடுத்திருக்கக்கூடிய முடிவைப் பற்றிய கதையல்ல என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கும் ஒரு படைப்பாளியை எப்படி ‘பிரச்சாரகர்’ என்று சொல்ல முடியும்? ‘சீசர்’ கதையில் அந்த மனைவி தவறு செய்தவளா இல்லையா என்பதைப் பற்றி விளக்க அவர் முயற்சிக்க«யில்லை. ‘அவனவன், அவனவன் பெண்டாட்டியை நம்பினால் போறும். அதைச் செய்யுங்கோ’ என்பதுதான் அவர் சொல்லும் ஆதார அம்சமாக இருக்கிறது. ‘அந்தரங்கம் புனிதமானது’ கதையில் அம்மா, மகனிடம் தன் கணவரின் அந்தரங்கத்துக்குள் நுழைய எவருக்கும் உரிமையில்லை என்கிறாள். கணவனை அவள் நியாயப்படுத்தவில்லை. ஆனால் கடைசிவரியில் “இன்னுமா... நீங்கள்... நீங்கள்..?” என்று தழுதழுப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்கிறார்.
பல நேரங்களில் கதைகளுக்கு நிகராக அவரது முன்னுரைகள் உன்னதமாக அமைந்துவிடுவதுண்டு. உதாரணம் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நூலுக்கு எழுதிய முன்னுரை. ஏற்கனவே ‘கோகிலா என்ன செய்துவிட்டாள்?’ என்று கச்சிதமான அளவில் மிகச்சிறப்பான ஒரு குறுநாவலை எழுதியிருந்தாலும், இந்த விஷயத்தில் விரிவாகச் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்று நாவலாக எழுதிவிட்டபின்பும் முன்னுரையில் சொல்வதற்கு அவருக்கு மிச்சம் இருக்கிறது. ஆனாலும் அவருக்குத் தனது படைப்புகளிலேயே தனிப்பட்ட அபிமானத்திற்குரிய படைப்பென்று குறிப்பிடும் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நூலாக வந்தபோது எழுதிய முன்னுரை அலாதியானது: ‘ஒரு மனிதன்’ என்ற தலைப்பில் ஒரு பெரிய கதையை என்னுள் நான் காதலித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கதையின் ஆரம்பமும் முடிவும் இடையில் நடப்பனவும் மிகத் தெளிவாக என்னுள் அடிக்கடி முகிழ்த்து சரம்சரமாகப் பெருகும். இந்தப் புவனம் முழுவதும் மலர்க்காடாய்த் தெரியும். ஒவ்வொரு இதழும் மிகத் தெளிவாகத் தென்படும். பிறகு எல்லாம் கனவுகள்போல மறந்துபோகும். கண்ட கனவை நினைவுகூர்வதற்காக கண்களை மூட, மறுபடியும் ஒரு அற்புதக் கனவு தொடரும். இப்படி ஒரு தன்னிலை மயக்கமாக சுயானுபூதியாக இந்தக் கதை இன்னும் நிறைய என்னோடு இருக்கிறது” என்ற இம்முன்னுரை அற்புதமான வாசிப்பனுபவம்.
ஜெயகாந்தனின் மிகப்பெரும் பலம் அவரது உரைநடை. தமிழில் மிகச்சிறப்பான உரைநடைக்கு உதாரணமாக அவரைச் சுட்டிக்காட்ட முடியும். அலங்காரமற்ற, தெளிவான, சீரான மொழி அவருக்கு. தனித்துவமான நடை என்ற பெயரில் தப்பும் தவறுமாக எழுதும் இன்றைய இளம் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் சொல்வதைக் கவனிக்க வேண்டும்: “இலக்கணத்தை மீறியும், இலக்கணத்துக்குப் புறம்பாகவும் நவீனத் தமிழ் இலக்கியம் படைக்கிறவர்கள் எழுதுவதிலே தவறில்லை என்கிற கொள்கை உடையவன் நான். ஆனால் அந்த இலக்கணத்தை மாற்றுகிற காரியமும், இலக்கணத்தை உடைக்கிற செயலும் இலக்கணம் அறியாத பலவீனத்திலிருந்து எழுந்து அமைதல் கூடாது. பிழையெனத் தெரியாமல் செய்கிற பிழைகளையெல்லாம் திருத்திக்கொள்கிற முறைமையை மறுத்து, அதுவே சரியென்று ஆள் சேர்த்துக்கொண்டு நிலைநிறுத்தும் பேதைமையைப் படைப்பாளியின் சுதந்திரம் என்று வளர்த்துவிடலாகாது.”
அவர் எழுதியிருக்கும் எண்ணற்ற கட்டுரைகளை வாசிக்கும்போதுதான் அவரது உரைநடையின் செறிவு புலப்படும். அவரது புனைவெழுத்துகளுக்கு நிகரான வாசிப்பனுபவத்தைத் தருபவை அவை. அவரது புனைவற்ற எழுத்துக்களின் உச்சம் ‘அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’. ‘சிலர் வெளியே இருக்கிறார்கள்’ என்ற தலைப்புகளில் எழுதிய கட்டுரைகள் குறிப்பாக ‘வெளியே’ இருப்பவர்களின் சித்திரங்கள் மிக அலாதியான அனுபவத்தைத் தருபவை. அவரது சிந்தனைத் தெளிவினால் தமது கண்ணோட்டங்களையே மாற்றிக்கொண்ட பெருங்கூட்டம் ஒன்று முந்தைய தலைமுறையில் இருந்தது. அந்தச் சீடர்கள் அவரது பாதங்களைத் தொழுதவர்கள் அல்லர். ஜெயகாந்தனால் சஹிருதயர்கள் என்று சமமாக மதிக்கப்பட்டவர்கள்.
“எழுதுவதற்கு முன் ஒரு திரைப்படமாக என் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்துவிட்டு பின் எழுதும்போது அதில் முப்பது சதவீதம் வந்தால் வாசிக்கும் உங்களுடைய அதிருஷ்டம்” என்று ஒரு கூட்டத்தில் பேசியதைக் கேட்டிருக்கிறேன்.
ஜெயகாந்தன்மீது வைக்கப்படும் சில வழக்கமான விமர்சனங்களின் சப்த அளவு அவர் மறைவுக்குப்பிறகு அதிகரித்திருக்கிறது. அதில் முக்கியமானது. காஞ்சி மடத்துடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட உறவு. ஜெயேந்திரர்மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு தமிழ்நாட்டில் பரவலாக வெறுப்புப் பரவியிருந்த நேரத்திலும்கூட, ஜெயகாந்தனுக்கு சங்கராச்சாரியர் மீதிருந்த ‘பிரீதி’ குறையவில்லை. ஜெயகாந்தனின் இந்த நிலைப்பாட்டைப் பெரும் முரண்பாடாகப் பலர் கருதுவதற்கு முக்கியக் காரணம் அவரைப் பரிபூர்ண கம்யூனிஸ்டாக கற்பனை செய்து வைத்திருந்ததுதான் என்று தோன்றுகிறது. “மீசை அரும்பும் பருவத்தில், தோள்களில் பலமேறி, புரட்சிக்கான வேட்கையோடு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதற்கு மற்றவர்கள் வந்துகொண்டிருந்த வயதில் நான் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறினேன்” என்று 1998ஆம் வருடம் திருவண்ணாமலையில் நடந்த தமுஎச கூட்டத்தில் பேசினார். “அப்போது எனக்குக் கிடைத்த பெயர் என்ன தெரியுமா? தீட்டிய மரத்தில் கூர் பாய்ச்சினவன். . . ! தீட்டுவதே கூர் பாய்ச்சுவதற்குத்தானே?” என்று அவருக்கே உரித்தான வெடிச்சிரிப்போடு கேட்டபோது, குழுமியிருந்த தோழர்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டு, இறுக்கமான பாவத்தை வரித்து அமர்ந்திருந்தது ஞாபகமிருக்கிறது. கம்யூன் வாழ்க்கை அவரைச் செதுக்கியதென்றாலும், மனதளவில் அவர் முழுமையான கம்யூனிஸ்ட்டாக ஒருபோதும் இருந்ததில்லை. உண்மையான கலைஞன் எந்தச் சித்தாந்தத்திற்கும் கட்டுப்பட்டு இருக்கமுடியாது என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம். மேலே குறிப்பிட்ட கூட்டத்தில் அவர் சொன்ன மற்றொரு வாசகம்: “You can call me a non-communist. But I can never be an anti-communist”. ஒரு லிபரல் சோசியலிஸ்ட்டாகவே தன்னை வைத்துக்கொண்டிருந்த அவரது நெடுநாளைய அவாவே மார்க்ஸீயமும் காந்தீயமும் இணைத்துச் செயல்படுவதுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார். நெருக்கடிநிலையை அவர் ஆதரித்ததையும் இதனோடு தொடர்புபடுத்திதான் பார்க்க வேண்டும். அவரது தேசியவாதம், இந்துமரபு நாட்டம், ஆன்மீகத்தேடல் மீதிருந்த மனச்சாய்வு - இவற்றின் நீட்சியாகத்தான் சங்கராச்சாரியார் மீதிருந்த பிரியத்தையும் கருத வேண்டியிருக்கிறது. திராவிடக் கட்சிகளைத் தனது ஜென்ம எதிரிகள் என்றே பிரகடனம் செய்துவந்தவருக்கு, கடைசிகாலத்தில் கலைஞரிடம் இணக்கம் ஏற்பட்டதையும் அப்படியேதான் புரிந்துகொள்ள வேண்டும். இதைப்பற்றி அவரிடம் கேட்டதற்குக்கூட “நான் கனிந்திருக்கிறேன்” என்றுதான் குறிப்பிட்டார்.
தமிழ் எழுத்தாளர் என்ற பிம்பத்திற்கு ஜிப்பா வேட்டியணிவித்து, ஒட்டி உலர்ந்த, அப்பாவியான தோற்றம் தந்திருந்ததை அதிரடியாக மாற்றிக் காட்டியவர் ஜெயகாந்தன். அவரது ஞானச்செருக்கும், அடாவடித்தனமான பேச்சும், தன்னை நோக்கி எழுப்பப்படும் அபத்தமான கேள்விகளுக்குச் சீறியெழுந்து கடித்துக்குதறும் ரௌத்திரமும் அவருக்கு மட்டுமே இயல்பாகப் பொருந்தியிருந்தது. அவருக்குப்பின், அவரைப்போலவே சீற்றம்காட்டிப் போலி செய்த ‘கலக’ எழுத்தாளர்களுக்கு அந்த வேடம் சற்றும் பொருந்தியிருக்கவில்லை.
சமத்காரமான பதிலடிகளால் எதிராளியின் வாயை அடைப்பதில் சமர்த்தர். முதலமைச்சரும் உயர்நீதிமன்ற நீதிபதியும் அமர்ந்திருந்த மேடையில் “தமிழ்நாட்டில் சட்டமும் நீதியும் சீர்கெட்டிருப்பதற்கு இவர்கள் இருவரும்தான் சாட்சி” என்று கைநீட்டிப் பேசிய ஜெயகாந்தனின் சாகசக் கதைகள் பலவும் இன்றுவரை உலவிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் எத்தனை உண்மையாக நடந்தவை என்று தெரியாது. அவரது ‘இலக்கியச் சிங்கம்’ பிம்பத்துக்கு வலு சேர்த்துவந்த அக்கதைகளை அவர் மறுத்ததேயில்லை. ஜெயகாந்தனைப் படித்தேயிராதவர்களுக்கும் அவரைப் பற்றிய மனத்தோற்றத்தை ஏற்படுத்தியிருந்த இக்கதைகள் அவர் எழுதிய கதைகளைவிடச் சுவையானவை.
இந்த மேற்பூச்சுகளைத் தாண்டி தமிழ் வாசகப்பரப்பில் தீவிரமான விவாதங்களை அறிவார்ந்த தளத்தில் எழுப்பிய வர் என்ற வகையில் ஜெயகாந்தன் ஒரு மறுக்கமுடியாத பேரியக்கம். நவீன வாழ்வின் சகலமூலைகளிலும் புகுந்து, எல்லாத் தரப்பினரின் குரல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, தெளிவாக விவாதித்து வெளிச்சம் பாய்ச்சியவை அவரது படைப்புகள். இன்றைக்கு அவற்றை மறுவாசிப்பு செய்யும்போது, அவர் அப்போது புதிதாக முன்வைத்த பல பரிந்துரைகள் பழசாகித் தெரியலாம். சில காலாவதியாயிருக்கலாம். ஆனால் அவை பழையதாகிப் போனதற்குக் காரணம் அக்காலக் கட்டத்தின் பொதுச்சிந்தனையை அவரது அதே எழுத்துக்கள் தூக்கி உயர்த்தி நகர்த்தி வைத்திருந்ததுதான் என்பதை மறுக்கமுடியாது. அந்த வகையில் இன்று காலாவதியாகியிருக்கும் அந்தச் சில கதைகள்தான் அவர் அடைந்த பூரண வெற்றிக்கான சாட்சிகள் என்றும் கொள்ளலாம்.
Comments